முத்தான ஆன்மிக அமுதம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

குறைவற்ற வாழ்வருளும் குலசை முத்தாரம்மன் கட்டுரையை படித்து மனம் மகிழ்ந்தோம். ‘பெரிதிற்கும் பெரிதானவன்’ கட்டுரை அழகையும், காரண காரியங்களையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியது. ஆய கலைகள் 64ம் ஓவியமாய் அளித்த ஆன்மிகத்தின் சேவை அளப்பரியது.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

குலசை முத்தாரம்மனின் சித்தாடல்களையும் அற்புதங்களையும் சிலிர்க்க வைக்கும் வண்ணப் படங்களோடு தொகுத்தளித்த கட்டுரை ஒரு புராணத் திரைப்படத்தைப் பார்த்தது போன்றிருந்தது. நவராத்திரி சிறப்பிதழுக்கு தனி முத்திரை பதித்துவிட்ட முத்தான ஆன்மிக அமுதம்! இதைப் படைத்த முத்தலாங்குறிச்சி காமராசு அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
- அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை-72

நவராத்திரி கொலு பொம்மைகள் உருவாகும் இடம், விதம் போன்ற அரிய தகவல்களை கரங்களில் குழைந்தெழும் தெய்வங்கள் என்ற கட்டுரை கலை நயத்துடன் விளக்கியிருந்தீர்கள். அந்தப் படைப்பாளிகளை இரு கைகூப்பி வணங்கவும் வைத்திருந்தன!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஒரு பூமாலை போல் தொ(கு)டுத்து தந்திருந்தது சற்றும் எதிர்பாராத அன்பளிப்பு. ஓவியங்களும் அதன் விளக்கங்கள் கன கச்சிதம். எங்கள் பாராட்டை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தேவி மஹாத்மிய அபூர்வ ஸ்லோகம் படிக்கும்போதே மெய்சிலிர்த்தது. அதேபோல் ஹீராபூர் அறுபத்து நான்கு யோகினிகள் வியப்பை தந்தது.
- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.

‘‘வேப்பிலை முதல் வேதாந்தம் வரை’’ எனும் தலைப்பிலுள்ள தலையங்கம் என்னை மிகவும் ஈர்த்ததால் நான் பரவசமடைந்தேன். விஷ்ணுதாசன் எழுதிய, நலம் தரும் நவராத்திரி பாடல் அருமை. திருமுடி முதல் திருவடி வரை செய்திகள் பயனுடையதாயிருந்தது.
- சு. இலக்குமணசுவாமி,  மதுரை-8.

ஆன்மிகம் இதழுடன் இணைப்பு புத்தகம் ஆய கலைகள் 64 ஓவியங்களின் தொகுப்பு என்ற நூல் வழங்கியுள்ளீர்கள். தமிழக மக்கள் குறிப்பாக சிவ வழிபாட்டில் ஈடுபாடுடைய சைவத் தமிழ் மக்கள் ஆய கலைகள் 64ஐ பற்றி அறிந்திருப்பார்கள். தாங்கள் இந்தப் புத்தகத்தில் கலைகள் 64ஐயும் குறிப்பிட்டு அந்தக் கலையின் விளக்கம், முக்கியத்துவம் ஆகியவற்றை எளிமையாக ஒரு வரி செய்தியாக வெளியிட்டு அதற்குத் தகுந்த ஓவியங்களோடு வழங்கியிருப்பது பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரதாசம்.
- K. சிவக்குமார், சீர்காழி.

கல்விச் செல்வம், வீரம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற அழகாக அத்தனையும் காக்கும் கடவுளால் காக்கப்பட கிடைத்த அட்டைப்படத் தரிசனம் ஆன்மிகம் எங்கள் மீது வைத்துள்ள கரிசனத்தை ‘பளிச்’சிட வைத்தது.
- ஆர்.ஜி.பாலன்,
திசையன்விளை.

ஹரிபிரசாத் சர்மா அவர்கள் தெளிவு பெறுஓம் பகுதியில் அரசாணிக்கால் என்பதற்கு விளக்கம் தந்தது அருமை. மங்கலப் பானைகளின் விளக்கம் மனங்கவர்ந்த உண்மை. மெய் சிலிர்த்தது.
- நவீனா தாமு, பொன்னேரி.

ஆதம்பாக்கம், ‘புவனேஸ்வரி ஆலயம்’ குறித்த செய்திகள் சிலிர்ப்பு. அம்மை நவநாயகியாக அலங்காரங் கொண்டது களிப்பு. சந்தனக்காப்பில் சிந்தை கவர்ந்தது சிறப்பு. அன்னபூரணி அலங்காரத்தில், அன்னையின் மலர்முகம் அழகோ வியப்பு.
- கெளரிபாய்,
பொன்னேரி.

திருக்குறளில், காடுகளின் அரசன் சிங்கமும், தீப்பந்தம் எரிவது போன்ற கண்களை உடைய புலியும், உலா வந்ததை, பல்வேறு உவமான உவமேயங்களைத் தொட்டுக் காட்டி விளக்கியது அருமை. இதிகாசம் முதல் இன்றைய திரைப்படம் வரை துணைக்கு அழைத்து திருக்குறளை உலவ விட்ட திருப்பூராரின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.