கல்வெட்டுகளில் காஞ்சி வரதர்
சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் விஷ்ணு காஞ்சி 13ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அத்தியூர் என்ற பெயரில்தான் இருந்துள்ளது. அத்தி மரங்கள் மற்றும் ஆற்று பூவரசு மரங்கள் இங்கு அதிகமாக இருந்த காரணத்தினால் அத்தியூர் என பெயர் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து பகுதிகளிலும் இதுபோன்று மரத்தின் பெயரை கொண்ட ஊர்கள் இருந்திருக்கின்றன. 13ம் நூற்றாண்டு வரை அத்தியூர் காஞ்சி நகரத்துடன் இணையாமல் சிறு கிராமமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாக காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலிலுள்ள 12ம் நூற்றாண்டின் வணிகக் கல்வெட்டில் காஞ்சிபுரத்தின் பரப்பளவு கூறப்பட்டுள்ளது. அதில் வடக்கே கோனேரிதோப்பு, தெற்கே வேகவதி நதி, கிழக்கே வையாவூர் ஏரி, மேற்கே சிறுகாவேரிப்பாக்கம் இவைதான் எல்லைகளாக இருந்துள்ளன.
 இதில் அத்தியூர் தற்போது சின்ன காஞ்சிபுரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பத்ம புராணத்தில் இத்திருக்கோயில் பற்றிய செய்திகள் வந்துள்ளன. அந்தப் புராணத்தில்தான் விஷ்ணு காஞ்சி என்ற பெயர் வழங்கப்பட்டு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பத்ம புராணம் 8ஆம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி திருக்கோயிலுக்கு இதற்கு முந்தைய வரலாறு பற்றிக் கூற வேண்டுமென்றால் பூதத்தாழ்வார் இத் திருக்கோயிலைப் பற்றிய பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய பாசுரங்கள் மிகவும் பழமையானவை என்ற குறிப்புகள் உள்ளன.
பூதத்தாழ்வார் பெருமளவில் அத்தி வரதரை பற்றிய பாடல்கள் பாடவில்லை என்று கூறும் கருத்தை உடைக்கும் வகையில் 1127ஆம் ஆண்டில் விக்கிரமச் சோழன் கல்வெட்டில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த இரண்டு பேரும் பொய்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் இருவரும் பல்லாயிரக்கணக்கான பாசுரங்கள் பாடி உள்ளனர் என கல்வெட்டுக் குறிப்பு உள்ளது. இக்கோயிலின் காலம் ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலமாக இருக்கலாம். திருமங்கை ஆழ்வார் கச்சி வரதர் என பாடியுள்ள பாசுரங்கள் வரதராஜப் பெருமாளைத்தான் குறிக்கின்றது. பொய்கையாழ்வார் இத்திருக்கோயிலைப் பற்றிய பாடலைப் பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார் பாசுரம் வரம் தரும் மாமணி வரதர் என்பது வரதராஜப் பெருமாளை குறிக்கும் சொல்லாக இருக்கலாம். அதற்குச் சான்றாக 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் வரம் தரும் பெருமாள் என வரதராஜப் பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை சான்றாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ராமானுஜர் காலத்தில்தான் இத்திருக்கோவிலுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. குரு பரம்பரை பிரபாவம் என்கிற நூலில் வைணவர்களுக்கு மிக முக்கியமான மூன்று முக்கிய வார்த்தைகளான கோயில், திருமலை மற்றும் பெருமாள் என்ற மூன்று வார்த்தைகளில் அடங்குகிறது. இதில் கோவில் என்னும் சொல் ரங்கம் பெருமாளை குறிக்கிறது. திருமலை என்பது திருப்பதி கோயிலையும், பெருமாள் என்பது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலையும் குறிக்கிறது.
இதுபோன்று போக மண்டபம், புஷ்ப மண்டபம், தியாக மண்டபம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இங்கிருந்து திருக்கச்சி நம்பிகள் என்னும் காஞ்சி பூரணர், கஞ்சி வரதரின் ஆலவட்டம் பணிவிடைகளை (விசிறியால் பெருமாளை விசிறிய வண்ணம் இருத்தல்) செய்து வந்தார். அவர் வரதராஜருடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நீர் விசிறினீர், நாம் பேசினோம் என்ற வாக்கியத்தின் அடிப்படையில் வரதர் பேசியுள்ளார். இது வைணவ சித்தாந்தத்தின் ஒரு நம்பிக்கை.இந்தக் கோயிலின் கல்வெட்டுகளை பொறுத்தவரை மிகப் பழமையான சோழமன்னன் முதலாம் ராஜாதிராஜன் கல்வெட்டு 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதைவிடப் பழைய கல்வெட்டு என்று பார்த்தால் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுக்குள் இருக்கும். மிகச்சிறிய துண்டு கல்வெட்டை தற்போதுதான் கண்டுபிடித்தார்கள். முதலாம் குலோத்துங்கச் சோழனின் 7 கல்வெட்டுகள். விக்கிரமச் சோழனின் 7 கல்வெட்டுகள்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் ஒரு கல்வெட்டு. இரண்டாம் ராஜாதிராஜனின் ஒரு கல்வெட்டு, குலோத்துங்கச் சோழனின் ஒரேயொரு கல்வெட்டு. மூன்றாவது ராஜாதிராஜனின் 25 கல்வெட்டு, முதலாவது தெலுங்கு சோழனின் 24 கல்வெட்டு, கோப்பெருஞ்சிங்கனின் 7 கல்வெட்டுகள், ஜடா வர்மன் சுந்தர பாண்டியனின் 2 கல்வெட்டு மற்றும் ஹொய்சாளர்கள் கல்வெட்டுகள் மற்றும் விஜயநகர பேரரசின் எண்ணற்ற கல்வெட்டுகள் என இதுவரை கிடைத்த 625 கல்வெட்டுகளில் 320 கல்வெட்டுகள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ளது.
முக்கிய கல்வெட்டுகளில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில்தான் விக்கிரம சோழன் காலத்தில் கரிய மாணிக்க பெருமாள் கோயில் சந்நதி எழுப்பப்பட்டுள்ளது. அனந்தாழ்வான் சந்நதியும் எழுப்பப்பட்டுள்ளது. மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு குலசேகர சே ரமன்னன் இரண்டு வருடம் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தான். அப்போதுதான் ஆண்டாள் சந்நதி, மலையாள நாச்சியார் (மலையை ஆளும் நாச்சியார்) சந்நதிகள் எழுப்பப்பட்டன. பிற்கால கல்வெட்டிலும் சூடிக் கொடுத்த ஆண்டாள் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ராமானுஜரின் சிஷ்யர் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம் என்ற நூலில் அத்திகிரி என்றும் யானைக்குரிய பெயர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முதல் பிராகாரம் வைய மாளிகை. இரண்டாவது பிராகாரம் சேனையர்கோன் திருச்சுற்று, மூன்றாவது பிராகாரம் யமுனை துறைவன் திருச்சுற்று, நான்காவது பிராகாரம் ஆழ்வார் திருச்சுற்று என நான்கு பிராகாரங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து கர்ப்பக் கிரகமும், மலையும் 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்டது. அபிஷேக மண்டபமும், தாயார் சந்நதி பெரிய பிராட்டியார் சந்நதி என்ற பெயரில் 13 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் சந்நதி மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் நெட்டூர் இளைய ஆழ்வான் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டு காலத்திற்குட்பட்டதாக எம்பெருமானார் என்னும் ராமானுஜர் சந்நதி இருக்கலாம் என்ற குறிப்பும் உள்ளது. வெளிச்சுற்றிலுள்ள வேணுகோபால், வராகர், ரங்கநாதர் போன்றவை 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். மற்ற எல்லா கட்டிட அமைப்புகளும் விஜயநகர காலத்தில் எழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பு உள்ளது. 16ம் நூற்றாண்டில் நூலகம் ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. கர்நாடக மன்னன் வீர மல்லாளன் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி கேட்டு, வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தானங்கள் செய்ததாக குறிப்பு உள்ளது. 1555ம் ஆண்டு காலத்தில் சதாசிவராயன் கல்வெட்டில் 12 ஆழ்வார்கள், வைணவ ஆச்சார்யார்கள் என பல பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் பிறந்த நாளை நூறு நாட்கள் கொண்டாடிய செய்தி ஒரே கல்வெட்டில் உள்ளது. இந்தச் சிறப்பு வேறெந்த கோயிலிலும் இல்லை.
கிருஷ்ண தேவராயர் காலத்திய கல்வெட்டில் தேர் போகும் வழியைக்கூட கோடிட்டுக் காட்டியுள்ளனர். குறிப்பாக, முத்தீஸ்வரர் கோயில் வழியாக, ஒதியம் சந்து வழியாக திரும்பி எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அச்சுத தேவராயர் காலத்தில் வரதராஜருக்கும், ஏகாம்பரநாதருக்கும் உள்ள நிலங்களை பிரித்துக் கொடுக்கும்படியும் கூறப்பட்டுள்ளது. அதில் வரதருக்கு குறைவாகவும், ஏகாம்பரநாதருக்கு அதிகமாகவும் கொடுத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அச்சுத தேவராயர் மனைவி வரதாம்பிகா, அத்தி வரதருக்கு முத்துக்கள் மூலம் துலாபாரம் கொடுத்த கல்வெட்டு செய்தியும் உள்ளது. அதைத் தொடர்ந்து 1487 ஆம் ஆண்டு கல்வெட்டில் விருப்பாட்ஷி தண்ட நாயகன் என்ற விஜயநகர படைத் தளபதி வரதரையும், தாயாரையும் மீண்டும் பிரதிஷ்டை செய்ததாகவும், அப்போதுதான் அத்திமரத்தில் உள்ள அத்தி வரதரை எடுத்துவிட்டு மூலவராக கற்சிலை பிரதிஷ்டை செய்ததும் கல்வெட்டில் உள்ளது. அதைத் தொடர்ந்துதான் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ் குளத்தில் சயன நிலையில் உள்ள அத்தி வரதரை வெளியில் எடுத்து வழிபடும் வழக்கம் உருவாகி உள்ளது.
ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது உற்சவரை எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற குழப்பமான சூழல் ஏற்பட்டபோதுதான், திருச்சி அருகேயுள்ள உடையார்பாளையம் பகுதிக்கு அத்திவரதரை எடுத்துச் சென்றுவிட்டனர். அதன்பிறகு வைணவ ஆச்சார்யார் அட்டாங் ஜீயர் சிஷ்யர் தோடர்மால் என்பவர் ஆற்காடு நவாப் படையில் இருந்தார். இவர்தான் மீண்டும் உடையார்பாளையத்தில் இருந்து உற்சவரை எடுத்து வந்து வழிபாடுகள் செய்ய ஏற்பாடு செய்தார். அதனால்தான் இன்றும் வருடம் முழுவதும் வரதருக்கு நடைபெறும் உற்சவங்களிலும் உடையார் பாளையம் என்ற உற்சவம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.
ஆங்கிலேய கவர்னர் ராபர்ட் கிளைவ், ஆற்காடு நவாப் வழியில் வந்த சந்தா சாகிப்பை வெற்றிகொண்டதை முன்னிட்டு விலையுயர்ந்த மகர கண்டிகை என்னும் கழுத்தில் அணியும் அணிகலனை கோயிலுக்கு அளித்தார். 14 ஆம் நூற்றாண்டில் வசந்தராயனன் என்னும் மன்னன் கோயிலுக்கு உலோகத்திலான 2 துவார பாலகர்களை கோயிலுக்கு வழங்கிய குறிப்பும் உள்ளது. கீழமை கங்கை மன்னர்கள் வம்ச ராணி கோமளாதேவி பெருமாள் மீது கொண்ட பக்தியால் இன்றைய ஒடிஷா மாநிலத்தின் கடாக் பகுதியை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது காஞ்சிபுரத்திற்கு நேரில் வந்து பசுக்களை தானம் செய்துள்ளார். மேலும் திருப்பதி கோயிலுக்கும் தானம் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து எட்டூர் லட்சுமி குமார தத்தாச்சாரியார் அளவிட முடியாத திருப்பணிகளை செய்தார். தற்போது உள்ள தாயார் சந்நதியையும் புதுப்பித்தார். ஒரு வருடம் முழுவதும் நடைபெறும் விழாக்களையும், என்னென்ன வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற பட்டியலையும் தயாரித்தார். அதைத் தொடர்ந்து 1590ல் வரதராஜப் பெருமாள் கோயிலின் காரியமாகவும் அவர் இருந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஐயங்கார்குளம் நடவாவி உற்சவத்தையும், ஆஞ்சநேயர் கோயிலையும் கட்டினார். அஷ்டபுஜ பெருமாள். யதோக்தகாரி பெருமாள் உள்ளிட்ட கோயில்களுக்கு தேவையற்ற நிலங்களை விற்று கோயிலுக்கு பொருள் சேர்த்தார் என்ற பல்வேறு கல்வெட்டுக் குறிப்புகள் நாம் வியக்கும் வண்ணம் உள்ளது. வரம் தரும் பெருமாள் வரதராஜப் பெருமாள் என்று இன்றளவும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் கேந்திரமாக வரதராஜர் மட்டுமல்ல காஞ்சிபுரமும் திகழ்கிறது.
இரத்தின.கேசவன்
|