குந்தி கேட்ட வித்தியாச வரம்!



வணக்கம் நலந்தானே!

வாசுதேவ கிருஷ்ணா... வாழ்க்கையில் சகல சுகங்களும் அடைந்தவர்களுக்கு உன்னுடைய அருமை எப்படி புரியும். சுகங்களிலேயே கட்டுண்டவர்களுக்கு துக்கம் செய்யும் சகாயம் எப்படித் தெரிய வரும். ஆஹா... இந்த துக்கம்போல வேறொரு விஷயம் இவ்வுலகினில் உண்டா என்ன? ஐயோ... கஷ்டம்.. அப்பப்பா... எத்தனை பிரச்னைகள் என்று ஏன் இந்த ஜனங்கள் அலறுகிறார்கள்.

துக்கத்தில்தான் ஒருவரின் அகங்காரம் நசிக்கிறது என்பதை ஏன் அறியாதிருக்கிறார்கள். துக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட பிறகு மனம் அடையும் அந்த அமைதியை, ஆனந்தத்தை, மனம் உள்நோக்கிச் சென்று அடங்கும் கண நேர அனுபவத்தை அறிந்து கொள்ளக் கூட பொறுமையற்று இருக்கிறார்களே. ஒவ்வொரு துன்பத்திற்குப் பிறகு மனம் அழியும் நுட்பம் எத்தகைய விந்தையானது.

துன்பத்தில் நான் எனும் அகந்தை தவிப்பதைப் பார்த்தால் சந்தோஷம் வரவேண்டாமா. தன்னை மீறிய சக்தியின் செயல் நடந்து கொண்டிருக்கிறது என்று அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

துக்கத்தில்தான் சீ... இந்த உலகம் இவ்வளவுதானா என்று இறைவன் பக்கம் மனம் திரும்புகிறது. புலன்களால் வரும் சுகம் இவ்வுலகத்தில் ஜீவனை கட்டிப் போடுகிறது. செல்வத்தால் வரும் செருக்கு இந்த உலகமே கதி என்று கிடந்துழல வைக்கிறது. துக்கத்தில்தான் எப்போது இந்த ஜீவன் கட்டுக்களை விடுவித்து உன் திருவடியை அடையும் என்று நினைக்கிறது. புலன்களை ஒதுக்குகிறபோதே உடம்பையும் சேர்த்து ஒதுக்கும் சூட்சுமமும் அதில் உள்ளது. தான் இந்த உடம்பல்ல என்கிற தெளிவும் வருகிறது.

இப்படி சரீரத்தால் எத்தனை சௌகரியங்கள் வந்தாலும் எளிதாக அதை ஒதுக்கித் தள்ளவும் முடிகிறது. அதனால் கேட்கிறேன். என் வாழ்வில் அடிக்கடி விபத்துகள் வரட்டும். துக்கங்கள் துரத்தட்டும். இப்படியொரு வரத்தை அளிப்பாயா. உன் அத்தையான குந்தி என்று என்னை நீ நினைக்காமல் உன் பக்தை என அந்த வரத்தைக் கொடேன்’’ என்று கண்கள் நீர் வழிய நின்றாள்.

‘‘அத்தை... உங்களுக்கு புத்தி ஏதேனும் பேதலித்து விட்டதா. இப்போதுதான் எல்லா போர்களும் முடிந்து சுகமான நிலைமைக்கு எல்லோரும் வந்துள்ளனர். இப்படிப்போய் கேட்கிறீர்களே’’‘‘இல்லையப்பா... நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். இங்கு உம்மைத்தவிர எதுவும் நிலையல்ல என்கிற முழு உணர்வோடு கேட்கிறேன். எனது புத்தி வேறெதிலும் பற்றை வைக்காதபடி உன்னை நோக்கியே இருக்க வேண்டும். கங்கையின் பிரவாகம் எப்படி சமுத்திரத்தை நோக்கியே இருக்குமோ அதுபோல இருக்க வேண்டும். யோகிகளுக்கெல்லாம் ஈஸ்வரன் நீ. யாவருக்கும் குருவான மீண்டும் மீண்டும்
நமஸ்காரங்கள்’’ என்றாள்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)