வள்ளியை மணமுடித்த வடிவேலன்



* வள்ளிமலை மீது நின்று
வஞ்சி ஏக்கத்தில் பாடுகிறாள்!
தணிகைமலை சாரல் பட்டு
தவித்து மனம் ஏங்குகிறாள்!
கவண்வில்லாக இடைகுறுக
கந்தன் நினைவில் வாடுகிறாள்!

* வள்ளி வாழைப்பூ நிறத்தழகி!
வள்ளிக்கிழங்கு இடையழகி!
வைரஒளி முகத்தழகி!
வடிவேலன் மனத்தழகி!
வளமான குழலழகி!
வஞ்சனையில்லா சொல்லழகி!

* பங்குனி உத்திரத்தில் மணமாலை
கொண்டு வருவேனென்றார்!
பாசவார்த்தை கூறி ஆசை
முத்தம் பெற அதை செய்தாரோ!
பக்தர் சேவை பணியில்
சொன்னதை மறந்தாரோ தோழி!

* மனத் தினையும் அன்புத்
தேனும் பக்தி கலந்து
மங்கை நானும் காத்திருக்க
மனதை வேலால் வதைக்கும்
முருகன் விளையாட்டை யாரிடம்
முறையிட வழிபிறக்கும் தோழி!

* குறுநகை முருகன் நினைவால்
குறு மணிமாலை நழுவியது!
தணிகை செல்லும் வான்மேகமே!
அணி என் காதல் சொல்லும்!
மணிமாலை முருகன் காண
கொண்டு சென்றால் வாழ்த்துவேன்!

* குழந்தையாய் கொஞ்சுவான்!
குமரனாய் மிஞ்சுவான்!
வேங்கை மரமாய் நிற்பான்!
வேடவர் உருவில் வருவான்!
வயோதிக வடிவெடுத்து
தாகமென வம்பிழுப்பான்!

* சேவல் கூவக் கேட்டேன்!
சேல்விழியான் வருகை அறிந்தேன்!
மயில் அகவக் கண்டேன்!
மலர்விழியான் மையல் உணர்ந்தேன்!
ஆறுமுகத்தில் அருளை கண்டேன்!
ஆனந்தத்தின் எல்லை கண்டேன்!

* கந்தன் தரிசனம் தந்தான்
கன்னி மனக்காதல் வென்றான்!
கானக்குயில் வள்ளியை மணந்தான்!
கவியாய் தமிழை பொழிந்தான்!
கவின்மயிலேறி திருத்தணி சேர்ந்தான்!!
கந்தவேள் பணிய நலம் சேர்ப்பான்!

விஷ்ணுதாசன்