ஹிட்ச்காக் திரைப்படம் போல திகிலூட்டி திகைப்பில் ஆழ்த்திய மொகாலி மினி ஃபைனலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியபோது ஒட்டுமொத்த தேசமும் ஆனந்தக் கூத்தாடியது. ஃபைனலுக்கே ஃபைனல் இந்த மகாயுத்தம் என வர்ணிக்கப்பட்டாலும், களத்தில் வீரர்கள் கண்ணியம் காத்தது ‘ஜென்டில்மேன்’ விளையாட்டுக்குப் பெருமை சேர்த்தது!
கிரிக்கெட்டில் இந்தியா & பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. அதுவே உலகக்கோப்பையில் எனும்போது எதிர்பார்ப்பு ஆயிரம் மடங்காக எகிறுகிறது. இரண்டாவது அரை இறுதியில் இரு அணிகளும் மோதுவது முடிவானதுமே மீடியா பரபரத்தது. எல்லாச் சாலைகளும் பார்வைகளும் மொகாலி நோக்கி! வீதிகள் வெறிச்சோடி அறிவிக்கப்படாத பாரத் பந்த் அமலாகி இருந்தது!

அணியில் அஷ்வின் இல்லை என்றதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்யப்போவதில் அதை மறந்தார்கள். அதிசயமாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திருந்தார் டோனி. பாக். பிரதமர் கிலானி, இந்தியப் பிரதமர் மன்மோகன், சோனியா, ராகுல், பாலிவுட் நட்சத்திரங்கள் என்று வி.வி.ஐ.பி&கள் வருகையில் மொகாலி திக்குமுக்காடியது. பாகிஸ்தானில் இருந்தும் நான்காயிரம் ரசிகர்கள்.
டென்ஷன் நிரம்பி வழிந்த ஸ்டேடியம் ஹோவென ஆர்ப்பரிக்க சேவக் & சச்சின் ஜோடி உள்ளே வந்தது. சேவக் மெஷின்கன் படபடக்க... பாக். கிடுகிடுத்தது. இந்த வேகத்தில் சாத்தினால் 400கூட சாத்தியம் என்று கணக்குபோட்டபோது சேவக் அவுட். அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்ட கம்பீர் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். கோஹ்லி ஆட்டமிழந்தபோதும் ரசிகர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், யுவராஜ் முதல் பந்திலேயே ‘தங்க முட்டை’ போட்டு தளர்நடை போட, இந்திய ரசிகர்கள் முகம் வெளிறியது. சச்சின் கொடுத்த 4 கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் விரல்களின் வழியே வழிய விட்டு ஆறுதல் அளித்தனர். ஒரு லைஃப் கூட இல்லாமல் சதம் அடிக்கும் சச்சின், 6 லைஃப் கிடைத்தும் 85 ரன்னில் ஆட்டமிழந்தது உலக அதிசயம்!
டோனி வழக்கம்போல தட்டித் தடவி 25 ரன் எடுத்து ஒதுங்கிக் கொண்டார். ரெய்னா தயவில் இந்தியா 260 ரன்னை எட்டியது. இந்த ஸ்கோர் தாங்குமா? 121 கோடி இந்திய ரசிகர்களும் கேள்வியின் கனத்தில் மவுனமாகக் கவிழ்ந்தனர். ‘பந்து மிச்சம் வைக்காமல் 50 ஓவர் ஆடிட்டாங்க’, ‘சச்சின் சதம் அடிக்கல’, ‘உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இதுவரை தோற்றதில்ல... எனவே எப்படியும் ஜெயிச்சுடுவாங்க’ என்று சென்டிமென்ட்களை துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது!
ஹபீஸ், ஷபிக் கொஞ்சம் மிரட்டினாலும் இந்திய வீரர்கள் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான ஃபீல்டிங்குடன் தாக்குப் பிடித்து தாக்குதல் நடத்தினர். ஜாகீர், முனாப், நெஹ்ரா வேகம் ஒர்க் அவுட்டானது பெரிய ஆச்சரியம். அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்த்தி ஆர்ப்பரித்தார் யுவராஜ். பூச்சாண்டி காட்டிய பூம்பூம் அஃப்ரிடி வெளியேறியதுமே வெற்றி உறுதியாகிவிட்டது. ஒரு பந்து மிச்சம் இருக்க பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனபோது மொகாலியில் ரிக்டர் ஸ்கேல் கொண்டு அளந்திருந்தால் குறைந்தது 10 புள்ளி பதிவாகியிருக்கும்!
குழந்தை போல குதூகலித்த சோனியாவின் முகத்தில் இந்தியா! கிலானி அமைதி காக்க, மன்மோகன் கைதட்டியது கணத்தின் கட்டாயம். இதை & இதைத்தானே இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். பொடிசுகள் முதல் பெரிசுகள் வரை கைதட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி. அதிர்வேட்டுகளும் வாணவேடிக்கையும் பட்டிதொட்டிகளிலும் அமர்க்களப்பட்டது.

‘கடைசி வரை போராடினோம். அரை இறுதி வரை முன்னேறியதே பெரிய சாதனைதான். இந்தத் தோல்விக்காக பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கான வரவேற்பு மோசமாக இருக்காது என்று நம்புகிறேன்’ என்று அஃப்ரிடி அழகாகப் பேசினார். ‘பிரதமர் மன்மோகனும் இந்திய அணியும் பாகிஸ்தான் வர வேண்டும்’ என்று கிலானி அழைப்பு விடுத்து, ‘நண்பேன்டா’ ஆனார்.
இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து எஸ்.எம்.எஸ்&கள் பறந்தன. எல்லாவுட் நட்சத்திரங்களும் ட்விட்டர், பேஸ்புக்கில் பாராட்ட, இணையதளங்கள் பாரம் தாங்காமல் தொங்கின. 2011 உலகக்கோப்பையில் இதுதான் க்ளைமாக்ஸ். இதுதான் முடிவு. கோப்பை யாருடையதாக இருந்தாலும்!
பா.சங்கர்