பட்டி மன்றமும் இந்த பாப்பையாவும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  பாமர மக்கள் மத்தியில உக்கார்ந்துக்கிட்டு, புரியாத இலக்கியம் பேசிட்டு கைதட்டலை எதிர்பார்த்தா எப்படி? பரபரப்பா பட்டிமன்றங்கள் நடந்தாலும்கூட, ஒரு பெரிய இறுக்கம் இருந்ததை என்னால உணரமுடிஞ்சுது. எவ்வளவு தீவிரமா தயார் பண்ணிக்கிட்டுப் போய் பேசினாலும் மக்கள் மத்தியில எங்க பேச்சுகள் சின்ன அசைவைக்கூட ஏற்படுத்தலே. காரணம், அவங்களுக்கு நாங்க பேசுற இலக்கியம் புரியலே...

இதுக்காக மக்களைக் குறைசொல்ல முடியாது. தமிழ் படிக்கற கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியப் பாடங்களை நடத்தினாலே, ‘புரியலே சார்... பாட்டுகளை பிரிச்சுச் சொல்லித் தாங்க சார்’னு சொல்றாங்க. சாதாரண மக்களுக்கு எப்படிப் புரியும்? மாற்றத்துக்கு உட்படுத்தி மக்களோட ரசனைக்கு இணக்கமா கொண்டு போகலன்னா பட்டிமன்றம் மக்கள்கிட்ட இருந்து அந்நியப்பட்டு போயிரும்னு தோணுச்சு. இந்த எண்ணம் எனக்குள்ள மிகப்பெரிய போராட்டத்தை உருவாக்குச்சு. நிறைய பெரியவுக பட்டிமன்றம் பேசுறாங்க. அவுகளை மீறி நாம என்ன செய்யமுடியும்? மனசுக்குள்ளயே போராடுறேன். என்ன மாற்றம் செய்யறது?

முப்பது வருஷத்துக்கு முன்னாடி என்னைப் புரட்டிப் போட்ட ஒரு சம்பவம், இந்தக் குழப்பத்தை தீர்த்து வச்சுது! பெரிய கோயில்கள்ல பிரமாண்டமான வளாகங்கள் உண்டு. அந்தக் கோயில்கள்ல இருந்து பட்டிமன்றங்கள் கேட்டு வர்றபோது, கோயில் வளாகத்துக்குள்ளயே மேடை போடச்சொல்வாரு குன்றக்குடி சாமி. அந்தச்சூழல் மனசுக்கு இதமாவும் அமைதியாவும் இருக்கும். இப்படிப் போடுவதை தென்கடைக்கோடி மாவட்டத்தில இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகை மிகக்கடுமையா விமர்சனம் பண்ணி எழுதத் தொடங்கிடுச்சு. ‘பட்டிமன்றம் வெறும் வெட்டிமன்றம், அதை ஒழிச்சாகணும்’னு கங்கணம் கட்டிக்கிட்டு எழுதுச்சு அந்தப் பத்திரிகை. அந்தக் கட்டுரைகளை எழுதுறவங்க யாருன்னு பாத்தீங்கன்னா, முன்னால பட்டிமன்றம் பேசினவங்க... இப்ப வாய்ப்பில்லாம வீட்டில உக்காந்திருக்கவங்க.

‘இந்துக் கடவுள்களை தரம் தாழ்த்தி விமர்சிச்சு, மக்கள் மனதை புண்படுத்துறாங்க. இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லாம் ‘பட்டிமன்றம் பேசுறேன்’ங்கிற போர்வையில் கோயில்களுக்குள் வர்றாங்க. கோயிலுக்குள் வரவும், நம்ம சாமிகளைத் திட்டவும் இவுக யாரு? அவுகளோட சமய கோயில்களுக்குள்ள போயி அவுக சாமிகளைத் திட்ட அனுமதிப்பாகளா?’ & இதுதான் அவுகளோட அடிப்படை வாதம். அப்போ, வேற்று மதத்தவர்கள்னு சொன்னா நாங்க நாலைஞ்சு பேரு இருந்தோம்.

மூணாவதா அவங்க வச்ச விமர்சனம் ரொம்ப வேடிக்கையானது. ‘பட்டிமன்றம் பேசுறவங்க துட்டு வாங்கலாமா? நீங்கதான் பள்ளி, கல்லூரிகள்ல சம்பளம் வாங்குறீகளே... பின்னே ஏன் பேச வரும்போது துட்டு வாங்குறீக? தமிழை விக்கலாமா?’ & இதுதான் அவங்க கோபம். படிச்சா சிரிப்பு வருதுல்ல!

இவங்க எழுதினதை மக்கள் சீரியஸா எடுத்துக்கலே... பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த ஆட்கள், அரசாங்கத்தில சில மேலிட ஆட்களோட சிபாரிசைப் பிடிச்சு, கோயில்களுக்குள்ள பட்டிமன்றம் போடக்கூடாதுன்னு சட்டம் போட வச்சுட்டாங்க. வேடிக்கை என்னன்னா, இன்னைக்கும் அந்த சட்டம் நடைமுறையில இருக்குங்கிறதுதான்...

இன்னைக்குக்கூட சில தமிழாசிரியர்கள், புலவர்களுக்கு பட்டிமன்றம்னா வெறுப்பாத்தான் இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா, பட்டிமன்றத்தை வளர்த்து இவ்வளவு தூரத்துக்கு எடுத்துக்கிட்டு வந்ததே தமிழ்த்துறை சார்ந்த புலவர்களும் பேராசிரியர்களும்தான். தமிழ் படிச்சவங்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தந்தது பட்டிமன்றங்கள்தான். அந்தக்காலத்தில, தமிழாசிரியர்களை வேடிக்கைப் பொருளாத்தான் பாப்பாங்க. அன்றைய சினிமாக்கள்ல கூட பாத்திருக்கலாம். தகுதியற்ற ஆள் மாதிரி சித்தரிச்சு, காமெடி செய்ய வைப்பாங்க. வீதிக்கு வந்து பட்டிமன்றங்கள்ல தங்களோட தமிழ் ஆளுமையை வெளிக்காட்டின பிறகுதான் அவங்களோட தேவையையும் தன்மையையும் மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க; கையெடுத்து கும்பிடத் தொடங்கினாங்க.

இன்னைக்கு, நகைச்சுவையா பேசத் தெரிஞ்ச யாரும் பட்டிமன்ற மேடைகள்ல ஏறிடலாம். அந்தக் காலத்தில பட்டிமன்றம் பேசுறவங்க பேராசிரியராவோ, தமிழ்ப் புலவராவோ இருக்கணும். குறைந்தபட்சம் பள்ளிக்கூட ஆசிரியராகவாவது இருந்தாகணும். இலக்கியங்களையும் புராணங்களையும் பேசினதால அந்தத் தகுதி அவசியமா இருந்துச்சு. வாய்ப்பு கிடைக்காத தமிழாசிரியர்கள் எதிர்ப்பு ஒரு பக்கம், பத்திரிகைகள் எதிர்ப்பு ஒரு பக்கம், அரசாங்க ஆணை ஒரு பக்கம்... இப்படி மும்முனைத் தாக்குதலைத் தாண்டித்தான் பட்டிமன்றம் அடுத்த கட்டத்துக்கு வளர்ந்துச்சு.

பட்டிமன்றங்களை ரசிச்சு, ஆதரிச்சு வளர்த்தெடுத்ததுல மதுரை சௌராஷ்டிர மக்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவங்க மூலமாத்தான் மதுரைக்குள்ள பட்டிமன்றம் நுழைஞ்சுச்சு. புதுமையா எது வந்தாலும் வரவேற்கக்கூடிய மக்கள். அவங்க பகுதிகள்ல அடிக்கடி பட்டிமன்றங்கள் நடக்கும். இதனால அந்தத் தருணத்தில மதுரைக்குள்ள ஏகப்பட்ட பேச்சாளர்கள் உருவாகிட்டாங்க. தியாகராஜர் கல்லூரியில எனக்கு ஆசிரியர்களா இருந்த பேராசிரியர் பாலுசாமி, டாக்டர் அண்ணாமலை, பேராசிரியர் சங்கரநாராயணன், சொல்விளங்கும் பெருமாள், சக்திபெருமாள், ராஜமரகதம், தாமரைன்னு பலபேர் இருந்தாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல் பரிமாற்றம் இருந்ததால எல்லாருக்கும் சீரா வாய்ப்புகள் கிடைச்சுச்சு.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஉள்ளூர்ல பேசுறதில சிக்கல் என்னன்னா, பேச்சாளர் பலபேருக்கு அறிமுகமாகியிருப்பார். உடனடியா விமர்சனத்துக்கு உள்ளாகிடுவார். ராமனைப் பத்தி ஒருத்தர் பேசுறார்னு வைங்களேன்... ‘பாருய்யா... இவரெல்லாம் ராமனைப் பத்தி பேச வந்திட்டாரு’ன்னு கிண்டல் பண்ணுவாங்க. இன்னொரு சிக்கல் & உரிய சன்மானம் கிடைக்காது. ‘ஏம்பா... அவருக்குப் போயி ஏன் இவ்வளவு குடுக்கிறீய?’ன்னு சொல்லிருவாக.

முப்பது வருஷம் முன்னாடி அந்த சம்பவம் நடந்துச்சு. ஒருநாள் சாயங்காலம் வீட்டில உக்காந்திருந்தேன். மதுரை, மேலப் பொன்னகரத்தைச் சேர்ந்த தமிழாசிரியர், புலவர் அ.கி.செல்வகணபதி அய்யா என்னைத் தேடிவந்தாரு. பொதுவா அவருக்கு பட்டிமன்றம் பிடிக்காது. ஆனா, அந்தத் தெருவில இருக்கிற காளியம்மா கோயில் திருவிழாவுக்கு பட்டிமன்றம் போட்டே ஆகணும்னு மக்கள் அவரைத் தொந்தரவு பண்ணிருக்காங்க. 

‘பாப்பையா... அது ஏழைங்க கோயிலு. நீங்க வந்து பட்டிமன்றம் நடத்திக் குடுக்கணும்’னாரு. ‘சரிய்யா... என்ன தலைப்புப் போடலாம்’னு கேட்டேன். அவர் ரொம்ப இயல்பா சொன்னாரு... ‘கண்ட தலைப்புகளையும் போட்டா அவங்களுக்கு ஒண்ணும் வௌங்காதுய்யா. எங்க பகுதியில வீடு வீடுக்கு சண்டையா கெடக்குய்யா. பொண்டாட்டிக்கு புருஷன் மேல நம்பிக்கை இல்லே. புருஷனுக்கு பொண்டாட்டி மேல நம்பிக்கையில்லே... தினமும் அடிதடி. என்ன புத்தி சொன்னாலும் கேக்க மாட்டேங்குதுக. அதனால, குடும்பத்துக்குப் பெருமை தர்றது கணவனா...

மனைவியா?ன்னு போட்டுருங்க...’ன்னாரு. அவரு சொல்லி முடிச்சவுடனேயே என் மனசுக்குள்ள குப்புன்னு ஏதோ ஒண்ணு பாஞ்சு அடைக்குது. இதைத்தானே இவ்வளவு நாளாத் தேடிக்கிட்டிருந்தோம். இவ்வளவு இயல்பாவும் யதார்த்தமாவும் சொல்லிட்டாரே... இதுக்கு முன்னாடி நமக்கு இந்த யோசனை தோணலையே...

பயங்கர ஆனந்தம்... ‘சரிய்யா’ன்னு சொல்லிட்டு வேலைகள்ல இறங்கிட்டேன். நேர்மையாச் சொல்லணும்னா பட்டிமன்றங்கள் புதிய பாதையில பயணிக்கக் காரணமா இருந்தவர் அவர்தான்!
பேச்சாளர்கள்ல ரெண்டு ரகம் உண்டு. எப்பவுமே ஜெயிக்கிற கட்சியிலதான் பேசணும்னு ஒத்தைக்கால்ல நிக்கிற பேச்சாளர்கள் ஒரு ரகம். இன்னொரு ரகம், கொடுத்த தலைப்புக்கு ஆணித்தரமாவும் உணர்வுபூர்வமாவும் பேசுறது. தீர்ப்பு பத்திக் கவலையில்லே. பட்டிமன்ற வரலாற்றில நிக்கப்போறது இந்த ரெண்டாவது ரகப் பேச்சாளர்கள்தான். எங்க குரூப்ல இருக்கிற தா.கு.சுப்ரமணியன் மாதிரி பலர் ரெண்டாவது ரகத்தைச் சேர்ந்தவங்கதான். முதல் ரகத்தைச் சேர்ந்த பேச்சாளர்கள் சிலரும் இருந்தாங்க.

தீர்ப்பு சொல்றதுல பலவகை இருக்கு. சில தலைப்புகளைப் பாக்கிறபோதே மனசுல பெரிய சித்திரம் விரிஞ்சிரும். இதுதான்னு முடிவுக்கு வந்திடலாம். சில தலைப்புகளுக்கு தீர்ப்பு இலக்கியங்கள்லயே இருக்கு. சில தலைப்புகள்ல, இப்படித்தான் தீர்ப்புச் சொல்லணும்னு வரையறை இருக்கு. சில தீர்ப்புகளை அனுபவங்கள் வாயிலா முடிவு பண்ணுவோம். பெரும்பாலும் முன்முடிவுகளோடதான் மேடையில ஏறுவோம். ஒருவேளை பேச்சாளர்கள் சரியா பேசலைன்னாலும், அவங்க பேசமறந்த பாயின்ட்டுகளையும் நாமே எடுத்துச்சொல்லி நம் எண்ணத்துக்குத் தகுந்த தீர்ப்பை சொல்றதும் உண்டு. ஏன் இப்பிடின்னு கேக்கலாம். இது சிவில் வழக்குமில்லே... கிரிமினல் வழக்கும் இல்லே... சமுதாயச் சிக்கல். அதனால, சமுதாயத்துக்கு எது நன்மையோ அதையே தீர்ப்பா சொல்லுவோம்.

செல்வகணபதி அய்யா தலைப்பைச் சொன்னதும், பேச்சாளர்கள் யாருங்கிறதையும் தீர்மானிச்சுட்டேன். ‘குடும்பத்துக்குப் பெருமை சேர்ப்பது கணவனே’ங்கிற அணியில சக்திபெருமாள், காந்திமதியம்மா, கோ.பா.தாமரை; ‘மனைவியே’ங்கிற அணியில சொல் விளங்கும் பெருமாள், தா.கு.சுப்பிரமணியன், பேராசிரியர் துரைராஜ். சொல்விளங்கும்பெருமாளும் சக்திபெருமாளும் தம்பதி. ‘கணவனே’ன்னு பேச பெண்களையும், ‘மனைவியே’ன்னு பேச ஆண்களையும் போட்டதுக்கு காரணம் என்னன்னா, அப்போ எனக்குச் சரியான முடிவு எடுக்கத் தெரியலே!
எல்லாரும் நிகழ்ச்சியன்னிக்கு சாயங்காலம் எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாக. உக்காந்தவுடனே காந்திமதியம்மா ஆரம்பிச்சாங்க & ‘இதை என்ன தலைப்புன்னுய்யா போட்டிருக்கீங்க!’
எனக்கு ‘பகீர்’னு இருந்துச்சு... ‘இது நான் போட்ட தலைப்பு இல்லைம்மா... நிகழ்ச்சி நடத்துறவங்களே சொன்ன தலைப்பு. படிப்பறிவு குறைவான மக்கள் உள்ள பகுதி. அவங்க மத்தியில இலக்கியங்கள் எடுபடாது. அவங்களுக்கு புரியிற மாதிரித்தான் பேசணும்’னேன்.

‘முடியாது... எங்களால இந்தமாதிரி தலைப்புல எல்லாம் பேசமுடியாது. ராமனையும் சீதையையும் பேசுன நாவால இந்தத் தலைப்பை எப்படி பேசமுடியும்?’னு எல்லாரும் சண்டைக்கே வந்துட்டாங்க. என்னால சமாளிக்க முடியலே. கடைசியா, ‘இந்த ஒரு தடவை மட்டும் பொறுத்துக்குங்க’ன்னு கையெடுத்துக் கும்பிட்டேன். ஓரளவு சமாதானமானாங்க. அந்தப் பட்டிமன்றத்துல கிடைச்ச அனுபவம் இருக்கே...
அடுத்த வாரம் சந்திப்போமா!
 சாலமன் பாப்பையா