நீராகி நின்ற தீர்த்தேஸ்வரன்




‘‘மூர்த்தி, தலம், தீர்த்தம்’’ எனும் மூன்றையும் தொழுவார்க்கு வார்த்தை சொல்ல சற்குரு வாய்க்கும் என்பது ஸ்ரீதாயுமானவ சுவாமிகள் திருமொழியாகும். தீர்த்தங்கள் யாவும் சிவபெருமானாகவே எண்ணத்தக் கவை ஆகும். சிவபெருமான் தீர்த்தவடிவில் இருக்கின்றான் என்பதை மணிவாசகப் பெருமான், ‘‘தீர்த்தன் நல்தில்லை சிற்றம் பலத்தே தீயாடும் கூத்தன்’’ என்றும் அப்பர் சுவாமிகள்,‘‘சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே’’ என்று அருளிச் செய்துள்ளதைக் காண்கிறோம்.

சிவபெருமான் தீர்த்தத்தின் வடிவாக விளங்குவதால் தீர்த்தேஸ்வரர் என்றும் பெயர் பெறுகின்றார். மண்ணின் வளத்திற்குத் தண்ணீர் ஆதாரமாகும். வான்மழை எப்போதும் பொழிவதில்லை. அதனால் பொழிந்த மழைநீரைத் தேக்கி வைத்திருந்து உயிர்களுக்குத் தாகத்தைத் தணிப்பவை நீர்நிலைகளாகிய தீர்த்தங்களேயாகும். இவை தம்மில் நீராடுவார்க்கு உடல் தூய்மையை அளிப்பதுடன் மனத்தூய்மையையும் அளிக்க வல்லன.அனைத்து சிவாலயங்களிலும் அமைந்துள்ள தீர்த்தக் குளங்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன. திருத்தலங்களில் தேவர்களாலும், முனிவர்களாலும் அரசர்களாலும் அமைக்கப்பட்ட அனேக தீர்த்தங்கள் உள்ளன. தலபுராணங்களில் தீர்த்தங்களின் மகிமையும் அவற்றில் மூழ்குவதால் கிடைக்கும் பலனும் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் இறுதியில் இறைவனே எழுந்தருளி முதன்மைத் தீர்த்தத்தில் நீராடித் தீர்த்தம் அளிப்பதைக் காண்கிறோம். இதனைத் தீர்த்தவாரி உற்சவம் என்றழைக்கின்றனர். தீர்த்தக்குளங்களைச் செப்பனிடுதல், படிகட்டுதல், தூர்வாருதல் அதில் வளரும் மலர்ச் செடிகொடிகளை வளர்த்தல் முதலிய யாவுமே சில புண்ணியச் செயல்களாகப் போற்றப்படுகின்றன. குளத்தைப் பேணிக்காப்பதைச் சிவபெருமானைப் போற்றுவதாகவே எண்ணுகின்றனர். அறுபத்து மூவரில் ஒருவரான தண்டியடிகள் திருக்குளப்பணி செய்து மேன்மை பெற்றதைப் பெரியபுராணத்தால் அறிகிறோம். சிலதலங்களில் அடியவர்களின் நன்மைக்காகச் சிவபெருமானே தீர்த்தங்களை உண்டாக்கியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

ஆதிநாளில் திருத்தலங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரையைத் தீர்த்தயாத்திரை என்றே அழைத்தனர். அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை செய்து. பாரத நாட்டிலுள்ள அனேக சிவத்தலங்களை வழிபட்டானென்றும் , பாரத யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்பாத பலராமர் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள என்றும், மகாபாரதம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில், கீரந்தை எனும் அந்தணன், மாடல மறையவன் முதலியோர் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு இமயம் முதல் குமரிவரை சென்று திரும்பியதைக் காண்கிறோம். பொதுவாகத் தீர்த்தங்கள் என்றதும் நமக்கு திருக்குளங்களே நினைவுக்கு வருகின்றன. ஆனால், நதிகள், சுனைகள், தலத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் யாவுமே தெய்வத்தன்மை பெற்றுத் தீர்த்தங்களாக விளங்குகின்றன.

அருணவசந்தன்