தெளிவு பெறுஓம்
* திருவண்ணாமலை கிரிவலத்தை பௌர்ணமி அன்று மட்டும்தான் மேற்கொள்ள வேண்டுமா? - மு.மதிவாணன், அரூர்

இறைவனை  வழிபட கால நேரம் ஏது? பௌர்ணமி அன்று மட்டும்தான் கிரிவலம் செய்ய வேண்டும்  என்ற விதி ஏதும் கிடையாது. தினமும் கிரிவலம் வருவதை வழக்கமாகக்  கொண்டுள்ளோரும் இருக்கிறார்கள். மலைப்பாதை ழுமுவதும் இருள் சூழ்ந்திருந்த  அந்த நாட்களில் பௌர்ணமி அன்று நிலவின் ஒளி துணையிருப்பதால் பௌர்ணமி நாளை  கிரிவலம் வருவதற்கு உகந்த நாளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பௌர்ணமி  நாளில் நிலவின் ஒளி மலையின் மீது வளர்ந்துள்ள மூலிகைச் செடிகளின் மீது  விழுந்து எதிரொளிக்கும் கதிர்வீச்சானது காற்றில் கலந்து நாம் அதனை  சுவாசிக்கும்போது நமது உடல் ஆரோக்யம் பெறுகிறது என்று சொல்வோரும் உண்டு.  

ஆனால் அனுதினமும் மூலிகைச் செடிகளின் வாசம் காற்றின் வழியே மலையைச்  சுற்றிலும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. சித்தபுருஷர்களால் அருணாச்சலம்  என்று அழைக்கப்படுகின்ற திரு அண்ணாமலை சிவஸ்வரூபமாகவே பார்க்கப்படுகிறது.  சாக்ஷாத் சிவபெருமானின் அம்சமாக விளங்கும் அந்த மலையை கிரிவலம் வருவதற்கு  காலநேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சந்திரனைத் தன் தலையில்  சூடியிருக்கும் அந்த பிறைசூடனை பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வது என்பதை  சிறப்பு வழிபாடாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அதற்காக பௌர்ணமியில்  மட்டும்தான் கிரிவலம் செய்ய வேண்டும் என்ற விதி ஏதும் கிடையாது. நினைத்தாலே  முக்தி தரும் அண்ணாமலையை நினைத்தவுடன் கிரிவலம் வருவது என்பதே  சாலச்சிறந்தது.

* ஆனி மாதத்தில் குடும்பத்தின் மூத்த மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்யக் கூடாது என்பது சரியானதா? - ப.த. தங்கவேலு, பண்ருட்டி.


ஆனி மாதத்தினை சாந்திரமானத்தில் ஜேஷ்ட மாதம் என்று அழைப்பர். இந்த ஜேஷ்ட மாதம் என்பது வைகாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஆனி மாத அமாவாசை வரை உள்ள காலம் மட்டுமே. இந்த ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் வைகாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஆனி அமாவாசை வரை உள்ள காலத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல்.

இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். ஒரு சிலர் இதையே தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாது பொத்தாம் பொதுவாய் சொல்வது தவறு. த்ரிஜேஷ்டை அதாவது மூன்று ஜேஷ்டைகள் இணையக்கூடாது என்றுதான் ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. இதில் கேட்டை நட்சத்திரத்தையும் ஜேஷ்டா நட்த்திரம் என்று அழைப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கும், மற்றொரு தலைச்சன் பெண்ணிற்கும் ஆனி மாதத்தில் வைத்து திருமணம் செய்ய இயலாது. இதுபோன்ற ஜேஷ்டை என்ற வார்த்தையின் பொருள் உணர்ந்து அதற்கேற்றார்போல் நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுவாக ஆனி மாதத்தில் தலைச்சன் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வது தவறான கருத்து.

 * 27 நட்சத்திரங்களில் திரு என்ற அடைமொழியோடு சிவனுக்கு திருவாதிரையும், விஷ்ணுவிற்கு திருவோணமும் பொருந்தி இருப்பதன் காரணம் என்ன?  - எஸ்.எஸ். வாசன், தென்எலப்பாக்கம்.

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. ஆருத்ரா என்று வடமொழியிலும் ஆதிரை என்று தமிழிலும் அழைக்கப்படுகின்ற நட்த்திரம் சிவபெருமானுக்கு உரியது. எளிதில் புரிந்துகொள்ள சிதம்பரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனப் பெருவிழாவினை நினைவில் கொள்ளலாம். திருவாதிரை நட்த்திரம் பௌர்ணமியும் இணைகின்ற மார்கழி மாதத்தில் வருகின்ற நன்னாளில் இந்த விழாவானது நடைபெறும். இறைவனின் நட்த்திரம் என்பதால் மரியாதைக்கு உரிய அடைமொழியோடு தமிழில் திரு+ஆதிரை = திருவாதிரை என்று இதனை அழைக்கிறார்கள்.

அதேபோல சிரவணம் என்று வடமொழியிலும் ஓணம் என்று தமிழிலும் அழைக்கப்படுகின்ற நட்த்திரம் பெருமாளுக்கு உரியது. தனது பத்து அவதாரங்களில் பெருமாள் முழுமையான மனிதனாக முதன்முதலில் அவதாரம் செய்தது வாமன அவதாரம். ஒரு சிறு பிள்ளையாக வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண்ணை தானமாகக் கேட்ட வாமனன் அவதரித்தது ஆவணி மாதத்தில் பௌர்ணமி இணைகின்ற ஓணம் நட்சத்திர நாளில் ஆகும். இந்த நாளையே கேரள நாட்டினர் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். பெருமாளின் அவதார நட்த்திரம் என்பதால் அதனையும் மரியாதையோடு திரு+ஓணம் = திருவோணம் என்று அழைத்தார்கள். இவ்வாறு ஹரியையும், சிவனையும் போற்றும் விதமாக அவர்களுக்கு உரிய நட்த்திகளை தமிழர்கள் ‘திரு’ என்ற அடைமொழியோடு இணைத்து உச்சரித்தார்கள். இவ்வாறு திருவாதிரை என்றும் திருவோணம் என்றும் மரியாதையோடு உச்சரிக்கும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டுமே. மற்றவர்கள் இந்த நட்சத்திரங்களை ஆருத்ரா என்றும் சிரவணம் என்று மட்டுமே அழைப்பார்கள். இதிலிருந்தே நம் தமிழர்களின் கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும் நன்கு உணர முடியும்.

* கிழக்கு பார்த்த வீட்டில் குடியேற வேண்டாம் என்கிறார்களே, அது உண்மையா?  - வைரமுத்து பார்வதி, ராயபுரம்.

உண்மையில்லை. மாலை நேரத்தில் வீட்டிற்குப் பின்னால் சூரியன் மறைவார், அதனால் கிழக்கு பார்த்த வீட்டில் குடியேறக் கூடாது என்று சொல்வது மூட நம்பிக்கையே. கிழக்கு பார்த்த வீட்டினில் அதிகாலைச் சூரியனின் ஒளி நேரடியாக வீட்டிற்குள் விழும். அவ்வாறு அதிகாலைச் சூரிய ஒளி விழும் வீட்டினில் குடியிருப்போரின் ஆரோக்யம் வலிமை பெறும். உடல் ஆரோக்யம் வலிமை பெறும் பட்சத்தில் மற்ற செல்வங்களும் வீட்டினில் சேரும். எல்லா திசைகளும் நல்ல திசைகள்தான். அவரவர் ஜாதக பலத்திற்கு ஏற்ப எந்த திசையை நோக்கி வாயிற்படி அமைய வேண்டும் என்பதை ஜோதிடரின் துணைகொண்டு நிர்ணயம் செய்து கொள்வது நல்லது.

* கடவுளிடம் வேண்ட வேண்டியது என்ன? வேண்டக் கூடாதது என்ன?  - கே. விஸ்வநாத், பெங்களூரு.


“எல்லோரும் இன்புற்றிருக்க இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே”, என்று ஏற்கெனவே ஒரு பெருமகனார் நமக்கு வழிகாட்டிவிட்டு சென்றிருக்கிறாரே.. எல்லோரையும் நல்லபடியாக பார்த்துக் கொள், யார் யாருக்கு என்னென்ன தேவை என்பது உனக்குத் தெரியும், எது எனக்கு நல்லதோ, அதையே நீ எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாலே போதுமானது. இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே வேண்டக்கூடாத விஷயங்கள் அங்கே காணாமல் போய்விடும்.

* குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துத்தான் ஜாதகம் எழுத வேண்டும் என சொல்லப்படுவது எதனால்?  - அரிமளம் தளவாய் நாராயணசாமி.


 ஒரு வருடம் வரை பிறந்த குழந்தையானது கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. நமக்கெல்லாம் ஒரு வருடம் என்பது தேவலோகத்தைப் பொறுத்த வரை ஒரு நாள் மட்டுமே. ஆக இந்த உலகில் பிறந்த குழந்தையானது அந்த ஒரு நாள் மட்டும் கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை உறங்கும்போது சிரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தையின் கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயது முடியும் வரை அந்தக் குழந்தைக்கு அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்யமாட்டார்கள்.

குலதெய்வத்தின் கோயிலில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடித்து, அதன் பின்னர் காதுகுத்தி கர்ணபூஷணம் செய்தபின் தனது குழந்தையாக ஸ்வீகரணம் செய்து கொள்கிறார்கள். அதுவரை குழந்தைக்கு ஜாதகம் எழுதக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இறைவனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதி பலனை நிர்ணயம் செய்ய இயலாது, செய்யவும் கூடாது என்பதால்தான் ஒருவயது வரை ஜாதகம் எழுதக்கூடாது என்று சாஸ்திரம் அறிந்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

* ஆலயங்கள் கட்டுவதற்கும், வீடு கட்டுவதற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் வேறுபாடு உண்டா?  - அயன்புரம் த. சத்தியநாராயணன்.

    நிச்சயமாக வேறுபாடு உண்டு. வாஸ்து சாஸ்திரத்தில் மயன் வாஸ்து, ஜைமினி வாஸ்து என்று பல முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. பொதுவாக பெரும்பாலும் மயன் வாஸ்து முறையே நம்மவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாஸ்து சாஸ்திரத்தைப் பொறுத்த வரை க்ருஹ வாஸ்து, ஆலய வாஸ்து, நகர வாஸ்து என்று வீடு, ஆலயம் மற்றும் நகரத்தை அமைப்பது குறித்து விரிவாக அலசப்படுகிறது. மனிதன் குடியிருக்கும் வீட்டினை கட்டுவதற்கான வாஸ்து சாஸ்திரமும், தெய்வம் குடியிருக்கும் ஆலயத்தினை கட்டவதற்கான வாஸ்து அமைப்பிலும் அடிப்படையிலேயே வேறுபாடு என்பது உண்டு.

குறிப்பாக மனிதன் கட்டும் வீடானது செவ்வக வடிவினில் அமைய வேண்டும் என்பது விதி. அதாவது நீளமும், அகலமும் வெவ்வேறு அளவினைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் ஆலய அமைப்பினைப் பொறுத்த வரை அது சதுர வடிவில் அமைய வேண்டும். அதாவது அந்த நிலத்தின் நீளமும், அகலமும் கிட்டத்தட்ட ஒரே அளவினைக் கொண்டதாக இருக்க வேண்டும். இது உதாரணத்திற்காகச் சொல்லப்பட்ட ஒரு சிறு வேறுபாடு. இதைப்போல இன்னமும் பல வேறுபாடுகள் வீட்டிற்கான வாஸ்து அமைப்பிலும், ஆலயத்திற்கான வாஸ்து சாஸ்திர அமைப்பிலும் காணப்படுகிறது. ஆக ஒரு விதியினை மற்றொரு விதியோடு பொருத்திப் பார்க்க இயலாது. வீட்டிற்கான வாஸ்து சாஸ்திரம் வேறு, ஆலயத்திற்கான வாஸ்து சாஸ்திரம் வேறு என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

* பால்தெளி, எட்டாம் துக்கம், கருமகாரியம் போன்ற துக்க சடங்குகளுக்கு சில கிழமைகள் உகந்தது, சில கிழமைகள் கூடாது என்கிறார்கள். துக்க காரியங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்றதுதானே, விளக்கம் தருக.  - க. சந்திரசேகரன், விழிதியூர்.


    முதலில் சொன்ன இரண்டு நிகழ்வுகளும் நாட்களின் அடிப்படையில் அமைபவை. ஒரு மனிதன் இறந்தவுடன் அன்றைய தினத்திற்குள்ளாக அதாவது அன்றைய நாளின் சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துவிட வேண்டும். மதியம் இரண்டு மணிக்கு மேல் உயிர் போகும் பட்சத்தில் மறுநாள் இதனைச் செய்யலாம். உடலை எரித்த இரண்டாம் நாள் பால்தெளி என்ற நிகழ்வினை வைத்துக் கொள்வார்கள். தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் மின்மயான வசதி இருப்பதால் அஸ்தி என்பதை உடனடியாக கையில் தந்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் அன்றைய தினமே பால்தெளி நிகழ்வினை வைத்துக் கொள்ளலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை. எட்டாம் துக்கம் என்பது ஒரு மனிதன் இறந்த நாளில் இறந்து எட்டாம் நாள் செய்யப்படுவதே. எட்டாவது நாளில் செய்வதால்தான் இதனை எட்டாம் துக்கம் என்றே பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்சொன்ன இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் கிழமைகளைப் பார்க்கக் கூடாது. கரும காரியம் என்பது அவரவர் குடும்ப சம்பிரதாயத்திற்கு ஏற்றார்போல் மாறுபடும். அந்தணர் முதலானோர் பத்தாம் நாள் முதல் 13வது நாள் வரை கரும காரியத்திற்கான சம்பிரதாயங்களை தனித்தனியாகச் செய்வார்கள். இவர்கள் கிழமைகளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.

நாட்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அதாவது பத்தாம் நாள் கரும காரியத்தினை வைத்துக் கொள்வார்கள். வைசியர்களும் அவ்வாறே. இதர பிரிவினர்கள் 16வது நாள் அன்று கரும காரியத்தினைச் செய்வதை வழக்கத்தில் கொண்டிருப்பார்கள். அதிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வசிப்போர் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் கரும காரியத்தினை வைத்துக் கொள்ள மாட்டார்கள். இதற்குக் காரணம் உண்டு. கரும காரியத்திற்கு முதல் நாள் இரவில் ‘நடப்பு’ என்ற துக்கம் அனுசரிக்கும் முறையினைச் செய்வார்கள். அதாவது இறந்தவரின் நினைவாக சுற்றத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சோகமயமான பாட்டுக்களைப் பாடி இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வார்கள். திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் காரியம் வைக்கும் பட்சத்தில் முதல் நாள் இரவு என்பது ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களாக வரும். இந்த நாட்களின் மாலை நேரத்தில் இறைவழிபாடுதான் செய்ய வேண்டுமே தவிர, அந்த நாட்களில் துக்க நிகழ்வினை வைத்துக் கொண்டால் குடும்பத்திற்கு ஆகாது, துக்க சம்பவங்கள் குடும்பத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் கல் ஊன்றுவது கூடாது என்று சொல்லி வைத்தார்கள்.

அதே போல் இறந்தவரின் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் இறந்து போனவரின் கரும காரியத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் மாங்கல்யத்தை அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்து இறக்க வேண்டும் என்பதால் அந்த நிகழ்வினை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் செய்தால் குடும்பத்திற்கு ஆகாது, குடும்பத்தில் பின்னால் வரும் பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி யோகம் என்பது கிடைக்காமல் போய்விடும் என்பதாலும் இந்தக் கிழமைகளைத் தவிர்த்துவிடுவார்கள். மற்றபடி வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் கரும காரியம் செய்வதில் எந்தவிதமான தடையும் இருப்பதில்லை. மேற்சொன்ன விதிகள் யாவும் நம் மக்கள் சம்பிரதாயமாக உருவாக்கிக் கொண்ட பழக்கங்கள் ஆகும். கரும காரியம் வைத்துக் கொள்வதற்கு இறந்த நாள் முதல் குறைந்தது பத்து இரவுகள் தாண்டியிருக்க வேண்டும் என்பதையே சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

ஆனால் தற்காலத்தில் உடன்பால் என்பது போல உடனடி காரியம் என்ற நிகழ்வினைச் செய்கிறார்கள்.  அதாவது பிள்ளை அயல்நாட்டில் வேலை செய்கிறான், அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்ற காரணங்களைச் சொல்லி மூன்றாம் நாளே கருமகாரியத்தினைச் செய்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று ஆகும். சாஸ்திர விரோதமும் கூட. அது மட்டுமல்லாமல் பத்து நாட்கள் கூட ஆகாமல் செய்யப்படுகின்ற கருமகாரியத்தினால் எந்தவிதமான நற்பலனும் உண்டாகாது. மாறாக குடும்பத்தில் எதிர்மறையான பலன்களே விளையும். குடும்ப புரோஹிதரின் துணை கொண்டு அவரது அறிவுரையின் பேரில் கருமகாரியத்தினை நாளைத் தேர்ந்தெடுத்து முறையாகச் செய்வதே வம்சத்திற்கு நன்மையை உண்டாக்கும்.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா