உள்ள(த்)தைச் சொல்கிறோம்அத்தி வரதரின் அற்புத கையேடு

* பிரசித்திபெற்ற வரதராஜபெருமாள் திருக்கோயில் அத்திவரதர் வைபவம் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தினகரன் நாளிதழ் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிகம் இதழில் அத்தி வரதர் குறித்து அரிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களுடன் முதன்மையானதாகவும், முழுமையானதாகவும் கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த இதழை சிறப்புடன் வெளிக்கொண்டு வந்துள்ள ஆன்மிகம் ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துக்கள். பா.பொன்னையா,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர்  காஞ்சிபுரம்.

* காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதழ் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிகம் இதழில் அத்தி வரதர் பற்றி பல தகவல்கள் புகைப் படங்களுடன்  வெளிவந்துள்ளது. இதற்காக ஆன்மிகம் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். தியாகராஜன்,உதவி ஆணையர் அருள்மிகு தேவராஜ சுவாமி (ஸ்ரீ  வரதராஜப் பெருமாள்) திருக்கோயில் காஞ்சிபுரம்.

* நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை தீர்த்தத்திலிருந்து எழுந்தருளும் அத்திவரதரை மனமுருக வேண்டி, நாட்டில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீர்க்கவாவது பிரார்த்தனை கோரிக்கையோடு காஞ்சியில் திரள்வோம். நினைத்தால் நடக்கக்கூடியதல்ல! வாழ்வில் ஒருமுறையாவது கிட்டுவதே பெரும்பாக்கியம் என்பதால், அபூர்வ அத்திவரதர் நாட்டின் சுபிட்சத்திற்கும் கருணை மழை பொழிய வேண்டி, ஆன்மிகம் கொடுத்த ‘காஞ்சி கைடு’ துணை கொண்டு, புண்ணிய கோடி தரிசனம் பெறச் செல்வோமா! - மல்லிகா அன்பழகன், சென்னை-78.

* காஞ்சிபுரம் அத்திவரதரின் சிறப்பம்சங்களை வெளியிட்டு கூடவே பலவித சிறப்புகளை உள்ளடக்கிய காஞ்சி மாநகரின் ஆசிரியரின் தலையங்கக் கட்டுரை யாவும் அருமையாக இருந்தது. மொத்தத்தில் ஆண்மிகம் இதழ் காஞ்சியின் கையேடு, வரதர் வாசம் செய்த வீடு. இரா.கல்யாணசுந்தரம், கொளப்பாக்கம்.காஞ்சிபுரம்

* அத்திவரதர் பக்தி ஸ்பெஷல் படித்தேன். ஆன்மிகம் இதழைப் படிக்கிறோமா இல்லை காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது. அந்த அளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த இதழ் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது. அத்திவரதரை தரிசித்துவிட வேண்டும் என்ற பேராவலையும் ஏற்படுத்தி விட்டது. - மு.மதிவாணன், அரூர்.

* ‘‘அத்திகிரிக்கு ஏன் இருபத்திநான்கு படிகள்...’’ கட்டுரை படித்தேன். ஆம் இருபத்திநான்கு படிகளும் அசேதன தத்துவங்கள் என புரிந்தது. ஐம்பூதங்கள் (5), ஐந்து உணர்ச்சிகள் (5), ஐம்புலன்கள் (5), ஐந்து செயல்கருவிகள் (5), தவிர மனம்-அகங்காரம், மகான், மூலப்பிரகிருதி(4) ஆகிய மொத்தம் 24-ம் 24 படிக்கட்டுகளாக உள்ளது என்ற தத்துவத்தை அறிய முடிந்தது. - K.R.G.ஸ்ரீராம், பெங்களூரு - 77.

* பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள் தொகுப்பு காரணி இல்லற நிலையில் இருந்துகூட ராமானுஜர் எத்தகைய ஆற்றலையும், ஆன்மிகத்தையும் உலகிற்கு படைத்தார் என்பதை உணர உத்வேகத்தில் ஆன்மிக இதழையே தூக்கி வைத்துக்கூத்தாடியது நெஞ்சம்! - ஆர்.விநாயகராமன்,  திசையன்விளை.

* ‘வையகம் ஆள வரதராஜர் வந்தார்’ கட்டுரை தொடங்கி... மணவாள மாமுனிகள் அருளிய தேவராஜ மங்களம் கட்டுரை வரை நாற்பது ஆண்டுகட்கு பிறகு அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளுகின்ற அற்புதம் வைபவம் நிகழ்கின்ற தருணத்தில் எம்பெருமானின் மகத்துவம் கூறுகின்ற தகவல்களை சிரத்தையாக சேகரித்து தாங்கள் படைத்த அத்திவரதர் சிறப்பிதழ் ஒரு அசாத்தியமான தெய்வீக சேவை என்றே போற்ற வேண்டும். தங்களுக்கு ஆயிரம் கோடி பாராட்டுக்கள்! - அயன்புரம் த.சத்திய நாராயணன்,  பட்டாபிராம், சென்னை-72.

* அத்திவரதரின் அற்புத வருகையும் அன்பான அழைப்பும்  என்பது அனைத்து ஆன்மிக அன்பர்களுக்கும் ஆனந்தமான நிகழ்வாகும். இதனை நமது திங்களிரு முறை ஆன்மிகம் இதழ் அடி முதல் தலைவரை வண்ணப்படங்களுடன் வெளியிட்டு இருப்பதை வரவேற்றுப்பாராட்டி வாழ்த்துகிறேன். - ப.மூர்த்தி, பெங்களூரு.