கையில காசிருந்தால் குற்றவாளி!



கறுப்புப் பண வேட்டையின் அடுத்த அஸ்திரம்

‘கறுப்புப் பணத்தை சுவிட்சர்லாந்திலிருந்து மீட்போம் என்று சொல்லிவிட்டு இப்போது பொதுமக்கள் ஒவ்வொருவருடைய அண்ட்ராயர் பாக்கெட்டையும் திறந்து பார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. அதன் உச்சகட்டம் இந்த அறிவிப்பு. ‘இனி யாரும் யாருடனும் 3 லட்ச ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது...’, ‘15 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கம் வைத்திருக்கக் கூடாது!’



பயப்படாதீர்கள். நம்மைக் கலங்கடிக்கும் இந்த விதிமுறைகள் இன்னும் சட்டமாகவில்லை. ஆனால், பிரதமரின் சிறப்புப் புலனாய்வுக் குழு இதைப் பரிந்துரைத்திருக்கிறது என்பதால் இது நடைமுறைக்கு வரும் சாத்தியம் அதிகம். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் கறுப்புப் பணத்தைத் தடுக்குமா? இல்லை, இந்திய வர்த்தகத்தையே முடக்குமா? நிபுணர்களிடம் கேட்டோம். ‘‘இது ஒரு விதத்தில் கறுப்புப் பண விவகாரத்துக்கு எதிரான நடவடிக்கைதான். ஆனால் அதிலும் ஒரு அளவுகோல், தராதரம், ஒரு வழிமுறை இருக்க வேண்டும்!’’ என ஆரம்பித்தார் பொருளாதார நிபுணரான நாகப்பன்.

‘‘இன்று பல தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை தரும் பல்வேறு சேவைகள், அரசு நிர்ணயித்த விலை அல்லது கட்டணத்தைவிடக் கூடுதலான ரொக்கப் பணம் பெற்று நிகழ்கிறது. இதில்தான் கொள்ளை லாபமும், வரி ஏய்ப்புகளும் நிகழ்கின்றன. இந்தப் பணம்தான் கணக்கில் வராத கறுப்புப் பணமாக உலா வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை கூடாது என்றால், ‘வங்கிப் பரிவர்த்தனை செய்யுங்கள்’ என்றுதான் அர்த்தம். வங்கிப் பரிவர்த்தனை எல்லாமே கணக்கில் வரும். ஆக, இது கறுப்புப் பண விவகாரத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரும் செயல்தான். ஆனால், இதை எல்லோரிடமும் செயல்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை.

சாதாரண பெட்டிக் கடைக்காரரோ, பூ விற்பவரோ, மீன் விற்பவரோ இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் மொத்த வியாபாரிகள் போன்றவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அங்கே ஒரு வியாபாரி தினசரி தான் வாங்கும் காய்கறி, பழங்களுக்கு பல நாட்கள் கடன் சொல்லி, மாத இறுதியில்தான் செட்டில் செய்வார். அதுவரை அந்தப் பணம் ரொட்டேஷனில் இருக்கும். செட்டில் செய்யும்போது அதை வங்கிப் பரிவர்த்தனைதான் செய்ய முடியுமென்றால், தன் கையில் கொஞ்ச நேரமே இருக்கும் அந்தத் தொகைக்கு ஒரு வியாபாரி கணக்குக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தினம் தினம் விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் காய்கறி மார்க்கெட்டில் அவர் எவ்வளவுக்கு வாங்கி எவ்வளவுக்கு விற்றதாகக் கணக்குக் காட்டுவார்? இந்த வியாபாரிக்கு ஒரு ஏஜென்ட்டுடன் டீலிங் என்றால், அந்த ஏஜென்ட்டுக்கு நேரடியாக விவசாயிகளிடம் டீலிங் இருக்கும். ஏற்கனவே மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் இருக்கின்றன. அவர்களின் இந்தப் பரிவர்த்தனையிலும் கை வைப்பது சரியாகாது. அப்படிக் கை வைத்தால் அது விவசாயிகளைத்தான் மறைமுகமாக பாதிக்கும்!’’ என்ற நாகப்பன், அடுத்த பரிந்துரையை முழுமையாக மறுத்தார்.

‘‘15 லட்ச ரூபாய்க்கு மேல் வீட்டில் ரொக்கப் பணம் வைக்காதே என்றால், எங்கே வைப்பது? வங்கியில் வைப்பதா? ஒரு வங்கியை நான் அத்தனை தூரம் நம்ப முடியுமா? அது திவாலாகிவிடாது என்பது என்ன நிச்சயம்? இந்தியாவில் ஒரு வங்கி திவால் ஆகிவிட்டால், அங்கு கணக்கு வைத்திருந்தவர்கள் எவ்வளவு பணம் போட்டு வைத்திருந்தாலும் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்தான் திருப்பித் தரப்படும் என்பது விதி. இதை மாற்றி, போட்ட பணம் வந்துவிடும் என்ற உறுதியை அரசு கொடுத்தால் கூட வங்கிகளை நம்பலாம்.

மற்றபடி, என் பணத்தை நான் எங்கே வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதை இங்கேதான் வைக்க வேண்டும்... இங்கே வைக்கக் கூடாது என்று அரசு சொல்வது கிட்டத்தட்ட சர்வாதிகாரச் செயல்!’’ என்றார் அவர். வியாபாரிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் மோகனிடம் கேட்டோம். ‘‘இன்றிருக்கிற விலைவாசியில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்துக்கு வருட வருமானமே சுமார் 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

இதில் 3 லட்ச ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யக் கூடாது, வீட்டில் 15 லட்ச ரூபாய்க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதெல்லாம் நடுத்தர மக்களை மேலும் இன்னலில் ஆழ்த்தும் செயலாகவே இருக்கும். வியாபாரிகள் கடன் வாங்கியும், அடமானங்கள் வைத்தும், சொத்துக்களை விற்றும்தான் முதலீட்டைக் கொண்டு வருகிறார்கள். எவ்வளவு வணிகப் பரிவர்த்தனை நடந்தாலும் அதில் கிடைக்கும் சொற்ப லாபம்தான் வியாபாரிக்கு.

மற்றவை எல்லாம் ரொட்டேஷனில் இருக்கும் பணம். அது அவருடையதல்ல. மாதக் கடைசியில் விற்ற பொருட்களுக்கு ரொக்கமாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாக வேண்டும். அப்படிப்பட்டவர்கள் செய்யும் பணப் பரிவர்த்தனையை கறுப்புப் பணமாகக் கருதுவதில் நியாயமில்லை. உண்மையிலேயே கறுப்புப் பணத்தை மீட்க வேண்டுமென்றால் பெரிய தொழில் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், அயல்நாட்டுக் கம்பெனிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களிடம் அரசு கிடுக்கிப்பிடி போட வேண்டும்!’’ என்றார் அவர் காட்டமாக!

அதிரடிகள் தொடரும்!

கறுப்புப் பணத்தை மீட்பது தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மோடி பிரதமர் ஆனதும், ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா இருக்கிறார். இந்தக் குழு இதுவரை ஐந்து இடைக்கால அறிக்கைகளை நீதிமன்றத்தில் தந்துள்ளது. லேட்டஸ்ட் அறிக்கையில் கொடுத்த பரிந்துரைகளே இவை!

இதன்படி, 15 லட்ச ரூபாய்க்கு மேல் வீட்டிலோ, அல்லது தொழில் நிறுவனத்திலோ ரொக்கம் வைத்திருக்க வேண்டும் என்றால், அந்தப்பகுதி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். கறுப்புப் பணத்தை தானாகவே முன்வந்து கணக்கு காட்டி வரி கட்டி விட்டால் பொது மன்னிப்பு வழங்கும் திட்டமும் இவர்களின் யோசனைதான். அதை செயல்படுத்திவிட்ட மத்திய அரசு, மற்ற விஷயங்கள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த இடைக்கால அறிக்கையை இந்தக் குழு ஆகஸ்ட்டில் தரப்போகிறது. அதில் இன்னும் அதிரடிகள் இருக்கும் என்கிறார்கள்.

- டி.ரஞ்சித்