
தான் விரல் காட்டாத படங்களிலும் சிம்பு குரல் காட்டியிருக்கிறார். அதேபோல் டி.ஆரும் வெளிப்படங்களில் பாடியிருக்கிறார். ஆனால் இருவரும் ஆளுக்கொரு பாடலை வேற்றுப் படத்துக்காகப் பாடியிருப்பது ஏ.ஜி.என்டர்டெயின்மென்ட்டின் ‘டூ’ படத்தில். இருவரையும் பாட வைத்திருக்கும் புதுமுக இயக்குநர் பி.ஸ்ரீராம், இயக்குநர் திருமுருகனின் உதவியாளர்.
‘‘ஒவ்வொரு இளைஞனும் தன்னோட பெற்றோர் இப்படித்தான் இருக்கணும்னு எந்த வரைமுறையும் வச்சுக்கிறதில்ல. அதேபோல நண்பர்களையும் இப்படி இருக்கணும்னு நிர்ப்பந்திக்கிறதில்லை. ஆனா காதலின்னு வரும்போது மட்டும், ‘அவ இப்படி இருக்கணும். இப்படி நடந்துக்கணும்’னு ஏகப்பட்ட விதிமுறைகள் வச்சுக்கிறாங்க. அதுவே காதலிக்கு பெரிய நெருக்கடியைக் கொடுக்குது. இந்த ‘பொசஸ்ஸிவ்னஸ்’தான் கதை.
முழுக்க இளைஞர்களுக்கான படம்ங்கிறதால ஒரு மெலடிக்கு வித்தியாசமான குரல் தேவைப்பட்டது. இதில இசையமைக்கிற அபிஷேக்&லாரன்ஸோட ஆல்பத்தைக் கேட்கும்போது சிம்புவோட குரல் நினைவுக்கு வந்தது.
கேட்டப்ப ஒத்துக்கிட்டவர், நாங்க எதிர் பார்த்ததுக்கும் மேல அற்புதமா பாடினார். அதேபோல இளைஞர்கள் தோள்மேல கை போட்டு அவங்களுக்கு ஆலோசனை சொல்ற மாதிரி ஒரு குத்துப்பாடல் இருக்கு. அதுக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது டி.ஆரோட கணீர்க்குரல்தான். அவரும் கேட்டவுடனே மறுக்காம வந்து பாடிக்கொடுத்தார்...’’ என்ற ஸ்ரீராம், படத்தின் நாயகியாக நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நட்சத்திராவை நடிக்கவைத்திருக்கிறார். ‘முன்தினம் பார்த்தேனே’ சஞ்சய் ஹீரோவாக, அவருக்கு ஜோடியாகிறார் நட்சத்திரா.
‘‘நடிகை சுமித்ராவின் மகள் அவங்கன்னு கேள்விப்பட்டு சுமித்ரா மேடம்கிட்ட கதை சொன்னேன். காதலன் எதைச்சொன்னாலும் அதுக்கு நேர்மாறா நடக்கிற கேரக்டர் அதுன்னு சொன்னவுடனே, ‘இவ கேரக்டரும் அதேதான்...’னு உடனே ஓகே சொன்னாங்க...’’ என்கிற ஸ்ரீராம், திரைப்படக் கல்லூரி மாணவர்.
‘‘சினிமாவைப் பாடமா தெரிஞ்சுக்கிட்டாலும், அனுபவ அறிவுக்காக திருமுருகன் சார்கிட்ட சேர்ந்தேன். ஒரு யூனிட் எப்படி குடும்பமா இயங்கணும்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். காலேஜ்ல புராஜக்டுக்காக அத்தனை பேரும் சீரியஸான கதையைப் படமெடுக்க நான் மட்டும் காமெடி ஸ்கிரிப்ட் பண்ணினேன். அதைப்பார்த்த எங்க பிரின்சிபல் கூட, ‘இங்கே படிச்சதில திருமுருகன் மட்டும்தான் இப்படிக் காமெடி ஸ்கிரிப்ட்ல புராஜக்ட் செய்தார். அதுக்குப்பிறகு நீதான் செய்திருக்கே...’ன்னார். அப்படி அவரோட ஆன சிங்க், இந்தப் படத்தில அற்புதமான காமெடி ட்ரீட்மென்டுக்கு வழிவகை செஞ்சிருக்கு...’’ என்கிறார் அவர்.
சிரிக்கக் காத்திருக்கோம் ஸ்ரீராம்..! ஜி