திருக்கோயிலும் திருக்குளமும் வெவ்வேறல்ல



வணக்கம் நலந்தானே!

இந்த வருடத்திய வறட்சியை பார்க்கும்போது கண்களில் நீர் பெருகுகின்றது. மழை பொய்த்துப் போய்விட்டது போன்ற காரணங்களெல்லாம் மிகவும் குழந்தைத்தனமாக உள்ளது. ஒரு சிற்றெறும்பு கூட மழை காலங்களில் தனக்கு வேண்டிய உணவை கோடை காலத்திலேயே சேமித்து வைத்துக் கொள்வதை பார்க்கின்றோம். இதை உணர்ந்த முன்னோர்கள் ஊருக்கொரு கோயில் கட்டுவது மட்டுமல்லாது, அந்தக் கோயிலுக்கு என்னவொரு முக்கியத்துவமோ அதற்கு இணையான முக்கியத்துவத்தை கோயில் குளத்திற்கும் அளித்தனர்.

எப்போதுமே பாரத தேசத்தின் சமூக அமைப்பு கோயில் சார்ந்தே அமைக்கப்பட்டிருந்தது. மன்னர்கள் கொடுத்த தானங்களைக் கூட கோயில்களில் கல்வெட்டாக பதித்து வைத்தார்கள். சமூகத்தின் அனைத்து தேவைக்குரிய, மாற்றத்திற்குரிய மைய கேந்திரமாக கோயிலே அந்தக் காலத்தில் திகழ்ந்தது. அதுபோலவே கோயில் குளம் என்பதையும் அப்படியே பார்த்தார்கள். திருக்கோயில்களிலுள்ள திருக்குளம் ஆன்மிகத்தின் பார்வையில் புஷ்கரணி என்றும் தீர்த்தம் என்றும் ஏற்றம் கொடுத்தார்கள்.

புனித நீர் என்றால் என்ன? ஏன் இந்தக் குளத்தினுடைய தீர்த்தம் மிகவும் புனிதம் வாய்ந்தது? எந்தெந்த ஞானியர் இந்தத் திருக்குளத்தினைக் குறித்து பாடியிருக்கிறார்கள். திருக்கோயில் மூடியிருந்தாலும் கூட கோயிலுள்ள நீரை தலையில் தெளித்துக் கொண்டு பக்திப் பரவசத்தோடு செல்வோரை இன்றும் நாம் காணலாம்! நீருக்கு நம்முடைய இந்து மதம் கொடுக்கும் முக்கியத்துவம் பிரமாண்டமானது. இங்கு எத்தனை விதமான சம்பிரதாயங்கள் இருந்தாலும் சரிதான், எல்லோரும் ஒரு சேர சங்கமிக்கும் இடங்களெனில் அது திருக்குளங்கள்தான். கோயில் குளத்தின் நீரில் கூட நேராக கால்களை வைக்காது கைகளால் மொண்டு பிறகு மெல்ல பவ்யமாக கால் வைத்து திருக்குளங்களில் நீராடுவார்கள்.

இதற்கு அடுத்ததாக கோயிலின் குளம் என்பது அந்தப் பிரதேசத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை தற்காத்து வைத்துக் கொள்ளும் மகத்தான பணியைச் செய்கின்றது. கோயிலின் குளம் வற்றாது இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் இன்னும் பாதிக்கப்படவில்லை என்று கருதியிருந்தனர். எனவே, சிறு கிராமம் முதல் பெரும் நகரிலுள்ள கோயில்கள் வரை மிகக் கவனமாக இந்தக் குளத்தை ஜாக்கிரதையாக அவ்வப்போது தூர் வாரி பாதுகாத்தபடியே இருந்தனர். மழை நீரைக் கூட வீணடிக்காமல் நேராக திருக்குளத்திற்கு நீர் சென்று சேகரமாகும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.

முன்னோர்களால் நமக்கு எல்லாமே கொடுக்கப்பட்டு விட்டது. அதைச் சரியாகப் பாதுகாத்தாலே போதும். முன்னோர்கள் நமக்கு கொடுக்கப்பட்டதை எப்படி பாதுகாப்பது என்றும், அதை பல மடங்கு பெருக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்றும் யோசித்து யோசித்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தனர். இந்த இதழில் திருக்கோயில் திருக்குளங்கள் என்கிற தீர்த்தத்தின் பெருமைகளை கூறியிருக்கின்றோம். ஏனெனில், திருக்கோயில் என்பதை நம் மக்கள் எப்போதும் தனித்தே பார்த்ததில்லை. கோயிலோடு திருக்குளத்தையும் சேர்த்துத்தான் சொன்னார்கள். திருக்கோயிலும் திருக்குளமும் வெவ்வேறல்ல என்பதில் முன்னோர்கள் தெளிவாகவே இருந்தனர். இதில் தெளிவு பெற வேண்டியது நாம் மட்டுமே!

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)