ஆனந்தப் பொங்கல்



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

உயர்நிலைபெற்ற ஆன்மிகவாதிகள்

அந்நிலையை அப்படியே சொல்லும் வார்த்தைகள் சாமானியனுக்கு பிடிபடாமல் போகும். உதாரணச் சொல்: ஆத்ம சாட்சாத்காரம். அதை பொறுப்பாசிரியர் ஞானம் அடைதல் என்று எளிமைப்படுத்தி, எல்லோருக்கும் தெரிந்த சிவபார்வதி திருமணத்தில் தென் திசையை அகத்தியர் சமன்படுத்திய கதைக்குள் பொதிந்த ஞான சாரத்தை சுருங்கச் சொல்லி, விளங்க வைத்து விட்டாரே! இதழ்தோறும் சிறுகட்டுரைதான் என்றாலும், பனைமரம் காட்டும் பனித்துளி போல, ஆன்மிகப் பாடமாகிறது பொறுப்பாசிரியர் கடிதம். பாராட்டுகள்.
- அ. யாழினி பர்வதம்,சென்னை - 600078.

ஈயாத இழி மனிதரால் ஔவை பட்டபாடு அவரது கவிதை, விளக்கத்தால் தெளிவாக அறிந்தோம். அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் பலர் இருந்தும் ஆழ்வான் போன்ற ஆச்சர்ய மனிதனும் அக்காலத்தில் வாழ்ந்திருக்கிறான் என்ற செய்தி வியப்பை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது. நம்மால் இயன்றதை பிறருக்கு கொடுத்து வாழ வேண்டும் என்ற உயரிய நீதியை நமக்கும் போதித்து விட்டது.
- எஸ். நிகில்குமார், இராமேஸ்வரம்.

சூரியனைப்பற்றி பல கருத்துகளை வேதங்கள் பகிர்ந்தாலும்; அவன் நமக்கெல்லாம் இறைவன் என்பதில் இம்மியளவும் ஐயமில்லை. காலையில் நாம் சூரிய நமஸ்காரம் செய்வது நம்முடைய தெய்வத் தன்மையைத்தான் வெளிப்படுத்ததான் என்பதே நிஜம்.
- ஆர்.கே. லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

ஆன்மிகம் பொங்கல் இதழோடு 2021 காலண்டர் வெகு ஜோர். வழு வழு காதிதத்தில் வண்ண வண்ண நிறத்தில் பக்கத்திற்குப் பக்கம் சீரடி சாய்பாபாவின் படங்கள் பக்திச் சுவை கொட்டியது. பல காலண்டர்களை வீட்டுச் சுவரில் மாட்டியதை கண்டுள்ளேன். நாங்கள் இதை பூஜை அறையில் அல்லவா வைத்துள்ளோம். இதோடு மட்டுமல்லாது எங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஐந்து பேருக்கு இதை இலவசமாக தருவதற்காக ஐந்து ஆன்மிகம் பலன் புத்தகம் வாங்கி விநியோகித்தேன். பாபா அருள் தினகரன் குழுமத்திற்கு என்றும் உண்டு.
- இரா. அரிமளம், பெங்களூர் - 560076.

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்களில் ஆலிலைக் கண்ணனின் பெருமைகள் மிகமிக அருமை. ஒவ்வொரு திருநாமத்திற்கும் ஒவ்வொரு கதையாகச் சொல்லி வியக்கவைக்கும் திருக்குடந்தை டாக்டர். உ.வே. வெங்கடேஷ் அவர்களுக்கு எங்களின் பணிவான
வணக்கங்கள்.
 - சிவராஜ். நாகப்பட்டினம்.

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க! எனும் முனைவர் மா. சிதம்பரம் அவர்களின் கட்டுரை தமிழரின் பண்டைய பண்பாட்டை மிக அழகாக விளக்கியது. பொறுமையாக படிக்கப்படிக்க எப்பேற்பட்ட தொன்மையான மொழி தமிழ் என்று வியப்பின் உச்சிக்கே சென்றேன். கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா கட்டுரை மிக ஆழமாக ஆண்டாளின் திருப்பாவை வரிகளை ஆராய்ந்திருந்தது.
- ராம், முகப்பேர், சென்னை.