ஜெபமாலை தந்த சத்குருநாதா



அருணகிரி உலா-113

அருணகிரிநாதரின் க்ஷேத்திர கோவைப் பாடலில் பதினெட்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள திருப்புகழ்த் திருத்தலம் ஆவினன்குடி. நக்கீரர் குறிப்பிட்டுள்ள ஆற்றுப்படைத் தலங்களுள் இது மூன்றாவதாகும். இன்று பழநிமலை உட்பட்ட இத்தலம் ‘பழநி’ என்ற பெயராலேயே அறியப்படுகிறது. ஒரே தலத்தில் முருகப் பெருமானுக்கென இரு பிரபலக் கோயில்கள் [ திருஆவினன்குடி, பழநிமலைக் கோயில்] அருகருகே அமைந்துள்ளது. இங்கு மட்டுமே.

ஆயர் குலத்தில் பிறந்த குறுநில மன்னர்கள் இவ்விடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த காரணத்தினால் இத்தலம் ‘ஆவினன்குடி’ என்று அழைக்கப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. திரு [ லட்சுமி], ஆ [காமதேனு], இனன்[ சூரியன்], கு[பூமி], டி [அக்னி] ஆகியோர் பூசித்த தலமாதலால் திரு ஆவினன்குடி என்றழைக்கப்படுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.

ஆவினன்குடிக் கோயிலில் மயில் மீது எழுந்தருளியிருக்கும் முருகன் ‘குழந்தை வேலாயுத சுவாமி’ எனும் திருப்பெயருடன் விளங்குகிறார். காவடி எடுத்து வரும் பக்தர்கள் கோயிலின் அருகிலுள்ள சரவணப் பொய்கையில் நீராடி ஆவினன்குடி முருகனைத் தரிசித்துப் பின்னர் மலை ஏறுவது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். முருகன் ஏன் ஆவினன்குடிக்கு வந்தான் என்ற எண்ணம் தோன்ற, பழநித் தலபுராண ஆசிரியர் பால சுப்ரமண்யக் கவிராயர் பின்வருமாறு பாடுகிறார்.

‘‘பாயும் விடை  ஊர் பகவானுக்கும்
தனக்கும் பழைய பதி என்றோ?
ஆய திரு ஆ  இவரை அளித்தும் என்றோ?  ஏனவரை
ஏய  சாரல் உறும் தவமோ? யாதோ யாவர் அறிகிற்பவர்
சேய  திரு  ஆவினன் குடியில் சென்றான்  குன்று தொறு  நின்றான்’’
தாவிச் செல்லும் ரிஷப வாகனத்தை உடைய சிவனாருக்கும் தமக்கும் உரிய பழைமையாக விளங்கும் தலம் என்று எண்ணியோ? பூசித்த லட்சுமி, காமதேனு, சூரியன் எனும் இவரைக் காப்போம் என்று கருதியோ? வராக மலையில் பொருந்திய சாரல் செய்த தவமோ? யாதோ எவர் அறிய வல்லார்? மலைகள்தோறும் தங்கி அருளும் குமாரக்கடவுள் செம்மையான திருஆவினன்குடியிற் சென்றார்? என்பது பொருள்.
அருணகிரியார்   திருஆவினன்குடிப்  பெருமானைப் போற்றி  12 பாடல்கள் பாடியுள்ளார்.

‘‘ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.’’
‘‘உபதேச மந்திரப் ...... பொருளாலே,
உனைநான் நினைந்து அருள் ......
பெறுவேனோ?’’
என்று பாடுகிறார்.

பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ......
கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா
மநோமணி

ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.
என்பது மற்றொரு ஆவினன்

குடிப் பாடல். அருணகிரியாரது காலத்திலேயே கோயில்கள் நிறைந்த ஊராகத் திருவாவினன்குடி திகழ்ந்தது என்பதற்குச் சான்றாக ‘கோமளம் பல சூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி’ என்று பாடியுள்ளார்.

குழந்தை வேலாயுதன் திருக்கோயிலின் மேற்கு நோக்கிய பிரதான வாயிலில் நுழையும் முன் விசாலமான திருப்புகழ் மண்டபமும் மயில் மண்டபமும் காணக் கிடைக்கின்றன. உள்ளே கிழக்கு நோக்கிய விநாயகர்,
அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை,
தட்சிணாமூர்த்தி, நக்கீரர், அருணகிரிநாதர்
ஆகியோர் திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.

சேர மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கியது பழநி. மலையை ஒட்டியிருக்கும் பகுதியை வைகாவூர் நாடு என்றழைத்தனர். மலைக்கோயிலுள்ள கல்வெட்டுகளும் பழநிப் பகுதியை வைகாவூர் நாடு என்று கூறுகின்றன. ‘‘வைகாவூர் நாட்டுப்  பழநியில் சுப்ரமண்யப் பிள்ளையார்’ என்பது கல்வெட்டுக் குறிப்பு. அருணகிரியாரும் சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில் ஆவினன்குடி என்று பாடுகிறார்.

ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ......
லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
[‘நாதவிந்து சுலாதி’- ஆவினன்குடித்
திருப்புகழ்]

[ஆரூரர் எனப்படும் சுந்தரருடன்  தோழமை பூண்டிருந்த சேரமான் பெருமாள் நாயனார்
கயிலையில் பாடிய திருக்கயிலாய ஞான உலா பற்றிய குறிப்பு இங்கு வந்துள்ளது]
அகஸ்தியரின் பூஜைக்கென, கயிலையிலிருந்து சிவகிரி - சக்திகிரி எனும் இரு மலைகளை இடும்பன் காவடியாகக் கட்டிச் சுமந்து  கொண்டு தென்னாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். இளைப்பாறுவதற்காக மலைகளை இறக்கி வைத்த இடம் இன்றைய பழநி.

சிவகிரி மலைமேல் குரா மரத்தடியில் சிறுவனாகக் காட்சி அளித்த முருகப் பெருமான் அம்மலை அந்த இடத்திலேயே நிலைபெறும்படி அருளிச் செய்தான். பழநிமலையில் படிகள் ஏறிச் செல்லும் பாதையில் குராமரத்தைத் தரிசிக்கலாம்.

அகஸ்திய முனிவர் பழநியில் வந்து தவஞ் செய்து
முருகப்பெருமானிடம் தமிழின் ஐந்து இலக்கணங்களையும் உபதேசிக்கப் பெற்றார்.
இதுபற்றி பழநித் தலபுராணத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அருணகிரிநாதரும் இதுபற்றித் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

‘‘சிந்தைமகிழ் புலவோர் கள்வந்து
வந்தனைசெய் சரணா ரவிந்த
செந்தமிழி லுனையே வணங்கு ......
குருநாதர்
தென்றல்வரை முநிநா தரன்று
கும்பிடந லருளே பொழிந்த
தென்பழநி மலைமே லுகந்த ......
பெருமாளே.’’

உள்ளம் மகிழ்ந்த புலவர்கள் வந்து வணங்குகின்ற பாதத் தாமரைகளை உடையவளே! செந்தமிழில் துதிசெய்து உன்னை வணங்கும் குருநாதரானவரும், தென்றல் வீசும் பொதிமலையில் வாழும் முனிவர்க்கு அதிபருமாகிய அகஸ்திய முனிவர் அந்நாளிலே கும்பிட்டு வழிபாடு செய்ய நல்லருளைப் பொழிந்த அழகிய பழநி மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே என்று பாடுகிறார்.

‘‘குறு  முநிவன்  இரு  பொழுதும்  
அர்ச்சித்து  முத்திபெற
அறிவு நெறி தவநிலைகள்  செப்பதி தமிழ்க்கினிய
குரு குமர  பழநி வளர்  வெற்புதனில்  திகழு பெருமாளே’’

அகஸ்திய முனிவர் காலையும் மாலையும் மலர்களால் அர்ச்சனை செய்து வீடுபேறு பெறுமாறு ஞானவழியையும் தவநிலைகளைப் பற்றியும் உபதேசித்த தமிழுக்கு இனிமையான குருநாதனே! குமரக் கடவுளே! அருள் வளர்கின்ற பழநி மலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே! என்கிறார்.

‘அகல் வினையுள்’ எனத் துவங்கும் பாடலில் பழநி மலையை ‘பரம மயமானது, ஜோதி மய
மானது. சிவமயமானது’ என்கிறார். பாடலில் குரா பற்றிய குறிப்பும் வருகிறது.

‘‘பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின்’’
‘‘பழநித னிற்போ யுற்பவ வினைவிள
கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ ......
தொருநாளே’’

பகலிலும் இரவிலும் உனது திருப்பணியைச் செய்து, எல்லாப் பற்றுக்களையும் விட்டவர்கள் மெய்யுணர்வினால் கண்ட பரம சொரூபமாய், ஜோதி சொரூபமாய், சிவ சொரூபமாய் விளங்குவது உன் இருப்பிடமாகிய பழநியம்பதி. அங்கு வந்து என் பிறவி எனும் வினை அகலுமாறு, தேன் துளிக்கும் வெட்சி, குரா எனும் மலர்கள் நிரம்பியுள்ளன. உனது நல்ல பாத மலரைப் பற்றுகின்ற நாள் ஒன்று சிறியேனுக்குக் கிடைக்குமா?
என்று இறைஞ்சுகிறார்.‘‘இராப்பகலற்ற இடங்காட்டியான் இருந்தே துதிக்க குராப்புனை தண்டையந்தாள் அருளாய்’’ என்கிறார். கந்தர் அலங்காரத்தில்.

அருணகிரியாரின் புலமைத் திறத்தை
விளக்கும் ஒரு திருப்புகழை இங்குப் பார்ப்போம்:-
‘‘கழல்ப ணியவினை கழல்ப ணியையணி
கழல்ப ணியவருள் ...... மயில்வீரா
கமலை திருமரு கமலை நிருதரு
கமலை தொளைசெய்த ...... கதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலைமுரு ...... கவிசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவு மிமையவர் ...... பெருமாளே.!’’
[கழல் பணிய வினை = பண்ணிய  
வினைகழல்

கழல் பணியை அணி = வீரக்கழலையும், தண்டை, சிலம்பு முதலான ஆபரணங்களையும் அணிந்த]
பண்ணிய வினைகள்  கழன்று  நீங்க,
வீரக்கழல் முதலான  ஆபரணங்களை  அணிந்து உன் திருவடியைப் பணிய அருளிய மயில்
வீரனே!

[ கமலை திரு மருக, மலைநிருதர் உக, மலை  தொளை செய்த  கதிர் வேலா]
லட்சுமியின் திரு மருகனே! மலைகளில் இருந்த அசுரர்கள் அழிய அம்மலைகளைத் தொளை செய்த கதிர் வேலவனே!
[பழனி = பழத்தை போன்றவள்; மலை
வரு பழநிமலை;]
பழத்தை ஒத்தவளும், மலை அரசன்
மகளாய் வந்த
  பழைய நிர்மலையாம் பார்வதி
பெற்றருளியமுருகா ! விசாகா !

கடலில் அணைகட்ட வேண்டி, ராமபிரான் வருணன் வரவை எதிர்பார்க்க, அவன் வராததானால் கோபித்துக் கடல் மீது அஸ்திரத்தை எடுக்க வருணன் பயந்துபோய் ராமனைச் சரணடைந்த வரலாற்றின் இறுதிவரிகள் கீழே குறிப்பிடப்
பட்டுள்ளது.

பரந்துள்ள கடல்மீது பாணப் பிரயோகம் செய்து அடக்கிய கடல் வர்ணனாம் திருமால் போற்றிப் பரவும் தேவர் பெருமாளே! என்று பாடுகிறார்.
[இலங்காபுரிக்குப் போதைக்கு நீ வழிகாட்டென்றும்
போய் கடல்  தீக்கொளுந்த வாகைச் சிலை
வளைத்தோன் மருகா! கந்தர் அலங்காரம்]
தமிழ்க் கவிகளை ஓதிப் பணிந்து உருகும்
படியான அன்பைத் தனக்குத்தர வந்தருளும்படி ஒரு திருப்புகழில் முருகனை வேண்டுகிறார்.

‘‘சற்போதகப்  பதுமமுற்றே  தமிழ்க்கவிதை
பேசிப்  பணிந்துருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும்’’
‘‘பிரம்மன் இட்ட விதிப்படி எமன் என் உயிரைக் கொண்டு போகுமுன், உனது நல்ல ஞானத் திருவடித் தாமரைகளை அடைந்து, தமிழ்க் கவிகளை ஓதிப் பணிந்து உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டு.’’
- என்று பிரார்த்திக்கின்றார்.
‘‘பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி
யாவமரர் ...... பெருமாளே.!’’
என்கிறார் ‘சுருதிமுடி’ எனத்துவங்கும்
பாடலில்,

‘‘பணிகின்ற அடியார் தமது மனங்களில் உண்மைப் பொருள் என்று போற்றி நிற்கும். ‘சரவணபவா’ என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய பெரும் பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கும் சுப்ரமணியனே தேவர் பெருமாள்’’ என்பது பொருள். பழநி மலையே ஷடாக்ஷர மலையாகும். எனவே கந்தர் அலங்காரத்தில் ‘மனமே! பழநி எனும் ஊரின் பெயரைக் கூடக்கூறினால் இல்லை; அவ்வாறு கூறுபவர்களது திருவடிகளை வணங்கினால் இல்லை’’ என்று கூறி ‘இவ்வாறு செய்யாத  உனக்கும் உன்னுடன் சேர்த்து வைக்கப்பட்ட எனக்கும் இனி மரண வேளையில் பற்றுக் கோடாக இருந்து உதவப்போவது எது’’ என்று கேட்கிறார்.

‘‘படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா  என்கிலை
முசியாம விட்டு
மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது
நமக்கினியே !’’

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி