அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக?வளம் தரும் வாஸ்து

பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் காதணி விழா முதல் கல்யாண விழா வரை பல்வேறு நிகழ்வுகளிலும் வாஸ்து, பெங்சூயி சூட்சுமங்கள் உள்ளன, தெரியுமா உங்களுக்கு?கர்ப்பிணிகள் வசிக்கக் கூடிய அறை, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியாக அமைவது நல்லது என்று வாஸ்து விஞ்ஞானம் தெளிவுபடுத்துகிறது. பெங்சூயிபடி  அறை சுவர்களில் மென்வர்ணம், குறிப்பாக இளம் நீலம், இளம் சிவப்பு மற்றும் இளம் சந்தன வண்ணங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும்.

குழந்தை பிறந்தபின் அதனை இடும் தொட்டிலை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மாறாக, தென்கிழக்கில் தொட்டில் அமைக்கும்போது குழந்தை உரிய நேரத்திற்குத் தூங்காமல், விழித்துக் கொண்டும், அழுது கொண்டும் அடம் பிடிக்கும் என உறுதிபட கூறுகிறது.

வடகிழக்கில் தொட்டில் அமைக்கும்போது குழந்தையின் வளர்ச்சி தடைபடுவதுடன் பல்வேறு பிரச்னைகளுக்கும், இன்னல்களுக்கும் அது ஆளாகும். எனவே படுக்கையறையில் கர்ப்பிணி படுக்கும் முறையும், குழந்தைத் தொட்டில் அமையவேண்டிய அமைப்பையும் படத்தில்
உள்ளவாறு அமைக்க வேண்டும்.

குழந்தை பிறப்பின்போது சோற்றுக்கற்றாழையை பெங்சூயி வெகுவாக ஆராதிக்கிறது. சோற்றுக்கற்றாழையை வேருடன் பிடுங்கி வடகிழக்கு/தென்கிழக்கில் கட்டி தொங்கவிடும்போது மகப்பேறு அடைந்த தாயின் ரத்த போக்கு காரணமாக வெளியேறும் பாக்டீரியாவை உள்வாங்கி அங்கே சுகாதாரம் பேணப்படும் என்று ஆரோக்யத்தை சொல்கிறது. இது வீட்டுக்குள்ளேயே பிரசவம் நடக்கும் அந்தக் காலத்திய வழக்கம். இன்றும் சில கிராமங்களில் கையாளப்படுகிறது.

அதேபோல சுவர் ஓரங்களை மஞ்சள்நீரால் துடைக்கும்போது குழந்தையின் சிறுநீர்/மலம் மூலமாக வெளியாகும் பாக்டீரியாகளையும் அவை உருவாக்கக்கூடிய  நோய்களையும் அண்டவிடாமல் காக்கும்.இன்றைக்கு ஜனனம் ஆன சில குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாக்கும் நிலைமை உள்ளது. அப்போது பிரசவித்த தாய் குழந்தையுடன் இருக்கமுடியாத காரணத்தால் பால் சுரப்பு, குழந்தையை அரவணைத்தபடி இருக்க இயலாமை போன்ற பாதிப்புகள் வருகின்றன.

ஆனால், அந்நாளில் வீட்டில் நடக்கும் பிரசவத்தில் தாய்-சேய் இருவரையும் வடமேற்கு மூலையில் தங்க வைப்பதால், மாலை சூரியனின் கதகதப்பு இரவுவரை இருக்கும். காற்றும் அதிகம் வீசாது. இது இப்போதைய இன்குபேட்டரின் மென்மையான உஷ்ண அமைப்பு!கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் அது உடனே அடுத்தடுத்த வளர்ச்சிக்குத் தன்னைத் தயார் செய்துகொள்வதே. இந்த காலகட்டத்தில் அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுகிறது அதன் இடுப்பில்
கட்டப்படும் அரைஞாண் கயிறு.

இடுப்பு அருகில் மட்டுமே ரத்த குழாய்கள் மெலிதாக தோலின் மிக அருகில் செல்கின்றன. எனவே ஈரம்பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாக திரித்து அதைத்தான் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்ற ‘நம்பிக்கையை’ வளர்த்துவிட்டதால், அது வாஸ்து விஞ்ஞானத்தின் ஒருவகை என்ற உண்மை
மறைந்துபோனது.

வயதானவர்கள் உள்ள வீடுகளில், அவர்கள் இன்றும் தம் பேரன், பேத்தி, கொள்ளு பேர குழந்தைகளுக்கு வெள்ளை எருக்கம் நார் - அரைஞாண் கயிறை கட்டி இதயத் துடிப்பை சீராக்கி குழந்தை வளர்ச்சியை நன்முறையில் பேணுகின்றனர்.‘வசம்பு’ என்ற மூலிகைக்கு கிராமங்களில் ‘பிள்ளை வளர்த்தி’ என்றே பெயர். இதன் அடிப்பகுதி - வேர்பகுதி கட்டையாக இருக்கும். இதனை சிறு சிறு மணிகளை போல செய்து நூலில் கோர்த்து வளையல் போல குழந்தைகளின் கைகளில் அணிவிப்பார்கள்.

இது என்ன அலங்காரம்? இது அலங்காரம் அல்ல. வாஸ்து விஞ்ஞானமே! வசம்பு செடியின் வேர் மிக வாசனையாக இருக்கும். இதன் மணத்தை 10, 15 அடி தூரம்வரையிலும் நுகர முடியும். குழந்தைகள் இயல்பாக கைகளை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டிருக்கும். வசம்பு வளையல்களை குழந்தைகள் கையில் அணிவித்தால்  அப்போது குழந்தையின் எச்சில் வசம்பில் பட்டு அதன் சாரம் குழந்தை வாயிற்குள் செல்லும். இதன் பலன் என்ன?கைக்குழந்தைகளின் பிரதான உணவே பால்தான். பால் சீரணிக்கப் பலமணிநேரம் ஆகும். குழந்தையின் ஜீரண சக்தியைத் தூண்டக்கூடிய மருந்தாக பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை கையில் வளையலாகப் பயன்படுத்தினார்கள்.

தாயார் தன் கழுத்திலும் வசம்பை மாலையாக போட்டுக் கொள்ள, அதை குழந்தை எடுத்து வாயில் வைக்கும் போதும் இதே பலனை அது பெறுகிறது.  வசம்பை தேய்த்து குழந்தையின் கன்னத்திலும் நெற்றியிலும் பொட்டு வைப்பதையும் இன்றும் கிராமத்தில் வழக்கமாக உள்ளது.

நாம் இன்றைக்கு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். பழங்காலங்களில் மண்பாண்டம், செம்பு, பித்தளை வெங்கல பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்தோம். நாளாவட்டத்தில் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலுக்கு (துருப்பிடிக்காத இரும்பு) மாறிவிட்டோம். இதனால் நோய்களே அதிகமாயின. ஆனால், முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு நம் உடலில் உலோக சத்தினை அதிகரித்து திறம்பட செயலாற்றி நம் ஆரோக்யத்தை மேம்படுத்தியது.

செம்பு/துத்தநாக கம்பிகளால் செய்த வளையல், கைக்குழந்தையின் கை, கால்களில் அணிவிக்கும்போது ஏற்கனவே கூறியபடி ‘ஆலிலை கிருஷ்ணன்’ போல தன் காலையும் குழந்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும்போது செம்பு சத்து அக்குழந்தைக்கு சீர்மிகு ஆரோக்யம் அளிக்கிறது. 

பெங்சூயியில், உலோகம் ஐந்து முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது உலோகத்தை குழந்தை சிறு வயதிலேயே பயன்படுத்தும் பொழுது ‘ச்சீ’ சக்தி நிரம்ப பெற்று, முழு பலசாலியாக வளர முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். இப்படியாக  குழந்தை வளர்ச்சியில் பெங்சூயி/வாஸ்து பரிகாரமாக சிலவற்றை கூறி குழந்தை வளர்ப்பிலும் தன்னை முன்னிருத்திக் கொண்டுள்ளது

(தொடரும்)