தீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்திருக்குள மென்பார்
புஷ்கரணியென்பார்
புனிதம் என்பார் - குளித்தால்
புண்ணியம் என்பார்!

தலையில் தெளித்து கொள்வார்
கண்ணில் ஒற்றிக்கொள்வார்
கரையில் அமர்ந்து தியானிப்பார்
கயலுக்கு தீனி தந்து வளர்ப்பார்!

கோடையில் பஞ்சம் வந்தாலும்
கோயில் குளம் வற்றுவதில்லை
தெய்வ அபிஷேகமும் நிற்பதில்லை
தேவையெனில் குடம் குடமாய்
கொண்டு சென்று குடித்திடுவார்!
குளிர்ந்த காற்றை அழைத்துவந்தால்
கூசாமல் நின்று அனுபவிப்பார்!

குறையின்றி யாரும் வாழ்ந்திருந்தார்!
ஊரின் நிலத்தடி நீரை காத்திட்ட
ஊருணி  நலன் மறந்திட்டார்!
மாசு கலந்து கழிவுகள் சேர்த்து
மடியினில் ஏந்த நிற்க வைத்தார்!
மனிதமில்லை மனசாட்சியில்லை
மண்டிய குப்பை அகற்ற யாருமில்லை!
தாயாய் தனித்துவம் பெற்றதன்
தாகம் தீர்க்கவே தண்ணீரில்லை!

மூழ்கி பாவம் தொலைத்தவருக்கு
முகவரியாய் மாறியது திருக்குளம்!
மூர்த்தங்களை நீராட்டவும் தகுதியின்றி
தனிமையாகி  கண்ணீர் வடிக்கிறது!

மனிதரின் பாவங்களை கழுவியே
பாதம் வெடித்து வறண்டுவிட்டது!
பகவானை  தழுவி கொண்டாட
மேகமே கருணைநீர் கொண்டு வருவாய்!

வேருக்கு நீர் தர மறந்தார் - தினம்
வியர்வையில் குளிக்கிறார்
பேருக்கு புரட்சிகள் பேசி
போருக்கு பயந்து ஒளிந்தார்!

இருக்கும் போது காக்காமல்
வறண்டபின்பு  கூடி அழுதிடுவார்
பணத்தை சேமித்தது போதும் -இனி
தண்ணீரை சேமிக்க கற்போம்!

நீரின்றி நிம்மதியில்லை -சந்ததிக்கு
நிறைவான  வாழ்வு வாய்ப்பதில்லை!
வருங்காலத்தின் கண்ணீர் துடைக்க
தண்ணீர் தருவனம் வளர்ப்போம்!

விஷ்ணுதாசன்