தகவல் உரிமையில் தடையா?




Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திருத்தங்கள் வர இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனால் மக்களுக்கு பலனா? பாதிப்பா?
 எஸ்.சந்திரன், கள்ளக்குறிச்சி.

பதில் சொல்கிறார் வழக்கறிஞர் எஸ்.பி.நெடுமாறன்

வெளிப்படையான நிர்வாகம் என்பது ஜனநாயக நாட்டின் முக்கிய அம்சம். தகவல் அறியும் உரிமைச்சட்டம், அந்நோக்கத்துக்கு பலமான அடித்தளம். தனிமனித உரிமைகள் தொடங்கி, நிர்வாகத்தின் உள்கட்டமைப்பில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டுவருவது வரை அச்சட்டம் பல்வேறு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கேட்கப்படும் தகவல்களை தராத பட்சத்தில், மேல்முறையீடு செய்யவும், தகவல் தரமறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டத்தில் வழியுண்டு.

இப்போது இச்சட்டத்தில் 10 திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அவற்றில் 6 திருத்தங்கள் அச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்ப்பதாகவும், முடக்குவதாகவும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டிய ஒரு மனுவில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் எழுப்பலாம் என்பது இப்போதுள்ள நடைமுறை. இதை, ஒரு மனுவில் ஒரு தகவலை மட்டுமே கேட்க வேண்டும் என்றும், அந்தக் கேள்வியும் 250 வார்த்தைகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் திருத்தப்போகிறார்கள்.

தகவல்கள் எத்தனை பக்கம் இருந்தாலும், பக்கத்துக்கு 2 ரூபாய் வீதம் மனுதாரர் செலுத்தவேண்டும். அல்லது 50 ரூபாய் செலுத்தி சிடியாக பெற்றுக்கொள்ளலாம். இதுதான் இப்போதைய நடைமுறை. தகவல்கள் திரட்ட ஏற்படும் முழுச்செலவையும் தகவல் கோருபவரே ஏற்கவேண்டும் என்று இதையும் மாற்றப்போகிறார்கள். இது தகவல்கோரும் ஆர்வத்தை முடக்கிவிடும்.
தகவல்களை அனுப்புவதற்கு 10 ரூபாய்க்கு மேல் செலவானால் அதையும் மனுதாரரே ஏற்கவேண்டும் என்பது இன்னொரு திருத்தம். இது தகவல் கேட்பவர்மீது சுமத்தப்படும் அதிகபட்ச சுமை.

மனுசெய்து 30 நாட்களுக்குள் தகவல் தராவிட்டால், அடுத்த 90 நாட்களுக்குள் மாவட்டத் தகவல் அலுவலருக்கு முறையீடு செய்யலாம். அந்த 90 நாள் அவகாசத்தையும் 45 நாட்களாகக் குறைக்கப்போகிறார்கள்.

அப்பீல் நேரத்தில் மனுதாரரும் அதிகாரியும் ஆஜராக வேண்டும் என்பது விதி. அதையும் மாற்றி மனுதாரர் மட்டுமே ஆஜரானால் போதும் என்று திருத்த இருக்கிறார்கள். இது முற்றிலும் அதிகாரிகளுக்கு சாதகமாகி, பொறுப்பைத் தட்டிக்கழிக்க வகைசெய்யும். இப்போதுள்ள நிலையில், தகவல் கேட்டு மனு அளித்தபிறகு அந்த மனுவை திரும்பப்பெற முடியாது. கண்டிப்பாக தகவல் தந்தே ஆகவேண்டும். ஆனால், இப்போது மனுவை திரும்பப்பெறலாம் என்று திருத்தம் செய்யவிருக்கிறார்கள். தகவல் கோருபவரை மிரட்டி, உயிர் பயத்தை உருவாக்கி மனுவை வாபஸ் பெற வைக்க இந்த திருத்தம் ஏதுவாகும்.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள் பல்வேறு முறைகேடுகளை வெளியில் கொண்டுவந்தார்கள். அதனால் அதிகாரிகளுக்கு பலத்த நெருக்கடி உருவானது. அதன் காரணமாகவே இந்த சட்டத்தை முனை முறிக்க முயற்சிக்கிறார்கள். இத்திருத்தங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், இறுதி முடிவு எடுப்பது தற்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு என்பதால் முட்டையைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்களே... உண்மையா?
 ஆர்.ராஜேஸ்வரி, சாத்தூர்.

பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் எஸ். ஸ்டெல்லா

லேட்டஸ்ட் ஆராய்ச்சி முடிவுகள் முட்டைவிரும்பிகளுக்குச் சாதகமாகவே உள்ளன. ரத்தத்தில் அதிக கொழுப்பு சேர்வதற்கு முட்டை முக்கிய காரணமல்ல என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆகவே, சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக முட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவு இது. முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிதளவுகூட கொழுப்பு இல்லை என்பதால், அதற்கு எந்தத் தடையுமில்லை.

அதிக கொழுப்பு, நீரிழிவு, இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் முட்டைகளை விருப்பத்துக்கேற்ப சுவைக்கலாம். முட்டையைச் சமைக்கும்போது எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றைச் சேர்க்காமல் இருப்பது நல்லது.

கொழுப்பு பற்றி கவலைப்படுபவர்கள் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், நெய், இனிப்புகள், வறுத்த உணவுகள், பரோட்டா, மாமிசம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.