அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-மாத்ருகா வர்ணரூபின்யை நமஹ



நான்கு விதமாக அறம், பொருள், இன்பம், வீடு என்று பெறும் பயன் சார்ந்து பூசனை முறையும், தேவதையும் மாறுபடும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றார் பட்டர். வேதம் சொன்ன வழியை வழிபடவும், சுருதிகளின் பணையும் என்று அறத்தையும் தனம் தரும் கல்வி தரும் என்பதில் உலகியல் செல்வத்தையும் நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே என்று ஞானத்தையும் “அழியா முத்தி வீடுமன்றோ” என்று மோட்சத்தையும், பயனாகப் பெறும் பொருட்டு பூசிக்கின்றனர். மேற்கண்ட முறையில் வழிபாடு செய்தாலும், உமையம்மையின் கருணையில்லாமல் நாம் அதை அடைய முடியாது. என்பதை “நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்”- 61 “தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட”- 32 என்ற பாடல் வரிகளால் நன்கு உணரலாம். தன் முயற்சியால் ஞானம் பெறுகின்ற கடினத்தை சூட்டி காட்டவும் பூசனை முறையை அறிவது பின்பற்றுவது பயன் பெறுவது என்பது மிக கடினம் என்பதையும் சூட்டவே “மாலினும்” என்கிறார்.

“மாலினும் தேவர் வணங்க நின்றோன்” என்று சிறப்பாக வழிபாட்டிற்கு வெளிப்பட்டு அருள் செய்யும் பண்பையே இங்கு பெரிதும் குறிப்பிடுகிறார். அந்த வணங்குதற்குறிய தெய்வமாகிய தன்மையை பெற்றவர்களில் தலையாயவர்கள் விஷ்ணு, பிரம்மன், இந்திரன் மற்றும் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதை;

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே - 97
- என்ற பாடல் வரிகளால் நன்கு உணரலாம்.

கொன்றைவார் சடையின் கொன்றை என்பது ஓர் மலர். இந்த மலரானது சிவபூசைக்கு மிகவும் உயர்வானது. இதை சாற்றி வழிபாடு செய்தல், இல்லறத்தாருக்கு செல்வமும், துறவறத்தாருக்கு முத்தியும் கைகூடும் என்கிற பூசனை முறைகளை விளக்கி சொல்லுவது ஆகமம். பொதுவாக ஒரு மலரை தொடுத்து அணிவிப்பது மரபாக உள்ளது. மலர்களை கொடுப்பதற்கென்றே பூக்கட்டி என்று ஒரு இனமே உள்ளது. இவர்களுக்கான மானியங்களும் அரசனால் அளிக்கப்பட்டது என்ற தகவல் சில கல்வெட்டு செய்திகளிலிருந்து கிடைக்கிறது என்றாலும், 180 மலருக்கு மேல் ஆகமத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மலர்கள் எல்லாவற்றையும் குறிப்பிடவில்லை. இறைவனுக்கு அணிவிப்பது ஐந்து மலர்களே அவை செங்கழுநீர், தாமரை, அல்லி, நாகலிங்கம், கொன்றை என்பனவாகும்.

இதற்கு பஞ்சாச்சர மலர்கள் என்று பெயர். செங்கழுநீர் பிரம்மாவையும், தாமரை விஷ்ணுவையும், அல்லி உமையம்மையும், நாகலிங்கம் நந்தி அல்லது ஆன்மா வடிவத்தையும் , கொன்றை சிவபெருமானையும் குறிக்கும். முதல் பாடலில் “தாரமர் கொன்றையும்” என்றதனால் இதை நன்கு உணரலாம். சிவ பூசனை செய்வதற்கான இறைவனின் திருமேனியை க்ஷனிகலிங்கம், ஸ்திரலிங்கம் என இருவகையாக பிரித்து கூறுகின்றது ஆகமம்.

அதில், கீழ்க்கண்ட ஐந்து பொருட்களும் இறைவனாக எண்ணி வழி படக்கூடியவை சாதம், சந்தனம், சுவடி, மலர், வில்வம். இவைகளுள் மலரே மிக சிறப்பானது அதிலும் கொன்றைமலர் எல்லா மலர்களை விடவும் சிறந்தது. கொன்றையில் மட்டும் சிவபெருமான் நித்யமாக வாசம் செய்வதால், ஆவாஹனம் முதலிய உபசாரமின்றி அம்மலரை சிவனாகவே கருதி வழிபடலாம். “ஆரக்வதேச்ச பில்வேச்ச நித்ய சன்னிகித சிவ:” என்ற வரிகளால் நன்கு உணரலாம். பொதுவாக சிற்ப சாத்திரத்தில் இறைவனின் கைகளில் தாமரை, அல்லி போன்ற மலர்கள் சூட்டப்படுகின்றன. இதற்கு பூசனை புரிகின்ற செயலையும் இரவுபொழுதை சூட்ட அல்லியும் பகல் பொழுதை சூட்ட தாமரையையும் குறித்தது. அதுபோல, கொன்றை மலரானது சிவபெருமானின் அறுபத்தி நான்கு வடிவங்களுள் நடராஜமூர்த்தியை மட்டும் சிறப்பாக குறிப்பிடப்பயன்படுகின்றது.

வார்சடை

சிவபெருமானின் தலைக்கோல அலங்காரங்களுள் உள்ள முக்கிய தனி அடையாளமாகும். அவரின் தலையானது கிரீடம் இல்லாமல் கல்யாண சுந்தரரை தவிர மீதமுள்ள அனைத்து வடிவத்திலும் சடையே போடப்பட்டுள்ளது. அந்த சடையில் பல வகை உள்ளது. அதை கொண்டே அவரின் திருக்கோலப் பெயரை கூறி விடலாம். புரிசடை என்பது தக்ஷிணாமூர்த்தியை குறிக்கும். சடையை முறையாக அடக்கி கட்டியிருப்பார். இதையே பட்டர் “புரிசடை” - 21 என்கின்றார்.

சிவபெருமான் சடையில் ஒரு கற்றையை தனது விரலால் அவிழ்த்து கங்கையை வெளிப்படுத்தி நிற்பார். இதை கங்காதரர் என்று குறிப்பிடுவர். நடனம் ஆடுகின்ற பொழுது அதன் வேகத்தில் அடர்த்தியாய் இருந்த கற்றை சடையானது பிரிந்து விரிகிறது. அப்படி விரிந்த நிலையைதான் “வார்சடை” என்கின்றார். அந்த சூழலில் கங்கையும் சந்திரனும் அவர் சடையில் ஓட்டிக்கொண்டிருப்பர். இதை “தலைவைத்த ஆறும்” - 99 என்பதனால் உணரலாம். சுழற்சியின் வேகத்தில் சிறுசிறு பகுதியாக பிரிந்த நிலையை “வார்சடை” என்கின்றார்.

மெய்பீடம்

சாத்த தத்துவத்தின்படி மூன்று வடிவங்களில் ஒன்பது தத்துவங்களை விளக்குவதாய் அமைந்த உமையம்மையின் வடிவம் என்ன என்று இக்கலை சொல்லால் நமக்கும் வரையறுத்து கூறுகிறார் பட்டர். உமையம்மையை மூன்று வடிவங்களில் அமைத்து வழிபாடு செய்வதை பற்றி ஆகமங்கள் விளக்குகின்றது. வடமொழியில் அ முதல் க்ஷ வரையுள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை தாமிர தகடு, கருங்கல் பலகை, மண்சுவர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் எழுத்துக் களின் உருவங்களை வரைந்து வழிபாடு செய்கின்றார்கள்.

இதை அக்ஷரபீடம் என்று அழைக்கின்றார்கள். இத்தகைய அக்ஷரபீடம் திருவாரூர் கோயில் கமலாம்பிகை சந்நதியில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம். இதில் உயிர் எழுத்து சிவமாகவும், மெய் எழுத்து சக்தியாகும், சம்யுக்தாக்ஷரம் என்னும் கூட்டெழுத்து சிவ சக்தி இணைந்த வடிவமாகவும் த்யானம் செய்து வணங்கப்படுகிறது. இதையே சகஸ்ரநாமத்தில் “மாத்ருகா வர்ணரூபின்யை நமஹ” என்பதனால் நன்கு அறியலாம்.

குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திர எழுத்துக்களை கட்டம், வட்டம், போன்ற வடிவங்களாக தாமிர தகட்டில் அமைத்து ஒரு குறிப்பிட்ட முறைப்படி ஜபம் செய்வர். மந்திரத்தில் உள்ள எழுத்துக்களை மட்டும் எழுத்துருவில் அமைத்து யந்திர வடிவமாக வழிபாடு செய்வதும் “மெய்பீடம்” என்ற வார்த்தையால் அழைக்கப்படுகிறது. இதை “மஹா மந்த்ராயை நம:” என்பதனால் நன்கு உணரலாம். முன்னது அனைத்து எழுத்துக்களையும் கொண்டது. இந்தயந்திர வடிவம், மந்திர எழுத்துக்களை மட்டுமே வடிவமாக கொண்டது என்ற வேறுபாட்டை உணர்தல் வேண்டும்.

சக்தி தத்துவ கதையின்படி சிவபெருமான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் தாக்ஷாயணி தன் தந்தை நடத்தும் யாகத்திற்கு செல்கின்றாள். அங்கு தகப்பனால் தாக்ஷாயணி அவமதிக்கப்பட்டு அவனால் வளர்க்கப்பட்ட இந்த உடல் தேவை இல்லை என்று விட்டு விடுகிறாள். அந்த உடலை அக்னி பகவானாலும் அழிக்க முடியவில்லை. அவள் மீது காதல் கொண்ட சிவபெருமான் இறந்த உடலை தோளில் சுமந்து திரிகிறான். இதனால், சக்தியின் சகோதரனாக விஷ்ணு வருத்தமுற்று தனது சக்கராயுதத்தால் தானே தாக்ஷாயணின் உடலை துண்டுத்துண்டாக வெட்டினார். அப்படி மகாவிஷ்ணுவின் சக்கரத்தால் வெட்டப்பட்ட தாக்ஷாயணின் உடல் உறுப்புகள், 50 துண்டுகளாய் பூமியில் விழுந்தன என்று அவை விழுந்த இடமே `சக்தி பீடங்கள்’ என்று அழைக்கப்பட்டன.

அதில், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு பெயரோடு உமையம்மை எழுந்தருளுகின்றாள். புவனேஸ்வரி, கோடாரி, உமா, மகிஷமர்த்தினி என்பது முதல் துவங்கி காளிகா, அம்பிகா வரையில் வெவ்வேறு வடிவத்தோடு திகழ்கின்றாள். இக்கருத்தை தெளிவு செய்யும் வகையில் மெய் என்பது உடலையும் பீடம் என்கின்ற வடசொல் இறை இருக்கையும் குறிக்கும். இவ்விரண்டையும் இணைத்து மெய்ப்பீடம் என்று குறிப்பிடுகின்றார் இதையே சகஸ்ரநாமத்தில் “பஞ்சாசத் பீட ரூபின்யை” என்பதனால் நன்கு அறியலாம்.

மேலினும் கீழ்நின்று என்பதனால் பொதுவாக இலக்கிய மரபில் ஆண் தெய்வங்களை பாதாதிகேச பர்யந்தமும், பெண் தெய்வங்களை கேசாதி பாத தரிசனம் செய்வது என்பது ஆலய தரிசன மரபு. அதைப் பின்பற்றியே ஆலய அர்ச்சகர்கள் தீபாராதனையை, ஆண் தெய்வங்களுக்கு அடி முதல் துவங்கி முடி வரை காட்டுவர்.  அதுபோல, பெண் தெய்வங்களுக்கு முடி முதல் துவங்கி அடி வரை காட்டுவர். இதை நன்கு அறிந்த பட்டர் “மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம்” என்று குறிப்பிடுகின்றார்.
நாலினும் சால நன்றோ

நான்கு இடங்களில் பஞ்சுக்கு அஞ்சுகின்ற மெல்லடியை கொண்ட உமையம்மையானவள் தன் கால்களை பதிய வைத்திருக்கிறாள். அதை “நாலினும்” என்கின்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.“சரணம் சரணம்” - 51 என உமையம்மையின் திருவடியை தலைமேல் வைத்து கொண்டாடுகிற அடியார்களாகிய

``அதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர் தங்கோன்
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, புராரி, முராரி, பொதியமுனி’’ - 97
போன்ற உயர்ந்த தேவர்களின் தலையில் அவள் வேதங்களால் பாடி துதிக்க தன் திருவடிகளை பதிக்கிறாள் உமையம்மை என்பதை அறியலாம். உலக உயிர்கள் உய்யும் பொருட்டு பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களுள் உமையம்மை தன் பாதங்களை பதிக்கிறாள். “நின் திருக்கோயில்” - 20 என்பதனால் உணரலாம். மேலும், ஆவுடையார் கோயிலில் யோகம்பாள் இரு பாதம் பதித்தே பொதுமக்களுக்கு அருள்புரிகிறாள். ஓயாது தவம் செய்து மாயாத வரம் பெற்ற மகிஷாசுரனின் தலையில் பேராற்றலும் பெரும் கருணையும் கொண்ட தன் திருத்தாளை பதித்தருளினாள்.

இதை “மகிடன் தலைமேல் அந்ததி” - 8 என்பதனால் அறியலாம். மிகுந்த அன்பினால் சிவபெருமான் தன் மனைவியாகிய உமையம்மையின் ஊடல் தீர்க திருவடியில் தலையை சாற்றுகிறார். அப்போது உமையம்மையின் கோபத்தினால் “கங்கையும்” மறைந்து சிவபெருமான் கையிலிருந்த உலகத்தை அழிக்கும் ப்ரளய கால அக்னி தன் வலி குன்றியது என்று உமையம்மை அன்பினால் சிவனின் தலை மீது கால் வைத்ததால் என்பதை “கை வைத்த தீயும் தலை வைத்த ஆறும் கரந்ததெங்கே” - 98  என்று பட்டர் கூறுவதிலிருந்து அறியலாம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்