தீர்த்தவாரி எனும் அருள் மழை



பெருந் திருவிழாக்கள் யாவும்  நீரோடு தொடர்புடையவையாகும். இவை கலசங்களில்  புனிதநீரைச் சேகரித்து எடுத்துவரும் தீர்த்த சங்கிரமணம் எனும் நிகழ்வுடன் தொடங்கித் தீர்த்தவாரி எனப்படும் சடங்குடன் முடிவடைகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வு இறுதிநாளில் நடைபெறும் தீர்த்தவாரியே ஆகும். தீர்த்தத்தை வரித்தல் என்பதே ‘‘தீர்த்தவாரி’’ யாகும். தீர்த்தம் என்பது புனிதமாக விளங்கும் நீர்; வரித்தல் என்றால் உரிமையாகக் கொள்ளுதல் என்பது பொருள். விழாவின் முடிவில் இறைவன் தண்ணீரில் மூழ்கி அதைத் தூய்மைப்படுத்தித் தன்மயமாக்கும் வேளையில் மக்கள் அத்தீர்த்தத்தில் நீராடி தூய்மை பெறுதலே தீர்த்தவாரி விழாவாகும்.

சிவாலயப் பெருந்திருவிழாவின் இறுதி நாளான பத்தாம்நாள் காலையில் தீர்த்தவாரி சிறப்புடன் நடைபெறுகிறது. காலையில் முதலில் நடராஜப்பெருமாள் சிவகாமி அம்மையுடன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிப்பார். பிறகு சோமாஸ்கந்த மூர்த்தி பரிவாரங்களுடன் யாகசாலைகளில் வைக்கப்பட்ட பாலிகைகளுடன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்வார். அவர் முன்னிலையில் முளைப்பாலிகையின் முளைகள் நீரில் விடப்படும். பிறகு சூலதேவரை ஏந்தியவாறு அர்ச்சகர் நீரில் மூழ்குவார். அந்நிலையில் அந்தத் தீர்த்தம் சிவசக்தி மயமாவதால் அதில் மூழ்குவதைப் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.

தீர்த்தவாரியின் போது தீர்த்தமாடிப் பெருமானை வழிபட்டால் தான் விழாவைக் கண்ட பயன் பூரணமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. தீர்த்தவாரி விழாக்கள் பெரும்பாலும் ஆலயத்திற்கு முன்னுள்ள திருக்குளங்களிலேயே நடைபெறும். சிறப்பு நாட்களில் சுவாமி அருளிலுள்ள ஆறுகள் (அல்லது) கடலுக்குச் சென்று தீர்த்தம் அளிப்பார்.  பெருந்திருவிழாவின் இறுதிநாளில் மட்டுமின்றி, கிரகணம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, அர்த்தோதயம். மகோதயம் முதலிய புண்ணிய காலங்களிலும் தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுகிறது.

சில தலங்களில் பெருந்திருவிழாவின் போது இரண்டு முறை தீர்த்தவாரி விழா நடைபெறுகிறது. திருவாவடுதுறை. மயிலாடுதுறை. திருவெண்காடு. ஸ்ரீ வாஞ்சியம் முதலிய தலங்களில் இதனைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக திருவெண்காட்டில் திருவிழாவின் நான்காம் நாளான மாசிமகத்தன்று இறைவன் காவிரி சங்கமத்திற்குச் சென்று தீர்த்தமளிக்கிறார். பத்தாம் நாளில் வழக்கம் போல் காலையில் நடராஜரும் நண்பகலில் சோமாஸ்கந்தரும் தீர்த்தம் அளிக்கின்றனர்.

ஸ்ரீவாஞ்சியத்தில் மாசிமாதப் பெருவிழாவில் இரண்டாம் நாள் எம தீர்த்தத்திலும் மாசிமகத்தன்று குப்த கங்கையிலுமாக இருமுறை தீர்த்தவாரி நடைபெறுகிறது. சிவாலயங்களில் சிவமூர்த்தியே தீர்த்தம் அளிப்பார். சிலதலங்களில் முருகன் எழுந்தருளியும் தீர்த்தம் அளிக்கிறார். ஸ்ரீ வாஞ்சியத்தில் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் சுப்பிரமணியர் குப்தகங்கையில் தீர்த்தம் அளிப்பதைக் காண்கிறோம்.  பொதுவாக தீர்த்தவாரிக்கு சோமாஸ்கந்த மூர்த்தியே பரிவாரங்களுடன், எழுந்தருள்வது வழக்கம். சிலதலங்களில் சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய மூர்த்தங்களும் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிக்கின்றனர். திருவாவடுதுறையில் அணைத்தெழுந்தபிரான் எனப்படும் சந்திரசேகர மூர்த்தி தீர்த்தம் அளிக்கிறார். திருவெண்காட்டில் ஆடி மாதம் நடைபெறும் பட்டினத்தார் விழாவில் போது பிட்சாடனர் மணிகர்ணிகையில் தீர்த்தம் அளிக்கின்றார்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபப் பெருவிழாவின் இறுதிநாளான கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையாருக்குப் பதில் சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையருடன் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தம் அளிப்பதைக் காண்கிறோம்.திருமுறைகளில் தீர்த்தவாரி விழா கொண்டாடப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. திருஒற்றியூரில் பங்குனி உத்திர நாளில் தீர்த்தவாரி நடைபெற்றதை ‘‘உத்திர நாள் தீர்த்தமாக ஒளி திகழும் ஒற்றியூர்’’ என்றும், கொருக்கை, வீரட்டானத்தில் அட்டமியை கடை நாளாகக் கொண்ட விழா நடைபெற்றதை ‘‘தீர்த்தமாம் அட்டமிமுன் சீருடை ஏழு நாளும் கூத்தராய் வீதிபோந்தார்’’ என்று குறிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் எழுந்தருளியுள்ள மாயூரநாதரும் அபயாம்பிகையும் ஐப்பசி முப்பது நாளும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். அன்பர்கள் இங்குவந்து அவ்வேளையில் தீர்த்தமாடுகின்றனர். ஐப்பசிமாதக் கடைநாளன்று தீர்த்தவாரி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதை கடை முகஸ்நானம் என்றழைக்கின்றனர். இந்நாளில் மயிலாடுதுறையிலுள்ள பலகோயில்களிலிருந்து சுவாமிகள் காவிரிக்கரைக்கு எழுந்தருள்கின்றனர். காவிரியின் இருகரையிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சுவாமிகள் வாகனங்களுடன் எழுந்தருள்வது கண்கொள்ளக் காட்சியாகும். திருவாவடுதுறை ஆதீன குருமகாசந்நிதானம் இந்த விழாவுக்கு எழுந்தருளி அன்பர்களுக்கு ஆசியருள்கின்றார்கள். கடைமுகத்திற்கு அடுத்த நாள் (கார்த்திகை முதல் தேதி) முடவன் முழுக்கு எனப்படுகிறது. இந்நாளிலும் அனேகர்  தீர்த்தமாடுகின்றனர்.

 ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் அம்பிகைக்கு ஆடிப்பூரவிழா நடைபெறும். அதிகாலையில் அம்பிகையை அருகிலுள்ள ஆற்றுக்கோ. பெரிய குளத்திற்கோ எழுந்தருளி வைத்து அங்கு அபிஷேகம் நடத்தப்பெறும். அங்கு வரும் பெண்களுக்கு மஞ்சள், நல்லெண்ணெய், சிகைக்காய் முதலியவற்றை வழங்குகின்றனர். இதற்கு ‘பூரம் ஆராட்டு’ என்பது பெயராகும். இது அம்பிகைக்கு உரிய தீர்த்தவாரி விழாவாகும். காவிரிக்கரையோரம் அமைந்துள்ள திருத்தலங்களில் அம்பிகையை காவிரிக்கு எழுந்தருளச் செய்து நீராட்டி விழா காண்கின்றனர்.

ஆட்சிலிங்கம்