செவலை



-த.சக்திவேல்

கோவை சென்ட்ரல் தியேட்டர் புதுப்பொலிவுடன் தயாராகி இருந்தது. அன்றுதான் ஜேம்ஸ் கேமரோனின் ‘அவதார்’ ‘3டி’யில் ரிலீஸ். ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரோனுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு கோவையில் ஒரு ரசிகப் பட்டாளமே உருவாகியிருந்தது. காலை பத்து மணி காட்சிக்கு ஏழு மணி முதலே கூட்டம் அலைமோதியது.

வாகன நெரிசலிலும், மக்கள் திரளிலும் தியேட்டர் ஸ்தம்பித்தது. டிக்கெட் வாங்க வரிசையில் நின்றவர்களை ஒழுங்குபடுத்தவே தியேட்டர் ஊழியர்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது. அப்போது சரவணனின் மொபைல் அடித்தது. எதிர்முனையில் அசார். ‘‘மாம்ஸ்.. பஸ் ஏறிட்டேன். ஒன்பது மணிக்கு தியேட்டர்ல இருப்பேன்.

டிபனை அன்னபூர்ணால சாப்பிடலாம்...’’ ‘‘சரிடா. சீக்கிரம் வா...’’ காலை கட் செய்த சரவணனின் கண்கள் தியேட்டர் வாசலில் இருந்த கட் அவுட் மீது பாய்ந்தது. கோவையிலிருக்கும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த சரவணனும், புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த அசாரும் ஜிகிரி தோஸ்த்துகள். ஒரே காலேஜ். ஒரே கோர்ஸ். ஒரே வகுப்பு. ஒரே டெஸ்க்கில் அருகருகே அமர்ந்து படிக்கிறவர்கள்.

தியேட்டரில் எந்தப் படம் இறங்கினாலும் காலேஜை கட் அடித்துவிட்டு முதல் ஷோவைப் பார்த்துவிடுவார்கள். ‘அவதார்’ ரிலீசாகி இருக்கிறது. சொல்லவா வேண்டும்! பத்து நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை ரிசர்வ் செய்துவிட்டார்கள். சொன்னதுபோலவே அசார் ஒன்பது மணிக்கு தியேட்டருக்கு வந்துவிட்டான். இன்னும் காட்சி ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கிறது.

‘‘என்ன மாம்ஸ்... தலைவர் படம் மாதிரி கூட்டம் அள்ளுது? ரிசர்வ் பண்ணலனா நம்ம கதி..?’’ ‘‘ஜேம்ஸ் கேமரோன் படம்னா சும்மாவா..வேணா பாரு, மனுஷன் பிரிச்சு மேஞ்சிருப்பாரு...’’ சொன்ன சரவணன், அவனை இழுத்துக் கொண்டு அன்னபூர்ணாவுக்குள் நுழைந்தான். இருவரும் இட்லி, தோசைகளை உள்ளே தள்ளிவிட்டு தியேட்டருக்குள் நுழைந்தபோது மணி 9.50. படம் பார்க்கும்போது மொபைலை அணைத்து வைப்பது சரவணனின் பழக்கம்.

சினிமா மீது மிகுந்த பற்றும், காதலும் கொண்டவன். இந்தப் பழக்கம் அசாரையும் தொற்றிக்கொண்டது. ஆரவாரத்துடன் படம் ஆரம்பித்தது... படம் முடிந்து வெளியே வந்தபோது எல்லோரின் முகத்திலும் ஈயாடவில்லை. அப்படி ஒரு அமைதி. படத்தை மெச்சிக் கொண்டே அருகிலுள்ள பேக்கரிக்கு இருவரும் நகர்ந்தனர். டீயும், பிஸ்கட்டும் ஆர்டர் செய்துவிட்டு மொபைலை ஆன் செய்தான் சரவணன். உடனே அம்மாவிடமிருந்து கால் வந்தது.

இந்த நேரத்தில் அம்மா கூப்பிட மாட்டாளே... ‘‘உன்னை எவ்வளவு தடவை கூப்பிடுறது? அம்மிச்சியை சுகந்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம். ரொம்ப சீரியசா இருக்கு. உடனே வா...’’ உலகமே இருண்டது. தலை சுற்றியது. ‘‘என்ன மாம்ஸ்... என்ன பிரச்சனை? போன்ல யாரு?’’ ‘‘ஒண்ணுமில்ல அசார். நீ காலேஜுக்கு போ. கொஞ்சம் அவசர வேலை.

நைட்டு வெவரமா சொல்றேன்...’’ அசாரிடம் விடைபெற்று பேருந்தில் ஏறினான். மனம் முழுக்க அம்மிச்சி நிரம்பியிருந்தாள். கண்களில் நீர்  முட்டிக் கொண்டு வந்தது. பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். டிக்கெட் கொடுப்பதில் நடத்துநர் மும்முரமாக இருந்தார். சரவணனுக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞன் தன் காதலிக்கு எஸ்எம்எஸ் அனுப்பிக் கொண்டிருந்தான்.

போகப்போக கூட்டம் அதிகமாகி பேருந்து மெதுவாக நகர ஆரம்பித்தது. சரவணனின் இடது பாதத்தின் கட்டை விரல் நகத்தின் மீது கண்ணீர்த் துளிகள் விழுந்தன. பேருந்தும், எதிரே வந்த வாகனங்களும், சாலையும் அதனதன் இயல்பில் இயங்கிக் கொண்டிருந்தன. அழுகையை அடக்கிக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு அதில் தலையைச் சாய்த்தான்.

அம்மிச்சி. அம்மாவின் அம்மா. வேறு யாரையும் விட அம்மிச்சியைத்தான் அவனுக்கு அதிகம் பிடிக்கும். அப்பா இறந்த பிறகு அம்மிச்சி, அப்பிச்சி வீட்டில்தான் வளர்ந்தான். அவனுக்கு ஏராளமான கதைகளை அம்மிச்சி  சொல்லியிருக்கிறாள். இருவரும் சேர்ந்தே காட்டுக்குள் விறகு பொறுக்க போவார்கள்.

ஒரு நாள் அப்படிச் சென்றபோதுதான் பாம்பை முதன் முதலாகப் பார்த்தான். ‘‘பாம்பும் நம்மை மாதிரிதான். அது பாட்டுக்கு அது இருக்குது. நாம பாட்டுக்கு நாம இருக்கிறோம். நாம எந்தத் தொந்தரவும் செய்யலைன்னா, அதுவும் எதுவும் செய்யாது. அதைப் பார்த்து பயப்படாத...’’  அன்று அம்மிச்சி சொன்னது இன்று வரை அவன் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது.

அதன்பின் பாம்பை மட்டுமல்ல, எதையுமே தொந்தரவு செய்யாத ஒரு குழந்தையாகவே அம்மிச்சியிடம் வளர்ந்தான் சரவணன் கண் விழித்தபோது ஹாஸ்பிட்டலுக்கு எதிரே இருக்கும் நிறுத்தத்தை பேருந்து நெருங்கிக் கொண்டிருந்தது. இறங்கியவன் மருத்துவமனைக்குள் ஓடி அம்மாவைத் தேடினான். சித்தி, மாமாவுடன் அம்மாவும் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

அருகில் சென்ற சரவணனுக்குப் பேச்சு வரவில்லை. எவ்வளவு முயற்சித்தும் வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் சினிமாவுக்குக் கிளம்பும்போது அம்மிச்சியைப் பார்த்துப் பேசிவிட்டு நூறு ரூபாயை வாங்கிச் சென்றிருந்தான். ஒரு சினிமா முடிவதற்குள் என்னென்னமோ நடந்துவிட்டது. ‘‘என்னாச்சு?’’ விசும்பிக் கொண்டே அம்மாவிடம் கேட்டான். 

‘‘காலைல பத்து மணி இருக்கும். பைப்ல தண்ணி புடிச்சிட்டு இருந்தேன். கால்ல சேத்தோட ஒரு நாய்க்குட்டியைத்  தூக்கிட்டு அம்மிச்சி வந்துச்சு. ‘என்னாச்சும்மா’ன்னு கேட்டேன். ‘கால்வாய்ல நாய்க்குட்டி விழுந்து கிடந்துச்சு. வெளிய வர முடியாம சும்மா கத்திட்டே இருந்துச்சு. உள்ள இறங்கி எடுத்துட்டு அப்படியே வரேன். கொஞ்சம் தண்ணி கொண்டு வா... நாயைக் கழுவணும்’னு சொல்லுச்சு.

நான் தண்ணி எடுத்துட்டு வர்றதுக்குள்ள படிக்கட்டுல மயங்கி அப்படியே சரிஞ்சுடுச்சு. பேச்சு மூச்சு இல்ல. ப்ரஷர் அதிகமாகி மூளைக்குப் போற நரம்புக் குழாய் உடைஞ்சு போச்சுன்னு டாக்டர் சொல்றாங்க. இன்னும் ஒரு வாரம்தான் தாங்குமாம். அம்மிச்சியை வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்லிட்டாங்க. சித்தப்பா கார் பிடிக்க போயிருக்கார்...’’

அம்மாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை. வீட்டுக்கு வந்த இரண்டு வாரங்களில் அம்மிச்சி இறந்துவிட்டாள். மரணச் சடங்கு எல்லாம் முடித்த பிறகு அம்மிச்சியின் துணிமணிகளை வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளத்தில் கொண்டுபோய் போட்டனர். சரவணன் இடிந்து போயிருந்தான். யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

நடப்பது கனவா நிஜமா என்றும் தீர்மானிக்க முடியவில்லை. வீட்டுக்கு யார் யாரோ வந்தார்கள். கையைப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள். விலகினார்கள். அரவணைப்புக்கு என்றே பிறந்த அம்மிச்சியின் கரங்களை அவன் மனம் தேடியது. சமையல் செய்துகொண்டிருந்த அம்மாவை அழைத்தான். ‘‘அம்மிச்சி எடுத்துட்டு வந்த நாய்க்குட்டி என்ன கலரும்மா?’’ ‘‘உன் கலருதான்.

செவலை...’’ வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சந்து பொந்து ஒன்றையும் விடாமல் நாய்க்குட்டியைத் தேடி சரவணன் அலைந்தான். மூன்று நாட்கள் ஆகியும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை குப்பையைக் கொட்ட பள்ளத்தின் பக்கம் போனான்.

அம்மிச்சியின் சிகப்பு நிற கூரைப் புடவையின் வெது வெதுப்பில் அந்த செவலை நிற நாய்க்குட்டி ஒய்யாரமாகப் படுத்துக்கிடந்தது. தன்னை அம்மிச்சி அணைப்பதுபோல் அதை அப்படியே தூக்கினான். செவலை அவனை உற்றுப் பார்த்து அவன் விழிகளோரம் கசிந்த ஈரத்தை முத்தமிட்டது.            

அமைச்சரின் யோசனை!

கல்யாணம் என்றால் மிக்சி, கிரைண்டர், வாட்ச் கிப்ட் ஓகே. ஆனால் மத்தியப்பிரதேச அமைச்சர் கோபால் பார்க்கவா, தான் நடத்திய 700 ஜோடிகளுக்கான மெகா திருமணத்தில் பரிசாக கிரிக்கெட் பேட் தந்துள்ளார். ஏன்? ஹஸ்பெண்ட் சரக்கடித்தால் அதை வைத்து மனைவி அடிக்கத்தான்!

பீட்ஸா டிரெஸ் மோகினி!

அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினாவைச் சேர்ந்த அனைவரும் ஒலிவியா மியர்ஸ் வடிவமைத்த உடையைக் குறித்துதான் வாயைப் பிளந்தபடி பேசுகிறார்கள். உணவு நிறுவனத்துக்காக லேட்டஸ்ட்டாக ஓர் உடையை டிசைன் செய்திருக்கிறார். பீட்ஸாவில் என்னவெல்லாம் இருக்குமோ அவை அனைத்தையும் ஒரு கவுனில் அழகாக டிசைன் செய்திருக்கிறார். அந்த உடையை அணிந்து எந்தப் பெண் அமர்ந்தாலும் அவர் பீட்ஸா போலவே தெரிவார். அப்படியே சாப்பிடலாம்!

ஸ்மைல் சேட்டை

பேபியின் சிரிப்பு அழகுதான். அதற்காக குடும்பத்தையே அலறவிட்டு சிரித்தால் எப்படி? இங்கிலாந்தில் ஷாப்பிங் சென்ற கிர்ஸ்டி, தன் 14 வயது வாண்டு பிராண்டனின் சேட்டை தாங்காமல் காருக்குள் இருக்கச் சொல்லி விட்டு ஷாப்பிங் கிளம்பினார். வாண்டு, காருக்குள் தன்னை லாக் செய்து கொண்டு சிரிக்க... அருகில் இருந்தவர்கள் பயப்பட... இறுதியில் தீயணைப்பு வண்டி வந்து கார் லாக்கை விடுவித்து பிராண்டனை மீட்டது. ஷாப்பிங்குக்கு தன்னையும் அம்மா அழைத்துச் செல்லவில்லை என்பதால் இப்படிச் செய்தானாம்!

விமானத்தை இழுத்த கார்!

மக்களைச் சுமக்கும் விமானத்தில் மிராக்கிள் இல்லை. அதையே நிலத்தில் ஓடும் கார் இழுத்தால்..? கின்னஸ் சாதனைதான்! பிரான்ஸ் ஏர்போர்ட்டில் ஏர்பஸ் A380 விமானத்தை போர்ச் கார் ஒன்றின் மூலம் 137 அடி தூரம் இழுத்து ரெக்கார்ட் செய்திருக்கிறார் ரிச்சர்ட் பேய்ன் என்ற பொறியாளர். விமானத்தின் எடை? ஜஸ்ட் 6,28,000 பவுண்ட்ஸ்தான்!