“மாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன?



தெளிவு பெறுஓம்

- தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

“மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம்  ஜீவ சரத: சதம்” என்ற மந்திரத்தை புரோஹிதர் மட்டும் சொல்வதை விட மணமகன் சொல்லி திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் கட்டுவதே சாலச்சிறந்தது. இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக புரோஹிதர் சொல்லித் தர மணமகன் திரும்பச் சொல்லி அதன் பிறகே தாலிகட்ட வேண்டும். இதனை மந்திரம் என்று சொல்வதை விட, மணமகன் ஆகிய அந்த ஆண்பிள்ளை மணமகன், தனக்கு வாழ்க்கைத் துணைவியாக வரவிருக்கும் மணமகளைப் பார்த்துச் சொல்லும் உறுதிமொழியுடன் கூடிய ஆசிர்வாதம் என்று இந்த வரிகளைக் கருத வேண்டும்.

மங்களகரமான பெண்ணே, எனது வாழ்வின் நோக்கம் நிறைவேறுவதற்காக (அதாவது தர்மநெறியுடன் கூடிய வாழ்க்கையை நடத்துவதற்காக) திருமாங்கல்யத்துடன் கூடிய இந்த கயிற்றினை உன் கழுத்தினில் கட்டுகிறேன். நீயும் நானும் இணைந்து சரத் ருது என்று சொல்லப்படக்கூடிய கார்காலத்தினை நூறு முறை (சரத: சதம்) சந்திக்க வேண்டும். (அதாவது நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்) என்ற உயரிய கருத்தினை ‘மாங்கல்யம் தந்துநானேந’ என்று துவங்குகின்ற மந்திரம் தெளிவாக உணர்த்துகிறது.

* கன்னிப்பெண், சுமங்கலி எவரானாலும் கையில் வளையல் போடாமல் உடன்பிறந்தோர், பெற்றோர், குழந்தைகள் மற்றும் புகுந்த வீட்டார் என எவருக்கும் அன்னம், தண்ணீர் வழங்குவது தவறுதானே.?
- சு. கௌரிபாய், பொன்னேரி.

தவறுதான். அன்னம், தண்ணீர் வழங்கும்போது மட்டுமல்ல, கன்னிப்பெண், சுமங்கலி எவரானாலும் எப்போதும் கையில் வளையல்களை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் கைகளில் வளையல்கள் இல்லாமல் இருப்பது என்பது அமங்கலமான நிலையைக் குறிக்கும். அதே நேரத்தில் கால, தேச, வர்த்தமானத்தையும் அனுசரித்து ஒரு சில நேரங்களில் இந்த விதியை தளர்த்திக் கொள்வதில் தவறில்லை. தற்காலத்தில் பெண்களும் உத்யோகம் பார்க்கத் துவங்கிவிட்ட நிலையில் அவர்களின் உத்யோகத்தினை அனுசரித்து வளையல் அணிவதைத் தவிர்ப்பதில் தவறில்லை.

உதாரணத்திற்கு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள், மருத்துவத்துறையில் பணியாற்றுவோர் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் போன்றவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வளையல் அணிவது தடை செய்யப்பட்டிருக்கும். அதேபோன்று ஒரு சில பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் எல்லா மதத்தினரும் ஒன்று என்ற எண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருக்கும்போது வளையல் அணிவதை தடை செய்திருப்பார்கள். அதுபோன்ற சூழலில் அங்கே விதிக்கப்பட்டுள்ள சட்ட, திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அதனால் எந்தவித தவறும்  நேர்ந்துவிடாது. இவர்களும் பணிக்கு அல்லது கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில் நிச்சயமாக கைகளில் வளையல்களை அணிந்திருக்க  வேண்டும். கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் எப்போதும் கைகளில்  வளையல்களை அணிந்திருக்க வேண்டும் என்பதையே சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

* கோபுர கலசத்தில் நவதானியங்கள் வைப்பதன் நோக்கம் என்ன?
- வைரமுத்து பார்வதி, ராயபுரம்.

கோபுர கலசத்திற்குள் வைப்பதற்கு நவதானியங்களை விட வரகு அரிசியைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அடுக்கு அடுக்காகக் கட்டப்பட்டிருக்கும் விமானத்தின் கட்டுமானத்திற்குள்தான் ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு தானியத்தையும் நிரப்பி வைப்பார்கள். பெரும்பாலும் விதைவிரைநெல், கம்பு, கேழ்வரகு முதலான தானியங்களை விமானத்திற்குள் அதிகமாக சேமித்து வைப்பார்கள். கடும் வறட்சி வரும்போதும், வெள்ளம் முதலான இயற்கை சீற்றங்களின் போதும் இந்தத் தானியங்களை எடுத்து உணவிற்காகவும், மீண்டும் விதைத்து விவசாயம் செய்வதற்காகவும் பயன்படுத்துவார்கள். அதே நேரத்தில் விமானத்தின் உச்சியில் வைக்கப்படும் கலசத்திற்குள் வரகு தானியமே நிரப்பப்படுகிறது.

வரகு அரிசிக்கு ஈர்ப்புச் சக்தி அதிகம் உண்டு. தாமிரத்தால் செய்யப்பட்ட கூர்மையான முனையை உடைய கோபுர கலசத்திற்குள் வரகு அரிசியை நிரப்பி வைப்பார்கள். தாமிரத்திற்கும் வரகு அரிசிக்கும் எளிதாக மின்சாரத்தை கடத்தும் சக்தி உண்டு. இடி, மின்னல் தாக்கும்போது இடிதாங்கியாகவும், மின்னல் கடத்தியாகவும் இந்தக் கோபுர கலசங்கள் செயலாற்றுகின்றன. கோயிலுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை என்றுமே இடி, மின்னல் தாக்குவதில்லை. அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள். வரகுதானியம் நிரப்பப்பட்டுள்ள கோபுர கலசங்கள் மின்னலை தன்பால் ஈர்த்துக் கொள்கின்றன. வரகுதானியத்திற்கு ஈர்ப்புச் சக்தி அதிகம் என்பதால் அதனை கோபுர கலசத்திற்குள் நிரப்பி பிரதிஷ்டை செய்கிறார்கள்.

* இவ்வுடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்ட நிலையை இறப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறோம். உயிர் பிரிந்ததும் அவ்வுடலுக்குள் இருந்த ஆத்மாவும் வெளியேறிவிடுகிறது. உயிரும், ஆத்மாவும் அகன்றுவிட்ட உடலுக்கு ஈமக்கிரியைகள் செய்வது ஏன்? எரித்த உடல் சாம்பலை புண்ணிய நதிகளில் கரைப்பது ஏன்? இவ்விரண்டு செயல்களும் விலகிப்போன ஆத்மாவுக்கு எவ்விதத்தில் நன்மை பயக்கும்? தெளிவு பெறச் செய்யும்படி கோருகிறேன்.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

ஒரு மனிதன் இறந்தவுடன் முதல் இரண்டு நாட்களில் செய்யப்படுகின்ற ஈமக்கிரியைகளுக்கான காரணத்தை கேட்டிருக்கிறீர்கள். உயிர் பிரிந்ததிலிருந்து கரும காரியம் முடிந்து சுபஸ்வீகரணம் நடக்கும் வரை செய்யப்படுகின்ற கர்மாக்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு நீங்கள் கேட்டிருப்பது போல உயிரும், ஆத்மாவும் அகன்றுவிட்ட உடலை எரித்து பின்னர் அதன் சாம்பலை கரைப்பது. இரண்டாவது உடலை விட்டுப் பிரிந்து வெளியில் அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாவிற்கு மந்திரப் பூர்வமாக ஒரு தேகத்தை உருவாக்கி அதனை ருத்ர லோகத்திற்கு அனுப்பி வைப்பது.

மூன்றாவது பிரிவு ருத்ர லோகத்தில் அனுமதி பெற்ற ஆத்மாவை பித்ருலோகத்தில் உள்ள அவனது முன்னோர்களுடன் கொண்டு சேர்ப்பது ஆகியவை. உங்களது சந்தேகம் முதல் பிரிவு சார்ந்தது என்பதால் அதனை மட்டும் தெளிவாகக் காண்போம். உயிர் பிரிந்த ஒரு மனிதனின் உடலை முறையான சடங்குகள் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிப்பதற்கு “ஊர்த்த்வ ஊர்த்துவ தைஹிக கர்மா” (மேலுலகிற்கு தேகத்தை அனுப்பும் செயல்) என்று பெயர். இந்த உடம்பானது எங்கிருந்து வந்ததோ, எங்கிருந்து சிருஷ்டிக்கப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்பும் விதமாக அதாவது இந்த உடம்பினை மேலுலகில் உள்ள அந்த இறைவனிடமே திருப்பித் தரும் விதமாக இந்த கர்மா செய்யப்படுகிறது.

நாம் இங்கிருந்து எந்த ஒரு பொருளை இறைவனுக்கு சமர்ப்பித்தாலும் அதனை அக்னி தேவனின் மூலமாகத்தான் சமர்ப்பிக்க வேண்டும். நமக்கும் இறைவனுக்கும் இடையே பணி செய்யும் தபால்காரர் அக்னி பகவான். சுடுகாட்டினை ருத்ர பூமி என்று அழைப்பார்கள். அங்கே அமைக்கப்பட்டிருக்கும் தகன மேடையே யாக குண்டம். அந்த யாக குண்டத்திற்குள் இறந்த மனிதனின் உடலை அவிர்பாகமாகத் தந்து யக்ஞம் செய்யும் விதமாக நடத்தப்படுகின்ற நிகழ்வு அது. அவிர்பாகம் என்பது ஆண்டவனுக்குத் தரப்படுகின்ற நைவேத்யம். அந்த நைவேத்யத்தை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் அதன் மேல் துணியை மூடி சுடுகாட்டிற்குக் கொண்டு செல்கிறார்கள்.

இறந்துபோன மனிதனின் உடம்பானது இறைவனுக்குக் கொண்டு செல்லும் நைவேத்யம் என்ற தாத்பரியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அந்தண குலத்தைச் சேர்ந்தவர்கள் மந்திர ஒலியுடனும், இதர குலத்தினர் தாரை, தப்பட்டை முதலிய வாத்திய கோஷத்துடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அமர்க்களமாகக் கொண்டு செல்கிறார்கள். ஒரு பிரேதம் தெருவினைக் கடந்து செல்லும்போது தெருவில் வசிப்பவர்களும், வாகன ஓட்டிகளும் ஓரமாக ஒதுங்கி நின்று மரியாதை செலுத்துவது என்பது இறந்து போன அந்த மனிதனுக்காக அல்ல, அவன் நல்லவனாக இருந்தாலும் சரி, அயோக்கியனாக இருந்தாலும் சரி, அந்த உடம்பானது இறைவனுக்குக் கொண்டு செல்லப்படும் ஹவிர்பாகம் ஆகிய நைவேத்யம் என்ற காரணத்தால் அதனை வணங்கி ஓரமாக நிற்கிறார்கள்.

ஒரு மனிதன் இறந்து மூன்றே முக்கால் நாழிகைக்குள் சம்ஸ்காரம் செய்யப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதாவது உணவினை சுடச்சுட பரிமாற வேண்டும் என்று பொருள் கொள்ளலாம். இறந்து போன நாள் அன்றே சம்ஸ்காரம் செய்வது சாலச்சிறந்தது. மாலை நேரத்தில் இறப்பவர்களின் உடலை மறுநாள் தகனம் செய்யும்போது அது முதல்நாள் சமைத்த பழைய உணவிற்கு சமானம் ஆகிவிடுகிறது. இவ்வாறு இரண்டாவது நாள் தகனம் செய்யும்போது அதற்குத் தனியாக பிராயச்சித்தம் என்பது உண்டு. ஜீவாத்மா என்கிற உயிர், பரமாத்மா என்கிற மெய்ஞ்ஞானம், அந்தராத்மா என்கிற ஆசை ஆகிய மூன்று ஆத்மாக்களும் குடியிருக்க உதவிய இந்த உடலை அந்த ஆத்மாக்கள் வெளியேறியவுடன் இறைவனிடமே ஒப்படைத்து விடுகின்ற நிகழ்வுதான் சுடுகாட்டில் மனித உடலை எரிப்பது என்பது ஆகும்.

அடுத்ததாக அஸ்தியை புனித நதிகளில் கரைப்பது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். அஸ்தி என்றால் சாம்பல் என்பது பொருள் அல்ல. அஸ்தி என்பது எலும்புத் துண்டுகளைக் குறிக்கும். இந்த எலும்புத் துண்டுகளை கரைப்பது என்பது இயலாது. எரிக்கப்பட்ட உடலின் எலும்புத் துண்டுகளை பொறுக்கி ஒரு பானையில் இட்டு அவற்றிற்கு அபிஷேகம் செய்து அதனை நதியின் நீர் ஓடுகின்ற பகுதியில் பள்ளமிட்டு, எலும்புத்துண்டு வைக்கப்பட்டிருக்கும் பானைக்கு அடியில் துளையிட்டு அந்தப் பள்ளத்திற்குள் வைத்து மூடிவிட வேண்டும்.இதற்கு அஸ்தி நிக்ஷேபணம் என்று பெயர். சுடுகாடு என்பது பெரும்பாலும் நதிக்கரையிலோ அல்லது ஏரி, குளம் முதலான நீர்நிலைகளின் கரைகளிலோ அமைந்திருப்பதன் காரணமும் இதுவே.

நீர்நிலைக்குள் அஸ்தியை இடுவதால் இது நாளடைவில் கரைப்பது என்று புரிந்து கொள்ளப்பட்டு அஸ்தி கரைத்தல் என்ற வார்த்தை நிலைப்பட்டுவிட்டது. புண்ணிய தீர்த்தங்களுக்கு எடுத்துச் சென்றுதான் அஸ்தியை இடவேண்டும் என்று எந்த சாஸ்திரமும் வலியுறுத்தவில்லை. இது அவரவர் மனதிற்கு திருப்தி உண்டாகும் விதமாக செய்கிறார்கள். பாரத தேசத்தில் உள்ள எந்த நீர்நிலையில் அஸ்தியை இட்டாலும் அது கங்கையில் இட்டதற்கு சமமானதே. சரி, இவ்வாறு அஸ்தியை நீரில் இடுவதற்கான காரணம் என்ன என்பதே உங்களின் சந்தேகம். இந்த உடம்பு எங்கிருந்து சிருஷ்டிக்கப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்புவதற்காக செய்யப்படுவதே முதல் இரண்டு நாள் நிகழ்வுகள் என்று பார்த்தோம் அல்லவா....

முதல் நிகழ்வான இறந்து போன உடம்பினை இறைவனுக்கு ஹவிர்பாகமாக அக்னியின் மூலமாக அளித்ததன் தொடர்ச்சியே இந்த இரண்டவாது நிகழ்வும் ஆகும். அதாவது அக்னியினால் எரிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் எலும்புத் துண்டுகளையும் மேலுலகத்திற்கே அனுப்புகிறோம். ஒரு மனிதனின் சிருஷ்டிக்கு உதவுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள். இவையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்று ஐம்புலன்களாக இடம் பிடிக்கின்றன. நிலத்திற்கு வந்து நிலத்தில் வாழ்ந்த இந்த உடம்பு முதலில் நெருப்பில் இடப்படுகிறது. அதில் மிஞ்சியவை நீரில் இடப்படுகிறது. சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி காற்றின் மூலமாக அந்த ஆகாயத்தினைச் சென்று அடைகிறது.

ஆகாயத்திலிருந்து குளிர்ந்து நீராக மீண்டும் இந்த நிலத்தினை வந்தடைகிறது. அந்த நீரினை உட்கொள்ளும் மனிதனின் உடம்பிற்குள் நுழைந்து விந்தணுவாகவும், கருமுட்டையாகவும் உருவாகி கர்ப்பம் உண்டாகிறது. பஞ்சபூதங்களின் துணையோடு சிருஷ்டியின் சுழற்சி நடைபெறுகிறது. இதனை உணர்ந்துதான் மனித உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் இந்த முதல் இரண்டு நாள் நிகழ்வுகளும் உடலிற்குச் செய்யப்படுகின்ற ஈமக்கிரியைகள் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன. இந்த இரண்டு நிகழ்வுகளும் பிரிந்து போன ஆத்மாவிற்கு எந்தவிதத்தில் நன்மை பயக்கும் என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறீர்கள். இறந்து போன ஆன்மா, தான் குடியிருந்த வீடு ஆகிய அந்த உடம்பிற்குச் செய்யப்படுகின்ற சடங்குகளை பார்த்துக் கொண்டிருக்கும்.

முதலில் செய்யவேண்டிய இந்த கர்மாக்களை செய்து முடித்த பிறகே, அடுத்த கர்மாவினைத் துவக்க இயலும். ஏற்கெனவே குடியிருந்த வீட்டின் சாவியினை அதன் எஜமானனிடம் ஒப்படைத்த பிறகே, அடுத்த ஊருக்கு பயணிக்க முடியும். முதலில் ஸ்தூல ரூபமான சரீரத்தை யாரிடமிருந்து பெற்றோமோ அவரிடமே ஒப்படைத்துவிட்டு அதன் பிறகு சூக்ஷ்ம ரூபமான சரீரத்தினை உருவாக்கி அதற்குள் ஆத்மாவினை அமரச் செய்யவேண்டும். அலைந்து கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு மந்திர ரூபமாக ஒரு உருவத்தினை உருவாக்கி கரும காரியத்தினைச் செய்கிறார்கள். பிறப்பிலும் சரி, இறப்பின்போதும் சரி இந்து மதத்தில் செய்யப்படுகின்ற அத்தனை சடங்குகளும் அற்புதமான அர்த்தத்தினைக் கொண்டவை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
 
- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா