அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
524. அஜாய நமஹ (Ajaaya namaha)
ஒரு பெரிய பட்டிமன்றம். பள்ளி ஆசிரியருக்கு இறையருள் கிட்டுமா, கல்லூரிப் பேராசிரியருக்கு இறையருள் கிட்டுமா என்பதே தலைப்பு. இரு தரப்புகளிலும் மாறி மாறிப் பல வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.அப்போது பள்ளி ஆசிரியர் தரப்பில் பேச வந்தவர் மந் நாராயணீயத்தில் அஜாமிளன் சரிதத்தில் இடம்பெற்றுள்ள, ந்ருணாம் அபுத்த்யாபி முகுந்த கீர்த்தனம் தஹதி அகௌகான் மஹிமா அஸ்ய தாத்ருச:
என்ற சுலோகத்தை மேற்கோள் காட்டி, பகவானின் திருநாமத்தைத் தெரிந்து சொன்னாலும் பலன் உண்டு. தெரியாமல் சொன்னாலும் பலன் உண்டு. நாங்கள் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர்களின் பெயர்களைப் படிக்கும் போதெல்லாம் எத்தனையோ முறை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா என்று மாணாக்கரின் பெயர் களைச் சொல்லி அழைத்திருப்போம். அல்லது லக்ஷ்மி, கமலா, மைதிலி, ருக்மிணி என்று மாணவியரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அவற்றை எல்லாம் திருமகளும் திருமாலும் தங்களைக் குறித்துச் செய்யப்பட்ட நாம சங்கீர்த்தனமாக எண்ணி அருள்புரிவார்கள்.
ஆனால் கல்லூரி ஆசிரியருக்கு இந்தப் பாக்கியம் கிட்டாது. ஏனெனில் வருகைப் பதிவேட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையைப் படித்துத் தான் மாணவர்களின் வருகையைப் பதிவிடுவாரே ஒழிய பெயர்களைப் படிக்கும் வழக்கம் கல்லூரியில் இல்லையே.
அதனால் பள்ளி ஆசிரியரே இறை யருளுக்குப் பாத்திரம் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று பேசி விட்டு அமர்ந்து கொண்டார்.
அடுத்துப் பேச வந்த கல்லூரிப் பேராசிரியர், பள்ளி ஆசிரியரின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். வருகைப் பதிவேட்டில் அவர்கள் தான் மாணவ-மாணவியரின் பெயர்களைப் படிக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியர்களான நாங்கள் எண்ணிக்கைகளைத் தான் வாசிப்போம். ஆனால் எண்ணிக்கைகளை வாசிப்பதால் இறையருள் கிட்டாது என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். எண்ணிக்கைகளைச் சொன்னாலும் இறையருள் கிட்டும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில், கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
என்று பாடியுள்ளாரே. ஆகவே நான் ஒன்று என்று சொன்னால், ஒப்பற்ற ஒருவனான தன்னைச் சொன்னதாகவும், இரண்டு என்றால், பிராட்டியோடு இருவராய் விளங்கும் தன்னைச் சொன்னதாகவும், மூன்று என்றால் மூன்று ரகசிய மந்திரங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், நான்கு என்றால் நான்கு வேதங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், ஐந்து என்றால் ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் தன்னைச் சொன்னதாகவும், ஆறு என்றால் ஆறு குணங்கள் நிறைந்த தன்னைச் சொன்னதாகவும், ஏழு என்றால் ஏழு மலைகளுக்கு மீது மேவும் தன்னைச் சொன்னதாகவும், பத்து என்றால் பத்து அவதாரங்கள் எடுத்த தன்னைச் சொன்னதாகவும், பன்னிரண்டு என்றால் பன்னிரு ஆழ்வார்களால் போற்றப்பட்ட தன்னைச் சொன்னதாகவும் எடுத்துக் கொண்டு அருள்புரிவார். எனவே எங்களுக்கும் நிச்சயமாக இறையருள் கிட்டும் என்று பேசி விட்டு அமர்ந்தார்.நடுவர் தீர்ப்பளிக்க வேண்டிய நேரம். நடுவர் தீர்ப்பு வழங்குகிறார். அகாரார்த்தோ விஷ்ணு: என்பார்கள். அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்றார் வள்ளுவர். எழுத்துகளுக்கு
அகரம் ஆதியாக இருப்பது போல், அகிலத்துக்கெல்லாம் ஆதியாக இருப்பவர் பகவான். எனவே முதன்முதலில் விஜயதசமி நாளில் மாணவனாகப் பலகையில் என்றைக்கு நீங்கள் அ என்று எழுதினீர்களோ, அப்போதே உங்கள் இருவருக்கும் திருமால் அருள்புரிந்து விட்டார் என்று சொல்லிப் பட்டிமன்றத்தை முடித்து வைத்தாராம்.
ஆக, அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கிறது. அ என்ற எழுத்தால் குறிக்கப்படுவதால், அஜ என்று திருமால் அழைக்கப்படுகிறார். முன்பு இரு முறை வந்த அஜ என்ற திருநாமத்துக்கு வேறு விதமாகப் பொருள்கொள்ளப்பட்டது. 524-ம் திருநாமமான அஜ என்பதற்கு, அ எனும் எழுத்தால் குறிப்பிடப்படுபவர் என்று பொருள். அஜாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் நாவில் எப்போதும் தனது நாமங்கள் நிறைந்திருக்கத் திருமால் அருள்புரிவார். 525. மஹார்ஹாய நமஹ (Mahaarhaaya namaha)
முண்டக உபநிஷத்தில் வரும் வரலாறு. பிரம்மதேவன் தனக்கு மகனாகத் தோன்றிய அதர்வா என்னும் முனிவருக்கு மிக உயர்ந்த பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை உபதேசம் செய்தார். அதன் பின் அதர்வா முனிவர் அங்கிரர் என்னும் தனது சிஷ்யருக்கு அதை உபதேசம் செய்தார். அங்கிரர் சத்தியவாகருக்கு உபதேசம் செய்தார். சத்தியவாகர் ஆங்கிரஸ் என்னும் முனிவருக்கு உபதேசம் செய்தார். அந்த ஆங்கிரஸ் முனிவரை சௌனக முனிவர் அடிபணிந்து ஒரு கேள்வி கேட்டார்.
எந்த ஓன்றை அறிந்து கொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகுமோ அதை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் சௌனக முனிவர். ஆங்கிரஸ் முனிவர் பதில் கூறுகிறார்: பகவான் ஸ்ரீமன் நாராயணனை அறிந்துகொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகும். அவரைப்பற்றி அறிந்துகொள்ள அபரா வித்யை, பரா வித்யை என இரண்டு வித்யைகள் உதவுகின்றன. அபரா வித்யா என்றால் வேதங்கள், உபநிடதங்கள், வேதத்தின் அங்கங்கள் இவைகளைப் படித்தலாகும். இவற்றைப் படித்தபின், அதன்படிப் பரமாத்மாவைத் தியானிக்க வேண்டும்.
அப்படித் தியானிப்பதைப் பரா வித்யை என்பர். இவை இரண்டையும் பின்பற்றினால் பரமாத்மாவை அறியலாம்.
இந்த உலகத்துக்கே மூல காரணமாக பகவான் இருக்கிறான். இந்த உலகத்துக்கே வித்தாகவும் பகவான் இருக்கிறான். அவன் ஒருவனை அறிந்தால், அவனது மேன்மைக்காக இருக்கும் அவன் சொத்தாகிய இந்த மொத்த உலகத்தையும் அறிந்து கொள்ளலாம்.
முதலில் ஆச்சாரியர் மூலமாகவும், பின் பகவானை இடைவிடாது தியானித்தும் பகவானின் அருளாலே பகவானை சென்று அடையலாம். பகவான் தான் உன் இலக்கு, உன் உபாசனைக்கும் அவன் தான் இலக்கு என்றார் ஆங்கிரஸ்.அந்த உபாசனையை எப்படி செய்ய வேண்டும் என சௌனகர் கேட்டார்.
ஆங்கிரஸ் முனிவர் ஓர் உவமை சொல்லி விளக்குகிறார்.... வில்லிலே அம்பு பூட்டிப் பாணம் போட வேண்டும் என்றார். ஒம்காரம் ஆகிய பிரணவம்தான் வில்லாக இருக்கிறது. அதில் சரமாக, அம்பாக ஜீவாத்மாவைப் பூட்ட வேண்டும். பிரணவத்தை வில்லாக வைத்து ஜீவாத்மாவை அம்பாக பூட்டி, இலக்காகப் பரமாத்மாவை வைக்க வேண்டும். கவனம் எங்கும் சிதறாமல் பகவானிடம் மட்டுமே சிந்தனையை வைத்து பகவானை உபாசிக்க வேண்டும். அப்படி ஜீவாத்மாவை பகவானை நோக்கிச் செலுத்தினால், ஜீவாத்மா பகாவானின் திருவடியை அடைந்துவிடும். பகவானை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் தான் என்ற புரிதல் பெற்று, பகவத் கைங்கரியத்திலும் பகவத் அனுபவத்திலுமே ஜீவாத்மா ஈடுபட்டிருக்கும் என்பது ஆங்கிரஸ் தந்த விளக்கமாகும்.
இதன்மூலம் அவர் உணர்த்தும் விஷயம் யாதெனில் இறைவனுக்கு நாம் நம்மையே காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும். நாம் மற்ற பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மற்ற பொருள்களை மட்டும் அர்ப்பணித்து விட்டு, நம்மை அவன் திருவடிகளில் அர்ப்பணிக்காது போய்விடக் கூடாது. எனவே முக்கியமாக நம்மையே - நமது நான் என்ற எண்ணத்தை - முழுமையாக அவனுக்கே காணிக்கையாக்கி விடவேண்டும்.
எனவேதான் நம்மாழ்வார், பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே தேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
என்று பாடுகிறார். இறைவனுக்கு என் நெஞ்சையே சந்தனமாகவும், பா மாலைகளையே மாலை மற்றும் ஆடைகளாகவும், கை கூப்புதல் என்னும் செயலையே ஆபரணங்களாகவும் அர்ப்பணித்து என்னையே காணிக்கை ஆக்குகிறேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். இப்படி பகவானுக்குச் செய்யும் திருவாராதனத்தில் நம்மையே அர்பணிக்க வேண்டும் என்னும்படி ஏற்றம் மிக்கவராக விளங்குகிறார் திருமால்.
அப்படி ஆத்மாவை அர்ப்பணித்தல் தான் இறைவனுக்குச் செய்யும் சிறந்த பூஜை. மஹா என்றால் மிகச்சிறந்த பூஜை, அர்ஹ என்றால் தகுதி படைத்தவர். மஹார்ஹ என்றால் ஆத்மாவை அர்ப்பணித்தல் என்னும் மிகச்சிறந்த பூஜைக்கு உரியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 525-வது திருநாமம்.மஹார்ஹாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அத்திகிரி அருளாளர் நிலையிலக்கில் அம்பு போல் அமிழ்ந்து அனுபவிக்கும் பேற்றைப் பெறுவார்கள். 526. ஸ்வாபாவ்யாய நமஹ (Swaabhavyaaya namaha)
நான்கு போட்டியாளர்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்று ஒரு கடும் போட்டி நடக்கிறது. முதல் போட்டியாளர் நமது சரிரம். இரண்டாவதாக, நம் சரிரத்துக்குள் இருக்கும் ஜீவாத்மா. முன்றாவதாக பகவானுடய சுத்தசத்துவ மயமான திருமேனி. நான்காவதாக பகவானுடைய எங்கும் பரந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபம். முதலில் நமது சரீரமும் பகவானின் திருமேனியும் களம் காண்கின்றன.
நமது கர்மாதீனமான சரீரத்துக்கும் பகவானுடைய திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தால், சந்தேகமே இல்லாமல் பகாவனுடய திருமேனி தான் வெல்லும். இரண்டையுமே தியானிப்பது எளிது தான் என்றாலும், நமது சரிரத்தைத் தியானிப்பதால் பலன் எதுவும் கிடையாது. மீண்டும் மீண்டும் பிறவிச் சுழற்சிதான் கிட்டும். அதுவே பகாவானின் திருமேனியைத் தியானித்தால் இனிமையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்கும். எனவே முதல் போட்டியிலே பகாவானின் திருமேனியே ஜெயிக்கும்.
இரண்டாவது போட்டி எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும், நுண்ணியதாக இருக்கும் நமது ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கும் இடை நடக்கிறது. இவை இரண்டையுமே தியானிப்பது எளிதன்று. ஜீவாத்மாவைத் தியானிப்பதால் ஆத்மாவையே அனுபவித்தல் என்ற கைவல்ய நிலை கிடைக்குமே தவிர பகவானை அடைதல் என்பது முடியாது. எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்தைத் தியானித்தால் நாம் பகவானை அடைந்து பகவானுக்கு கைங்கர்யம் செய்யலாம். அதனால் இந்தப் போட்டியில் பரமாத்மாவின் ஸ்வரூபமே வெற்றி பெறும்.
மூன்றாவதாகப் பராமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும் பரமாத்மாவின் திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தது. பகாவானின் திருமேனியை தியானிப்பது எளிது, அது மோட்சமும் தருகிறது. அதுவே பகாவானின் ஆத்ம ஸ்வரூபம் மோட்சம் தரும் என்றாலும் அதைத் தியானிப்பது கடினம்.பகவானின் ஆத்ம ஸ்வருபம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. வேதங்களால் கூட அதை முழுமையாக கூற முடியாது. ஆனால் பகவானின் திருமேனியையோ அர்ச்சாவதார ரூபத்தில் நம்மால் எளிதில் தியானிக்க முடியும். ஆதனால் பகவானின் திருமேனியே இப்போட்டியில் வெற்றி பெறும்.
இதைத் தான் ஸ்வாமி வேதாந்த தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தில், பராவர ஸுக க்ராஹ்யம் ப்ரேம போத ப்ரஸாவகம் ஸ்வரூபாத் ஸ்வாமினோ ரூபம் உபாதேய தமம் விது:
என்று தெரிவிக்கிறார். தியானிக்கவும் எளிதாக இருக்க வேண்டும், தியானிப்பவருக்கு முக்தியும் தரவேண்டும் என்றால், அது பெருமாளின் திருமேனி ஒன்றுக்கே சாத்தியமானது என்பது இதன் கருத்து. அதனால் தான் இறைவனை அடைய விரும்பும் அடியார்கள் எப்போதும் அவனது திவ்ய மங்கல விக்ரஹமாகிய திரு மேனியையே தியானித்து, பாவித்து வழிபடுகிறார்கள்.
திருமங்கை ஆழ்வார், காவியே வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும் பாவியேனாக எண்ணி அதனுளே பழுத்தொழிந்தேன் தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தையானைப் பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே
என்று திருக்குறுந்தாண்டகத்தில் பாடுகிறார். பாவித்தல் என்றால் வழிபடுதல் என்று பொருள். பாவ்ய என்றால் வழிபடத் தக்கவர். ஸ்வம் என்றால் சொத்து, இங்கே ஸ்வம் என்பது பகவானின் சொத்தாக இருக்கும் அவர்களின் அடியார்களைக் குறிக்கிறது. ஸ்வம் எனப்படும் அடியார்களால், பாவ்ய - வழிபடத் தக்க திருமேனியோடு பகவான் விளங்குவதால், ஸ்வாபாவ்ய - அடியார்களால் வழிபடத் தக்கவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 526-வது திருநாமம். ஸ்வாபாவ்யாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், எப்போதும் இறைவனைத் தியானித்து வாழும் பேற்றை நமக்கு அவர் அருள்வார்.
527. ஜிதாமித்ராய நமஹ (Jitamithraya namaha)
குருக்ஷேத்ரப் போர்களத்தில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையும், 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனையும் அணிவகுத்து நிற்கிறார்கள். கிருஷ்ணன் பார்த்தசாரதியாகத் தேரோட்ட, அர்ஜுனன் போர்க்களத்தில் நுழைகிறான். அர்ஜுனன் கண்ணனிடம் இரண்டு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்தியருள வேண்டும். என் பக்கம் யார் இருக்கிறார்கள், எதிர்ப் பக்கம் யார் இருக்கிறார்கள் எனக் காண விரும்புகிறேன் என்று பிரார்த்தித்தான்.
கண்ணனும் அவ்வாறே இரு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்த, இரு சேனைகளையும் பார்வையிட்டான் அர்ஜுனன். அங்கே தன் கூட்டாளிகளோ அல்லது எதிரிகளையோ அவன் காணவில்லை. மாறாகத் தன் உறவினர்கள், நண்பர்கள், ஆச்சாரியர்கள், சகோதரர்கள், பாட்டன்மார்கள், பிஷ்மர், துரோணர் போன்ற மகான்கள் ஆகியோரைக் காண்கிறான். இவர்களைப் பார்த்ததும் அர்ஜுனன் கலங்கி, கண்ணா என் காண்டீவம் கையில் இருந்து நழுவி விழுகிறது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை என்று அப்படியே தேரில் கலங்கிப்போய் அமர்ந்துவிட்டான்.
கண்ணா எனக்கு எது நல்லது எது தீயது என்று தெரியவில்லை, பீஷ்ம துரோணர்கள் பூஜிக்கத் தக்கவர்கள். கௌரவர்கள் என் பங்காளிகள். இவர்களை எதிர்த்து எப்படிப் போர் புரிவது. நீயே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றான் அர்ஜுனன்.கண்ணன் இந்த இடத்தில் அர்ஜுனன் ஒருவனின் கலக்கத்தை மட்டும் பார்க்கவில்லை. நம் அனைவரின் மனக் கலக்கத்தையும் பார்த்தான். நம் அனைவர்க்கும் சேர்த்துப் பதில் கூற விழைகிறான் கண்ணன். அதுதான் கீதை உபதேசம்.
கீதோபதேசம் எப்படித் தொடங்குகிறது என்றால், பகவானுக்குச் செய்யும் பூஜையாக நினைத்துக் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அதனால் வரும் உலகியல் பலனின் மீது பற்று வைக்கக்கூடாது என கர்ம யோகத்தில் தொடங்குகிறது. பின் பக்தி யோகத்தில் ஈடுபட்டு எப்படி மோக்ஷத்தை அடைவது என்பது வரை கீதையில் உபதேசம் செய்தான் கண்ணன்.
அர்ஜுனனுக்குப் போர் புரிவது கடமை. அந்த கடமையைப் பலனை எதிர்பார்க்காமல் செய் என்று அவனுக்கு வழிகாட்டினான். இது உணர்த்தும் தத்துவம் யாதெனில், நம் மனம் தான் குருக்ஷேத்திரப் போர்க்களம். அதில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனைகள் தான் நம் மனத்தில் உள்ள நல்ல எண்ணங்கள். 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகள் தான் தீய எண்ணங்கள். நல்ல எண்ணங்களை விடத் தீய எண்ணங்களே பெரும்பாலும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன.
அர்ஜுனன்தான் ஜீவாத்மா. இந்த ஜீவாத்மா 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையான நல் எண்ணங்களின் துணை கொண்டு 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகளான தீய எண்ணங்களை அழிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போய், தீய எண்ணங்களின் மீது பற்று வைத்து விடுகிறது ஜீவாத்மா. அதனால் நம் மனதில் பெரும் மனப் போராட்டம் எழுகிறது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நாம் போர்புரிய வேண்டும். அதற்கான வழியாகத் தான் கர்ம யோகத்தை பகவான் தருகிறான். இந்தக் கர்ம யோகத்தை பின் பற்றினால் நல்ல எண்ணங்கள் நம் மனதில் வளரும்.
அதைக்கொண்டு ஜீவாத்மா பக்குவப்படும். அதன்பின் பரமாத்மாவின் துணையோடு தீய எண்ணங்களை வீழ்த்திப் பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பரமாத்மாவை அடையலாம். இப்படி நம் மனதில் உள்ள தீய எண்ணங்களாகிய எதிரிகளை நம் சார்பில் பகவானே வென்று, அவைகளை வீழ்த்தி நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டுவதால், திருமால் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார்.
அமித்ர என்றால் எதிரிகள். ஜித என்றால் வெல்லப்பட்ட. நம் உள் எதிரிகளாகிய தீய குணங்களைத் திருமால் வென்று தருவதால், அவர் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 527-வது திருநாமம்.ஜிதாமித்ராய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழாமல் திருமால் அருள்புரிவார்.
திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்
|