கலைமகள் கைப்பொருளே... ஞானபாஸ்கரன்



வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
- பாரதியார்

கலைமகளான சரஸ்வதி ஏந்தியிருப்பதே வீணைதான். வீணை எனும் ராஜவாத்தியத்திற்கு மயங்காதோர் உண்டோ! அதுவும் தஞ்சை வீணையெனில் அதற்கு எப்போதுமே தனிப்பெருமைதான். தமிழர்களின் பழம்பெரும் இசைக் கருவிகளில் வீணையும் ஒன்று. தெய்வீக இசைக் கருவியான வீணை காலத்தால் அழிக்க முடியாதது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலம், வெளிநாடுகளுக்கும் தஞ்சையில் வீணை தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தஞ்சையில் கிட்டத்தட்ட 3 தலைமுறையாக 150 குடும்பங்கள் வீணையை செய்து வருகின்றனர். இப்போது பலரும் இத்தொழிலில் இறங்கினாலும் பாரம்பரிய முறைப்படி செய்வதில் பூர்வீக வீணை தயாரிப்பாளர்களை மிஞ்ச முடியவில்லை.


தற்போது தஞ்சையில் 17ம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட பாணியைப் பின்பற்றி வீணை செய்யப்படுகிறது. வீணையில் 2 வகை உண்டு. சாதாரண வீணை, ஏகாந்த வீணை. சாதாரண வீணையில் கார்வின் வீணை, உட்கார்வின் வீணை, ஏகாந்த வீணையில் கார்வின், லைட் கார்வின், டீப் கார்வின், உட்கார்வின் என பல ரகங்களில் செய்கின்றனர். ஒரு காலத்தில் வீணைகள் அத்திமரத்தில் செய்யப்பட்டன. ஆனால் காலப்போக்கில் இந்த வீணைகள் அனைத்தும் பலா மரங்களில் செய்யப்படுகிறது. இதற்காக நல்ல விளைந்த பலா மரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கி வந்து உளியால் இழைத்து வீணையை வடித்து எடுக்கின்றனர்.

பண்ருட்டியில் இருந்தே அதிகளவில் தஞ்சைக்கு வீணைக்காக பலா மரங்கள் கொண்டு வரப்படுகிறது. சாதாரணமாக ஒரு வீணை ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை விற்பனையாகிறது. இது தவிர ஆர்டரின் பேரில் பல்வேறு மூலப்பொருட்கள் மற்றும் ரகங்களில் வீணைகளை செய்து தருகின்றனர். தோலினாலான வீணை, வெள்ளியில் செய்யப்பட்ட வீணை, எலக்ட்ரானிக் வீணை, எப்.எம். வீணை என செய்து தருகின்றனர். முன்பெல்லாம் ஒரு வீணை செய்ய குறைந்தது ஒரு மாதமாகும். வீணையில் வேலைப்பாடுகள் அதிகம். சாதாரணமாக ஒரு வீணையின் நீளம் நாலேகால் அடி. கனம் ஐந்தரை கிலோ. வீணை குடத்தின் உயரம் ஒரு அடி. அகலம் பதினாலேகால் இஞ்ச்.

வீணையில் 7கம்பிகளும், 24 சுருதி கட்டைகளும் இருக்கும். 24 சுருதி கட்டைகளும் ரோஸ் உட்டால் செய்யப்பட்டு பித்தளை, வெண்லம் மற்றும் காப்பர் கம்பிகள் பொருத்தப்படுகின்றன. 7 கைப்பிடி இருக்கும். இந்த கைப்பிடிகள் ரோஸ் உட்டால் செய்யப்படுகிறது. அந்த வேலைப்பாடுகளை செய்யவே அதிக நேரம் தேவைப்படுகிறது. தற்போது இயந்திரங்களின் உதவியால் 15 நாட்களிலேயே வீணை செய்து தருகின்றனர். தஞ்சையில் செய்யப்படும் வீணைகள் கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா, மொரீசியஸ் ஆகிய நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

வீணையின் அழகில் மயங்கும் வெளிநாட்டினர், தஞ்சை வரும்போது அவற்றை செய்யும் இடங்களுக்கு சென்று மறக்காமல் வாங்கிச் செல்கின்றனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டாலும் கேரளாவில்தான் வீணையை அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இதுகுறித்து தஞ்சை வீணை செய்யும் கைவினைஞர் கண்ணன் கூறும்போது, ‘‘வீணையை எல்லாரும் எளிதாக செய்துவிட முடியாது. அதற்கு பொறுமை, பக்தி வேண்டும். வீணையின் உருவம், தந்திகளின் எண்ணிக்கை, வாசிக்கும் முறை என அனைத்தும் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது.



வீணைக்கான மூலப்பொருட்கள் பண்ருட்டி, சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து வருகிறது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு உள்ளது. வீணை செய்வோருக்கான கூலியும் குறைவாக உள்ளது. வீணையில் 3 பகுதிகள் உண்டு. தலை, தண்டி, குடம் என பிரிக்கப்படும். இவற்றை தனித்தனியாக பிரித்து செய்து ஒன்று சேர்த்தால் அது சாதாரண ஒட்டு வீணை. ஒரே மரத்தில் முழுமையாக 3 பகுதியையும் செய்தால் அது ஏகாந்த வீணை. ஏகாந்த வீணை தான் வெளிநாடுகளில் அதிகம் விற்பனையாகிறது. தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளோம்.

எனவே, தஞ்சாவூர் வீணைக்கு என தனிமவுசு எப்போதும் உண்டு. ஆனால் புதிதாக வீணை செய்வதற்கு யாரும் பயிற்சி எடுக்க முன்வருவதில்லை. இதனால் எங்கள் தலைமுறையுடன் வீணை செய்வது முடிந்துவிடுமோ என அச்சமாக உள்ளது. எனவே தஞ்சையில் அமைந்துள்ள தென்னக பண்பாட்டு மையம் மூலம் வீணை செய்வதற்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதன் மூலம் இந்த இசைக் கருவியை செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்றார்.

- ஞானபாஸ்கரன்
படங்கள்: தஞ்சை பரணி