நவ நதி தேவியர்கள்நவம் என்பதற்கு ஒன்பது என்பதுடன் புதியது என்பதும் பொருளாகும். வற்றாது நீர் ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதிகள் - நவ நதிகள் என்று அழைக்கப்பட்டன. ஆறு ஓடிக் கொண்டே இருப்பதைக் காணும்போது நிரந்தரமான பரந்த நீர்ப்பரப்பைக் காண்கிறோம். குறிப்பிட்ட இடத்திலிருந்து நோக்கினால் கணந்தோறும் பழைய நீர ஓடிடப் புதிய நீர் வந்து கொண்டே இருக்கிறது. எனவே தண்ணீர் எப்போதும் புதியது (நவம்) ஆகும். இதையொட்டி ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றை நவ நதி என்ற அழைக்கிறோம். இங்கு கூறப்படும் நவநதிகள் அகண்ட பாரத தேசத்தில் ஓடும் ஒன்பது புனித நதிகளாகும். இவற்றின் பெயர்கள்  முறையே 1) சிந்து, 2) கங்கை, 3) யமுனை, 4) சரஸ்வதி, 5) காவேரி, 6) கோதாவரி, 7) குமரி, 8) சரயூ, 9) நர்மதா என்பனவாகும்.

பூசைகளின் ஆரம்பத்தில் செய்யப்படும் சங்கல்பத்தில் இந்த நதிகளின் பெயர்கள் கூறப்படுவதுடன் நாம் மேற்கொள்ளும் பூசையை இவற்றின் கரையில் செய்வதால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த ‘‘பலனைத் தருமாறு நதி தேவதைகளிடம் பிரார்த்தனையும் செய்யப்படுகிறது. ஒருமுறை இந்த நதிகள் தமது துணை நதிகளுடன் சிவபெருமானை அடைந்து. ‘‘பெருமானே மக்கள் எங்களிடம் மூழ்கிப் பாவங்கள் நீங்கித் தூய்மை பெறுகின்றன. ஆனால் அவர்களிடமிருந்து விலகிய தீமைகள் எங்களைப் பற்றி வருத்துகின்றன. அதனால் நாங்கள் மிகுந்த துன்பம் அடைகிறோம். எங்களிடம் சேர்ந்துள்ள பாவங்களைக் கழிக்க வகை கூறுங்கள் என்றனர்.

அவர், ‘‘நதிப் பெண்களே நீங்கள் சிலகாலம் காசியில் தங்கியிருங்கள். நாம் குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் மக நட்சத்திர வேளையில் தென்பாரதத்தின் நடுவிலுள்ள குடந்தை மாநகருக்குச் செல்வோம். அங்கு அறுபத்தாறு கோடி கன்னியர்கள் உண்டாக்கிய கன்னி தீர்த்தம் உள்ளது. அதன் நடுவில் நாமும் தீர்த்தமாக விளங்குவோம். அப்போது நீங்கள் எம்முள் மூழ்கி உமது பாவங்களை நீக்கிக் கொள்ளலாம் என்றார். அந்த நதிகளும் துணை நதிகளும் காசியில் தங்கி விசுவநாதரை வழிபட்டன. பின்னர், ஓர் நல்ல நாளில் அவருடன் குடந்தைக்கு வந்தனர். அங்கு, சிவபெருமான் காட்டிய குடந்தை கும்பேசர், பாணபுரேசர். வில்வேசுவரர். பிரமேசர் முதலான திருக்கோயில்களை வழிபட்ட பின் அங்குள்ள மகாமக தீர்த்தத்தின் கரைகளில் தத்தம் பெயரால் தனித்தனியாகத் தீர்த்தமும் கோவிலும் அமைத்தனர். அவர்களுடன் அஷ்ட திகுபாலகர்களும் தத்தம் பெயரால் தீர்த்தங்களை அமைத்தனர்.

(ஆக பதினெட்டு தீர்த்தங்கள் அங்கு அமைத்தன) பின்னர், சிம்மராசியில் குருபகவானும் மகநக்ஷ்த்திரத்தில் சந்திரனும் நிற்கும் புனித வேளையான ‘மகாமக காலத்தில்’’ அந்த நதிப்பெண்கள் கன்னி தீர்த்தத்தில் மூழ்கினர். அவர்களின் பாவங்கள் தொலைந்தன. புனிதம் பெற்ற அவர்களின் உடல் பொன்னொளி வீசிப் பிரகாசித்தது. அவர்கள் சிவபெருமாளை வணங்கி விடைபெற்றுக் கொண்டு. தனது அம்சத்தில் ஒரு கூற்றை அத்தலத்தில் விட்டு விட்டுத் தமதிருப்பிடம் சென்றனர்.

நதிக் கன்னியர் குடந்தைக் கன்னி தீர்த்தத்தில் மூழ்கிப் பேறு பெற்ற காலம் மகாமக புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அந்நாள் மகாமகம் என்று பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குடந்தையிலுள்ள (கும்பகோணம்) மகாமக தீர்த்தத்தின் வடகரையில் இருக்கும் காசி விசுவநாதர் ஆலயத்தில் ஒன்பது நதி தேவதைகளின் பெரிய கல் திருவுருவங்கள் தனிச் சந்நதியில் நிலைப்படுத்தப்பட்டு தினப் பூசைகள் செய்யப்படுகின்றன. ஒன்பது பெண்களும் தெய்வவுருவில் ஒரே சந்நதியில் வரிசையாக மகாமக தீர்த்தக் குளத்தை நோக்கியவாறு எழுந்தருளியிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இவர்களைப் போற்றும் நூற்றெட்டு போற்றிகள் தலபுராணத்தில் உள்ளது.

வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள திருத்தலம் திருஉசாத்தனம் ஆகும். இந்நாளில் வடகாடு கோயிலூர் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மந்திரபுரீசுவரர் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் நவதீர்த்தங்களைக் குறிக்கும் நவகன்னியர் திருவுருவம் நிலைப்படுத்தி வணங்கப்படுகின்றது. இதில் கங்கையும் காவிரியும் நான்குகரங்கள் கொண்டுள்ளனர். ராமருக்கு சிவபெருமான் மந்தர உபதேசம் செய்த போது நவதீர்த்தங்களும் இங்கு வந்ததாகக் கூறுகின்றனர்.தேவாரத்துள் குடந்தையில் கீழ்க்கோட்டத்துப்பிரான் பொங்கிவரும் காவிரி, நல்ல யமுனை, கங்கை, சரஸ்வதி, பொற்றாமரை, புஷ்கரணி, தெள்ளிய நீர், கோதாவரி, குமரி ஆகிய நவதீர்த்தங்கள் சூழ்ந்திருக்க மையத்தில் வீற்றுள்ளார் என்பதைத் திருநாவுக்கரசர்.

‘‘தாவிமுதல் காவிரி நல்யமுனை கங்கை
சரஸ்வதி பொற்றாமரை புஷ்கரணி
தெண்ணீர்
கோவியோடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம்
கூத்தனாரே’’ - என்று பாடியருள்கின்றார்

- பூசை.ச.அருணவசந்தன்