தந்திரத்தால் பகையை வீழ்த்தி வெற்றி காணும் எளியவர்களின் கதையானதால், நரித்தலைப்புடன் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீபாலாஜி. இதுவரை சொல்லாத போலீஸ் தேர்வு முறை

கேடுகளைக் கதையில் வைத்து தனித்த கவனமும் பெறுகிறார் அவர். வழக்கமான காதல் கதையென்றாலும் முதல் பாதியில் காதல் உருவாவதை ரசனையுடனும், காதலில் வெற்றியடையும் போராட்டத்தை இரண்டாவது பாதியிலும் சொல்லியிருக்கிறார். அதனால் இரண்டு படங்களைப் பார்ப்பதைப் போன்ற இருவேறு களங்களில் பயணிக்கிறது படம்.
முதல் காட்சியில் மூச்சு வாங்க ஓடிப்போய் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் அப்பாவிடம் அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்ததாக டிபன்பாக்ஸைக் கொடுக்கும் விஷ்ணு ஆச்சரியப்பட வைக்கிறார். ஆனால் அப்பா தன் டிபன்பாக்ஸை காட்டி, ‘நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும். இன்னைக்கு பேட்டா வாங்கலே, அதானே...’ என்று பணத்தைக் கொடுக்க, விஷ்ணுவின் கேரக்டர் தெளிவாகப் புரிகிறது. செல்போனை ரீசார்ஜ் செய்ய அப்பா கொடுக்கும் பணம் கடையிலிருக்கும் பெண் ஊழியரால் தவறுதலாக ஹீரோயின் ரம்யா நம்பீசனின் போனுக்கு ரீசார்ஜ் ஆனது தெரிந்து கடைப்பெண்ணையும் நொந்துகொள்ள முடியாமல், ரம்யா இழுத்த இழுப்புக்கெல்லாம் போவதில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஷ்ணு. போலீஸ் செலக்ஷனில் பழிவாங்கும் அதிகாரிக்கு எதிராக தான் காதலில் தோற்றுவிடக்கூடாதென்று ஒவ்வொரு போட்டியிலும் அதிகபட்சத் திறமையைக் காட்டி வெல்வதும் நன்று.
இயல்பான உடைகளிலும் ரசிக்க வைக்கிறார் ரம்யா நம்பீசன். தன் இழுப்புக்கெல்லாம் வரும் விஷ்ணுவைக் கண்ட மாத்திரத்திலேயே காதலிக்க ஆரம்பித்தாலும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வேறு பெண்ணாக அறிமுகமாவதும், ஒரு கட்டத்தில் குட்டு உடைந்து விஷ்ணுவிடம் மாட்டிக்கொள்வதும் ரசனையான நடிப்பு.
விஷ்ணுவின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணியாக வருபவர்கள் இதுவரை தெரியாத முகங்களாக இருந்தும், பழகிய முகங்கள் போலவே நடித்திருப்பது இயக்குநரின் திறமை. இரண்டாவது பாதியில் போலீஸ் செலக்ஷனுக்காக வந்து நண்பர்களாகும் சூரி அண்ட் கோ படத்தை எளிதாக நகர்த்த உதவுகிறார்கள். டீ விற்கும் அப்புக்குட்டிக்கு இருக்கும் போலீஸ் ஆசையும், காவல் துறையில் தன்னைப் போன்றவர்களும் பணியாற்ற வாய்ப்பு இருக்கும் துறைகளை அவர் பட்டியல் போட்டுச் சொல்வதும் சபாஷ் போடவைக்கின்றன.
எம்.எல்.ஏ ஹாஸ்டலில் எம்.எல்.ஏவின் உறவினர்களே நிரம்பியிருக்கும் எதார்த்தத்தைச் சொல்வதும் லந்து. தன்னைத்தேடி வந்த தொகுதி உறுப்பினர்களிடம், ‘எம்.எல்.ஏ வெளியே போயிருப்பதாக’ அதே எம்.எல்.ஏவே சொல்லிவிட்டு வந்து, ‘‘அஞ்சு வருஷத்துக்கு முன்னே தொகுதிக்குப் போனது. இப்ப யாருக்கும் என்னை அடையாளம் தெரியலை...’’ என்று சொல்வதை நினைத்து நினைத்து ரசிக்கலாம். போலீஸ் தேர்வு நிலைகளில் தவறான அதிகாரிகள் வேண்டாதவர்களை எப்படியெல்லாம் தகுதிக்குறைவு செய்யமுடியுமென்று காட்டியிருக்கும் காட்சிகள் நம்பகமாக இருக்கின்றன.
முதல் பாதியின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் ரசிக்க முடிந்திருக்கும். விஷ்ணுவின் அப்பாவுக்கு போலீஸைக் கண்டால் ஏன் ஆகவில்லை என்பதும், எம்.பி.ஏ படித்திருந்தும் விஷ்ணுவை போலீஸ் வேலைக்குப் போனால்தான் ஆயிற்று என்று ரம்யாவின் அப்பா நிர்ப்பந்திப்பதும் பதில்கள் இல்லாத கேள்விகள். வி.செல்வகணேஷின் இசையில் பாடல்களைவிட பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. ஜே.லக்ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தின் நேர்த்தியைக் கூட்டுகிறது.
புரட்டுப் போலீஸை வீழ்த்தும் புத்திசாலி நரிகள்..! குங்குமம் விமர்சனக்குழு