குங்குமம் ஜங்ஷன்



புத்தகம் அறிமுகம்

எனக்குரிய இடம் எங்கே?
- ச.மாடசாமி

(சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. விலை ரூ.100/- தொடர்புக்கு: 72990 27361)



கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியரின் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார்.

மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் ஏதுவாக எளிமையான புரிந்துணர்வில் கட்டுரைகள். வகுப்பறை, மாணவர்களிடம் கற்போம், எனக்குரிய இடம் எங்கே என மூன்று பெரும் தலைப்பு களில் விரியும் கட்டுரைகள் ஏதோ ஆவணம் போல் விரிந்துவிடும் அபாயத்தை எட்டி விடாமல் நாவல் போன்று படித்துணரத் தூண்டுகிறார். ஆசிரியர், மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான புத்தகமே!

சிற்றிதழ் talk

‘‘‘மரப்பசு’வின் உரிமம் என்னிடம்தான் இருக்கிறது. இக்கதையைப் படமாக எடுக்க 2000 முதல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் கொடுத்தேன். அக்கதையை நிராகரித்தார்கள். நிராகரித்த தேர்வுக்குழுவில் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இயக்குனரும் இருந்தார். தி.ஜானகிராமனின் ஆத்மாவிற்கு நெருக்கமான, அவரது கதைக்கு நெருக்கமான திரைக்கதையைத்தான் நானும் அமைத்திருந்தேன். இருந்தாலும் என்.எஃப்.டி.சி. அன்று நிராகரித்தது. ‘அதனாலென்ன... நானே தயாரிக்கிறேன்’ என்று இறங்கி அதனோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன்.’’

- ‘படச்சுருள்’ ஜூலை-2016 இதழில் இயக்குனர் வஸந்த்


நிகழ்ச்சி... மகிழ்ச்சி!

சமீபத்தில் தன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை சென்னையில் சந்தித்தார் சூர்யா. ‘‘ரெண்டு வருஷ இடைவெளிக்குப் பின் உங்களை சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் நற்பணிகள் செய்வதில் எனக்குப் பெருமை. ஆனால், நீங்கள் முதலில் உங்கள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்பிறகு  நற்பணி மன்றத்தில் ஈடுபட்டால் போதும்!’’ என ரசிகர்களிடம் மனம் திறந்திருக்கிறார் சூர்யா. இந்தியா முழுவதுமிருந்து விழாவுக்கு வந்திருந்த ரசிகர்களுடன் சூர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது!

யூ டியூப் லைட்!

‘கபாலி’ படத்துக்கு தரப்பட்ட பில்டப் ரொம்ப ஓவர் என இங்கே ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க, ரஜினி கேஷுவலாக அமெரிக்க வீதியில் ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்டபடியே வாக்கிங் போகும் வீடியோ ஒன்றை ரசிகை ஒருவர் பதிவேற்றியிருக்கிறார். காரை மெதுவாக்கி அவர் சூப்பர் ஸ்டாரை நோக்கி கையசைக்க, அவரும் பதிலுக்கு ஹாய் சொல்கிறார். வெறும் 12 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவையே 3 நாட்களில் 4.2 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இவருக்கு பில்டப்பை புதுசா யாரும் தர வேண்டாம் பாஸ். அது தானா உருவாகுது!

டெக் டிக்

உலகின் மிகப்பெரிய டேட்டிங் ஆப் டிண்டர். ஜி.பி.எஸ் வழியே நம் இருப்பிடத்தை அறிந்து, அருகில் இருக்கும் எதிர்பாலரை மட்டும் போட்டோவுடன் அறிமுகப்படுத்தும் நல்ல ஆப். இப்போது இதில் ‘டிண்டர் சோஷியல்’ என்ற புது வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி நமக்கு அருகே இருக்கும் நட்புக் குழுக்களை நாம் பார்க்கலாம். அவர்களோடு இணையலாம். புதிய நகரத்துக்கு வந்து நட்பு தேடுகிறவர்களுக்கு இது அமிர்தம். மனிதர்கள் காதல் செய்யும் ஸ்டைலை மாற்றிய டிண்டர், நட்பின் ஸ்டைலையும் மாற்றப் போகிறது என்கிறார்கள். ஆக, இது முக்கியமான மூவ்!