ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா

ஓவியம்: அரஸ்


“அம்மாகிட்டே இருந்து போனை வேணும்னே தட்டிப் பறிச்சது யார்னு எப்படிக் கண்டுபிடிக்கறது விஜய்..?” என்று கேட்டபோது, நந்தினியின் கண்களிலும் முதல் தடவையாக அச்சம் குடியேறிவிட்டதை விஜய் கவனித்தான்.



“யார் போன் பண்ணி மிரட்டினதுன்னு நாம கண்டுபிடிக்கக் கூடாதுன்னுதானே அம்மாவோட போன்லேர்ந்து பேசியிருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நந்து. எனக்கு ஒண்ணுன்னா பரவாயில்ல... அம்மா வீட்லயும் தனியா இருக்காங்க. கோயிலுக்கும், மார்க்கெட்டுக்கும் தனியா வந்து போறாங்க. அம்மாவை இன்னிக்கு ஃபாலோ பண்ணி போனைப் பிடுங்கின ஒருத்தன், நாளைக்கு வேற ஏதாவது செய்துட்டான்னா..?”

“விஜய்... நீ சூப்பர்மேன் இல்ல. உங்கம்மாவைப் பத்தி நினைச்சு பயப்படறதைவிட, இந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிடறதுதான் புத்திசாலித்தனம்” என்றாள் நந்தினி. “ஆனா, இதைப்பத்தி அம்மாகிட்ட சொல்லாத... அநாவசியமா பயந்துருவாங்க” என்றான் விஜய். இன்ஸ்பெக்டர் துரை அரசன் ஒரு காகிதத்தில் வட்டங்கள் இட்டார். மேலும் கீழுமாகக் கோடுகள் போட்டார். நட்சத்திரமாக்கினார். குறுக்கிலும் நெடுக்கிலும் அழுத்திக் கிறுக்கினார். பின், அந்தத் தாளையே கிழித்துப் போட்டார்.

சின்னதுரையைப் பிடித்தபிறகும், அவனிடமிருந்து உபயோகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையே என்ற எரிச்சல் ஒருபுறம். பயப்பட வேண்டியவன் பயமுறுத்துகிறானே என்ற கோபம் ஒருபுறம். அந்தக் கோபத்தைத் தணித்துக்கொள்ள அந்தச் செயல் தேவைப்பட்டது. காவல்துறை அதிகாரியை கைநீட்டி, ‘உன் குடும்பமே இருக்காது..!’ என்று மிரட்டும் அளவு கயவன் ஒருவன் பேசுகிறான் என்றால், அவனுக்குப் பின்னால் எப்பேர்ப்பட்ட செல்வாக்கு மிக்க ஒரு கூட்டம் இருக்க வேண்டும்..?  ‘கோர்ட்டுக்குக் கூட்டிப் போனால், அங்கே நீதிபதியின் முன்னாலேயே கொலை செய்ய ஆளிருக்கிறது...’ என்று அவன் கொக்கரிக்கிறான் என்றால், குற்றங்கள் செய்யும் அந்தக் குழுவின் வீச்சு சட்டங்களுக்குள் எந்த ஆழத்துக்குத் துளைத்திருக்க வேண்டும்..? பின்னணியில் இருந்து அப்படி இயக்குபவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதே அவருக்கு முன்னால் இருந்த பெரும் சவால்.

சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரை அழைத்தார். “இது அந்த சின்னாவோட போன். இந்த நம்பருக்கு வந்த கால், இந்த போன்லேர்ந்து போன கால்... எல்லாத்தையும் லிஸ்ட் எடுங்க! சந்தேகத்துக்கிடமா எந்த பேர் அடிபட்டாலும், எனக்குச் சொல்லுங்க...” என்று அந்த போனை அவரிடம் கொடுத்தார். “யெஸ் சார்...” “சுகுமார், போனோட போட்டோ கேலரியில பாருங்க...” சப் இன்ஸ்பெக்டர் சுகுமார், சின்னதுரையின் போனில் புகைப்படங்கள் இருந்த பகுதியை நிமிண்டினார்.

சில உற்சவ மூர்த்திகள், சில மூலவர் விக்கிரகங்கள் என்று பல்வேறு கோயில்களின் அரிதான சிற்பங்களின் புகைப்படங்கள் அணிவகுத்தன. அவற்றுக்கு வரிசையாக எண்கள் இடப்பட்டிருந்தன. “இவனுக்கு நிச்சயமா இந்த சிலைக் கடத்தல்ல பெரிய பங்கு இருக்கு, சார்...” “இந்த போன் நமக்குக் கெடைச்சிருக்கற ஒரு பொக்கிஷம், சுகுமார். பத்திரமா வெச்சிருங்க. அவுட்கோயிங் கால்ஸ், இன்கமிங் கால்ஸ் லிஸ்ட்டை வெச்சு, அத்தனை பேர் அடையாளத்தையும் சரி பாருங்க... நேரமெடுக்கும், பரவாயில்லை. நிச்சயமா இந்த சங்கிலில சின்னதுரைக்கு ஒரு முக்கியமான இடம் இருக்குன்னு நினைக்கறேன்!”

“எஸ் சார்...” “அது மட்டும் இல்ல... சின்னதுரையோட போன், ஜார்ஜோட போன், செத்துப் போய் கிடந்தாங்களே, லியோ, ஜோஷ்வா, இவங்க போன்... நாலு போன்லேர்ந்தும் அவுட்கோயிங், இன்கமிங் கால்ஸ்ல பொதுவான நம்பர் ஏதாவது இருக்கான்னு செக் பண்ணுங்க. நம்பிக்கையான ஒரு டீமை கூட வெச்சுக்கங்க...” “எஸ் சார்...” என்று சுகுமார் சல்யூட் அடித்தார். நடராஜர் சிலை கொள்ளை போன நேரத்தில் விஜய் எடுத்திருந்த வீடியோ ஃபுட்டேஜை இன்ஸ்பெக்டர் துரை அரசன் நிதானமாக ஓட விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, விஜய், நந்தினி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள்.

வீடியோவை நிறுத்திவிட்டு, துரை அரசன் நிமிர்ந்தார். “என்ன விஜய்..?” தன் அம்மாவின் போனிலிருந்து வந்த மிரட்டல் பற்றி துரை அரசனிடம் விஜய் சொன்னபோது, திகைத்தார். “சிலைத் திருட்டைப் பத்தி விசாரிக்கக் கூடாதுனு மெரட்டியிருந்தா, ஆச்சரியமில்ல... ஏன்னா, பின்னணியில ஒரு பெரிய குழுவே மாட்டக்கூடாதுனு பயந்து வேலை செய்யுதுன்னு சொல்லலாம். ஆனா, கல்யாணி ஒரு சாதாரண பிரஜை. அவ கர்ப்பத்துக்கு யார் காரணம்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணக் கூடாதுன்னு ஏன் மெரட்டறாங்க..? யார் மெரட்டறாங்க..? புரியலியே..!”
“கல்யாணிக்குப் பின்னாலயும் நமக்குத் தெரியாத ஏதோ ஒரு ரகசியமான ஆபத்து இருந்திருக்குமா..?” என்று விஜய் தயக்கத்துடன் கேட்டான்.
“இந்த கேஸ் சிக்கலாயிட்டே போகுது... வெல், கொஞ்ச நாளைக்கு அம்மாவை தனியா வெளில போக வேண்டாம்னு சொல்லு, விஜய்!”
“பயந்துருவாங்க சார்...”

“பரவாயில்ல! ஆபத்துல சிக்கறதுதான் தப்பு... கவனமா இருக்கறது தப்பில்ல. அவசியம்னா, ரகசியமா ஒரு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு பண்ணட்டுமா..?” “வேண்டாம் சார்...” என்றான் விஜய். “மெரட்டறவங்களுக்கு கோபம் அதிகமாயிரும்...” “நீ கொஞ்ச நாளைக்கு வெளிப்படையா கல்யாணி மேட்டர் பத்தி யார்கிட்டயும் விசாரிக்க வேண்டாம்...” “ஓகே, சார்...”

“நந்தினி! விஜய்க்கு வேண்டியவங்கன்ற லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்க.. நீங்களும் கவனமா இருந்துக்குங்க...” என்றார் இன்ஸ்பெக்டர் துரை அரசன். மூன்றாவது நாள். சப் இன்ஸ்பெக்டர் சுகுமார் பரபரப்பாக வந்தார். அவர் கையில் ஆறேழு தாள்கள். பல எண்கள் எழுதப்பட்டு அங்கங்கே சில எண்கள் வண்ண மசியால் வட்டமிடப்பட்டிருந்தன. அவற்றை துரை அரசனின் மேஜையில் அவர் பரப்பினார். 

“சார், நாலு பேர் போன்லேர்ந்தும் பண்ணின கால்ஸ்ல, பொதுவா இருக்கறது ரெண்டே ரெண்டு நம்பர்தான். அந்த ரெண்டு நம்பருக்கும் சின்னாவுடைய போன்லேர்ந்து தான் அடிக்கடி கால் போயிருக்கு...” இன்ஸ்பெக்டர் துரை அரசன் நிமிர்ந்து அமர்ந்தார். “வெரி குட்... அது யாருடைய நம்பர்னு பார்த்தீங்களா..?” “பார்த்தேன் சார். அந்த ரெண்டு போனும் சின்னதுரைன்ற பேர்லயே பதிவாகியிருக்கு, சார்...”

“என்னது..!” “சின்னதுரை பேரு, சின்னதுரையோட அதே அட்ரஸ்...” “அந்த நம்பரைப் பயன்படுத்தறவங்க அடையாளம் வெளிய தெரியக் கூடாதுனு இப்படி ஒரு தந்திரமா..?” “ஆனா, வேற ஒரு பிரேக் கெடைச்சிருக்கு, சார்...” “இந்த நம்பர்ல ஏதாவது மாத்ருபூதத்தோட போன்லேர்ந்து போன நம்பரோட ஒத்துப் போகுதா..?” “இல்ல சார்...” “பின்ன..?” “ஜோஷ்வாவோட போனுக்கு வந்த இன்கமிங் கால்ல, ஒரு லேண்ட்லைன் நம்பர் இருக்கு, சார்...” “வெரி குட். ஈஸியா கண்டுபிடிக்கலாமே..!”

“பார்த்தேன் சார். அடுத்த சர்ப்ரைஸ்... அது கே.ஜி டிவியோட நம்பர் சார்...” “வ்வாட்..?” “ஆமா சார்... கல்யாணியும் விஜய்யும் வேலைல இருந்த அதே டிவியோட நம்பர் சார்!” “அந்த டி.வில ஐந்நூறு பேருக்கு மேல வேலை செய்வாங்களே..? லேண்ட்லைன்லேர்ந்து யார் போன் பண்ணினாங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்க முடியும்..?” “ரொம்ப கஷ்டம் சார்... ஒரே நம்பர்ல பதினஞ்சு லைனுக்கு மேல கனெக்‌ஷன் கொடுத்திருக்காங்க. எல்லா டிபார்ட்மென்ட்லயும் போன் இருக்கும். பூஜ்யத்தை டயல் பண்ணி ஒரு லைன் கிடைச்சா, அந்த லைன்ல யார் வேணும்னாலும் பேச முடியும்...”

“எந்தத் தேதில எத்தனை மணிக்கு கே.ஜி டி.விலேர்ந்து ஜோஷ்வாவுக்கு போன் போச்சுன்ற விவரம் கெடைச்சுதா..?” “நடராஜர் சிலை திருடு போனதுக்கு முதல் நாள் சாயந்திரம், இந்த நம்பர்லேர்ந்து ஜோஷ்வாவுக்கு போன் போயிருக்கு சார்...” “கொள்ளைக்காரங்க பயன்படுத்தினது கே.ஜி டி.வில காணாமப் போன கார்... கொள்ளைக்காரனுக்கு வந்த போன் கே.ஜி டி.விலேர்ந்து வந்திருக்கு... நடுவுல உயிர விட்ட பொண்ணும் அந்த டி.வில வேலை பார்த்த பொண்ணு... சுத்திச் சுத்தி அந்த டி.விக்கும், சிலைத் திருட்டுக்கும் ஏதோ ஒரு விதத்துல தொடர்பு வந்துட்டே இருக்கே... அந்த டிரைவர் பிரகாஷ் மேல ஒரு கண்ணு வெச்சுக்கணும் சுகுமார்!”

“ஓகே சார்...” “இந்த நாலு போனுக்கும் பொதுவா இருக்கற நம்பர்கள்னு சொன்னீங்களே, அந்த ரெண்டு நம்பரையும் குடுங்க...” அந்த இரு எண்களையும் எடுத்துக்கொண்டார், இன்ஸ்பெக்டர் துரை அரசன். “நீங்களும் வாங்க, சுகுமார்...” கமிஷனர் அலுவலகம். ஒரு தனியறையில் கடிதங்களை ஃபைல் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார், கான்ஸ்டபிள் மாத்ருபூதம்.

தனியே வெளியே செல்லவோ, போனைப் பயன்படுத்தவோ அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ‘முக்கியமான பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருப்பதால், வீட்டுக்கு வர இயலவில்லை’ என்று மனைவிக்கு போனில் தகவல் கொடுக்க மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் துரை அரசனைப் பார்த்ததும், அவர் முகத்தில் பதற்றம் பெருகியது.

“சார்... நாலு நாளா நான் வீட்டுக்கே போகல, சார்!” “உங்க பாதுகாப்புக்காகத்தான் இந்த ஏற்பாடு, மாத்ருபூதம்... புரிஞ்சுக்குங்க. இப்ப நான் சொல்றபடி நீங்க செய்யணும்...” “சார், சொல்லுங்க சார்...” “இந்தாங்க உங்க போன்... இந்த ரெண்டு நம்பருக்கும் போன் பண்ணுங்க. எதிர்முனையில எடுத்தவுடனே, ‘கான்ஸ்டபிள் மாத்ருபூதம் பேசறேன். சின்னாதான் இந்த நம்பர் குடுத்து, ஒரு முக்கியமான விஷயம் என்னை பேசச் சொன்னான்’னு சொல்லணும்...” “சரி சார்...” “சாமர்த்தியமா பேசி, எதிராளி யாருன்னு கண்டுபிடிக்கணும்...” “சரி சார்...”
“சுகுமார்! எதிர் முனையில போனை எடுத்தா, அதை ட்ரேஸ் பண்ணுங்க...”

“சரி, சார்...” “மாத்ருபூதம், இந்த ரெண்டு நம்பர்ல உங்களுக்குப் பரிச்சயமான நம்பர் ஏதாவது இருக்கா..? பொய் கலக்காம சொல்லுங்க...” “சார், என் குழந்தை மேல சத்தியமா தெரியாது சார்...” என்றார் மாத்ருபூதம். “அப்ப, உங்க குரலும் எதிராளிக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. நானே கொஞ்ச நேரத்துக்கு கான்ஸ்டபிள் மாத்ருபூதமா மாறினா என்ன..?”

இன்ஸ்பெக்டர் துரை அரசன் போனை வாங்கி, இரண்டில் ஓர் எண்ணை முதலில் டயல் செய்தார். எதிர்முனையில் வெகு நேரம் மணியடித்தது. யாரும் எடுக்கவில்லை. அடுத்த எண்ணை முயற்சித்தார். அதுவும் அடித்து அடித்து ஓய்ந்தது. மீண்டும் அவர் முயற்சிக்குமுன், முதல் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து, காதில் வைத்தார். “எனக்கு இந்த நம்பர்லேர்ந்து மிஸ்டு கால் வந்தது. யார் நீங்க..?” என்று எதிர்முனையில் ஓர் ஆழமான ஆண் குரல் கேட்டது. “நான் சின்னாவோட ஃப்ரெண்ட்.. கான்ஸ்டபிள் மாத்ருபூதம் பேசறேன்...” என்றார் இன்ஸ்பெக்டர் துரை அரசன்.

“எனக்கு எந்த சின்னாவையும் தெரியாது...” என்று மறுமுனை தொடர்பு சட்டென்று அறுந்தது. இன்ஸ்பெக்டர் மீண்டும் முயற்சி செய்தார். இந்த முறை போன் எடுக்கப்படவில்லை. இப்போது இரண்டாவது எண்ணை டயல் செய்தார். இரண்டாவது மணியிலேயே அது எடுக்கப்பட்டது. “ஹலோ...” என்றது அதே ஆண் குரல். “அய்யா! போனை கட் பண்ணாதீங்க... சின்னா ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட சொல்லச் சொல்லியிருக்கார்...” என்றார் இன்ஸ்பெக்டர் துரை அரசன்.

எதிர்முனை தொடர்பு அறுந்து போகவில்லை. ஆனால், பதிலின்றி மௌனமாயிருந்தது. “அய்யா! நான் பேசலாமா..?” “சொல்லு... சின்னா எங்க..?” “சின்னா எங்க கஸ்டடில இருக்காருங்கய்யா...” “அவனை எப்ப கோர்ட்டுக்குக் கொண்டு வருவாங்க..?” “அய்யா, அதுக்கு முன்னால சின்னா என்கிட்ட ரகசியமா ஒரு எஸ்டி கார்டைக் குடுத்திருக்காரு. இதை உங்ககிட்டதான் ஒப்படைக்கணும்னு சொல்லி யிருக்காரு...” எதிர்முனை சற்று நேரம் மௌனம் சாதித்தது.

“ஒரு கவர்ல போட்டு நான் சொல்ற எடத்துல அதை வெச்சிரு. எங்காளுங்க எடுத்துப்பாங்க...” “சொல்லுங்கய்யா...” “நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு காந்தி சிலைக்குப் பின்னால இருக்கற ரோடுல 3366னு நம்பர் போட்டு ஒரு பைக் நிக்கும். அதோட சைட் பாக்ஸ்ல கவரைப் போட்டுரு...” சொல்லிவிட்டு, மறுமுனை கட் ஆனது. இன்ஸ்பெக்டர் துரை அரசன் சுகுமாரை நிமிர்ந்து பார்த்தார்.

“கால் எந்த டவர்ல ரிசீவ் ஆச்சுனு விசாரிங்க, சுகுமார்...” சில நிமிடங்களில் சுகுமார் அந்த விவரத்துடன் இன்ஸ்பெக்டர் துரை அரசனுக்கு முன்னால் வந்து நின்றார். பின்னாலயும் நமக்குத் தெரியாதஏதோ ஒரு ரகசியமான ஆபத்து இருந்திருக்குமா..?” 

(தொடரும்...)