மொகாலியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரலாற்று வெற்றியை நேரில் கண்ட மகிழ்ச்சியுடன் திரும்பியிருந்தார் தனுஷ். அதைத் தாண்டிய மகிழ்ச்சி அவரது பேச்சில் தெரிந்தது, அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் வழங்கும் ‘மாப்பிள்ளை’ பற்றிய உரையாடலில். மொகாலி உற்சாகத்துடனேயே ஆரம்பித்தார் சூப்பர்ஸ்டார் ‘மாப்பிள்ளை’.
‘‘ரெண்டு பேருக்காகத்தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சேன். ஒருத்தர், லாரா. அவர் ரிட்டயர் ஆனாலும், அதை மீறிய உற்சாகத்தோட கிரிக்கெட் பார்க்கிறது சச்சினுக்காகத்தான். அடக்கத்துக்காக அவரை பிராட்மேனுக்கு நிகரானவர்னு சொன்னாலும் அதைத்தாண்டி பல சாதனைகளைத் தொட்டிருக்கார். இந்தியனா இருக்கிறதில நாம பெருமைப்பட்டுக்கிற விஷயங்கள்ல முக்கியமான பெருமை சச்சினுக்கு உண்டு. அதுவும் மொகாலி மேட்ச் பாகிஸ்தான்கூடன்னதும் நேர்ல பார்த்தே ஆகணும்னு ‘வீட்ல’ ஆசைப்பட்டுக் கேட்டாங்க. நேர்ல பார்த்த மேட்ச்ல இந்தியா ஜெயிச்சதும், சச்சின் 85 விளாசியதும் சந்தோஷமான விஷயம்...’’ என்றவர், ‘மாப்பிள்ளை’க்கு வந்தார்.
‘‘ரஜினி சார் நடிச்ச ‘மாப்பிள்ளை ,’ சூப்பர் ஸ்டாரை மனசில வச்சு நெய்யப்பட்ட கதை. ஆனா இந்த ‘மாப்பிள்ளை’, என்னைப் போல சாமானிய இளைஞன் இமேஜை மனசில வச்சு உருவாக்கப்பட்டது. அதுக்கும் இதுக்கும் ஒருவரிக் கதையும், ரெண்டே ரெண்டு சீன்களும்தான் சம்பந்தம். மத்தபடி ரசிகர்கள் என்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்களோ, அதைக் கச்சிதமா மனசில வச்சு காட்சிகளை வச்சிருக்கார் டைரக்டர் சுராஜ். அவர் டைரக்ஷன்ல நான் நடிச்ச ‘படிக்காதவனை’த் தாண்டி இது என்டர்டெயின்மென்ட்ல அமளி துமளிப்படும்.
அதுல பெரிய பங்கெடுத்திருக்கார் விவேக். ‘படிக்காதவன்’, ‘உத்தமபுத்திரனை’ அடுத்து என் படங்கள்ல அவர் தொடர்ந்து நடிக்கிறார்னா, அவரோட நல்ல மனம்தான் அதுக்குக் காரணம். ‘பத்மஸ்ரீ’ வாங்கியிருந்தாலும், செட்டுக்கு வந்தார்னா டைரக்டர் என்ன சொல்றாரோ அதை மீறி எதையும் செய்யமாட்டார். அடக்கத்துக்கு அவர் ஒரு உதாரணம். அதுதான் என்கூட அவர் தொடர்ந்து வர்றதுக்குக் காரணம். படத்துல அவர் வர்ற காட்சிகள் காமெடியின் உச்சமா இருக்கும். அவர்கூட மனோபாலாவோட காமெடியும் பேசப்படும்.
படங்கள் வெளிவர்றதுக்கு முன்னமே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகை, இந்தப்பட ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியாதான் இருக்கும். எப்படிப்பட்ட நடிகைன்னு தெரியாமலேயே உடன் நடிக்க ஆரம்பிச்சு, எதிர்பார்ப்பு அத்தனைக்கும் பொருத்தமான நடிகையா அனுபவத்தில தெரிஞ்சாங்க ஹன்சிகா. அதோட ‘சன் பிக்சர்ஸ்’ மூலமா அறிமுகமாகறதால கிடைக்கப்போற பப்ளிசிட்டில ஹன்சிகா மேல இருக்க அத்தனை நம்பிக்கையும் நிஜமாகப்போகுது...’’
‘‘உங்க ஜோடியைவிட, இந்தப்படத்தில மாமியாரா வர்ற மனீஷாவுக்குத்தானே முக்கியத்துவம்..? கடைசியா ஹீரோயினா பார்த்த மனீஷாவை உங்களால மாமியாரா ஏத்துக்கிட்டு நடிக்க முடிஞ்சதா..?’’
‘‘உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? மனீஷா நடிச்ச ‘1942 எ லவ் ஸ்டோரி’ வந்தப்ப நான் ஆறாவது படிச்சுக்கிட்டிருந்தேன். இப்ப அவங்க எனக்கு மாமியார்னு சொன்னா நம்பலாம்தானே..? அதுவும் சினிமாவில யாருக்கு என்ன கேரக்டரோ, அது நியாயமா இருந்தா யாரும் என்ன வேடத்திலும் நடிக்கலாம். அப்படிப் பார்த்தா முந்தைய படத்தில ஸ்ரீவித்யா மிரட்டியிருந்த அந்தக் கேரக்டருக்கு மனீஷாவைவிட பொருத்தமான நடிகை கிடைப்பாங்களா தெரியலை. ஷூட்டிங் வர்றதுக்கு அரை மணி நேரம் லேட்டாச்சுன்னாகூட மன்னிப்பு கேக்கறதிலேயே அரை மணி நேரம் செலவழிக்கிற நல்ல மனசுக்காரங்க மனீஷா.
மேக்கப் போட்டாச்சுன்னா கேரக்டராதான் தெரிவாங்க. ‘பேக்கப்’ சொல்லியாச்சுன்னா, இவங்களா இத்தனை நேரம் இத்தனை இறுக்கமா இருந்தாங்கன்ற அளவில ஜோவியலாகிடுவாங்க. படம் பார்க்கிறதிலேர்ந்து புத்தகம் படிக்கிறது வரை என் டேஸ்ட்டுக்கு ஒத்துவந்ததால நிறைய பேச முடிஞ்சது மனீஷாகூட. அதோட, ‘அழகான மாமியார்’ங்கிறது மனீஷாவோட கூடுதல் சுவாரஸ்யம்...’’ & சிரிக்கும் தனுஷுக்கு படத்தில் பல ‘பஞ்ச்’ டயலாக்குகளை வைத்திருக்கிறார் சுராஜ்.
‘‘சூழ்நிலையோட முக்கியத்துவத்துக்கேத்த மாதிரி, ‘என்னை எந்த அளவுக்குக் கெட்டவன்னு நினைக்கிறீங்களோ, நான் அந்த அளவுக்கு நல்லவன்; என்னை எந்த அளவுக்கு நல்லவன்னு நினைக்கிறீங்களோ, நான் அந்த அளவுக்குக் கெட்டவன்...’னும், ‘பாய்சன் கொடுத்தாலே நான் பாயசமா குடிக்கிறவன். பாயசமே கிடைச்சா சும்மா விட்ருவேனா..?’ன்னும் சில வசனங்கள் வருது. அதையெல்லாம் ‘பஞ்ச்’ டயலாக்குன்னு சொல்றதைவிட, டயலாக் ‘பஞ்ச்’சுன்னு சொல்லலாம்...’’
என்ற தனுஷுக்காக முந்தைய ‘மாப்பிள்ளை’யில் வந்த ‘என்னோட ராசி நல்ல ராசி...’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் இசையமைக்கும் மணிசர்மா.
‘‘உங்க நிஜ வாழ்க்கையைச் சொல்றமாதிரியே இருக்குதே பாடல்..?’’ என்றால், ‘‘நான் அடிக்கடி சொல்றமாதிரி, எத்தனை முயற்சி செய்தாலும் சில விஷயங்கள் வாழ்க்கையில அமையாது. அப்படிப்பட்ட விஷயங்கள் எனக்கு அமைஞ்சது. அதை என்னோட ராசின்னு நீங்க சொன்னா நான் ஒத்துக்கிட்டுதானே ஆகணும்..?’’ என்கிறார்.
‘மாப்பிள்ளைக்கு... நல்ல யோகமடா..!’
வேணுஜி