நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு 17-10-2020 முதல் 26-10-2020 வரை



செவ்வாய்க்கிரகத்தின் அதிபதி துர்க்காதேவி. நவதுவாரங்கள் கொண்ட இந்த உடலில் நவதுர்க்கைகளும் ஜீவாத்மா வடிவில் பிரவேசித்து அதனை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பூவுலகில் நாம் நன்கு வாழ இந்த துர்க்கையர்கள் திருவருட்பாலிக்கின்றனர். எந்தவிதமான ஆபத்துகளையும் தீர்க்கக்கூடியவர்கள் இந்த தேவியர்கள். துர்க்கம் என்றால் அகழி என்று பொருள்.

அகழி எப்படி எதிரிகளை நெருங்கவிடாமல் தடுக்கிறதோ அப்படி நம்மை தீங்குகள் நெருங்க விடாமல் தடுப்பவள் துர்க்காதேவி. இந்த துக்கம் என்பது நாம் ஒன்றின் மீது ஆசைப்பட்டு அது கிடைக்காமல் போகும்போதோ அல்லது கிடைத்த பின் அதை இழக்கும்போதோ ஏற்படும் சோகம்.
அம்மாதிரியான துக்கங்கள் ஏற்படாதவாறு தேவி திருவருள்புரிய வேண்டும். அதை புரியவே துர்க்கை நவதுர்க்கைகளாக ஒளிர்கிறாள்.  இந்த நவதுர்க்கையரும் குமாரி பூஜையில் குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவீ, துர்க்கா, சுபத்ரா என்ற திருநாமங்களால் பூஜிக்கப்படுகிறார்கள்.

வனதுர்க்கா

‘வனம்’ எனில் காடு என்று பொருள். ‘துர்கம்’ என்றால் கோட்டை என்பதும் பொருள். வனத்திலுள்ள கோட்டை இயற்கைப் பாதுகாப்பு நிறைந்தது. இவ்வாறு இயற்கையான பாதுகாப்பைத் தருபவளே வனதுர்க்கை. சூரியன், சந்திரன், அக்னி, இவை மூன்றும் அர்த்த ப்ரபஞ்சம் என்று சொல்லப்படுகிறது. அர்த்தம் என்றால் பாதி. எனவே பாதி உலகம் என்றாகிறது.
பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ என்ற வாக்குகளைக் குறிப்பிடும் பிரபஞ்சம், சப்த ப்ரபஞ்சம் எனப்படுகிறது. அந்த அர்த்த ப்ரபஞ்சத்தையும், சப்த ப்ரபஞ்சத்தையும் காப்பவள் வனதுர்க்கா. அகஸ்தியர் இந்த தேவியைக் காட்டில் வழிபட்டு அவளருளால் விந்தியமலையின் கர்வத்தை அடக்கினார்.  வனங்களில் நித்யவாசம்புரியும் தேவி இவள். அங்கு தவம் செய்யும் யோகியருக்கும், ஞானிகளுக்கும், விலங்குகள் மற்றும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பளிப்பவள். தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் கர்மவினைகளைப் போக்கி சித்த சுத்தியையும், வைராக்கியம், தபோபலம் போன்றவற்றையும் அருள்பவள்.

நவதுர்க்கையரில் வனதுர்க்கையே முதன்மையானவள். இவளே நவராத்திரியில் முதல் நாள் ப்ரதமை அன்று விசேஷமாக வணங்கப்படுகிறாள். தர்மபுரத்தில் உள்ள ஆனந்த பரவசர் பூங்காவில் வனதுர்க்காவிற்கு ஓர் ஆலயம் உள்ளது. ஆதிசங்கரர் ஆத்மவித்யா, மஹாவித்யா, வித்யா காமஸேவிதா எனும் நாமங்களுக்கு பாஷ்யம் எழுதுகையில் மஹாவித்யா என்றால் வனதுர்க்கா என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குங்குமம் போல் சிவந்த நிறத்தையுடையவள்.

வைரங்களும், நவமணிகளும் ஜொலிக்கும் கிரீடத்தை அணிந்தவள். திருநீறும், குங்குமமும் அவள் நெற்றியை அலங்கரிக்கும் பேறு பெறுகின்றன. தேவியின் நாசியில் வைர மூக்குத்தி ஜொலிக்கிறது. சிவந்த உதடுகள் கோவைப் பழத்தைப் பழிக்கின்றன. கலைநுணுக்கம் மிக்க தாடங்கங்கள் காதில் பொலிகின்றன. கருங்கூந்தலில் மல்லிகை மலர்கள் சூடியுள்ளாள். நவரத்தினங்களால் ஆன வளையல்களை கைகளில் அணிந்து பல்வேறு விதமான ஆயுதங்களை தாங்கியருளும் திருக்கோலம். சிறுத்த இடை, பருத்த ஸ்தனங்கள் கொண்டு, சலங்கைகள் அணியப்பெற்ற பாதங்களுடன் மகிஷன் தலைமீது நின்றருளும் திருக்கோலம் கொண்டவள் வனதுர்க்கை எனப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த வனசுந்தரி தன்னைப் பக்தியோடு வணங்குபவர்களுக்கு சர்வ மங்களங்களையும் வாரி வாரி வழங்குபவள். பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி பாக்கியத்தை அருள்கிறாள். அடியவர்களின் மாயையை நீக்கி அவர்களுக்கு ஞானத்தை அருள்கிறாள். செல்வத்தை வேண்டுவோர்க்கு நவநிதிகளையும் தரும் அன்னை இவள். வல்லமையின் மொத்த வடிவம் இத்தேவி. வனதுர்க்கா மந்திரம் மற்ற எல்லா மந்திரங்களின் சக்தியையும் தனக்குள் இழுத்து அதன் வலிமையையும், வல்லமையையும் அடக்கும் ஆற்றல் கொண்டது. வனத்தில் உறையும் இவள் மற்றவர்களால் செய்யப்பட்ட ஏவல், பில்லி, சூனியம் போன்ற உபாதைகளை இல்லாமல் செய்பவள். இத்தேவியின் மந்திரத்தை வனத்திலோ அல்லது வன்னி மற்றும் நெல்லி மரத்தடியிலோ ஜபம் செய்தால் விரைவில் மந்திரசித்தி ஏற்படும்.

தீப துர்க்கை

இருள் அகல விளக்கின் ஒளி அவசியம். நம் மனத்தின் இருள் அகல ஞானம் எனும் தேவியின் அருளொளி அவசியம். அஞ்ஞானம் அகல ஞானம் அவசியம். குண்டலினி யோகத்தில் ஈடுபடும் யோகிகளுக்குத் தீபதுர்க்கை அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அருள்கிறாள். அந்த அம்பிகையே ஆத்மஒளியாகவும் மிளிர்கிறாள்.

குத்துவிளக்கை ஏற்றி அதனை நன்கு அலங்கரித்து கோலமிட்ட பலகையில் வைத்து இரு கைகள் நிறைய மலர்களை அள்ளியெடுத்து மனமுருக வேண்டிக்கொண்டு குத்துவிளக்கில் தீபதுர்க்கையை ஆவாஹனம் செய்து வேண்டிட, குல விளக்காய் நம் குலம் காத்தருள்வாள் தீபதுர்க்கை.
இத்தேவி அறியாமை எனும் இருளை அழிப்பவள். ஸஹஸ்ரார கமலத்தில் அமர்ந்து யோகசக்தியை அருள்பவள். இருள் சூழ்ந்த இடத்தில் நம் கண்ணுக்கு எதுவுமே புலப்படாது. அதனால் அந்த இடத்தில் எதுவுமே இல்லை என்று பொருள் இல்லை. நமது கண், காது, மூக்கு போன்ற இந்திரியங்கள் ஓரளவிற்குத்தான் பொருட்களை உணர்த்தும். நம் கண்களால் காணமுடியாத பொருட்களை அகக்கண்ணால் காண முடியும். அறியாமை என்ற அஞ்ஞானத்தை தீபலட்சுமியாக விளங்கும் தீபதுர்க்கையே அகலச் செய்பவள்.

இதன் அடிப்படையில்தான் தேவியின் பெருமைகளைப் பாடும் தேவி மஹாத்மியம் எனும் ஸப்தஸதீ பாராயணங்களில் 13
அத்தியாயங்களிலும் மகாகாளி, மகாலட்சுமி, திரிபுரபைரவி, ஜெயதுர்க்கா, மகாசரஸ்வதி, பத்மாவதீ, மாதங்கி, பவானி, அர்த்தாம்பிகா, காமேஸ்வரி, புவனேஸ்வரி, அக்னிதுர்க்கா, சிவா ஆகிய 13 தேவதைகளை சமஷ்டியாகத் தீபங்களில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும்போது ஏற்படும் ஒளியே தீப துர்க்கையாக உபாசகர்களால் பாவிக்கப்படுகிறது.

தீபத்தின் சுடரில் அழகிய தேவதையாகத் தோன்றும் இவள் தாமரை மலர் போன்ற நிறத்தவள். சிங்கத்தின் மீது ஆரோகணித்தருள்பவள்.  தேவியின் கடாக்ஷமாகிய குகையிலிருந்து அடர்ந்த மயிருடன் கூடிய சிங்கம் வெளிப்பட்டு நம்முடைய அக்ஞானமாகிய மான் கூட்டத்தை வேகமாக, வெகுதூரம் ஓட்டுகிறது என்று மூகர் தன் மூகபஞ்ச சதியின் கடாக்ஷ சதகத்தில் உத்வேல்லிதஸ்த எனும் துதியில் கூறியுள்ளார். நம் அஞ்ஞானத்தை நீக்கவே தேவி சிம்மத்தின் மீது ஆரோகணித்தருள்கிறாள் என்பது கருத்து.

சபரி துர்க்கா

கருணை புரிவதில் அம்பிகைக்கு நிகராக யாரைத்தான் சொல்ல முடியும்! கோரவேண்டிய அவசியமே இல்லாமல்தம் பக்தர்களுக்கு கருணையுடன் அருள்புரிவதால் அம்பிகையை ‘அவ்யாஜகருணா மூர்த்தின்யை நமஹ’ என லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றித் தொழுகிறது. தேவியின் அற்புத திருக்கோலங்களில் ஒன்றான வேடுவச்சி வடிவம்கொண்ட சபரி துர்க்கையின் பெருமைகளை அறிவோம்.பாரதப்போரில் கௌரவர்களை வெல்ல ஈசனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் கடுந்தவம் புரிந்தான்.

அவனது தவத்தில் மனமிரங்கிய ஈசன், கூடவே அவனது வீரத்தை சோதனை செய்யவும் திருவுளம் கொண்டார். மூகன் எனும் அசுரன் பன்றி வடிவமெடுத்து அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க முற்பட்டான். ஈசன் வேடுவனாக உருமாறி அந்த பன்றியை நோக்கி அம்பை எய்தார். அதே சமயத்தில் தன் தவம் கலைந்த அர்ஜுனன் அதற்குக் காரணமான பன்றியை நோக்கி அம்பை செலுத்தினான். இருவருடைய அம்பு களும் ஒரே சமயத்தில் பன்றி யைத் தைக்க, பன்றி இறந்தது. யாருடைய அம்பு பன்றியை மாய்த்தது என்பதில் ஈசனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே ஆரம்பித்த சொற்போர், இறுதியில் விற்போர் ஆக மாறியது. விற்போரில் வெல்பவரே பன்றியை முதலில் மாய்த்தவர் என்று கொள்ள வேண்டும் என்றார் வேடுவ வடிவில் இருந்த ஈசன். ஆனால், அந்த நிபந்த னையை அர்ஜுனன் ஏற்கவில்லை. இவ்வேடனுடன் விற்போர்புரிவது தன் கௌரவத்திற்கு இழுக்கு என எண்ணினான் அர்ஜுனன்.

ஈசன் அர்ஜுனனுக்கு திருவருள்புரிய தீர்மானித்ததால் மற்றொரு நிபந்தனையை விதித்தார். ‘நீ என்னுடன் போரிட மறுத்தால் உன் தோல்வியை ஒப்புக்கொள்’ என்றார். ஆனால் அப்படி பின்வாங்கி இழுக்கு தேடிக்கொள்ள விரும்பாத அர்ஜுனன், ஈசனுடன் விற்போருக்குத் தயாரானான். இந்தப் போரில் வென்றவரே பன்றியைக் கொன்றவர் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டான்.

‘ஈசனுடன் விற்போர்புரிவதா? அர்ஜுனன் தாங்குவானா? ஈசன் அர்ஜுனனைக் கடுமையாகத் தாக்கிவிட்டால்?’ இவ்வாறு பல எண்ணங்கள் அம்பி கையின் சிந்தனையில் எழுந்தன. ஈசன் அர்ஜுன னுடன் போர்புரியும்போது தானும் அவருடன் இருக்க விரும்பினாள் தேவி. உடனே வேடுவச்சி தோற்றம் கொண்டாள். தலையில் மயிற்பீலி, திருமார்பில் குந்துமணி மாலைகள், காதில் ஓலைச்சுருள் தாடங்கங்கள், கையில் அம்பு-வில் ஏந்தி மரவுரி தரித்து சபரி துர்க்கையாகத் தோன்றினாள்.

தகப்பன் கோபப்பட்டு பிள்ளையைக் கண்டிக்கும்போது, அவரது கோபம் எல்லை மீறாமலும், அதே சமயம் பிள்ளையின் தவறைக் கண்டிக்கும் தாய் போலவும் தேவி அர்ஜுனனைக் காக்க முன்வந்தாள். தன் முழுபலத்தையும் பிரயோகித்து அர்ஜுனன் போரிட்டாலும் ஈசன் தேவியின் வேண்டுகோளை ஏற்று அவனுடன் விளையாட்டாகவே போரிட்டார். தன்னுடைய கடுமையான தாக்குதலை விளையாட்டாகத் தடுத்துப் போரிடும் வேடனையே தன்னால் சமாளிக்க முடியவில்லையே, பெரும் எண்ணிக்கையிலான கௌரவ சேனைகளை எப்படி வெற்றி கொள்வது எனக் கலங்கி நின்ற அர்ஜுனனை ஈசன் கையைப் பிடித்து உயரே தூக்கிப் போட்டார். அர்ஜுனனின் நாடி நரம்புகள் அனைத்தும் தளர்ந்தன.

தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிந்தான் அர்ஜுனன். தன் வில்வித்தை மீதிருந்த அவன் அகந்தை அழிந்தது. உடனே,  தன் சுயரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினான் ஈசன். பின் பாசு பதாஸ்திரத்தை வழங்கியருளினான். இந்தப் பெருமைகள் யாவும் தேவியின் வடிவமான சபரி துர்க்கையையே சாரும்.அம்பிகை மட்டும் சபரி துர்க்கையாக ஈசனுடன் எழுந்தருளியி ருக்காவிடில் மன்மதனின் கதியைத்தான் அர்ஜுனன் அடைந்திருப்பான். தேவியின் கருணையே  அர்ஜுனனைக் காத்தது.

இந்த சபரி துர்க்கை மிகவும் எளிமையானவள். அனைவருக்கும் தாயாக அருள்பவள். தன் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்பவள். வனத்தில் வசிப்பவள். பஞ்சபூதங்களால் மானிடர்க்கு வரும் இடர்களைக் களைபவள். பக்தர்களின் பாவங்களைப் போக்கி மீண்டும் அவர்கள் பாவக்குழியில் விழாமல் தடுத்தருள்பவள். பஞ்சபூதங்களும் இவளுள் அடக்கம். நவராத்திரியின் ஐந்தாம் நாளான பஞ்சமி திதி இத்தேவிக்குரியது.  இத்தேவிக்கு கொய்யா, நாகப்பழம், நேந்திரம்பழம், பேரிக்காய், மரவள்ளிக் கிழங்கு முதலான கிழங்கு வகைகள், புட்டரிசி போன்றவற்றை நிவேதிக்கலாம்.

லவண துர்க்கா
லவணம் என்றால் உப்பு என்று பொருள். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. அதே உப்பு உணவில் அதிகமானாலும் அந்தப் பண்டத்தின் சுவை கெட்டுவிடும். உப்பை அளவோடு உபயோகிப்பதே உடல் நலத்திற்கு நல்லது. அதைப்போலவே நம் வாழ்க்கையில் காமம், குரோதம்,
மதமாச்சரியம் எல்லாம் அளவோடு இருக்க வேண்டும்.

உப்பு எப்படி உணவிற்குச் சுவையூட்ட தேவையோ அதே போல் நம் வாழ்விற்குச் சுவையூட்ட லவண துர்க்காவின் திருவருள் கட்டாயம் தேவை. உப்பைத் தண்ணீரில் போட்டால் அது கரைந்து தண்ணீரோடு தண்ணீராகக் கலந்துவிடுகிறது. அதன் பின் அதைத் தனியே பிரிக்க முடியாது. உப்பு கரைத்த நீர் நிறைந்த ஒரு தம்ளரில் மேல் நீர், மத்தியில் உள்ள நீர் அல்லது அடியில் உள்ள நீர் என எந்தப் பகுதியைக் குடித்தாலும் அது உப்புச்சுவையுடன்தான் இருக்கும். தண்ணீரில் கரைந்த அல்லது கலந்த உப்பைப்போல் காணமுடியாத சூட்சும வடிவில், பிரிக்க முடியாதபடி எல்லாவற்றிலும் தேவி நிறைந்து தத்வமஸி எனும் மகா தத்துவப் பொருளாய் விளங்குகிறாள். தியானத்தின் மூலம் தன்னைக் கரைத்துக்கொண்டு ஆத்ம ஞானியாக வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்துபவள் லவண துர்க்கா.

உணவில் உப்பை உபயோகிப்பது போல எதையுமே அளவாக உபயோகிக்க வேண்டும். பக்தியில் நீரில் கரைந்த உப்பைப் போல கரைந்து இறைவனுடன் கலக்க வேண்டும். அதற்கு லவண துர்க்கா திருவருட்பாலிக்கிறாள். தேவியின் தியானத்தில் கரைபவன் ஆத்மஞானி. உப்பு பல காயங்களுக்கும் விஷங்களை முறிப்பதற்கும் சிறந்த மருத்துவப் பொருளாகத் திகழ்கிறது. அதேபோல இந்த லவண துர்க்காதேவியும் விஷ ஆபத்துகளைப் போக்குபவளாகவும், ரணசிகிச்சையில் இருந்து காப்பவளாகவும் திகழ்கிறாள். வைணவ குலத்தில் இவள் உப்பு போல் இருப்பாள் என்று சொல்வதுண்டு. உப்பைப்போல அத்தியாவசியமாகவும் அதே சமயம், வாழ்வியல் சுக போகங்களில் மிகவும் அளவுடன் இருப்பாள் என்பது அதன் பொருள். இப்படி வாழ்க்கை உப்பு போல் அமையும் பாக்கியம் எல்லோருக்கும் வந்துவிடாது. அதற்கு அம்பிகையின் பரிபூரண அருள் தேவை. அந்த அருளைப் பெற லவண துர்க்காதேவியை பூஜிப்பது அவசியம்.

இத்தேவி சக்கரம், வாள், சூலம் ஏந்தி கிரீடம் தரித்து ஒளிரும் அக்னிமயமான மேனியுடன் திகழ்பவள் என புராணங்கள் பகர்கின்றன. சௌந்தர்ய ரூபவதியாகத் திகழ்பவள் இவள். மற்றவர்களுடன் ஒத்துப் போகக்கூடிய குணத்தை அருள்பவள். மோகத்தை விலக்குபவள். ரோகத்தை அழிப்பவள். போகத்தைச் சீராக்கி ஞானத்தை தருபவள். மிகவும் சாந்த வடிவினள். ஆத்மானந்தத்தை அளிப்பவள். அதன் பலனாக ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய்கள் கட்டுப்படும். நரம்பில் ஏற்பட்ட ரோகங்கள் நீங்கும். லவண துர்க்கையை உபாசித்தால் பகைவர்கள் அழிவர். தடைகள் நீங்கும். இத்தேவிக்கு வெள்ளைப் பசு, வெள்ளை யானை, வெள்ளைக் குதிரை, வெள்ளைக் கொக்கு போன்றவை வாகனங்களாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வெள்ளை அரளிப்பூ இத்தேவியின் பூஜைக்கானது.

பச்சரிசி, புழுங்கலரிசி சேர்த்து அரை உப்பு போட்ட உப்புருண்டை, பச்சை மிளகாய் பருப்புகள் சேர்த்து அரைத்த மாவுருண்டை எல்லாமே முக்கோண வடிவில் அமைத்து இவளுக்குப் படைக்கவேண்டும். அக்காரவடிசல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, காய்ந்த திராட்சை சேர்த்த வெண்புட்டு மாவையும் நிவேதிக்கலாம்.

ஆசூரி துர்க்கை

மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என்ற மூன்று மோகப் பிசாசுகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றி, மோட்சம் எனும் பேரின்ப நிலைக்கு நமக்கு வழிகாட்டுபவளே இந்த ஆசூரி துர்க்கை.ஆசை யாரை விட்டது? எல்லோர் மனதும் ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டு அலைபாய்கிறது. ஆசைக்கோர் அளவில்லை. ஆனால், அன்னையை ஆராதிப்பதில் இந்த ஆசை அளவில்லாமல் இருந்தால் மிகவும் நல்லது. இதைவிட்டு நிரந்தரமில்லாத, அழியக்கூடிய பொருட்கள் மீது ஆசைப்பட்டு, மோகம் கொண்டு அதனால் அனுபவிக்கும் வேதனைகளிலிருந்து தப்பிக்க நாம் இந்த ஆசூரி துர்க்கையை ஆராதிக்க வேண்டும்.

பொதுவாகவே ஆசைகள், குறிப்பாக அசுரத்தன்மையான ஆசைகள், நம் மனதில் ஆழமாக வேரூன்றி இருக்கும். அவை திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும். ஆசையின் ஆணிவேருக்கே சென்று அந்த உணர்ச்சியை மனதிலிருந்து துடைத்தெறியும் தேவி இந்த ஆசூரி துர்க்கை.

இத்தேவி வெண்ணிறத்தவள். தாமரையைப் பழிக்கும் விதத்தில் மலர்ந்த கண்களைக் கொண்டவள். சூலம், பான பாத்திரம் தரித்தவள். நாகங்களை பூணூலாகத் தரித்தவள். பல்வேறு விதமான அணிகலன்கள் தேவியை அலங்கரிக்கும் பேறு பெற்றன. பத்மாசனத்தில் அமர்ந்தருள்பவள் என துர்க்காப்ரபாவம் எனும் நூல் இத்தேவியின் திருவுருவை வர்ணிக்கின்றது. ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணி, இந்த ஆசூரி துர்க்கையைப் போற்றுகிறது. தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயத்தில் இத்துர்க்கையின் எழிற் கோலத்தை தரிசிக்கலாம்.

நவராத்திரியின் நவமி திதி இத்தேவிக்குரியது. இத்தேவியின் பூஜைக்கு மூலிகை வகையான செடிகள் மற்றும் வில்வம், துளசி போன்றவை உகந்தவை. நாம் விரும்பி நிவேதிக்கும் அனைத்து வகையான சைவ உணவுகளையும் விரும்பி ஏற்கும் தேவி இவள்.

சாந்தி துர்க்கை

சாந்தம் மிகவும் உயர்ந்த குணம். எல்லோரும் விரும்புவதும் சாந்தியைத்தான். சாந்தி நிலை ஏற்பட்டால்தான் எக்காரியமும் சாத்தியமாகும். கோபம் வந்தால் அதிக காலம் நீடிக்கக்கூடாது; உடனே அமைதி ஏற்பட வேண்டும். தட்ச யாகத்தில் ஈசனின் கோபத்தை ஈஸ்வரி சாந்தி துர்க்கையாக வடிவெடுத்து கட்டுப்படுத்தினாள். இரண்யனை வதம் செய்த நரசிம்மரின் கோபத்தை சாந்த வடிவமாக திருமகள் வடிவில் தணித்தவளும் இவளே. எனவேதான் இத்தேவி சாந்தி துர்க்கை என வழிபடப்படுகிறாள்.

துர்வாச முனிவர் கடும் கோபக்காரர். எதற்கெடுத்தாலும்  கோபம் கொள்ளும் குணம் கொண்ட அவர், இந்த சாந்தி துர்க்கையின் அருள்பெற்றே அக்கோபத்தை நிவர்த்திக்க முடிந்தது. காஞ்சி காமாட்சி ஆலயத்தில் ஆதிசங்கரரின் சந்நதிக்கெதிரில் கோபம் நீங்கிய துர்வாசரை தரிசிக்கலாம்.
வரதம், அபயம், திரிசூலம், தாமரை, மான் ஏந்தியபடி உயிர்களுக்கு சாந்தி வழங்குபவளாகவும் சிம்மவாகினியாகவும் சாந்தி துர்க்கை காட்சி தருகிறாள். இந்த அம்பிகையை வித்யாம்னாய கல்பம் எனும் நூல் பன்னிரு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அம்பு, வில், கதை, திரிசூலம், வரதம், அபயம், அமிர்தம், ரத்னம் நிறைந்த பாத்திரம் ஏந்தியவளும், கிரீடம், மேகலை, ஒட்டியாணம் போன்ற அணிகலன்களை அணிந்து, பொன்னாலான ஆடைகள் அணிந்தவளாகவும் வர்ணிக்கின்றது.

வைரோசனீ கல்பம் எனும் நூலில் சாந்தி துர்க்கையின் மற்றொரு வடிவம் விளக்கப்பட்டுள்ளது.  பாற்கடலின் நடுவில் உள்ள ஸ்வேத தீபத்தில் ஏழு பிராகாரங்களின் நடுவே ரத்தினங்களால் இழைக்கப்பட்ட மணிமண்டபம் மிக பிரகாசமாய் விளங்கும். அம்மண்டபத்தில் எட்டு கால்கள் கொண்ட தங்க மயமான பீடத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையின் மீது வலது கரத்தை நீட்டி தலையணை போல் வைத்து அனந்த சர்ப்பத்தின் மீது ரங்கநாதரைப் போல் சயனித்திருப்பவள். அவள் திருமுகம், உதிக்கும் சந்திரனைப் போல தண்ணொளி மிகுந்து பிரகாசிக்கும்.

முக்கண்கள் கொண்டவள். பல்வேறு விதமான அணிகலன்கள் தேவியின் அழகிற்கு அழகு செய்யும். தேவியும் பூதேவியும் அவள் திருவடிகளை வருடிக்கொண்டிருக்க, திருமாலின் தசாவதார மூர்த்திகளும் அவளுக்கு காவலர்களாக பணிவிடை செய்து கொண்டிருப்பர். இந்த சாந்தி துர்க்கை பகைவர்க்கு எமனாகவும் அடியார்க்குத் தண்ணொளிமிக்க சந்திரனைப் போலவும் அருள்பவள்.

அறிவுணர்வு, உறக்கம், பசி, தாகம், சோம்பல், கருணை, கவனம், துஷ்டப் பிரமை, மெய்யறிவு, தைரியம், ஒளி, மாயை ஆகியவற்றின் சக்தி உருவாகத் திகழ்பவள். துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்து பூஜித்து வந்தால் எல்லாத்
துன்பங்களும் நீங்கும்.

சூலினி துர்க்கை

மூன்று அங்கங்களுடன் கூடிய சூலத்தைக் கையில் ஏந்தியுள்ள தால் சூலினி துர்க்கை என இத்தேவி வழிபடப்படுகிறாள். சூலம், பாணம், கத்தி, சக்கரம், சங்கு, கதை, வில், பாசம் இவற்றைக் கைகளில் தரித்துக் கொண்டருளும் அம்பிகை இவள். உயரமான கிரீடத்தைக்கொண்டவள். மேகம் போன்ற நிறத்தினள். அணிகலன்களை அணிந்து அழகே உருவாய்த் தோற்றமளிக்கும் இத்தேவி சிம்மத்தை தன் வாகனமாகக் கொண்டவள். கத்தி, கேடயத்துடன் கூடிய ஜெயா, விஜயா, பத்ரா, சூல காத்யாயனி எனும் நான்கு கன்னியர்களால் சூழப்பட்டவள். அம்பிகை மும்மூன்றாக உள்ள எல்லா வடிவங்களாகவும் விளங்குகிறாள்.

ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் போன்ற மூன்று சரீரங்களாகவும், கர்மம், உபாசனை, ஞானம் எனும் மார்க்கங் களாகவும்,
அ, உ, ம எனும் பிரணவத்திலுள்ள பீஜாக்ஷரங்களாகவும், இச்சா, க்ரியா, ஞான சக்திகளாகவும், பூ, புவ: ஸுவ: எனும் லோகங்களாகவும், சத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களாகவும், ஜாக்ரத், ஸ்வப்ன, சுக்ஷுப்தி எனும் அவஸ்தைகளாகவும், சத், சித், ஆனந்தம் எனும் நிலைகளாகவும், சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஜோதிகளாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் போன்ற காரியங்களாகவும் தேவி விளங்குகிறாள்.

அனைத்திலும் மூன்றாக விளங்கி அதற்கு அப்பாலும் துரீய நிலையில் நான்காக விளங்குபவள். மும்மூன்றாக உள்ள சகல மானவைகளும் எந்த தேவியை வணங்கி நிற்கின்றதோ அவளே சூலினி துர்க்கை என்கிறது திரிபுரோபநிஷத். மகாதேவியின் உடல் ஓங்கார ரூபமாகவும், ஹ்ரீங்கார ரூபமாகவும், இரண்டும் சேர்ந்து ஓம், ஹ்ரீம் ரூபமாய் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. திரிபுர ஸம்ஹாரம் செய்ய முனைந்த சிவபெருமானுக்கு சூலம் ஏந்திய கையுடன் பக்கத்துணையாக இருந்தவள் இந்த சூலினி துர்க்கை. ராவண சம்ஹாரத்தில் ராமனுக்குத் துணையாக இருந்து வெற்றியைத் தேடித்தந்தவள் இவள்.

அம்பிகையின் நினைவு, தாமரைக்காடுகள் மலர்வதற்குக் காரணமான உதயசூரியனாக விளங்குகிறது, இனிமையான வசந்த காலத்தில் பாடும் குயில்கள் போல கவிவாணர்கள் தேவியின் தியான விசேஷத்தால் கவிகளை இயற்றிப் பாடும் திறன் பெறுகிறார்கள். பௌர்ணமி தினத்தன்று தேவி அமுதத்தைப் பொழியும் நிலவில் ஞானமே வடிவாய் வீற்றிருக்கிறாள். இதை சந்த்ரமண்டல மத்யகா என்றும் லலிதா ஸஹஸ்ரநாமம் மெய்ப்பிக்கிறது. தேவி நாம் மனதால் நினைத்த மாத்திரத்தில் மனதில் எழுந்தருள்வாள்.

ஜாதவேதோ துர்க்கை

அக்னியின் வடிவமாக துலங்குபவளே ஜாதவேதோ துர்க்கை. அக்னியில் க்ஷடாஷர வடிவாய் ஒளிர்பவள் இத்தேவி. பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து 6 நெருப்புச் சுடர்கள் வெளிப்பட்டு வந்தபோது அக்னியின் வடிவமான ஜாதவேதோ துர்க்கையே அவற்றை  அக்னி பகவான் மூலமாக சரவணப் பொய்கையில் சமர்ப்பித்து ஆறுமுகன் தோன்றக் காரணமாயிருந்தாள். எனவே இவளை ‘ஸ்கந்த துர்க்கா’ என்றும் அழைக்கின்றனர். அக்னியையே ஜாதவேதோ துர்க்கை எனக் கூறுகிறது, துர்க்கா ஸூக்தம். அவள் ‘சிவப்பு நிறமான தீயின் நிறத்தினள் என்றும், தன்னுடைய ஜ்வாலையினால் தீயவைகளை எரித்தழிப்பவள்’ என்றும் அது கூறுகிறது.

செந்தீ வர்ணத்தினளான இவள் தனது பேரொளியால் பகைவர்களை எரிப்பவள். ஆபத்தைப் போக்குபவள். மின்னல் போன்ற ஒளியுடையவள். ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவள். கேடயம் ஏந்திய கன்னியர்களால் சேவிக்கப்படுபவள். எட்டுக் கரங்களையுடைய இவள் சக்கரம், கதை, வாள், கேடயம், வில், பாசம், தர்ஜனி ஆகியவற்றைத் தன் கரங்களில் தாங்கி அமர்ந்திருக்கின்றாள்.

இத்தேவி இரு கரங்கள் கொண்டவள் எனவும் சில புராணங்கள் கூறுகின்றன. சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்து, இரு கரங்களிலும் தாமரை மலர்களை ஏந்தியிருப்பவள் என்றும் அவை சித்திரிக்கின்றன. இந்த அம்பிகையும் வனதுர்க்காவைப் போல முக்கண்கள் கொண்டவள். சிரசில் உள்ள கிரீடத்தில் சந்திரகலையைத் தரித்தருள்பவள்.

வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் வடிவாக இருப்பவள் அம்பிகை. உக்கிர தேவதைகள் பலருக்கும், உதாரணமாக மாரியம்மன், பிடாரி போன்ற தெய்வங்களின் தலையில் கொழுந்துவிட்டு எரியும் அக்னி ஜ்வாலை இருப்பது அவர்கள் ஜாதவேதோ துர்க்கையின் அம்சம் என்பதை எடுத்துரைக்கவே.

அக்னி துர்க்கை

அக்னி எனும் நெருப்பு வடிவில் விளங்கும் அம்பிகையே, ஜாதவேதோ எனும் அக்னி துர்க்கை. இத்தேவியின் புகழை, துர்க்கா ஸூக்தம் பல இடங்களில் போற்றுகிறது; செந்தீ நிறத்தினள். தனது ஒளியால் பகைவர்களை அழிப்பவள். தன்னை வணங்கும் பக்தர்களின் ஆபத்துகளை போக்குபவள். சிங்கத்தின் மீது ஆரோகணித்திருப்பவள். கேடயம் ஏந்திய தோழியரால் வணங்கப்படுபவள். எட்டுக் கரங்கள் கொண்ட தேவி இவள். இத்தேவியே இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, சிம்மாரூடையாய் தோற்றமளிக்கும்போது, கந்த துர்க்கா தேவி எனவும் போற்றப்படுகிறாள்.

வேதங்களில் அக்னி முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அக்னி இல்லாமல் யாக, யக்ஞங்கள் நடைபெறவே முடியாது. அதன் வடிவாக விளங்குபவள் இந்த அம்பிகை. கிராம தேவதைகளான மாரியம்மன், பிடாரி போன்றோரின் தலையில் கொழுந்துவிட்டு எரியும் அக்னி ஜ்வாலையைக் காணலாம். இது, அவர்கள் அக்னி துர்க்கையின் அம்சம் கொண்டவர்கள் என்பதை எடுத்துணர்த்தவே.

இத்தேவி அம்பிகையின் முகத்திலிருந்து தோன்றியவள். ஒரு நொடியில் உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் சக்திகொண்டவள். தேவியின் திருவருளைப் பெற விழையும் ஒவ்வொரு பக்தரும் இந்த அம்பிகையையே சரணடைகின்றனர். தேவரும் முனிவரும் இவளை நாடியே அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொண்டனர். இத்தேவி பக்தர்களுக்கு அருளையும் தீயவர்களுக்குப் பயத்தையும் தருபவள்.

நவராத்திரியின் மூன்றாவது நாளான த்ரிதியை திதி அக்னி துர்க்கைக்கு உரியது. இவளே அக்னியில் ஷடாக்ஷர வடிவமாய் இருப்பவள். ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஞானவடிவமாய்த் தோன்றியவன் முருகப்பெருமான். சாதாரண நெருப்பு சுடும். ஆனால், ஞானமே வடிவமான முருகப்பெருமான் சுடமாட்டார்.

அந்த நெருப்பு 6 குழந்தைகளாக வெளியில் வந்தபோது அதில் ஞானச்சுடர்களாக சூட்சுமமாக இருந்தவளே அக்னி துர்க்கை. திரிதியை திதியில் பொங்கலிட்டு அதில் தேன் கலந்து இத்தேவிக்குப் படைக்க அந்தக் குறைகள் தேவியின் திருவருளால் நீங்கும். இந்த தேவியைத் தினமும் வேண்டிக்கொள்ள, நின்றுபோன கட்டட வேலைகள் முடியும்.முக்கண்ணியாக விளங்கி பக்தர்களைக் காப்பதே தன் கடமையாகக்கொண்ட அக்னி துர்க்கை தேவியைப் பணிந்து, துர்க்கையை வழிபட்டு வளம் பல பெறுவோம்.

ந. பரணிகுமார்