அக்னி



வணக்கம்  நலந்தானே!

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர் என்று எளிதாக எல்லோராலும் கூறப்படும் வாக்கியம் உண்டு. ஆனால், அவர்கள் வழிபட்டது இயற்கையை மட்டுமல்ல! இயற்கைக்குள் பொதிந்திருக்கும் அதன் மூலத்தையும் சேர்த்து அறிந்து உணர்ந்து அதை வழிபட்டனர். அந்த இயற்கைக்குள் ஆளுமை செலுத்தும் விஷயங்களே தன்னையும் ஆளுகின்றன என்று உணர்ந்திருந்தனர்.
அதற்கான மாபெரும் தத்துவ தரிசனத்தை அவர்கள் வேதங்களிலிருந்து பெற்றனர். வேதங்கள் பிரபஞ்சம் படைப்பின் தோற்றுவாயை மிக அழகாக சுட்டிக் காட்டுகின்றன.
ஆகாசாத் வாயுஹு வாயோர் அக்னிஹி அக்னேராபஹ அத்யஹ ப்ருத்விஹி ப்ருத்வியா ஓஷதயஹ ஓஷதீப்யோ அன்னம் அன்னாத் புருஷஹ ...

ஐம்பூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் பற்றிச் சொல்லும் வேதபாடம் இது. ஆகாயத்திலிருந்து வாயு உண்டானது. வாயுவினின்று அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும், நிலத்திலிருந்து தாவர ஜங்கமங்களும், உயிர்களும் உண்டாகின்றன. சரி, இந்த ஐம்பூதங்களும் எப்படி உருவாயின? ஐம்பூதங்களுக்கு முன்பு சிவசக்தி சொரூபத்தையே பிரம்மமாக சொல்கிறார்கள். இப்போது சிவசக்தி சொரூபமாக இருப்பதில் சலனம் உண்டாகிறது. இந்த சலனத்தையே சிவன் பார்வதியின் கண்ணை பொத்துவது, தாய விளையாட்டில் தோற்பது என்று இந்து மரபில் சிறு கதையாக சொல்லப்பட்டபடி வருகிறது. இந்தக் கண மூடிய மற்றும் விளையாட்டில் தோற்ற கதையானது சலனத்தையே காட்டுவதாக உள்ளது.

அக்னி என்கிற நெருப்பு என்பது நாம் நேரடியாக நம்மால் கண்களால், தொட்டுணர்வதால் காணும் அளவு மட்டுமல்ல! அது அதனுடைய உருவம் என்று கொள்ளலாம். வேதங்களில் அக்னி குறித்து நிறைய இடங்களில் வருகிறது. இது நாம் வெளியே காணும் அக்னி மட்டுமல்ல. அது நம்மால் பார்க்க முடியாததுமான அருவ அக்னியாகும். அது நம் குடலில், அறிவில், கோபத்தில், சூரியனில், மின்னலில், எரியும் எண்ணத்தில் என்று சூட்சுமமான அக்னியே ஆகும். ஒன்றை எரித்து வேறொன்றாக மாற்றும் சக்தியையும் அக்னியாக்கினார்கள்.

இந்த அக்னி சிறு தீக்குச்சியின் நுனியிலிருந்து நமக்குத் தெரிந்து புறப்படுகின்றது. வைதீகச் சடங்குகளில் மந்திர ரூபத்தில் இடப்பட்ட உணவை அக்னியே தேவர்களுக்குண்டானதை அளிக்கிறது. அறிவின் ரூபமாக, அறிவின் இயக்கமாக எண்ணத்தில், புத்தியில் அக்னி மையங்கொண்டு இயங்கி அறிவையே தோற்றுவித்தும் அழித்தும் செய்கின்றது.

சிருஷ்டிப்பதில் காமாக்னியாக சகல ஜீவர்களுக்குள்ளும் உறைந்து படைப்பை பெருக்குகிறது. இப்படி ஸ்தூலமான பருவுடல் கொண்ட சகல விஷயங்களை அழிப்பதிலிருந்து சூட்சுமமான விஷயங்கள் வரை அக்னி செயல்படுகிறது. எனவேதான் அக்னியின் நீட்சியாக அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வைத்து அவனது மனைவியாக உருவகித்து அக்னியின் பத்தினியை ஸ்வாஹா என்று அழைத்தனர்.

யோகியினுள் மூலாக்னி எனப்படும் மூலாதாரத்திலுள்ள அக்னி யோகாக்னியாக செயல்பட்டு ஏழு சக்கரங்களுக்குள்ளும் சென்று சகஸ்ராரத்தை அடைவிக்கிறது. அக்னி தவத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அலையும் எண்ணங்கள் ஒரு முகப்போடு இருக்கும்போது முகமே சுடராக ஒளிர்கின்றது. அதனாலேயே தீந்தவம் என்றனர். உபநிஷதங்களில் அக்னியை இவ்வாறாகவும் கூறியிருக்கிறது.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)