உளவியலும், அறிவியலும் உறைந்து கிடக்கும் வள்ளுவம்



குறளின் குரல்-103

குறள் தோன்றிய மிகப் பழங் காலத்திலேயே தமிழர்கள் அறிவியலின் நுட்பங்களை அறிந்து வைத்திருந்தனர். இதற்கான பல ஆதாரங்கள் வள்ளுவத்தில் உள்ளன. அதுமட்டுமல்ல, தம் அறிவியல் கண்ணோட்டத்தின் காரணமாக தாம் ஒரு தீர்க்கதரிசி என்பதையும் வள்ளுவர் நிரூபிக்கிறார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.’  (குறள் எண். 828)

அழுது புலம்பும் எதிரிகளை நம்ப வேண்டாம். அந்தக் கண்ணீர் உண்மையானதல்ல. வணங்கிய கைகளுடன் அவர்கள் வரும்போது, அந்தக் கூப்பிய கரங்களுக்குள் கொல்லக்கூடிய ஏதேனும் ஒரு படைக் கருவியை அவர்கள் மறைத்து வைத்திருக்கலாம். அவர்களால் உயிராபத்தே நேரலாம் என்கிறது இந்தக் குறள். கைகளுக்குள் மறைத்து வைக்கக் கூடிய சின்னஞ்சிறு படைக்கருவி வள்ளுவர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது என்ற அறிவியல் செய்தியை இக்குறள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்’ என்ற வள்ளுவரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் என்ன நேரும் என்பதைக் காலம் பலமுறை நிரூபித்திருக்கிறது!
வள்ளுவருக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் மெய்ப்பொருள் நாயனாரைச் சிவனடியார்போல் வேடமிட்டு வந்து கத்தியால் குத்திக் கொன்ற முத்தநாதனைப் பற்றிப் பேசுகிறார்.

‘மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டி
கையினில் படை கரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்திடைக் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்!’

முத்தநாதன் கையில் படைக்கருவியை மறைத்து வைத்த புத்தகக் கட்டை ஏந்தியிருந்தான் என அவன் சூழ்ச்சியை விளக்குகிறார். தொழுத கையுள்ளும் படையொடுங்கும் என்பதன் விளக்கமே முத்தநாதன். அவனின் தொழுத கையில் கொலைவாள் இருந்தது. பெரியபுராண காலத்தில் மட்டுமா, தற்காலத்திலும் இந்தத் திருக்குறளின் விளக்கமாக அரங்கேறிய பல காட்சிகளைக் காலம் காட்டுகிறதே! மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் தொழுத கைக்குள்ளும், இந்திரா காந்தியைக் கொன்ற பீண்ட்சிங், சத்வந்த் சிங் ஆகிய இரு சீக்கியர்களின் கைக்குள்ளும், ராஜீவ் காந்தியைக் கொன்ற தானு என்ற பெண்ணின் உடலிலும் மறைந்திருந்தது எதிரியைக் கொல்லும் கொலைக்கருவி அல்லவா? பகைவரின் பணிவை உண்மையென்று நம்பியதால் விளைந்த விளைவுகளல்லவா இந்த உயிரிழப்புகள்! வள்ளுவர் எச்சரித்தும் நாம் அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தோம். அதன் விளைவை இன்று நாடு அனுபவிக்கிறது. மேகம் கடலிலிருந்து தண்ணீரை மொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பொழியாவிட்டால், கடலிலும் கூட நீர்வளம் குறைந்துவிடும்.

‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.’ (குறள் எண்-17)

மழை எப்படி உருவாகிறது என்ற அறிவியல் சிந்தனையை அன்றைய தமிழகம் அறிந்து வைத்திருந்தது என்பதற்கு ஆதாரம் இந்தத் திருக்குறள்.  வள்ளுவர் காலத்தில் பல அறிவியல் துறைகள் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். முக்கியமாக மருத்துவ விஞ்ஞானம் மிகச் சிறந்து விளங்கியது என்பதற்கான சான்றுகள் திருக்குறளில் நிறைய உள்ளன.

‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.’  (குறள் எண்- 941)

மருத்துவ நூலோர் சொல்லும் `வாதம் பித்தம் சிலேத்துமம்’ என்ற மூன்றில் ஏதேனும் ஒன்று அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். ஆக மருத்துவர்களின் சேவையால் அன்றைய தமிழர்கள் பயன்பெற்றுள்ளனர். வள்ளுவரின்இந்த அறிவுரையைக் கடைப்பிடித்தால் நீண்டநாள் ஆரோக்கியத்தோடு வாழலாம் என்பது தெளிவு.

‘அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.’ (குறள் எண்- 943 )

உண்ட உணவு செரித்த பின்னாலும் பசித்த பின்னாலும், தான் உண்ண வேண்டிய அளவை அறிந்து உணவு உண்ண வேண்டும். அந்தப் பழக்கத்தை மேற்கொண்டால் நெடுங்காலம் வாழலாம் என வள்ளுவம் அறிவுறுத்துகிறது. தேவையில்லாமல் பெருந்தீனி உண்டு உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது வள்ளுவர் கருத்து.

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’ (குறள் எண். 948)

நோய் என்ன, அந்த நோய்க்கான அடிப்படைக் காரணம் என்ன, அந்த நோயைத் தீர்க்கும் வழி என்ன என்ற மூன்றையும் ஆராய்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
 மருத்துவத் துறையில் நான்கு முக்கியமான கூறுகள் உண்டு. நோயாளி, மருத்துவன், மருந்து, செவிலியர் என்பவையே அவை. இந்த நான்கு கூறுகள் பற்றியும் வள்ளுவம் மிகச் சரியாகக் குறிப்பிட்டுப் பேசுகிறது என்பதுதான் ஆச்சரியம்.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று  
அப்பால் நால்கூற்றே மருந்து.’ (குறள் எண்-950)

வள்ளுவர் காலத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்திருந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் இந்தக் குறட்பாக்கள்.  அறிவியல் துறைகளில் ஒன்றான கணிதம், மற்ற எல்லா அறிவியல் துறைகளுக்கும் ஆதாரமானது. கணித மேதை ராமானுஜம் நம் இந்தியா உலகிற்குக் கொடுத்த கணிதக் கொடை. கணிதத் துறை பற்றிய செய்திகளும் குறளில் உண்டு.

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.’  (குறள் எண்-392)

என்ற குறளில் எழுத்தாகிய இலக்கியத்திற்கும் முன்பாக அறிவியலாகிய கணிதத்தை வரிசைப்படுத்துகிறார் வள்ளுவர். அறிவியல் துறைகளுக்குக் கணிதமே அடிப்படை என்பதை வள்ளுவர் உணர்ந்திருந்தார் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.  பல இடங்களில் வள்ளுவர் தம்மை ஒரு வேளாண் விஞ்ஞானி என நிரூபித்துக் கொள்கிறார். பயிர்த் தொழிலுக்கு
அடிப்படையானவை ஐந்து செயல்கள். உழுதல், உரமிடுதல், களைநீக்குதல், நீர் பாய்ச்சுதல், பயிரைப் பாதுகாத்தல். இவற்றில் எவை மிக முக்கியம் என்பதை ஒரு குறள் அழகாகத் தெரிவிக்கிறது.

‘ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.’  (குறள் எண்-1038)

உழுவது நல்லதுதான் ஆனால், உழுவதை விடவும் நல்லது உரமிடுதல். களையெடுத்தபின் நீர் பாய்ச்சுதல் நல்லதுதான். ஆனால் அதைவிட நல்லது பயிர்ப் பாதுகாப்பு.  இப்படி வள்ளுவத்தில் ஏராளமான அறிவியல் செய்திகள் ஆங்காங்கே புதைந்துள்ளன.வள்ளுவத்தின் கட்டமைப்பே அறிவியலின் தாக்கத்தை உள்ளடக்கியதுதான். தளைதட்டாத வெண்பாக்களில் அமைந்துள்ளன குறட்பாக்கள். தளைகளைக் கணக்கிடுவது அறிவியல் முறையில்தானே? நெடில் குறில் என்ற ஒலிகளைக் குறிக்கும் மாத்திரை அளவுகள் அறிவியல் சார்ந்தவை தானே?

ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து பத்துக் குறட்பாக்கள் என்பதும் கூட கணித அறிவியல் சார்ந்ததுதான். பழந்தமிழர் வாழ்வைக் கணித அறிவியல், வேளாண் அறிவியல், மருத்துவ அறிவியல் உள்ளிட்ட பல துறைகள் மேன்மைப் படுத்தியிருக்கின்றன என்பதைத் திருக்குறளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்..... இப்படி ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரினங்கள் என்னென்ன என்றும் அது வகைப்படுத்துகிறது.

‘புல்லும் மரனும் ஓரறிவினவே
நந்தும் முரளும் ஈரறிவினவே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே
மாவும் புள்ளும் ஐந்தறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே...’

புல்லும் மரமும் ஓரறிவுடையவை. சங்கும் நத்தையும் ஈரறிவுடையவை. அட்டை எறும்பு போன்றவை மூன்றறிவு கொண்டவை. நண்டும் தும்பியும் நான்கறிவு பெற்றவை. நான்கு கால் விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவு கொண்டவை. மனிதர்கள் ஆறறிவுடையவர்கள் என விவரிக்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியரின் இதே கருத்தைத் தான்

‘புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் ’

என மாணிக்கவாசகர் பாடுகிறார். சுற்று வட்டாரத்தில் மலையே இல்லாத தஞ்சையில், பெருவுடையார் கோயிலில், அவ்வளவு பெரிய கோபுரத்தை எப்படிக் கட்டினார்கள்? அந்தக் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் எவ்வளவு சிறந்த பொறியியல் வல்லுநர்கள் இருந்திருக்க வேண்டும்? அந்த கோபுரத்தின் மேலேயுள்ள ஒற்றைக் கல் கலசத்தை எப்படி மேலே தூக்கி வைத்தார்கள்?

பழங்காலத்தில் தமிழகத்தில் நிலவிய அறிவியலின் அபார வளர்ச்சி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அந்த அரிய பொறியியல் கலையின் உயரிய சூட்சுமங்கள் பின்னர் காலத்தால் எப்படி அழிந்து போயிற்று என்ற வியப்பும் அதுதொடர்பான கழிவிரக்கமும் நம் மனத்தில் எழுகின்றன. கோவை பேரூர்க் கோயிலில் உள்ள கல் சங்கிலிகளும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள இசைத் தூண்களும் இன்னும் பல்வேறு ஆலயங்களில் உள்ள வியத்தகு சிற்பங்களும் நம்மை அன்றைய அறிவியல் வளர்ச்சி குறித்துப் பெருமிதம் கொள்ள வைக்கின்றன.

கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் பார்த்தோர் வியக்கும் ஓர் அற்புதம். ‘தபால்காரன் தங்கை’ என்ற திரைப்படத்தில் இந்தக் கல்லணையின் பெருமையை `கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை’ என்று தொடங்கும் ஒரு திரைப்பாடல் பேசுகிறது. கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், டி.எம்.எஸ். பி.சுசீலா குரல்களில் ஒலிக்கிறது.

‘பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது - அணை
பழுதில்லாமல் காலங்களை வென்றது.
அந்தக்காலப் பெண்மை போன்ற அணையிது - குலம்
அழுத்தமாக வாழவைக்கும் துணையிது!’

 என்ற வரிகளில் கரிகாலன் காலத்திய பொறியியல் அறிவைப் பற்றி எழுதி நம்மை வியக்க வைக்கிறார் கவியரசர்.   சிற்பக் கலை சார்ந்த அறிவியல், பழங்காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருந்தது. சிற்பத்திற்கான உயர்ந்த கல்லைத் தேர்வு செய்யும் முறை, கல்லின் அளவு, அதை எப்படிச் செதுக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள், மனித மற்றும் மிருக வடிவங்களைச் செதுக்கும்போது கை, கால் முதலிய உறுப்புக்களின் நீள அகலங்கள் போன்றவை பற்றிய அறிவியல் நூல்கள் பல இருந்திருக்க வேண்டும்.

ஓவியம் போல் அல்லாமல் சிற்பம் என்பது முப்பரிமாணம் உடையது அல்லவா? அந்தக் கலையின் பின்னணியில் மிகத் தேர்ந்த அறிவியல் புலமை இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் இத்தகைய சிற்பக் கலை வளம் சாத்தியமில்லை.  மகாபலிபுரச் சிற்ப அற்புதம் குறித்து வியந்து ஒரு திரைப்பாடல் எழுதினார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த `வா ராஜா வா!’ என்ற திரைப்படத்தில் ஒலிக்கும் பாடல் அது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை. குரல் எல்.ஆர். ஈஸ்வரி. `கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா!’ எனத் தொடங்குகிறது பாடல்.

‘ஒட்டுக் கல்லைச் சேக்காம ஒரே கல்லைக் குடைஞ்செடுத்து
 கட்டி வச்சான் மண்டபத்தைப் பல்லவராஜா! - அதைக்
 கச்சிதமாச் சொல்ல வந்தேன் சின்ன ராஜா....
கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்
எப்படித் தான் செஞ்சானோ பல்லவ ராஜா - அதை
 அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா...
சிற்பியரைக் கூட்டிவந்து சிற்பங்களைச் செய்யச் சொல்லிக்
கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா - அந்த
 அற்புதத்தைச் சொல்ல வந்தேன் சின்னராஜா!’

கவியரசர் கண்ணதாசன் மாமல்லபுரச் சிற்பக் கலையை வியந்து குமுதம் திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். கே.வி. மகாதேவன் இசையமைப்பில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் “கல்லிலே கலைவண்ணம் கண்டான்!” எனத் தொடங்குகிறது. ‘பல்லவர்கோன் கண்ட மல்லை போலப் பாரெங்கும் தேடினும் ஊரொன்றுமில்லை’ என்று புகழ்கிறது அந்தப் பாடல்.

 பழந்தமிழர்கள் மிகுந்த அறிவியல் தேர்ச்சியோடு விளங்கினார்கள் என்பதற்கு நம் திருக்குறளே சரியான ஆதாரம். அவரவரும் தம் வாழ்க்கையை உணர்ச்சி பூர்வமாக அணுகாமல் அறிவியல் பூர்வமாக அணுகினால் வாழ்க்கை நிம்மதி நிறைந்ததாக அமையும் என்பதையே வள்ளுவம் சொல்கிறது. உரனென்னும் தோட்டியால் ஓரைந்தும் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். மன உறுதி என்ற அங்குசத்தால் ஐம்புலன்களாகிய யானைகளை அடக்க வேண்டும் என்பது கூட உளவியல் சார்ந்த அறிவியல் கருத்து தானே?  நம் மனத்தில் அறிவியல் கண்ணோட்டம் வளர வளர மூட நம்பிக்கைகள் ஒழியும். மூட நம்பிக்கைகள் ஒழியும்போது வாழ்க்கை இன்னும் ஒளியுடையதாகும். மூட நம்பிக்கைகள் ஒழியவும் வாழ்க்கை ஒளிபெறவும் நாம் பின்பற்ற வேண்டிய நூல் திருக்குறள்!

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

18.பங்குனி உத்திரத்தில் பரமனின் நிஜ பாத தரிசனம்!

*தியாகராஜர் திருத்தலம், திருவாரூர்
* பங்குனி உத்திரம் - 21.03.2019

எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே. திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும், பிரதானமானதுமாகும். திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். திருவாரூர்  திருத்தலதிற்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவர்களை நான்கு புறங்களிலும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறங்களிலும் கோபுரங்களையும், தேரோடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருவாரூர் திருத்தலம், அதன் முன்புறமுள்ள கமலாலய திருக்குளம்,  ஆலயத்தச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்) பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இத்திருத்தலத்தை கற்றளிக் கோயிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் இத்தல வரலாறு கூறுகிறது.

பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம். சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம், முக்தியளிக்கக்கூடிய தலம். திருமுதுகுன்றம் தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம். சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.

சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர். காஞ்சிபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம். விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம்.

சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி ஹவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம். இத்திருக்கோயிலுக்குள் சென்று விட்டால், குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியேயில்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நதிகள் உள்ளன. திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம். என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும். இந்த ஆலயத்தில் எட்டு துர்க்கையர்கள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். முதல் பிராகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நதிகள் முதல் பிராகாரத்தில் உள்ளன.

இரண்டாம் பிராகாரத்தில் நான்கு துர்க்கையரும், கமலாம்பாள் சந்நதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கையர்கள் இவ்வாலயத்தில் அருளாட்சி புரிந்து வருவது இத்தலத்தின் சிறப்பம்சம்.  நவகிரகங்களும் தியாகராஜ சுவாமிக்கு கட்டுப்பட்டு ஒரே வரிசையில் தென் திசையில் தியாகராஜசுவாமி சந்நதி நோக்கி அமைந்துள்ளதை இத்திருத்தலத்தில் மட்டும் தான் காணலாம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இத்தலத்தின் சிறப்பம்சம்.

இத்தல நாயகன் வன்மீகநாதர் கிழக்கு நோக்கி தரிசனமளிக்கிறார். இவர் சந்நதிக்குச் செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடக்கே அதிகார நந்தி காட்சியளிக்கிறார். உள்ளே நுழைந்ததும் வலப்புறமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர், சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர்  போன்ற சந்நதிகள் உள்ளன.  அதன் வலதுபுறம் இத்தலத்தின் பிரதான மூர்த்தியான தியாகராஜர் சந்நதி உள்ளது. தியாகராஜரின் பக்கத்திலுள்ள அம்பிகை “கொண்டி” என அழைக்கப்படுகிறாள்.  தியாகேசர் சந்நதியின் வலதுபுறம் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத லிங்கமூர்த்தி உள்ளார்.

இவருக்குத் தான்  தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம் நடைபெறும்.  ஆண்டு முழுவதும் தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி மாத திருவாதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி மாத உத்திர தினத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் வரும் 21ம் தேதி வருகிறது. அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரை மூலவர் தியாகராஜரின் வலப்பாதத்தை கண்டு தரிசிக்கலாம். இதுவே நிஜ பாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.

கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிராகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தியின் 51 சக்தி  பீடங்களுள் இந்த கமலை பீடமும் ஒன்று.  அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அட்சரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. அதனருகில் நின்று தியானித்துச் செல்லவேண்டும். ஆடிப் பூரம் ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டு தேவியின் திருவருளைப் பெறலாம்.

நீலோத்பலாம்பாள் சந்நதியில் அம்பிகை இரண்டு கரங்களுடன் ஆதிசக்தியாக காட்சி தருகிறாள். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புடன்  தேவி இங்கு தரிசனமளிக்கிறாள். அம்பாளுக்கு இடது புறமாக  அம்பிகையின் தோழி நின்ற நிலையில் முருகப்பெருமானை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள்.

 தேவியின் ஒரு விரல் முருகனின் ஒரு விரலைப் பிடித்தவாறு ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவத்தை வேறு எங்கும் தரிசிக்க முடியாது.  இத்தல ரௌத்திர துர்க்கை திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் நெடுநாட்களாக திருமணத்தடையை ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்வோருக்கு நீக்கி  அருட்பாலிக்கின்றாள்.  இந்த ரௌத்திர துர்க்கை சந்நதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடிகிறது.

இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவ தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு ரத வீதியில் ஆரூர் பறவயுண்மண்டலி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவத் தலமும் உள்ளது.

- ந.பரணிகுமார்