சித்தம் சிவமானது



*    மகா சிவராத்திரி ஸ்பெஷலில் சிவமயமாக ஆன்மிக புத்தகம் முழுதும் தெய்வீக ஒளி வீசியது. அமர்தல் எனும் தலையங்க சிறு தெய்வீக கட்டுரை மனதிற்கு ஆன்மிக பக்தி பரப்பி இதம் தந்தது ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு  மடல் எழுத வேண்டும். அப்படியொரு படைப்பு அட்டைப்படம் ஈசனின் ஆனந்த தாண்டவ முகபாவனை அருமை. தெளிவு பெறு ஓம், அதிசய கேள்விகள் அதிசய பதில்கள் அருமை. ஆன்மிக மலருக்கு விலை மதிக்க முடியாத தமிழன்புடன், - வைரமுத்து பார்வதி, ராயபுரம், சென்னை - 13.

*    ஆன்மிகச் சுற்றுலா சென்றுவிட்டு, எல்லா கோயில்களையும் பார்த்துவிட்டேன் என்பவர்களுக்கு, ‘கோயில்’ என்றால்  என்ன என்றும், தரிசன கியூவை விட, பிரசாத கியூ நீளமாக இருப்பதை கவனித்து, ‘பிரசாதம்’ என்றால் என்ன? என்றும், அந்தக் கோயிலில் நல்ல வைப்ரேஷன் (அதிர்வலைகள்) கிடைத்தது என்று பாலகுமாரன் அடிக்கடி எழுதுவாரே. அந்த உணர்வு என்ன? என்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டார், பொறுப்பாசிரியர். சிவராத்திரியை முன்னிட்டு இதுவரை அறியாத சர்வதோ பாத்ர சிவலிங்கம் குறித்தும், சதுர்முக லிங்கத்திற்குரிய வேறுபாட்டையும் அறிந்து, வடஇந்திய சிவத்தலங்களையும் படக் கட்டுரையாக பார்த்ததில் பரம திருப்தி. - அ.யாழினி பர்வதம், சென்னை-78.

*    தெளிவு பெறுஓம் பகுதியில் ஹரிபிரசாத் சர்மா அவர்களின் பதில்கள் அத்தனையும் தெள்ளத் தெளிவாக ஆழ்ந்து படித்துப் புரிந்து  கொள்ளும்படியாக உள்ளது. - வா,மீனாவாசன். சென்னாவரம்.

*    நந்திகளின் சிறப்பு சிவபெருமானின் சிறப்பு என்று சிவராத்திரியின் நான்கு நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு தகவல்களுடன் மகா சிவராத்திரி ஸ்பெஷல் வெளியிடப்பட்டு இருந்தது அனைவருக்கும் பயனாக இருந்தது. திருக்கோயில்களின் விஜயம் என்பது அவசர விஜயமாக இருந்திடலாகாது. அது அமைதியாகவும், ஆன்மிக உணர்வை உணரும் வகையிலும் இருந்திட வேண்டும் என்பதை ‘அமர்தல்’ தலைப்பிலான தலையங்கம் மூலம் அருமையாக தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. அமர்தலின் அவசியம் மனநிறைவைக்
கொடுக்கும் என்பது உறுதி. - ப.மூர்த்தி, பெங்களூரு.

*    லிங்கோத்பவ வைபவம் நிகழ்ந்த மகாசிவராத்திரி திருநாளின் மகத்துவங்களை விவரித்த கட்டுரை தொடங்கி விஷ்ணுதாசனின் ‘சித்தம் சிவமாகும்’ கவிதை வரை இதழ் முழுவதும் சிவமயமாகி படைக்கப்பட்ட ‘ஆன்மிகம் பலன்’ சிவராத்திரி சிறப்பிதழ் சிவபக்தர்களின் இதயங்களை இன்பமயமாக்கி சிந்தையைக் குளிர வைத்து விட்டது. ஒரு முழுமையான சிவராத்திரி சிறப்பு மலராக ஒளி வீசி சிலிர்க்க வைத்துவிட்ட ‘ஆன்மிகம் பலன்’ இதழை ஆயுசுக்கும் மறக்க முடியாது. பாராட்டிப் போற்றுகிறோம்.
- அயன்புரம் த.சத்திய நாராயணன்.

*    பானகம் பருகும் நரசிம்மர் என்ற தலைப்பில் வந்த கட்டுரையையும், படங்களையும் பார்த்து பக்தி பரவசத்தில் மெய்சிலிர்த்துப் போனேன். மங்களகிரிக்கு ஒரு வரலாறு, மலைக் கோயிலுக்கு ஒரு வரலாறு, பானகம் பருகும் நரசிம்மருக்கு ஒரு வரலாறு ஆஹா, அற்புதம். நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கும் நரசிம்மர் என்பது அதிசயம், அதிஅற்புதம். படிக்க படிக்க ஆனந்தம்.  - எம். இராஜேந்திரன், லால்குடி.

*    தங்கள் ஆன்மிகம் பலன் ஒவ்வொரு பக்தி ஸ்பெஷலிலும் இதுவரையில் படித்திராத ஆன்மிகக் கட்டுரை, பார்த்திராத படங்கள் என மனதை ஈர்க்கிறது. ஒவ்வொரு இதழும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய காலத்தால் அழியாத பொக்கிஷம்.  - எஸ்.எஸ்.வாசன். வந்தவாசி.