அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-74



என்னை நமனும் துரத்துவானோ!

உடலானது தனக்குத் தேவையான பசி, தூக்கம் போன்ற உணர்வின் வழியே உயிரைச் செலுத்தும் பண்புடையது. அத்தகைய சூழலில் புலன்களுக்கு ஏற்படும் பசியையே ஆசை என்கிறோம். வயிற்றுக்கு ஏற்படும் பசியை ஆற்றல் என்கிறோம். இயல்பாகவே சூழலால், தேவையால் ஆசை அதிகரிக்கும். அதை அளவுபடுத்தாவிட்டால் அதுவே உடலுக்கு துன்பத்தையும், மனதுக்கு துயரத்தையும் ஏற்படுத்தும்.

முடிவில் பிறவிக்கு வித்தாகும். அந்த ஆசையின் வழி செல்லாமல், அளவுபடுத்தி மனதை உடனிருந்து அழைத்து செல்வதும் உமையம்மைதான். “ஆசை கடலுள் அகப்பட்டு அந்தகன் கை பாசத்தில் அல்லற்பட இருந்தேளை” - 32 என்பதிலிருந்து இதை அறியலாம்.ஆசையின் காரணமாக மனிதன் செயல்படுகிறான். செயலின் விளைவாக மனிதனுக்கு பாவமும் புண்ணியமும் விளைகிறது. அந்த பாவபுண்ணியத்தின் வழி பிறவி எடுத்து உழல்கிறது ஆன்மா. அந்த ஆன்மாவை உடனிருந்து நல்வழிச் செலுத்தி உயர்வு பெற கருணை புரிவது உமையம்மையே “ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி தளர்விலதோ'' - 7 என்பதிலிருந்து

ஆன்மாவின் உடல் என்பது ஆணவ மலத்தை நீக்கி உயிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிவை ஏற்படுத்த உதவும் சாதனம். இது பூவுலகில் ஏழுவகை பிறப்பாகவும் மேலுலகில் தேவப் பிறப்பாகவும், உலகம் சார்ந்தும் இருத்தல் இயல்பு சார்ந்தும் அமைகிறது. அப்படி அமைத்துத் தருபவர்
உமையம்மையே.

மனித உடல் பஞ்சபூத சாரமானது. தேவ உடல் பஞ்ச தன்மாத்ரா சாரமானது என்பதையே ‘‘அனலும் புனலும், வெங்காலும் படர்விசும்பும்'' - 68 என்று பூதவுடலையும், ஊரும், முருகு, சுவை ஒளி, ஊறொலி ஒன்றுபட சேரும் தலைவி - (68) என்று தேவ உடலையும் கொடுத்து முக்தி பெற வழி நடத்துகின்றவள் உமையம்மையே என்பதனால் “நாயகி” என்கிறார்.

திருக்கடையூரின் தலப்புராணத்தோடு முழுவதும் தொடர்புடைய இப்பாடல் வரிகள் (ஆதிகடவூரின் வாழ்வே பதிகம்). இது ஐந்து கருத்துக்களை வலியுறுத்துகின்றது. மார்க்கண்டேயருக்கு பதினாறு வயதிலே தான் இறந்து விடுவோம் என்று நன்கு அறிந்ததனால், அவரை இறப்பச்சம் விடாது தொடர்ந்து வந்தது.திருக்கடவூரில் அதற்கான காலம் மிக துல்லியமாக அறிந்தார். அதனால் அது குறித்த பயம் மிகுதியானது. இதையே “வெங்காலன் என் மேல் விடும்போது” - 86 என்கிறார்.

அவர் அந்த பயத்தை போக்கிக்கொள்ள எப்போதும் தன் ஆத்மார்த்த பூசை லிங்கத்தை வேண்டிக்கொண்டேயிருந்தார். அதுவே அவரை மரணத்திலிருந்து காப்பதாகவும் இருந்தது என்பதை அபிராமி பட்டர் நன்கு உணர்ந்திருக்கின்றார். இதை மாயா முனிவரும் -(4) என்பதனால் அறியலாம். பட்டருக்கு முதுமை வரும்போது இறப்பச்சம் இயல்பாகவே சூழ்ந்து கொண்டது. இதையே “என்னை நமனும் துரத்துவானோ” (பதிகம்) என்கிறார். அதனாலேயே மார்க்கண்டேயரை காத்தருளிய அமிர்தகடேஸ்வரரின் துணைவியராகிய (எந்தை துணைவி) அபிராமியை நோக்கி இறப்பச்சத்தை நீக்குவதோடு அழியா முத்தியையும் வேண்டுகின்றார்.

இதையே அழியா முத்தி  வீடுமன்றோ - 15 என்கிறார். பட்டர் சாக்த சித்தாந்தி ஆகியதால் “சத்தி தழைக்கும் சிவமும்” - 29 என்கிறார். சாக்தர்கள் அடைய விரும்பும் முத்தி நிலையமாகிற சிந்தாமணி கிரகத்திற்கு செல்வதற்கான சிந்தனையை வெளிப்படுத்தி விளக்குகின்றார். இப்பாடலை பொருள் உணர்ந்து தொடர்ந்து. தியானிப்பவர்களுக்கு மரணபயமின்றி முக்தி இன்பம் பெற வழிவகை செய்கின்றார்.

முக்தி இன்பம் என்பது இரண்டு வகைப்படும். இறந்த பின் அடைவது, வாழும் போதே அடைவது. வாழும்போதே முக்தியின்பத்தை அடைய முடியும் என்பதை சாத்திரம் விதேக முக்தி என்கிறது. திருமூலர், அருணகிரிநாதர் போன்றோர் கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. அவ்வகையில் ஒரு உடலை விட்டு வேறு உடலை அடைந்த பிறகும் தன் உணர்வு கெடாமல் மூலன் என்ற இடையனின் உடலில் இருந்து திருமூலர் பேசியது போல் உள்ள முக்தி இன்பத்தை இங்கே அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற எமவாதனை அற்ற தன்னுணர்வு பெற்ற முத்தி இன்பத்தையே வேண்டுகின்றார்.

அத்தகைய இன்பத்தை தரவல்ல “நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே” என்று மனித உடலுக்குள் உள்ள ஏழுவகை சக்கரத்தில் ஏழுவகை சுரமாய் விளங்கும் உமையம்மையை தியானித்து உடலுக்கும், உயிருக்கும் உண்டான உறவை அறுக்காமல் அவிழ்த்துவிட வேண்டுகிறார்.

பட்டர் வாழ்ந்த காலத்தில் போர்களத்தில் வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவது போல் அஞ்சத்தக்க மரணமாக இல்லாமல், பாம்பு தன் தோலை உரிப்பதுபோல் மரணத்தை வெகு இயல்பாக சுமுகமான துன்பமற்ற வழியில் தன்னுணர்வுடன் யாக்கையை விடுகின்ற யோக முறையை வேண்டுகின்றார்.

இதையே பால்ய பருவத்தில் கற்கப்பட்ட வித்தையையும், இளமைப் பருவத்தில் அனுபவிக்கப்பட்ட இன்பத்தையும், முதுமைப் பருவத்தில் விடப்பட்ட ஆசையையும் யோகத்தினால் தான் விரும்பும்போது விடப்பட்ட சரீரத்தை உடையவர்களாக அறத்தின் பயனைச் சார்ந்து அனுபவம் உடையவர்களாக திகழ்ந்தார்கள் என்பதை வடமொழிக் காப்பியத்தின் வழி அறிய முடிகிறது.இனி அடுத்த பாடலுக்குள் பயணிப்போம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்