எந்த கோயில் என்ன பிரசாதம்*மகா கணபதி கோயில் அப்பம்-கொட்டாரக்கரா - கேரளா

க்ஷத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட  பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்.

கேரளாவின் புகழ்பெற்ற சிற்பியான பெருந்தச்சன் ஒரு சமயம் கொட்டாரக்கரா சிவன் கோயிலுக்கு சென்று விட்டு வரும்போது  அவ்வழியில் ஒரு பலா மரத்தை கண்டார். அந்தப் பலா மரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் விநாயகரின் திருமேனி ஒன்றைச் செய்தார். அதை சிவன் கோயிலில் நிறுவ நினைத்தார். அவர், அதற்காக ஆலய  அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், அந்த கோயில் வளாகத்தில்  விநாயகரின் திருமேனி நிறுவப்
பட்டுத் தனிக்கோயிலும் கட்டப்பட்டது.

இதன் பின்னர் நாராயணன் எனும் வேதியர் ஒருவர், தினமும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு வந்த நிலையில், ஒரு நாள் கோயிலுக்குச் சென்று திரும்பிய அவரை ஓரிடத்திலிருந்து ‘வேதியரே! இங்கிருக்கும் என்னையும் வணங்கிச் செல்லுங்கள்’ என்று குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த அவர், அங்கு ஒரு பலா மரம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார். அந்தப் பலாமரத்தின் வேர்ப்பகுதி இருந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில், பலா மரத்தினாலான விநாயகர் உருவத் திருமேனி ஒன்று இருந்தது.

அந்தத் திருமேனியின்  பேரழகைக் கண்டு வியந்த அவர், தன்னிடம் பேசியது அந்தப் பலா மரத்திலான விநாயகர்தான் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர், விநாயகரை அந்த இடத்திலேயே ஆலயம் கொண்டு, அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட விநாயகரும் அவ்விடத்திலேயே கோயில் கொண்டார். அதன் பிறகு, அங்கு விநாயகருக்குப் புதிதாக ஆலயம் எழுப்பப்பட்டது என்று மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

அப்பகுதி முழுவதும் புதிதாகத் தோன்றிய விநாயகரின் சிறப்பு பற்றிய செய்தி பரவத் தொடங்கியது. அதனால், அப்பகுதி மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்ற புதிய விநாயகர் கோயில், பரசுராமரால் நிறுவப்பட்ட முதன்மைக் கோயிலான சிவன் கோயிலை விடப் பெருமையுடையதாக மாற்றம் பெற்றது. அங்கிருந்த விநாயகரும் ‘மகாகணபதி’ என்று புதிய பெயரைப் பெற்றார். இங்குள்ள கருவறையில் பரசுராமரால் நிறுவப்பட்ட சிவலிங்கம் இருக்கிறது, கருவறையின் பின்புறம் பகவதி அம்மன் கோயில் கொண்டு அருள்கிறாள்.

இங்கிருக்கும் அம்மன் மேற்குப் பார்த்த நிலையில் இருப்பதால், மேற்கு என்பதைக் குறிக்கும் மலையாளச் சொல்லான படிஞ்ஞாயிறு என்பதைச் சேர்த்து ‘படிஞ்ஞாயிறு பகவதி’ என்று அழைக்கப்படுகிறாள். கொழுக்கட்டைப் பிரியரான கணபதி, இந்த ஆலயத்தில் நெய்யப்பப் பிரியராக இருப்பது தனிச்சிறப்பாகும். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், மகாகணபதிக்கு நெய்யப்பத்தைப் படைத்துத் தங்களின் வேண்டுதல்களை கூறி வழிபடுகின்றனர். நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறிவிடும் என்பது இங்கு வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கேரள மாநிலத்தின் நடனங்களில் ஒன்றானதும் புகழ் பெற்றதுமான   கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது, இத்தலத்திற்கு வந்து மகாகணபதிக்கு ’நெய்யப்ப வழிபாடு’ செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கேரள மாநிலம், கொல்லம் எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்கரா என்ற திருத்தலம்.

இங்கு வரும் பக்தர்கள் ஆலயநிர்வாக அலுவலகத்தில் தங்கள் வழிபாட்டுக்குத் தேவையான நெய்யப்பங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, பணத்தைச் செலுத்தினால் அதற்கான ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் ரசீதுகளைப் பெற்றுக் கொண்டு, பணியாளர்கள் அதற்கான நெய்யப்பங்களை வழங்குகின்றனர். கணபதி சந்நதிக்கு எதிரில்,  ஆலயபணியாளர்கள் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நெய்யப்பத்தைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.

நெய் அப்பம்

தேவையான பொருட்கள் :
பச்சரிசி   2 கிலோ
வெல்லம்  ஒன்றரை கிலோ
தேங்காய் துருவல்   15 மேஜைக்கரண்டி
ஏலக்காய்  15
நெய்  தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைத்தபின். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கிறார்கள். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்குகிறார்கள். அதை வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கிறார்கள். அதில் தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சேர்த்து கலக்கி. பணியார சட்டியை சூடு செய்து, 1/2 தேக்கரண்டி நெய்யை, ஒவ்வொரு குழியிலும் ஊற்றி அதில் 3/4 பங்கு மாவை ஊற்றுகிறார்கள். மிதமான தீயில், மூடி வேக விட்டு. சிவந்ததும் பணியாரங்களை திருப்பி இரு புறமும் சிவந்ததும், எடுத்து நிவேதிக்கின்றனர்.

ந.பரணிகுமார்