திருப்பங்கள் தருவார் தில்லை அம்பல நடராஜர்!



எங்கே ? எப்படி ? என்ன ?

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் போற்றப்பெற்றதும், ஐம்பூத தலங்களில் ஆகாயத் தலமாகவும் விளங்குகிறது சிதம்பரம் நடராஜர் கோயில். ஒருமுறை தரிசித்தாலே போதும், கிடைத்தற்கரிய முக்திப் பேறளிக்கும்ஸ்தலம் இது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ளது பழமை வாய்ந்த இந்த நடராஜர் கோயில். சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிதம்பரம் தலமே கோயில் என்ற சிறப்புடன் வழங்கப்பெறுகிறது. ஆதிகாலத்தில் இத்தலம், தில்லை என்ற மரம் நிறைந்த வனமாக இருந்ததால் தில்லை வனம் எனக் கூறப்பட்டது. ஆகாய வடிவமாக இத்தலம் திகழ்வதால் ஞான ஆகாசம் என்றும் போற்றப்படுகிறது.  

பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க அன்னை சிவகாமியோடு நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்த இடம் இந்தத் தில்லை என்ற சிதம்பரம். சித் + அம்பரம் என்பதே சிதம்பரம் என்றானது. இறைவன் ஆகாயமாக அண்டவெளி முழுவதும் அவனே நிறைந்திருக்கிறான் என்பதை குறிக்கிறது இத்தலம்.தேவார திருமுறைகள் கண்டது சிதம்பரம், திருவாசகம் தந்த மாணிக்கவாசகரை வரவேற்றது சிதம்பரம். திருவிசைப்பா பாடிய சேந்தனார், திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், கண்டராதித்தர் முதலியவர்களை ஏற்றுக்கொண்டது சிதம்பரம். இக்கோயிலில் தான் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவர் கையடையாளங்களுடன் தேவாரத் திருமுறைகள் திருக்காப்பிடப் பெற்றன. நம்பியாண்டார் நம்பிகளை கொண்டு ராஜராஜசோழன் அத்திருமுறைகளை வெளிப்படுத்தி பல கோயில்களிலும் அவற்றை வழிபாட்டுக் காலங்களில் ஓதும்படி செய்தான்.

சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் நடராஜர் கோயில் 51 ஏக்கர் பரப்பளவில் அழகிய கலைநயமிக்க சிற்பங்களுடன் 4 ராஜ கோபுரங்களுடன் அமைந்துள்ளது. கோயிலின் பல பகுதிகள் கிபி 13ம் நூற்றாண்டில் பல மன்னர்களால் கட்டப்பட்டவை. இக்கோயிலில் சித்சபை, கனகசபை, தேவசபை, நிருத்தசபை, ராஜசபை என 5 சபைகள் உள்ளன. ஆடல்வல்லான் எழுந்தருளி அருள் நடனம் புரியும் சபைக்கு சித்சபை என்றும், சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. முதல் பராந்தகசோழன் (கி.பி. 907-953) இரணியவர்மர் மணவிற்கூத்தன் கரங்களால் சித்சபையில் பொன்வேய்ந்ததாக கூறப்படுகிறது.

இச்சபையில் அம்பிகை சிவகாமி உடனாகிய அம்பலவன் ஆனந்த தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். சித்சபையில் உள்ள நடராஜமூர்த்தியின் வலது பக்க சுவரில் உள்ளது மந்திரசக்தியாகும். இது இறைவனின் மூன்று நிலைகளில் ஒன்றான அருவ நிலையை குறிக்கும். இத்தலம் பஞ்சபூதங்களில் ஆகாயத்தலமாக விளங்குவதால் இறைவனை இவ்வாறு மந்திர வடிவ யந்திரமாக நிறுவியுள்ளனர். இதற்கு ஆண்டுக்கு ஒருமுறை புனுகு சாத்துவது வழக்கம். யந்திரத்தின் மீது தங்க வில்வ மலர் தொங்கவிடப்பட்டுள்ளது. அதன்மீது திரையிட்டு மூடப்பட்டுள்ளது. அந்த திரை வெளிப்புறம் கருப்பும், உள்புறம் சிவப்பும் கொண்டதாக உள்ளது. மறைப்பு சக்தியே அருட்சக்தியாக மாறி அருளும் என்பதனை விளக்குகிறது. இதுவே சிதம்பரம் ரகசியம் என கூறப்படுகிறது.

இறைவன் வீற்றிருக்கும் சித்சபையில் உள்ள 5 வெள்ளிப் படிகள் நமசிவாய என்ற ஐந்தெழுத்துகளாகவும், பிரம்மன், மால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய 5 மூர்த்திகள் 5 பீடங்களாகவும், தங்கத் தூண்கள் பத்தும் ஆறு ஆகமங்கள் மற்றும் நான்கு வேதங்களாகவும், வெள்ளித் தூண்கள் ஐந்தும் பஞ்சபூதங்களாகவும் கருதி அமைக்கப்பட்டுள்ளன. சபையில் உள்ள 96 துளைகள் 96 தத்துவங்களாகவும், 18 தூண்கள் 18 புராணங்களாகவும், கூரையின் மீதுள்ள 64 கைமரங்கள் 64 கலைகளாகவும் கருதப்படுகின்றன. சித்சபையில் வேயப்பட்டுள்ள பொற்கூறையில் 21,600 பொன் ஓடுகள், 72,000 ஆணிகளால் அறையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனிதன் நாள் தோறும் 21,600 முறை மூச்சுவிடுவதாகவும், மனித உடலில் 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதாகவும் இவற்றை குறிக்கவே ஓடுகளும், ஆணிகளும் அதே எண்ணிக்கையில் பயன்படுத்தபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்கு பாரம்பரியமாக விளங்கும் சைவ, வைணவ ஒற்றுமைதான். ஆமாம், இரு சமயத்தினரும் ஒருங்கே வழிபடக் கூடியவாறு நடராஜர் கோயிலும், கோவிந்தராஜர் கோயிலும் அடுத்தடுத்து அமைந்திருப்பது மனிதநேயத்துக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு. ஒரே இடத்தில் நின்று சிவபெருமானின் ஆனந்த தாண்டவ கோலத்தையும், திருமாலாகிய கோவிந்தராஜப் பெருமானின் சயன கோலத்தையும் கண்டு தரிசிக்கலாம். அரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை இக்கோயில் விளக்குகிறது.

தல தீர்த்தங்கள்


இத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் உள்ளன. சிவவடிவமாகக் கருதப்படும் சிவகங்கை குளமும், பரமானந்த கூடமும் (கிணறு) நடராஜர் ஆலயத்திற்குள் உள்ளன. வியாக்கிரபாதர் தீர்த்தம், அனந்த தீர்த்தம், நகாச்சேரி குளம், புலிமடு தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தக்குளம், திருபாற்கடல் குளம், ஓமகுளம், ஞானப்பிரகாசர் குளம், ஆயிகுளம், பிரம்ம தீர்த்தம் ஆகிய பிற தீர்த்தங்கள் நகரில் பல பகுதிகளிலும் உள்ளன. இக்கோயிலில் இறைவனது ஐந்தொழிலையும் காட்டும் முகமாக நடராஜரின் ஆனந்த தாண்டவம் விளங்குகிறது. பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தில்லை வனத்தின் நடுவே ஆலமரநிழலில் ஓர் லிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டு வந்தனர். அதுவே இப்போது திருமூலட்டானேஸ்வரர் ஆலயம் என வழங்கப்பெறுகிறது. அருகில் உமயபார்வதி சந்நதியும் உள்ளது. சிவபெருமான் தன் அடியார்களான பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்கு தைபூச குருவாரத்தில் தாண்டவ தரிசனம் தந்தருளினார்.

வெளிச்சுற்றுக் கோயில்கள்


கோயிலுக்கு நான்கு கோபுரங்களும், நான்கு வாயில்களும் உண்டு. தெற்கு கோபுரம் வழியாக உள் நுழைந்ததும் முக்குறுணி விநாயகர் சந்நதி உள்ளது. தெற்கு கோபுரம் அருகே வடக்கு முகமாக முருகனும், தெற்கு நோக்கி விநாயகரும், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன. மதிலை ஓட்டி நடராஜருக்கு நேரே வடக்கு நோக்கி சுதையால் ஆன பெரிய நந்தியுடன் கூடிய மண்டபம் உள்ளது. மேற்கு கோபுர வாயிலின் வெளியே கற்பக விநாயகர், உள்புறத்தில் கந்தகோட்ட முருகன், அதற்கு அடுத்து மீனாட்சி சுந்தரேசர், ஒற்றைக்கால் மண்டபத்தோடு கூடிய விநாயகர், நூற்றுக்கால் மண்டபம்  ஆகியவை உள்ளன.

இதனையடுத்து சிவகாமியம்மைக்கு கொடிமரத்துடன் கூடிய தனி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே கிழக்கு நோக்கி அகிலாண்டேஸ்வரி சந்நதியும், வடக்கு நோக்கிய மண்டபத்தில் துர்க்கை சந்நதியும் உள்ளது. இதனை தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய மயில்மீதமர்ந்த சண்முகர் கோயிலான பாண்டியநாயகர் கோயில் உள்ளது. இதன் எதிர்புறத்தில் நவலிங்க கோயில் உள்ளது. இதனையடுத்து தீர்த்தக்குளமான சிவகங்கை குளமும், ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அதன் அருகே விட்ட வாசல் பைரவர் சந்நதி உள்ளது.

உள்சுற்றுக் கோயில்கள்

உள்சுற்றுக்குச் செல்ல கிழக்கிலும், மேற்கிலும் இரு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியாகவே சாமி புறப்பாடு நடக்கும். உள்ளே உள்ள இந்த முதல் சுற்றில் மாம்பழ விநாயகர், சேமாஸ்கந்தர், காலசம்காரமூர்த்தி, நிருத்தசபை, தண்டாயுதபாணி, திருமுறைகாட்டிய விநாயகர், தாயுமானவர், திருமுறைக்கோயில், சந்தானசாரியார், நால்வர், தட்சிணாமூர்த்தி, பல்லீசுவரர், வல்லப கணபதி ஆகியோர் தனி சந்நதிகளில் உள்ளனர். அறுபத்து மூன்று நாயன்மார்கள், அண்ணாமலையார், திருமூலட்டனார், உமையபார்வதி, ஐயப்பன், அர்த்தசாம அழகர், சங்கூதும் விநாயகர், நவகிரகங்கள், சனிஸ்வரர், சட்டைநாதர், பேரம்பலம் ஆகியவை உள்ளன. சிற்றம்பலத்தை ஓட்டிய இரண்டாவது உள்சுற்றில் விநாயகர், லிங்கோத்பவர், முருகன், பள்ளியறை, பிட்சாடனர், கால பைரவர், சூரியன், சந்திரன், தேவார மூவர், ஆகிய சந்நதிகள் உள்ளன. பள்ளியறையின் மேல் தளத்தில் ஆகாய லிங்கம் உள்ளது. இவைகளுக்கு நடுவில் அம்பலவனின் சித்சபையும், கனகசபையும் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்

ஆனி, மார்கழி இரு மாதங்களில் ஆடல்வல்லானுக்கும், ஐப்பசி பூரத்தில் அம்பிகைக்கும், பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு பத்து நாட்களாகவும், கந்த கோட்ட முருகனுக்கு ஆறு நாட்களும் விழாக்கள் நடைபெறுகின்றன.வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாக, இங்கு இந்திய சுதந்திர தினம் வெகு ஆன்மிகமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, நடராஜப் பெருமானுக்கு விசேஷ பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன!இக்கோயில் வளாகத்தில் 48 நாட்கள் தங்கி மதியம் உணவு மட்டும் உண்டு, விரதம் இருந்து தேவார திருவாசங்களை பாராயணம் செய்தால்  தலைமுறைக்கு பெரும் நோய் அண்டாது. குறைவில்லாத தனம் சேரும் என்கிறது நாடி சாஸ்திரம். இதையே புலிக்கால் முனி தனது நாடியில்,
‘‘போகா பீடை போம்
வம்ஸமது வ்ருத்தி யுண்டாம்
வாடா தனமது தானே வந்தண்டும்
சித்திரக் கூடத்துஞ் சிவகாமி நாதனை விரதங்கொண்டு
தில்லையிருந்து சேவிப்பார்க்கிது
திண்ணமாய் சொன்னோம்’’
- என்கிறார்.

‘‘பேய் பிசாசு போன்றவை கோயிலுக்குள் வருவது இல்லை. தீய சக்திகளும் ஒளிந்து ஓடும். பைத்தியம் என்ற பெரும் பீடைக்கு மருந்து, மன அழுத்தம் தீர மருந்து ஒன்று உண்டு. மகாசிவராத்திரி ராப்பொழுது முழுதும், தில்லை பொற்கூரையடி வீற்றிருக்கும் கயிலைநாதனை மனத்தில் ஒரு முகமாய் எண்ணி அவனை நோக்கி அமர்ந்து ‘’ஓம் நமசிவாய’’ என சொல்லி எழுந்தால் குறைவற்ற செல்வம் சேரும். இறை தரிசனமும் சேரும்,’’ என்கிறார்அகஸ்தியர், தன் நாடியில்.

தினமும் ஆறு கால பூஜை


தில்லைக்கூத்தனுக்குத் தினமும் ஆறுகால பூஜைகள் பதஞ்சலி முனிவர் வகுத்த வைதீக முறைப்படி, தீட்சிதர்களால் நடத்தப்பெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜைக்கும் முன்னால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு ரத்தினசபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு பால் நைவேத்தியமும், 8.30 மணிக்கு கால சந்தியும், 11 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 10 மணிக்கு அர்த்தசாம பூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன.

அர்த்தசாம பூஜையின் போது அனைத்து தல மூர்த்திகளும் இங்கு வந்து எழுந்தருளியிருந்து காலை அவரவர் இருப்பிடம் செல்வர் என கூறப்படுகிறது. அதனால் இங்கு அர்த்தசாம பூஜை சிறப்பாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் சபை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், சிவராத்திரியில் இரவு முழுவதும் 4 கால பூஜைகளும், கிரகண நாட்களில் கிரகணம் முடிவுற்றபின் தூய்மை செய்யப்பட்டு தனிப் பூஜையும், தீபாவளியன்று காலை 6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன. காலந்தவறாது ஆறுகால பூஜைகள் நடைபெறும் கோயிலாக உள்ளது இதன் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு கால பூஜையின் நிறைவிலும் சிதம்பரம் ரகசியம் மும்முறை காட்டப்படும்.

நடராஜர் கோயில் சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்கள் நடக்கின்றன. நமக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள். ஆதலின், நடராஜப் பெருமானுக்கு ஓராண்டில் நடக்கும் ஆறு அபிஷேகங்களும், ஒருநாளில் நடைபெறும் ஆறுகாலப் பூஜையை குறிப்பதாகும். மார்கழி மாதத்தில் விடியற்காலையிலும், மாசி மாத சுக்கிலபட்ச சதுர்த்தசியில் காலசந்தியிலும், சித்திரை மாதத்தில் உச்சி காலத்தின் போதும், ஆனி உத்திர தினத்தில் அதிகாலையிலும், ஆவணி சுக்கிலபட்ச சதுர்த்தசியில் இரண்டாம் காலத்திலும், புரட்டாசி சுக்கிரபட்ச சதுர்த்தசியில் அர்த்த ஜாமத்திலும் மகா அபிஷேகங்கள் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் என ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.

ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள் என்ன?


என்றும் ஒளி குன்றாமல் வடக்கில் தோன்றி வழிகாட்டும் துருவ நட்சத்திரத்திற்கு உரிய சிறப்பு உத்திர நட்சத்திரத்திற்கு உண்டு என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனி மாத உத்திர நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் துருவ நட்சத்திரமானது தனது துணை நட்சத்திரங்களுடன் சிதம்பரம் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேலாக காட்சியளிக்கும் என்ற வியத்தகு விவரத்தைப் பழமையான நூல்களில் காணமுடிகிறது. அந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வெளிவரும் காஸ்மிக் ரேஸ் எனப்படும் வானியல் கதிர்கள் நம் உடலில் பட்டால் மனதுக்கு உறுதியும், நினைத்ததை முடிக்கும் ஆற்றலும் கூடும். அதோடு அதிகாலையில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் சிறப்பும் சேரும் போது அதனால் உண்டாகும் நற்பலன்களை அளவிட இயலாது.

ஆனித்திருமஞ்சனத்தன்று மிகவும் விஷேமான பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் மதியம் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி  அம்பாளும் ஆனந்த நடனமாடியபடி சித்சபைக்கு செல்லும் திருக்காட்சியே மகாதரிசனம் எனப்படுகிறது. அந்த நேரத்தில் இறைவனை நாம் தரிசிக்கும் போது மனம், உடல் இரண்டும் சீராகி நம்மை ஆரோக்கியமாக இயங்க வைக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக ஆனித் திருமஞ்சனத்தன்று அதிகாலை எழுந்து நீராடிவிட்டு தூய மனத்துடன் நமசிவாய மந்திரத்தை ஓதினால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
    
இந்த மாதம் 21ம்தேதி வியாழன் அன்று அதிகாலை சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆனித்திருமஞ்சன அபிஷேக ஆராதனை நடக்கவிருக்கிறது. அன்று மதியம் 2 மணிக்கு மேல் நடக்கும் அம்மையப்பரின் ஆனந்த தாண்டவத்தைக் அனைவரும் கண்ணார கண்டு வணங்கி பிறவி பெற்றதன் பயனை அடையலாம். சிவனருளால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் முதலான அனைத்து பேறுகளும் பெற்று வளமோடு வாழ்வோம்.

- கோ.திருஞானசெல்வம்      
படங்கள் : மு.பழனிவேல்