அத்திவரதர் நிகழ்த்திய அற்புதங்கள்



தேடிச் சென்று காட்சி தரும் வரதன்.

‘‘ஹா வரதா! இந்த மனித வாழ்க்கை எவ்வளவு நிலையற்றதாக இருக்கிறது. சில வருடங்கள் முன் என் உடலில் இருந்த வலு இப்பொழுது இல்லை. ஆஹா… அந்த நாட்கள்தான் எவ்வளவுஇனிமையான நாட்கள். உனது கருட சேவை உற்சவம் நடைபெறும் நாளுக்கு மூன்று நாளுக்கு முன்பே இங்கிருந்து கிளம்பி விடுவேன். வழி நெடுகிலும் உனது திருநாமத்தை உரைத்த படியே செல்வேன். அதன் பயனாக காஞ்சி வரதனே நீ கருட வாகனம் ஏறி பவனி வரும் அற்புதக் காட்சியை காண்பேன். சென்ற வருடம் வரை இடைவிடாது உனது கருட சேவை அனைத்தையும் கண்ட என் கண்கள் இந்த வருடமும் அதைக் காண துடிக்கிறது. ஆனால், என் முதுமை என்னை கட்டிப் போட்டு விட்டது. இந்தத் தள்ளாடும் வயதில் நான் எப்படி சோழிங்கபுரம் என்னும் இத்தலத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் காஞ்சிபுரத்திற்கு வருவேன்.?மாதவா மதுசூதனா உன் கருட சேவையைக் காணாத இந்த உடலில் ஜீவன் இருந்தென்ன பயன்’’ என்று சோழிங்கபுரத்தில் இருக்கும் குளக்கரையில் இருந்த படியே காஞ்சி வரதனைப் பிரார்த்தித்தபடி இருந்தார் தொட்டாச்சாரியார் என்ற, மகான்.

பிறந்தது முதல் வரதனின் ஒரு கருட சேவையையும் அவர் பார்க்கத் தவறியதில்லை. இந்த வருடம் அவரது முதுமை அவரை சோழிங்கபுரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லவிடவில்லை. அந்தக் கவலையில் தான் அவர் சோழிங்கபுரத்தில் இருக்கும் குளக்கரையில் அமர்ந்தபடியே புலம்பிக் கொண்டிருந்தார்.  அப்போது ‘‘அன்பனே தொட்டாச்சாரியா’’ என்ற மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது. சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார் அந்த மகான். அவர் பார்த்ததை அவராலேயே நம்ப முடியவில்லை. அங்கு கோடி சூரிய பிரகாசத்தோடு வேத வடிவான கருட வாகனத்தில் காட்சி தந்தான் வரதன். வேதங்கள் தேடியும் காணாத மெய் பொருளைக் கண்ட களிப்பில் தொட்டாச்சாரியர் மெழுகாக உருகினார். எந்த கருட சேவையைக் காணமுடியாமல் வருந்தினாரோ அந்த கருடசேவையை இப்போது அவர் இருந்த இடத்திலிருந்தே கண்டு களிக்கிறார் அந்த மகான். ஆனந்த பரவசத்தில் அவரது வாயிலிருந்து வார்த்தை கூட வரவில்லை. கண்கள் அருவியைப் போல ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி இருந்தது. தேடி வந்து காட்சி தந்த பரம்பொருளை மீண்டும் மீண்டும் வணங்கி மகிழ்ந்தார் அந்த அடியவர்.

அவரை மேலும் களிப்பில் ஆழ்த்த எண்ணம் கொண்டான் மாதவன். ‘‘மகனே உன்னைப் போன்ற சிறந்த அடியவர்கள் என்னைக் காண்பதற்காகத்தானே இந்த உற்சவங்கள் விழா அனைத்தும். உண்மையில் அனைத்திலும் பூரணமாக இருக்கும் எனக்கு இந்த உற்சவங்களால் என்ன மகிழ்ச்சி வந்து விடப் போகிறது. உன்னைப் போன்ற சிறந்த அடியவர்கள் இப்படி ஆனந்தக் கடலில் மூழ்கித்திளைப்பதைக் காண்பதே எனக்கு பரம சந்தோஷம். உன்னைப் போன்ற அடியவர்கள் காணாமல் நடக்கும் கருட சேவை எனக்கு ஒருபோதும் இன்பம் தராது. ஆகவே, நான் இங்கு உன்னைக் காண வந்துவிட்டேன் என்ன சந்தோஷம்தானே?’’ என்ற மாதவனின் வார்த்தைகள் அந்த அடியவருக்கு தேனை விட தித்தித்தது.

‘‘அழைத்து வாழ வைத்த தெய்வமே கருணாகரா’’ என்று உருகினார், அந்த அடியவர். ‘‘அன்பனே! உன் நினைவாக இனி என்னுடைய அனைத்து கருட சேவை உற்சவத்தின் போதும், குடையை முன்புறமாக தாழ்த்தி இரண்டொரு நிமிடங்கள் பிடிக்குமாறு கோவில் பட்டர்களுக்கு ஆணையிட்டிருக்கிறேன். அந்த இரண்டொரு நிமிடங்களில் உன்னைப் போன்ற அடியவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு தரிசனம் தந்துவிட்டு வரப் போகிறேன். என்ன சந்தோஷம் தானே?’’ என்றபடி வரதன் ஒரு மோகனப் புன்னகைப் பூத்தான். அப்பப்பா புன்னகையா? அது ஆளை மயக்கும் அஸ்திரமாக அல்லவா செயல்படுகிறது. மாதவனின் இந்த மொழியைக் கேட்டு தொட்டாச்சாரியார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

இன்றும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை நடக்கும்போது பட்டர்கள் பெருமானுக்கு முன்புறமாக குடையை தாழ்த்திப் பிடித்து அவனை ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மறைத்து விடுவார்கள். அப்போது வரதன் தொட்டாச்சாரியார் போன்ற அடியவர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு வருவதாக ஐதீகம். இப்படி தேடிச் சென்று காட்சி தரும் வரதனின் கருணைக்கு இணை உண்டா?

அம்மா என்றழைத்த வரதன்!

வரதனின் கோவில் இன்று போல் அன்றும் அருளை வாரி வழங்கியபடி இருந்தது. வரதனுக்கு இரவு அர்த்த ஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. நிவேதனத்திற்காக சூடான பால் கொண்டு வரப்பட்டது. அதில் ஆவி பறந்துக் கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து இறங்கியவுடன் கொண்டு வந்து விட்டார்கள் போலும். அதில் ஏலக்காயும் குங்குமப் பூவும் மணத்தது. சுடச் சுட அந்தப் பாலை வரதனுக்கு நிவேதனம் செய்ய ஆரம்பித்தார் பட்டர். அப்போது நில்லுங்கள் என்று ஒரு குரல் அங்கு ஒலித்தது. அனைவரும் அந்த சப்தம் வந்த திசை நோக்கித் திரும்பினார்கள். அங்கு நாடாதூர் அம்மாள் என்ற அடியவர் நின்றுக் கொண்டிருந்தார். ராமானுஜர் தனது கொள்கைகளை பரப்ப எழுபத்திரண்டு சிஷ்யர்களை நியமித்திருந்தார். அந்த சீட பரம்பரையில் வந்தவர் தான் இந்த மகான்.

‘‘என்ன சுவாமி வரதருக்கு நிவேதனம் நடக்கும் போது இப்படி தடுக்கலாமா?” என்று சுற்றி நின்றவர்கள் கேட்டார்கள். நாடாதூர் அம்மாள் என்ற அந்த மகான் சற்றும் மனம் தளரவில்லை. ‘‘இவ்வளவு சூடாக வரதன் பால் அருந்தினால் அவனுக்கு வாய் வெந்து விடாது.? என்ன பூஜை செய்கிறீர்கள் நீங்களெல்லாம்?’’ என்று கொக்கரித்தார் அவர். ‘‘ஒரு சிலைக்கு எப்படி நாக்கு வேகும்’’ என்ற அலட்சியம் தான் இந்த அபசாரத்திற்குக் காரணம் என்பதை யாரும் சொல்லாமலே அந்த அடியவர் புரிந்து கொண்டார்.

‘‘ ஓ ’’ என்று அழ ஆரம்பித்து விட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவரிடத்தில் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்கள். ‘‘நீங்கள் என் வரதனை சிலை என்று நினைத்து, இதுபோல் எத்தனை அபசாரம் செய்தீர்களோ? அவனுக்கு எப்படி எல்லாம் வலித்ததோ? என்று அழுகிறேன்’’ என்றார் அந்தப் பெரியவர். அப்போது, ‘‘அன்பனே உனது பக்தியைக் கண்டு மெச்சினோம். எனது தாயில்லாத குறையை நீக்க வந்த அரும் பக்தன் நீ். இனி நான் உன்னை அம்மா என்றே அழைப்பேன்’’ என்று அசரீரியாக பேசினான், வரதன். அந்தக் குரலைக் கேட்டு அனைவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார்கள். தன்னலம் பாராத பக்தியால் தெய்வத்திற்கே தாயாகிவிட்ட நாடாதூர் அம்மாள் என்னும் ஆண் மகனை அனைவரும் விழுந்து வணங்கினார்கள்.

ஆண்டவனின் சந்நதியில் நமது புத்தி நமக்குத் தீங்கைத்தான் செய்கிறது. சிலைக்கு வலிக்குமா என்று அனைவரும் தங்களது புத்தியை பிரயோகித்தார்கள். ஆனால், நாடாதூர் அம்மாள் பக்தியால் தனது புத்தியை மறைத்து விட்டார். அதனால், பகவானுக்கே தாயாகி விட்டார்.

 பிரம்மா செய்யும் பூஜை.

இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தில் இரவு பிரம்மா வந்து வரதனை பூஜித்து விட்டுச் செல்கிறார். சித்ரா பௌர்ணமி அன்று இரவு பட்டர்கள் பலவிதமான நிவேதனங்கள் செய்து அதை வரதன் சந்நதியில் வைத்து விட்டுச் சென்று விடுவார்கள். மறுநாள் வந்து பார்க்கையில் வரதனுக்குச் சாற்றாத புஷ்பங்கள் அவன் மீது இருக்கும். முதல் நாள் வைத்து விட்டுச் சென்ற நிவேதனங்களில் ஒரு தெய்வீக மணம் கமழும். இதுவே பிரம்மன் வந்து பூஜித்து விட்டுச் சென்றதற்கு ஆதாரம். இந்த அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல... சித்ரா பௌர்ணமி முடிந்து பதினைந்து தினங்களுக்கு சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் தனது கதிர்களால் வரதனை இன்றும் பூஜிக்கிறான். (அதாவது சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் வரதன் மீது சூரியஒளி படுகிறது.) இப்படி அதிசயம் அநேகமுற்ற காஞ்சி அத்தி கிரிக்குச் சென்று பேரருளாளனை சேவிப்போம் வாருங்கள்!

ஜி.மகேஷ்