Bits



* பாண்டிய நாட்டில் புட்டு வியாபாரம் செய்யும் கிழவி வசித்து வந்தாள். ஒரு முறை வைகை உடைபடும் நிலையில் இருந்தது. வீட்டிற்கொருவர் மண் சுமந்து அந்த உடைப்பை அடைக்க அரசு ஆணை பிறப்பித்தது. தன்னைத் தவிர தன் வீட்டில் யாரும் இல்லாத அந்தக் கிழவி, சோமசுந்தரரிடம் வேண்டிக்கொள்ள, அவரே வேலையாளாக வந்து உடைப்பை அடைக்கக் கூலியாக புட்டு கேட்டு, உண்டு, பின் உறங்கி, பாண்டிய மன்னனால் பிரம்படி பட்டார். அந்தப் பிரம்படி உலக ஜீவராசிகள் அனைத்தின்மீதும் விழுந்தபோதுதான் தெரிந்தது, வேலையாளாக வந்தவர் வேலவனின் தந்தி என்பது!

* கம்பர் தன் ராமாயண மகாகாவியத்தை ஸ்ரீ ரங்கத்தில் அரங்கேற்றினார். அப்போது தன் நூலில் அவர் நரசிம்மரை விவரித்ததை பிற அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ராமாவதாரத்தில் நரசிம்ம அவதாரத்தைப் புகுத்துவது முறையற்றது என்று வாதாடினார்கள். ராவணனைத் திருத்தும் வகையில் பலவாறாக விபீஷணன் பேசியபோது இந்த நரசிம்ம சரிதத்தையும் சொன்னதாக கம்பர் சித்திரித்திருந்தார். ‘சிரித்தது செங்கட்சீயம்’ எனும் அடியை கம்பர் பாடியபோது, அரங்கிலுள்ளோர் ஆட்சேபம் தெரிவித்த அதே நேரம், ஸ்ரீ ரங்கக் கோயிலினுள் இருந்த மேட்டு அழகிய சிங்கர் ஹூங்காரமாகச் சிரித்து கம்பரை ஆதரித்தார்.

* தன் கணவர் கொடுத்தனுப்பிய இரு மாங்கனிகளை ஒரு சிவனடியாருக்கு தானமளித்தார் காரைக்கால் அம்மையார். கணவர் வியாபார தலத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அந்தக் கனியை உண்ணக் கேட்டபோது பதறிப்போன அம்மையாரை ஈசன் ஒரு மாங்கனி கொடுத்து அமைதிப்படுத்தினார். அதை உண்ட கணவர், அதன் தெய்வீக ருசி உணர்ந்து பெரிதும் பரவசப்பட்டு இன்னொரு மாங்கனியையும் கேட்க, ஈசனருளால் மீண்டும் ஒரு மாங்கனி பெற்று, கணவருக்கு அளித்தார்.

*  மார்க்கண்டேயன் யமபயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி திருக்கடவூர் அமிர்த கடேஸ்வரரைத் தழுவினார். யமன் வீசிய பாசக்கயிறு அமிர்தகடேஸ்வரரின் மேல் விழ அமிர்தகடேஸ்வரர் ப்ரத்யட்சமாகி யமனை எட்டி உதைத்து, மார்க்கண்டேயனைக் காத்து, சிரஞ்சீவி பதவி தந்தார்.

* திருவாரூர் தியாகராஜப் பெருமான், சுந்தரருக்காக காதல் தூது சென்றவர். தியாகராஜ புராணத்தில் நாரணனும், நான்முகனும் பெருமானின் அடி-முடி தேடி வராகமாகவும், அன்னப்பறவையாகவும் உருமாறியிருக்கத் தேவையேயில்லை; திருவாரூரில் சுந்தரரின் வீட்டு வாயிலின் முன் நின்றிருந்தாலே ஈசனின் அடி-முடியைக் கண்டிருக்கலாம் என சுவையாகக்
கூறியுள்ளது.

* கீத கோவிந்தம் எனும் புகழ் பெற்ற துதியை எழுதிய ஜெயதேவர் அதில் ஒரு ஸ்லோகத்தில் கிருஷ்ணரின் திருவடியை பதிக்கக் தகுந்த இடம் ராதையின் மார்பகங்கள் என எழுத நினைத்தார். அது தவறு என நினைத்து நீராடச் சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அவர் அந்த வரிகள் எழுதப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். ஜகந்நாதப் பெருமாள், ஜெயதேவர் வடிவில் வந்து அவர் மனைவியிடம் அந்த வரிகளை எழுதச் சொன்னது தெரியவந்தது.

* காசி மன்னன் சபையில் உருது மொழி பேசத்தெரியாத  குமரகுருபரர் சரஸ்வதியை வேண்ட அவள் அவருக்கு ப்ரத்யட்சமாகி சகல பாஷைகளையும் போதித்தாள். அதற்கு நன்றிக்கடனாக குமரகுருபரர் சகலகலாவல்லி மாலை  எனும் அற்புதத் துதியை பாடியருளினார். இன்றும் கல்வி வளம் பெருக அதைப் பாராயணம் செய்து பலன் பெறும் பக்தர்கள் பலர் உண்டு.

* பிறவியிலேயே பேச்சிழந்த குமரகுருபரன் திருச்செந்தூர் முருகனருளால் பேசும் சக்தி பெற்று கவியானார். அவர் மதுரை மன்னன் சபையில் பாடிய போது மகிழ்ந்த மீனாட்சி தேவி, சிறு குழந்தை வடிவில் அங்கு தோன்றி அவருக்கு முத்து மாலை பரிசளித்தாள்.

* முருகபக்தரான பாம்பன் சுவாமிகள் காலில் அடிபட்டதால் சென்னை பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அவரால் இனி நடமாடவே முடியாது எனக் கூறிவிட்டனர். அப்போது பாம்பன் சுவாமிகள் முருகனைப் பிரார்த்தித்து, ‘அண்டமாய் அவனியாகி..’ எனத் தொடங்கும் ஷண்முக கவசத்தைப் பாராயணம் செய்தார். உடனே, திறந்திருந்த ஜன்னல் வழியே மயில் வடிவில் முருகப்பெருமான் வந்து பாம்பன் சுவாமிகளை தலையிலிருந்து கால்வரை தன் தோகையால் விசிறி பின் வந்த வழியே பறந்தான், அடுத்த கணம் பாம்பன் சுவாமிகள் எழுந்து நடமாடினார். இன்றும் சென்னை பொது மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகள் படுத்திருந்த வார்டில் அவர் திருவுருவப் படத்தைக் காணலாம்.

ராகவேந்திரன்