அனந்தனுக்கு 1000 நாமங்கள்!285. பானவே நமஹ (Bhaanave namaha)

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரம்மாவின் தலைமையில் தேவர்களும், முனிவர்களும் கும்பகோணத்தில் தங்கியிருந்து தவம் புரிந்தார்கள். அப்போது ஜலந்தரன் என்ற அசுரனின் தலைமையில் வந்த அசுரர் கூட்டம் தவம் புரிந்து கொண்டிருந்த தேவர்களையும் முனிவர்களையும்

துன்புறுத்தியது.
இந்த அசுரக் கூட்டத்தின் இடையூறுகளிலிருந்து தம்மைக் காத்து, நிம்மதியாகத் தவம் புரிய உதவி செய்யுமாறு பிரம்மாவும், மற்ற தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள் முன் தோன்றிய திருமால், “என் கையிலுள்ள சுதர்சன சக்கரம் எனது மறுவடிவம் ஆகும்! எனது சங்கல்ப சக்தியின் தோற்றம் தான் இந்தச் சக்கரம்! இந்தச் சக்கர வடிவில் நான் வந்து அந்த அசுர சக்தி களிடமிருந்து உங்களைக் காப்பேன்!” என்று அவர்களுக்கு வாக்களித்தார்.

அவ்வாறே திருமாலின் சுதர்சனச் சக்கரம் புறப்பட்டு வந்து ஜலந்தரனையும் அவனைச் சேர்ந்த மற்ற அசுரர்களையும் அழித்தது. அனைவரையும் அழித்து விட்டு, காவிரிக் கரையில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்மாவின் கையில் வந்து விழுந்தது.

எட்டுத் திருக்கரங்களில் எட்டு ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்த சக்கர ராஜனைக் கும்பகோணத்தில் காவிரிக் கரையில் பிரம்மா பிரதிஷ்டை செய்தார். திருமாலின் மறுவடிவமாகத் தோன்றிய சக்கரமாக அவர் திகழ்ந்தபடியால், ‘சக்கரபாணிப் பெருமாள்’ என்று அவருக்குப் பெயர் சூட்டினார் பிரம்மா. சுதர்சனவல்லி, விஜயவல்லி நாச்சியார்களோடு சக்கரபாணிப் பெருமாள் குடந்தையில் கோயில் கொண்டார்.

இந்தச் சக்கரபாணிப் பெருமாளிடமிருந்து வெளிப்பட்ட ஒளியானது சூரிய ஒளியையே விஞ்சும்படி இருந்தது. அதனால் சக்கரபாணிப் பெருமாளின் மேல் பொறாமை கொண்ட சூரியன், தனது ஒளியைக் கூட்டினார். அதனால் சூரியனிலிருந்து உண்டான வெப்பம் பூமியைச் சுட்டெரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் சூரியனின் கர்வத்தை அடக்கவும், மக்களைச் சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கவும் விழைந்த சக்கரபாணிப் பெருமாள், ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டார். அதனால் தனது ஒளியை இழந்து இருண்டு போன சூரியன், பிரம்மாவின் உதவியை நாடினார். நீ சக்கரபாணிப் பெருமாள் மேல் பொறாமை கொண்டதன் விளைவாகத் தான் ஒளியை இழந்துவிட்டாய். நீ அவரைச் சென்று வணங்கினால் மீண்டும் ஒளிபெறலாம்!” என்று வழிகாட்டினார் பிரம்மா.

பிரம்மாவின் அறிவுரைப்படி சூரியனும் குடந்தைக்கு வந்து சக்கரபாணிப் பெருமாளிடம் சரணாகதி செய்து சுதர்சனவல்லி, விஜயவல்லியோடு கூடிய சக்கரபாணிப் பெருமாளை வழிபடவே, சூரியன் இழந்த ஒளியை மீண்டும் வழங்கினார் சக்கரபாணிப் பெருமாள். “நீ என்னை வழிபட்டதற்கு அடையாளமாக இந்த ஊர் இனி பாஸ்கர க்ஷேத்திரம் என உன் பெயரிலேயே அழைக்கப்படும்!” என்று சூரியனுக்கு
வரமும் தந்தார் சக்கரபாணிப் பெருமாள்.

இன்றும் கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் பெருமாளின் கருவறைக்கு இரண்டு வாசல்கள் இருப்பதைக் காணலாம். அவற்றுள் வடக்குப் புறமுள்ள வாசல் உத்தராயண வாசல் என்றும் தெற்குப்புறம் உள்ள வாசல் தக்ஷிணாயன வாசல் என்றும் அழைக்கப்படுகின்றன. சூரியன் வடதிசை நோக்கிப் பயணிக்கும் ஆறு மாத காலமான உத்தராயணத்தில் (தை முதல் ஆனி வரை) உத்தராயண வாசல் வழியாகவும், தென்திசை நோக்கிப் பயணிக்கும் ஆறு மாத காலமான தக்ஷிணாயணத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) தக்ஷிணாயண வாசல் வழியாகவும் வந்து சக்கரபாணிப் பெருமாளை வழிபடுவதாக ஐதீகம். அதனால் தான் இன்றும் சக்கரபாணி கோயிலில், தை முதல் ஆனி வரை வடக்கு வாசல் மட்டுமே திறந்திருக்கும், தெற்கு வாசல் மூடப்பட்டிருக்கும். அவ்வாறே ஆடி முதல் மார்கழி வரை தெற்கு வாசல் மட்டுமே திறந்திருக்கும். இப்படித் தனக்கு ஒளியை மீட்டுத் தந்த சக்கரபாணிப் பெருமாளைச் சூரியன் இன்றளவும் வந்து வழிபட்டுக்கொண்டிருக்கிறார்.

சூரியனை விஞ்சிய ஒளிபடைத்தவராகவும், சூரியனுக்கே ஒளி தருபவராகவும் திருமால் திகழ்வதை இந்த வரலாற்றின் மூலம் நம்மால் அறியமுடிகிறது. ‘பா’ என்றால் ஒளி. ஒளிமிக்கவராக இருந்து கொண்டு தனது ஒளியைக் கொண்டு சூரியனை
ஒளிரச் செய்வதால், திருமால் ‘பானு:’

என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 285-வது திருநாமம்.
“பானவே நமஹ:” என்று தினமும்
சொல்லிவரும் அன்பர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்படி திருமால்
அருள்புரிவார்.

286. சசபிந்தவே நமஹ (Shashabindhave namaha)

ராம பாணத்தால் தாக்கப்பட்டு, வெட்டுண்ட மரம் போல் கீழே விழுந்தான் வாலி. ராமன்தான் தன்னை மறைந்திருந்து தாக்கியுள்ளான் என்பதை உணர்ந்த வாலி, ராமனைப் பலவாறு ஏசினான். அத்துடன் ராமனிடம் ஆறு கேள்விகளைக் கேட்டான் வாலி:
1. உனது நாட்டுக்குள் வந்து நான் என்ன தவறு செய்தேன்?
2. உனக்கும் எனக்கும் ஏதாவது முன் விரோதம் உண்டா:?

3. உனக்கும் எனக்கும் முன் அறிமுகம் உண்டா?
4. காட்டில் வாழும் மிருகத்தை நாட்டில் வாழும் மனிதன் எதற்காகத் தேடி வந்து தாக்க வேண்டும்?
5. ஒருவேளை நீ வேட்டையாட
நினைத்திருந்தாலும், எதற்காக ஒரு
குரங்கை வேட்டையாட வேண்டும்?
6. ஏன் மறைந்திருந்து என்னைத் தாக்க வேண்டும்?
இவற்றுள் முதல் ஐந்து கேள்விகளுக்கு ராமன் விடையளித்தான்:

1. மலை, காடு, சிறுகாடு, குறுநிலங்கள் ஆகிய அனைத்தும் அயோத்திப் பேரரசுக்கு உட்பட்டவையே. எனவே உன்னைத்
தண்டிக்க எனக்கு அதிகாரம் உண்டு.
2. நான் எப்போது சுக்ரீவனோடு அக்னி சாட்சியாக நட்பு பூண்டேனோ, அப்போதே அவனது சுக துக்கங்கள், சொத்துக்கள் அனைத்திலும் எனக்கும் பங்கு உண்டு. என் நண்பனது ராஜ்ஜியத்தையும் மனைவியையும் அபகரித்த நீ எனக்கும் விரோதியே ஆவாய்.
3. சுக்ரீவனிடமிருந்து ராஜ்ஜியத்தையும் அவனது மனைவியையும் தட்டிப் பறித்துப் பெருங்குற்றம் செய்திருக்கிறாய். அக்குற்றத்துக்குத் தண்டனையாகவே இப்போது நான் உன்னைத் தாக்கினேன். தவறிழைத்தவனைத் தண்டிக்கும் போது, முன்பின் அறிமுகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

4. நீ நாட்டில் இருந்தாலும் சரி, காட்டில் இருந்தாலும் சரி, நீ மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, அயோத்திப் பேரரசுக்கு உட்பட்ட எந்தப் பகுதியில் வாழும் யார் தவறு செய்தாலும், அவரைத் தேடிச் சென்று தண்டித்தல் என் கடமையாகும்.
5. குரங்கை வேட்டையாடுவதால் எனக்குப் பயனில்லை என்றாலும், மன்னர்களான நாங்கள் பொழுது போக்குக்காக வேட்டையாடுவது உண்டு. அதற்குப் பயன் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்படி ஐந்து கேள்விகளுக்கு விடையளித்த ராமன், ஆறாவது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் ராமனின் மனக்
கருத்தை நன்கு அறிந்த லட்சுமணன் அந்தக் கேள்விக்கு விடையளித்தான்:
முன்பு நின் தம்பி வந்து சரண்புக,
“முறையிலோயைத்
தென்புலத்து உய்ப்பன்!” என்று செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக்காகி “அடைக்கலம்
யானும்!” என்றுஎன்பது கருதி அண்ணன் மறைந்து நின்று எய்தது என்றான்
6. “வாலி! அன்று உனது தம்பியான சுக்ரீவன் உன் கால்களில் விழுந்து சரணாகதி செய்தபோது, அவனை நீ மன்னித்தாயா? இல்லையே! கொல்லப் பார்த்தாய்! காலில் விழுந்து சரணடைந்தவனைக் காக்கத் தெரியாத உனக்கு, தன்னிடம் சரணாகதி செய்யும் வாய்ப்பைக் கூடத் தரக்கூடாது என நினைத்தான் ராமன். எங்கே ராமன் உன் எதிரில் வந்து உன்னைத் தாக்க முயன்றால் நீ சரணாகதி செய்து விடுவாயோ என்று கருதியே மறைந்திருந்து உன்னைத் தாக்கினான்!” என்றான் லட்சுமணன்.

இறைவன் தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு மனிதனும், தனது சக மனிதர்களிடம் கருணை காட்ட வேண்டும். அப்படி சக மனிதன் மேல் கருணை காட்டாத ஒருவனுக்கு இறைவனிடம் கருணையை  எதிர்பார்க்க அருகதை இல்லை. இந்த   உயர்ந்த கருத்து லட்சுமணனின் பதிலில் பொதிந்திருப்பதைக் காணலாம். வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மெர்சண்ட் ஆஃப் வெனிஸ்’
என்னும் நாடகத்தில்,
“We do pray for mercy,
And that same prayer doth teach us all,
To render the deeds of mercy!”

என்று போர்ஷியா சொல்லும் வசனத்திலும் இக்கருத்து இடம்பெற்றிருப்பதைக் காணலாம். சரணடைந்தவனைக் காக்க வேண்டும் என்ற தருமத்திலிருந்து விலகிய தனக்கு ராமன் தந்த தண்டனை சரி என்று வாலியும் ஏற்றுக்கொண்டான்.

வாலியைப் போல் தருமநெறியிலிருந்து விலகினோரை ‘சச’ என்று குறிப்பிடுவார்கள். ‘பிந்து’ என்றால் விரும்பாதவன் என்று பொருள். தரும நெறியிலிருந்து விலகியவர்களை (சச) விரும்பாதவராகத் (பிந்து) திருமால் திகழ்வதால் ‘சசபிந்து:’ என்றழைக்கப்படுகிறார். ‘சசபிந்து:’ என்றால் அறவழியிலிருந்து விலகியவர்களை விரும்பாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 286-வது திருநாமம்.
“சசபிந்தவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தருமத்திலிருந்து விலகாதபடி திருமால் காத்தருள்வார்.

287. ஸுரேச்வராய நமஹ
(Sureshwaraaya namaha)
நிவாச ராகவாச்சாரியார் என்பவர் காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1801-ம் ஆண்டு மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் தோன்றினார். அவர் இளம் வயதிலேயே தம் தந்தையிடம் வேதங்கள், நாலாயிரத் திவ்ய பிரபந்தம் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்ந்தார். ரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தை அப்போது அலங்கரித்து வந்த திருத்துறைப்பூண்டி ஆண்டவனைத் தரிசித்து, தான் துறவறம் மேற்கொள்ள விரும்புவதாகப் பிரார்த்தித்தார். அவரும் அனுமதித்து அருள்புரியவே, நிவாச மகாதேசிகன் என்ற திருப்பெயரோடு துறவு பூண்டு திருத்துறைப்பூண்டி ஆண்டவனின் சீடராக ஆனார் நிவாச ராகவாச்சாரியார்.

1831-ம் ஆண்டு முதல் திருவரங்கத்தில் கொள்ளிடக் கரையில் வசித்து வந்த நிவாச மகாதேசிகன், மிகவும் எளிமையான வாழ்வை நடத்தி வந்தார். தினமும் பிச்சை எடுத்துப் பெறும் உணவை ஆற்றில் கழுவி, அதிலுள்ள கொழுப்பு, எண்ணெய் அனைத்தும் நீங்கிய பின் வெறும் எட்டுப் பிடி சக்கையை மட்டும் உண்டு வந்தார். இவ்வாறு குறைவான அளவு சக்கையையே உண்டு மெலிந்து இருந்தபடியால், ‘வத்தல் சுவாமிகள்’ என்று பொது மக்கள் அவரை அழைத்தார்கள்.

உடலைப் பேணாமல் உள்ளிருக்கும் உயிராகிய ஜீவாத்மாவையும், அந்த ஜீவாத்மாவுக்கும் உயிராகிய பரமாத்மாவையும் பேண வேண்டும் என்பதை உபதேசத்தால் கூறாமல், தம் வாழ்க்கை முறையினாலேயே வாழ்ந்து காட்டினார் நிவாச மகாதேசிகன். அவரது எளிமையையும் ஆசார அனுஷ்டானங்களையும் கண்ட அவரது சீடர்கள், அவரைப் ‘பெரியாண்டவன்’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

திருத்துறைப்பூண்டி ஆண்டவன் திருமாலின் திருவடிகளை அடைந்தவாறே, அவருக்கு அடுத்து ரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதியாகப் பெரியாண்டவன் பொறுப்பேற்றார். தமது சீடர்களுக்கு உபதேசங்கள் செய்வதையும், திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வதையுமே தமது பணியாகக் கொண்டு அதைச் சிரத்தையுடன் செய்து வந்தார் பெரியாண்டவன். அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவையான சம்பவம்:

சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விரதங்களுள் தலையாயது ஏகாதசி விரதமாகும். அந்த ஏகாதசி விரதத்தைச் சரியான முறையில் அனுஷ்டித்து வந்தார் பெரியாண்டவன். பெரியாண்டவனுக்குச் சுமார் எண்பது வயது ஆகி இருந்த நிலையில், ஓர் ஏகாதசி நாளில் ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்தார் பெரியாண்டவன். அவரது சீடர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “சுவாமி! இந்த வயதில் ஏகாதசி விரதத்தைத் தாங்கள் தவிர்க்கலாமே! அக்னி நட்சத்திரக் காலம் இது! மெலிந்த திருமேனியோடு இருக்கும் நீங்கள் இவ்வாறு துன்புறுவதை எங்களால் காண இயலவில்லை!” என்று பணிவோடு பிரார்த்தித்தார்கள்.

ஆண்டவன் ஆசிரமத்தைச் சேர்ந்த பண்டிதர்கள், “வயதானவர்கள் ஏகாதசி நாளில் தண்ணீரும் திரவ உணவுகளும் அருந்தலாம் என்று சாஸ்திரங்களே சொல்கின்றன! நீங்கள் எங்களுக்காக கொஞ்சம் மோராவது அருந்தலாமே!” என்று வேண்டினார்கள். அக்னி நட்சத்திரக் காலத்தில் ஒரு துளி நீரும் அருந்தாமல் ஏகாதசி விரதமிருந்த பெரியாண்டவனின் உடல் மேலும் தளர்ந்து கொண்டே போனதால், சீடர்களின் கோரிக்கையை அவரும் ஏற்கும்படி ஆயிற்று.

ஒரு பானையில் தயிரை எடுத்து வந்த சீடர்கள், அதைக் கடையத் தொடங்கினார்கள். தயிர் கடைவதைக் கண்ட பெரியாண்டவனுக்குத் திருமால் பாற்கடலைக் கடைந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. “பாற்கடலில் இருந்து தோன்றிய லட்சுமி தானே என் தெய்வமான அரங்கனுக்குப் பாதுகையாக இருக்கிறாள்!” என்று கூறிய பெரியாண்டவன், சடக்கென எழுந்தார். கடையப்படும் தயிர்ப்பானையில் இருந்து பாதுகா தேவி வெளிவருவதைத் தனது மனக்கண்ணால் கண்டார் பெரியாண்டவன்.

“அரங்கனின் பாதுகையைத் தரிசித்து விட்டேன்! இப்போது புத்துணர்ச்சி பெற்று விட்டேன்! எனக்கு மோர் வேண்டாம்! நாளை பொழுது விடியட்டும்! நீராடிப் பூஜை செய்துவிட்டு நான் பிச்சை எடுத்து உண்டு கொள்கிறேன்!” என்று சொல்லி
விட்டுப் புதிய வலிமையுடன் நடக்கத் தொடங்கினார் பெரியாண்டவன்.

பெரியாண்டவனைப் போல் சாஸ்திர விதிகளைச் சரியாகப் பின்பற்றும் பெரியோர்களுக்கு ‘ஸுர:’ என்று பெயர். பெரியாண்டவனுக்குப் புத்துணர்ச்சி தந்து காத்தது போல், சாஸ்திர வழியில் நடக்கும் ஸுரர்களுக்கு நல்வழி காட்டி வழி
நடத்திச் செல்லும் தலைவராகத் திருமால் இருப்பதால், ‘ஸுரேச்வர:’ என்று அவர் அழைக்கப்படுகிறார். ’ஸுர:’ என்றால் அறவழியில் வாழ்பவர், ‘ஈச்வர:’ என்றால் தலைவர், ‘ஸுரேச்வர:’ என்றால்
அறவழியில் வாழ்வோரைக் காக்கும் தலைவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ர
நாமத்தின் 287-வது திருநாமம்.

“ஸுரேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
அறவழியிலிருந்து பிறழாதபடி திருமால் காத்தருள்வார்.

288. ஔஷதாய நமஹ (Aushadhaaya namaha)

பரமாச்சாரியார் என்று சீடர்களால் போற்றப்பட்ட காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1940-களில் சென்னை ராயப்பேட்டையில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தார். அப்போது மகா பிரதோஷ நாள் வந்தது. ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் காஞ்சி மடத்தைச் சேர்ந்த சந்திரமௌலீஸ்வரருக்குக் காஞ்சி மடாதிபதி பூஜை செய்வது வழக்கம். அவ்வாறே அந்நாளிலும் மாலை வேளையில் பிரதோஷ பூஜை செய்ய வேண்டி இருந்தது.

இந்நிலையில் மதியம் இரண்டு மணியளவில், காஞ்சி பெரியவருக்குக் கடும் காய்ச்சலும் உடல் நடுக்கமும் ஏற்பட்டது. அவரை வந்து பரிசோதித்த மருத்துவர்கள் எத்தனையோ மருந்துகள் வழங்கியும் காய்ச்சல் அவருக்குக் குறையவில்லை. சீடர்களை அழைத்த பெரியவர், “நான் இன்று மாலை நீராடி அதன்பின் சந்திரமௌலீஸ்வரருக்குப் பூஜை செய்ய வேண்டுமே!” என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.

ஆனால் மருத்துவர்களோ, “இவ்வளவு அதிகமான காய்ச்சல் இருக்கும் போது நீங்கள் நீராடக் கூடாது! அடுத்த பிரதோஷத்தில் வேண்டுமானால் நீராடிப் பூஜை செய்து கொள்ளலாம்!” என்று அறிவுறுத்தினார்கள். “அப்படியானால் இந்தப் பிரதோஷத்தில் யார் சந்திரமொலீஸ்வரருக்குப் பூஜை செய்வார்கள்?” என்று ஏங்கினார் பெரியவர். புதுப்பெரியவர் எனப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அப்போது அவர் நியமிக்கவில்லை. எனவே அன்று யார் பிரதோஷ பூஜை செய்வது என்று காஞ்சி மடத்தின் சீடர்கள் கவலையில் ஆழ்ந்தார்கள்.

தமது நெருங்கிய சீடர்களை அருகில் அழைத்த காஞ்சி பெரியவர், “மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள வேதம் கற்றவர்கள் அத்தனை பேரையும் உடனடியாக இங்கே வரச்சொல்லுங்கள்!” என்றார். இன்று சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாகப் பரவுவது போல் பெரியவரின் அழைப்பு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள வேதியர்கள் மத்தியில் பரவியது. அத்தனை பேரும் ராயப்பேட்டை முகாமில் வந்து குவிந்தார்கள்.

அவர்களை அருகில் அழைத்த பெரியவர், “நீங்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யுங்கள்! நம்பிக்கையோடு செய்யுங்கள்!” என்று சொன்னார். பாராயணம் தொடங்கியது. “எனக்கு வியர்க்கும் வரை மீண்டும் மீண்டும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! நம்பிக்கையை இழக்காதீர்கள்!” என்றார் காஞ்சி பெரியவர்.

பாராயணம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மாலை 4 மணியளவில் காஞ்சி பெரியவரின் காய்ச்சல் குறைந்துவிட்டது! வியர்த்தது! எழுந்தார், நீராடினார், பூஜைக்குச் சென்று விட்டார்! மாலை பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

மருந்துகளால் குணமாகாத காய்ச்சல் எப்படி விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தால் குணமானது? இக்கேள்விக்கு ஒரே பதில், திருமாலின் திருநாமம் ஒவ்வொன்றுமே மருந்தைப் போன்றதாகும். நம்பிக்கை என்னும் தேனில் குழைத்து நாராயண நாமத்தை உட்கொள்வோர்க்கு எல்லா நோய்களும் குணமாகும்.

இக்கருத்தையே பேயாழ்வார்,
“மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண்மால் ஆங்கே - பொருந்திய
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி”

என்று பாடினார். இப்பாடலில், திருமாலின் திருவடிகளே நோய் தீர்க்கும் மருந்தாகவும், வேண்டியதைப் பெற்றுத் தரும் செல்வமாகவும், அமுதம் போல் இனியதாகவும் இருக்கின்றன என்கிறார் ஆழ்வார்.உடலைப் பாதிக்கும் சாதாரண நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பிடிக்கும் நோயாகிய பிறவிப் பிணியையே போக்கும் மருந்தாகத் திருமால் திகழ்கிறார். அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி என எந்த மருந்தினாலும் குணப்படுத்த முடியாத பிறவிப் பிணியை வேங்கடாசலபதி ஒருவரால் தான் குணப்படுத்த இயலும்.

அதனால் தான் திருமாலுக்கு ‘ஔஷதம்’ என்று பெயர். ஔஷதம் என்றால் மருந்து என்று பொருள். பிறவிப் பிணிக்கு ஒரே மருந்தாகத் திருமால் இருப்பதால், அவர் ‘ஔஷதம்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 288-வது திருநாமம்.“ஔஷதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்து நோய்களுக்கும் திருமாலே மருந்தாக இருந்து அவர்கள் நலம்பெறும்படி அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்