நல்வாழ்வருளும் நவபாஷாண வாராஹி



வாராஹி கணேசன் என்று அவரை எல்லோரும் அழைப்பார்கள். காஞ்சிபுரத்தில் சீதாராமய்யர் லக்ஷ்மி தம்பதியர்க்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். சிறு வயது முதலே சப்தமாதர்கள் திருவுருவ படத்தை வைத்து வழிபட்டு தியானம் செய்து வந்தாராம். அப்போது சப்த மாதர்களுள் ஒரு தேவியான பிராம்ஹி,  ‘‘வாராஹியை நீ வழிபடு’’ என உத்தரவிட அதன் படி வாராஹியை விசேஷமாக வழிபட்டு தியானித்து வந்தார், 1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் நாள் அன்னை வாராஹி என்னை நவபாஷாணத்தில் செய்து வழிபடு என ஆணையிட்டுள்ளாள்.

அதன்படி காரைக்குடியிலிருந்த ஜெயராம்ஜி எனும் சித்தரோடு சேர்ந்து அழகிய வாராஹியின் இரண்டு அடி உயரமுள்ள நவபாஷாண சிலை உருவாகியது. அதே அளவில் கருங்கல் வாராஹி சிலையையும் வைத்து பூஜித்து வருகிறார். 3.2.1998 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நவபாஷாண வாராஹிக்கு பாலாபிஷேகம், ஜவ்வாது அபிஷேகம் போன்றவை தவறாமல் நடந்து வருகிறது.

ஆடிமாத பஞ்சமியன்று விசேஷமாக வாராஹி ஹோமம் நடைபெற்று வருகிறது. 2013ம் ஆண்டு அம்பத்தூர் புவனேஸ்வரி ஸ்வாமிகளின் மகனும் பிரதம சிஷ்யருமான பரத்வாஜ் ஸ்வாமிகளால் பூரண மகாமேரு கிடைத்து ஸ்ரீவித்யா தீக்ஷையும் கிடைத்தது. சத்யானந்தர் எனும் தீக்ஷா நாமமும் கிட்டியது. சென்னை அம்பத்தூர் விஜயலக்ஷ்மி புரத்தில் அருளும் நவபாஷாண வாராஹியை காலை 10.00-1.00 வரையும் மாலை 6.00-8.00 வரையும் தரிசிக்கலாம். இன்றும் அம்பிகையின் தரிசனத்தைக் காண பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆலயத் தொடர்புக்கு: 9176214322.

- ஸ்ரீசரண்