வல்லுனன் வேறு, நெறி வல்லுனன் வேறு!



திருமூலர் மந்திர ரகசியம்

ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக முன்னேறுவார்கள். படிப்பு, பூர்வீக சொத்து, கலைகள், கடின உழைப்பு எனப் பல விதங்களிலும் பலர் முன்னேறி இருக்கிறார்கள்.அதே சமயம் வேறு பலர் இருப்பதை வைத்துக் கொண்டு முன்னேற வழி தேடாமல் ‘‘ஹும், எனக்கு மட்டும் அது இருந்திருந்தால், இது இருந்திருந்தால், நான் எங்கேயோ போயிருப்பேன்,’’ என்று சோம்பேறித்தனமாகப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

மற்றொரு வகை மனிதர்களும் உண்டு. எவ்வளவு இருந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். அடக்கமாக, அமைதியாக இருப்பார்கள். ‘‘நான் என்ன சார் செஞ்சிட்டேன்? கடலில் குளித்து முத்து எடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நானோ கடற்கரை ஓரமாகக் கிளிஞ்சல்களை எடுத்து எண்ணிக் கொண்டிருக்கிறேன்’’ என்று அமைதியாகக் கூறுவார்கள்.இவ்வாறு அமைதியாக, அடக்கமாக, விளம்பரப்படுத்திக்கொள்ளாதவர்களை திருமூலர் வகையினர் என்று சொல்லலாம். அது எப்படி? இதோ திருமூலரின் பாடலைப் பாருங்கள்:

 பாட வல்லார் நெறி பாட
அறிகிலேன்
ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாட வல்லார் நெறி நாட அறிகிலேன்
தேட வல்லார் நெறி தேட
அறிகிலேன்
(திருமந்திரம்-96)

கருத்து: பாடத் தெரிந்தவர்கள் இசை பாடி இறைவனை அடைவார்கள்; எனக்குப் பாடத் தெரியவில்லையே! ஆடல் கலையில் வல்லவர்கள், ஆடி இறைவனை அடைவார்கள்; எனக்கு ஆடவும் தெரியாதே! இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை நாடி, அதன்படி நடந்து இறைவனை அடைவார்கள்; அதுவும் தெரியாது எனக்கு. தேடிப் போய் இறைவனை அடைவார்கள்; அதுவும் எனக்குத் தெரியாது.பாட - ஆட - நாட - தேட என ஓர் எழுத்தை மட்டும் மாற்றி, மற்றபடிப் பாடலை ஒரே அமைப்பாகச் செய்திருக்கும் திருமூலரின் தமிழ் ஆளுமை, வியப்பில் ஆழ்த்துகிறது!ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய திருமூலர் சொல்கிறார், ‘எனக்குப் பாடத் தெரியவில்லை’ என்று. சுயதம்பட்டம் இல்லை; அடக்கத்துடன் பாடியிருக்கிறார்.

அதைவிட முக்கியமாக, நாம் ஆழ்ந்து பொருள் காண வேண்டிய சொற்கள்:வல்லார்; நெறி.வல்லார் என்பது திறமைசாலிகளைக் குறிக்கும். நெறி என்பது முறையான வழியைக் குறிக்கும்.சங்கீதத்தில் நல்ல பயிற்சியும் திறமையும் இருக்கிறது என்பதற்காக, சுருதி தப்பி, தாளம் தப்பிப் பாடலாமா?உதாரணமாக, சமையல் கலையில் வல்லவர் என்பதற்காக, பாயசத்தில் உப்பையும், மிளகாய்ப் பொடியையும் போடுவோமா?அது போல, இசைக் கலையில் நல்ல தேர்ச்சி பெற்று, அதன் மூலம் றைவனை அறியும், அடையும் வழி தெரியவில்லையே என்கிறார் திருமூலர்.திருமூலருக்கா தெரியாது? பிறகு ஏன் அவர் இப்படிச் சொல்ல வேண்டும்?ராவணனைப் பார்த்தால் புரியும். ‘பண்டை நாள் ராவணன் பாடி உய்ந்தனன்’ எனத் திருமுறைகள் சொல்கின்றன.

வேத வல்லுனனான ராவணன், இசைபாடி இறைவனிடமிருந்து வரங்களைப் பெற்றான். பலன்? நன்கு உழுது பயிரிட்டு, நன்கு விளைந்த விளைச்சலை அறுவடை செய்து, அத்தனையையும் கொண்டு போய் சாக்கடையில் கொட்டுவதைப் போல, வேத சங்கீதம் பாடி, பரம்பொருளிடம் இருந்து வரங்களைப் பெற்ற ராவணன், மாற்றான் மனைவியிடம் மையல் கொண்டு அவளைச் சிறை பிடித்தான். அதாவது ராவணன் இசை வல்லுனனாக இருந்தானே தவிர, நெறி வல்லுனனாக இல்லை!

இதைச் சொன்ன திருமூலர் அடுத்தது ஆடல் கலையைச் சொல்கிறார். ஆடல் கலையின் மூலம் இறைவனை அடைந்தவர் பலர். அதே சமயம், அற்புதமான ஆடல் கலை இருந்தும், அதாவது அவர்கள் ‘ஆட வல்லார்’ ஆக இருந்தார்களே தவிர, ‘நெறி’ இல்லை அவர்களிடம்.ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோர் ஆட வல்லார்கள். ஆனால் அவர்களிடம் நெறி இல்லை. யாராவது முனிவர்கள் தவம் செய்யும்போது, ஆடல் வல்ல இந்த தேவலோகப் பெண்மணிகள், அந்த முனிவர்களின் தவத்தைக் கலைத்த சம்பவங்கள், இதிகாச புராணங்களில் விரிவாகவே உள்ளன. அதாவது ஆடலில் வல்லவர்களாக இருந்த ரம்பை முதலானவர்களிடம் நெறி இல்லை.

திருமூலர் அடுத்து, ‘நாட வல்லார்’ என்கிறார். நாட்டத்தை இறைவன்மீது வைத்த திறமைசாலிகள், முனிவர்கள் முதலானோர் இவ்வாறானவர்கள். முனிவர்கள், நாட்டத்தை இறைவன் மீது வைத்துக் கடுந்தவம் செய்தாலும், அதன் பயனாக சக்திகள் கிடைத்தனவே தவிர, அவர்களும் கோபப்பட்டு, நெறியை விட்டு விலகியிருக்கிறார்கள் என இதிகாச புராணங்கள் கூறுகின்றன.பாடல், ‘தேட வல்லார்’ என நிறைவு பெறுகிறது.இதுவரை சொன்ன பாட, ஆட, நாட என்னும் மூன்றையும்விட இந்த ‘தேட’ என்பது அற்புதமானது.காசோலையில் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டுக் கடைசியாகக் கீழே, கையொப்பம் இடுகிறோம் அல்லவா? அதுபோல, ‘தேட’ எனப் பாடலின் கடைசியில் வந்திருக்கும் சொல் மிகவும் நயம் பொருந்தியது.பாட - பாட்டு கற்றுக் கொள்ள வேண்டும். ஆட - நடனம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட - தவம் தியானம் ஆகியவற்றைக் கற்றுணர்ந்து பயில வேண்டும். ஆனால் நிறைவாகச் சொன்ன ‘தேட’ என்பது, இறை தாகம் - தெய்வ வேட்கை.மாணிக்கவாசகர், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் என நால்வர் பெருமக்களும், மகான்கள் பற்பலரும் இறைவனை தாகம் கொண்டு தேடியிருக்கிறார்கள்; தரிசித்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திறமைசாலிகள் கடைபிடித்த வழிமுறை தெரியவில்லையே எனப் பாடலை முடிக்கிறார் திருமூலர்.பாடலை மற்றொரு விதமாகப் பார்த்தால், முதலில் சொன்ன பாட - காதுகளுக்கு மட்டும் விருந்தளிக்கும். ஆட - கண்ணுக்கும் காதுகளுக்கும், நாட - ஐம்புலன்களும் பதிந்து அடங்கும் நிலை; தேட - நாடி நரம்பெங்கும் இறையருளைத் தேடும் வேட்கை - இது மிகவும் உயர்ந்த நிலை.நான்குவிதமான தகவல்களைச் சொல்லி, அவற்றில் திறமைசாலிகளைச் சொல்லி, அவர்களின் வழிகளைச் சொல்லி இவற்றில் எதுவும் தனக்குத் தெரியாது எனத் திருமூலர் சொல்லியிருப்பது - சித்தபுருஷரான தனக்கு அல்ல, நமக்கு!ஏதாவது ஒருவழியில் தெய்வ அருளைப்பெற முயல வேண்டும் எனப் பாடம் நடத்துகிறார் திருமூலர்.அடுத்த பாடலிலும் இதே தகவலை மற்றொரு விதமாகச் சொல்லி, பிரம்மதேவரையும் குறிப்பிடுகிறார்:

மன்னிய வாய் மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே
(திருமந்திரம்- 97)

கருத்து: சிவபெருமானுடைய ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளத்தில் இருத்தி, பொருத்தி, ஓயாமல் ஜெபிப்பவர் மனத்துள்ளே ஈசன் தோன்றுவார்; நினைப்பவர் உள்ளத்தின் உள்ளே தோன்றுவார்; பாடல் இசைத்து வழிபடுபவர் உள்ளத்து உள்ளே ஈசன் தோன்றுவார் - இப்படிப்பட்ட ஈசனின் அருள் ஆணைப்படி, படைக்கும் தொழில்புரியும் பிரம்மதேவர் கூட, சிவபெருமானைத் தியானித்தே அதைச் செய்கிறார்.இப்பாடலில் வாய்மொழி, மனது, இன்னிசை என மூன்று விதமான வழிபாட்டு முறைகள்சொல்லப்பட்டுள்ளன.இறைவனுடைய திருநாமங்களை மந்திரமாக, வாயால் சொல்ல வேண்டும். நாக்கு நல்லதிலேயே பழகிவிடும். இதன்பின், அடுத்த நிலைக்குப் போகவேண்டும்.பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய் கனியாக மாறுகிறது அல்லவா? அதுபோல, வாயால் மந்திரத்தைச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட பின், அம்மந்திரத்தை மனதால் மட்டுமே ஜெபிக்க வேண்டும்.

எப்படி நம்மை அறியாமல் மூச்சுவிடும் செயல் தானாகவே நடைபெறுகிறதோ, அதுபோல மனதில் செய்யப்படும் ஜெபம், இடைவிடாமல் தானாகவே நிகழ வேண்டும். இவ்வாறு வாயால் சொல்லாமல் மனதால் மட்டும் செய்யப்படும் ஜெபம், அஜபா மந்திரம் (ஜெபம்) என்றும் சொல்லப்படும்.இதுவும் முதிர முதிர, உருவேற உருவேற மனதில் எழும் ஆரவார ஓசைகள் எல்லாம் அப்படியே அடங்கும்; மென்மையான ஓர் இன்னிசை எழும்; ஈசன் தாமாகவே உள்ளத்தில் தோன்றுவார். நாம் தேடும் அமைதி, நிம்மதி என அனைத்தும் தேடிப் போகாமலேயே நம்மிடம் வந்து சேரும்.

இப்பாடலில் உள்ள சூட்சுமத்தையும் உணர வேண்டும். பாடலின் தொடக்கத்தில் உள்ள ‘மன்னிய’ என்பதை, நான்கு விதமாகக் கொண்டு கூட்டு செய்ய (சேர்க்க) வேண்டும்.மன்னிய வாய்மொழி - மன்னி மதித்தவர் - மன்னிய இன்னிசை உள்ளே - மன்னிய ஈசன்.மன்னுதல் என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதிப்படி, பதிவது, நிலை பெறுவது, பொருந்துவது எனப் பல அர்த்தங்கள் உண்டு.இம்முறைப்படி வாயால் சொல்லபபடும் மந்திரம், ஏதோ கடனே என்று இருக்கக்கூடாது. அது வாயில் பதித்ததோடு மட்டும் அல்லாமல், மனதோடு பதிந்து, பொருந்தி, நிலைபெற வேண்டும். அவ்வாறு செய்தால், ஈசன் அருள் தானே வெளிப்படும்.

மேலும் இப்பாடலில் உள்ள ‘ஈசன்’ என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யங்களை அருள்பவர் என்று பொருள்.ஐஸ்வர்யம் என்பது பொதுப்படையாக காசு, பணம் முதலான செல்வங்களாகக் குறிப்பிடப்பட்டாலும், ஆரோக்கியம் - அமைதி - நிம்மதி - மக்கள் - செல்வம் என பலவிதமான அர்த்தங்களை, ஞான நூல்கள் விவரிக்கின்றன.இறைவனை, வாயால் சொல்லப் பழகி, மனதில் நிலைநிறுத்தி வழிபட்டால், தெய்வ அருள் தானாகவே வெளிப்படும் என அறிவுறுத்திய திருமூலர், பிரம்மதேவர் சிவபெருமானை வழிபட்டு அவர் அருளாணைப்
படியே, படைப்புத் தொழிலைச் செய்கிறார் எனப் பாடலை முடிக்கிறார்.
\
இதற்கு விளக்கம், சென்னைக்கு அருகில் உள்ள திருவெற்றியூரில் கிடைக்கும், தரிசிக்கலாம் வாருங்கள்!காஞ்சியில் இருந்து மனவருத்தத்தோடு வந்த தொண்டமான் எனும் அரசருக்கு, சித்த புருஷரான ரோமசர், ஆதிபுரி என்னும் திருத்தலத்தின் வரலாற்றை விவரித்தார். அவர் சொன்ன ஆதிபுரிதான், பிற்காலத்தில் ‘திருவொற்றியூர்’ எனப் பெயர் பெற்றது.படைக்கும் தொழிலைத் தொடங்கிய பிரம்மதேவர், அதன் வழிவகை தெரியாமல் தவித்தார்; சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்ய, ‘மொறுமொறு’வென்று கனல் வெளிப்பட்டது. அதன் நடுவில் ஒரு பலகை தோன்றியது. அதில்  அம்பாள் வடிவுடையாளுடன் அமர்ந்தபடி, சிவபெருமான் வெளிப்பட்டார். உள்ளத்தில் இருத்தி வழிபட்ட உமை மணாளனை நேருக்கு நேராக வழிபட்டு, தன் குறையை விவரித்துத் தீர்த்தருள வேண்டினார் பிரம்மதேவர்.

பிரம்மதேவருக்கு சிருஷ்டித் தொழில் செய்வதற்கான வழிவகைகளை உபதேசித்து அருள்புரிந்தார் சிவபெருமான். பலகையிலிருந்து வெளிப்பட்டு அருள்புரிந்த சிவபெருமான் ‘பலகை நாதர்’ எனத் திருநாமம் பூண்டார்.பிரம்மதேவரால் தவமிருந்து வழிபடப்பட்டு, பிரம்மதேவருக்கு அருள்புரிந்த, திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் பலகை நாதரை இன்றும் தரிசிக்கலாம்!‘உலகைப் படைக்கும் பிரம்மதேவரும், தியானித்து வழிபடும்’  என்ற இந்தத் தகவலே, திருமூலரின் பாடலில் இடம் பெற்றிருக்கிறது.ஆலயங்கள் பலவற்றிலும் ‘பிரம்மோற்சவம்’ எனக் கொண்டாடுகின்றோம் அல்லவா? பிரம்மதேவர் வழிபட்டு, வகுத்த முறை அது.பிரம்மதேவரே வழிபட்டிருக்கிறார்! நாமும் வகைதெரிந்து வழிபடுவோம்!

(மந்திரம் ஒலிக்கும்)