உள்ள(த்)தைச் சொல்கிறோம்



அழகன் முருகப் பெருமானின் அருள்கடாட்ச அட்டைப் படத்தோடு வைகாசி விசாக சிறப்பு தகவல்கள், முருகனின் அருளை முன்னின்றுரைத்து முருகா... முருகா.. என்று  அவன் பாதம் பற்றி வணங்க வைத்தது. தெளிவு பெறுவோம் பகுதி, ஆன்மிக ஐயம் போக்கும் அருட்களஞ்சியமாக அருள்தெளிவு நிறைவு கூட்டுகிறது. அடியார் பெருமையை முழுமுதலாக எடுத்துரைத்த தெய்வச் சேக்கிழார் குருபூஜை மற்றும் திருமுறை சிறப்பை அவர் அருள் திருவடி போற்றி வணங்க வைத்தது.
 - கவிதா சரவணன், திருச்சி.

சென்ற இதழின் தொடர்ச்சியான, குழந்தையை ஏன் தொட்டியில்  போடுகிறோம் என்கின்ற கட்டுரை பல புதிய தகவல்களை துளிக்கூட சுவாரசியம்  குறையாமல் ஆரம்பம் முதல் முடியும் வரை இருந்தது. சுதர்சன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்
 - விஜய நாராயணன், திருப்பூர்.

சுகப் பிரம்மத்தில் திருவடி மகிமை + அதனைப் படர்வதின் பலன் என ஞானச்சுடர் ஏற்றி தெரியவும் புரியவும் வைத்த தலையங்கத்திற்கு நன்றி. பூரண ஞானமே பாகவதம் என்பதற்கான விளக்கம் மகா வெளிச்சம்!
  - ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

ஆன்மிகம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதியான முத்துக்கள் முப்பது, எப்போதும் போல தித்தித்தது. முப்போதும் தப்பாமல் ஓதி எப்போதும் இறையருளில் திளைக்க கிடைத்த முத்துக்கள் அத்தனையும் ஆத்மாவிற்கேற்ற சத்துக்களும் சித்துக்களும்தான்! மகிழ்ச்சி!
 - என்.ஜே.ராமன், திருநெல்வேலி.

சிற்பமும் சிறப்பும் பகுதியில் தரப்பட்ட சிறப்புக்காட்சி செழிப்பை உணர வைத்தது. சிவன் பார்வதி பகடை விளையாட்டு என்ற உலகாதய தத்துவம் உணர்ச்சிகளைப் புண்ணிய அபிஷேகம் புரிய வைத்தது!
 - எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.

ஆன்மிகத்தில் நான் முதலில் படிப்பது ``அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்’’  அதிலுள்ள சின்னஞ்சிறு கதைகள் என் ஆன்மிகத்தை வளர்த்து வருகிறது என்றே  சொல்லலாம். மேலும், அதற்கு வைக்கும் படங்களுக்கே தனியாக பாராட்ட வேண்டும்.
 - ஸ்ரீபதி, வேலூர்.

“பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்” தொகுப்பு சொற்பொழிவாளர்களுக்கான பொக்கிஷம்! `அம்மா அப்பா’ எனக் குழந்தைகள் பேசுவதில் உள்ள இன்பத்தைப் பெற்றோர் பெறத்தூண்டும் பதிகப் பெருமை பரவச இனிமை!
 - ஆர்.ஆர்.உமா, நெல்லை.

 அழகன் முருகப்பெருமான் குடிபுகுந்து பக்தர்களுக்கு அருள்புரியும் ஆறுபடை திருத்தலங்கள் பற்றிய அபூர்வ தகவல்களை மிக அழகாகவும் அதே சமயம் சுருக்கமாக தொகுத்து  வழங்கிய கட்டுரை ‘வைகாசி விசாகம் பக்தி ஸ்பெஷல்’
புத்தகத்தின் தனி சிறப்பு.
 - த.சத்திய நாராயணன், அயன்புரம்.

செல்வத்தை அள்ளித்தரும் விசாகம் குறித்து விரிவான தகவல்கள், தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாளின் திருத்தல வரலாறு, வேண்டியதை அருளும் பழண்டி அம்மன், நம்மாழ்வாரின் பெருமை என ஜூன் இதழ் பன்முகத்தன்மையோடு சிறப்பாக மிளிர்ந்தது.
 - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

வைகாசி விசாகம் பக்தி ஸ்பெஷல் முழுக்கவே பரவசப்படுத்தியது. அதிலும்,  அட்டையில் முருகனின் அருட்கோலம் ஆத்ம ஜோதியாகப் பிரகாசித்தது. என்ன தவம்  செய்தோமோ இந்த ஆன்மிக பலன் பெற என மனம் இன்பத்தில்லயித்தது.
- ஆர். விநாயகராமன், நெல்லை.