விண்ணில் பறந்தபெண் சித்தர்!



குறளின் குறள்

பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் ஆகாயமாகிய வானம் மிகப் பரந்தது. எல்லை இல்லாதது. அந்த ஆகாயத்தை வான், விண், விசும்பு ஆகிய சொற்களால் வள்ளுவம் குறிப்பிடுகிறது.

`வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.’ (குறள் எண் 11)

வானத்திலிருந்து உரிய காலத்தில் இடைவிடாது மழை பொழிவதால்தான் இந்த உலகம் நிலைபெற்றுள்ளது. எனவே மழையே அமிழ்தம் எனலாம்.

`விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.’(குறள் எண் 13)

வானம் பொய்த்து மழை பொழியாதிருக்குமானால் இப்பேருலகில் உள்ள அனைத்துயிர்களையும் பசி வருத்தும்.
 
`விசும்பின் துளிவீழின் அல்லால்
மற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப ரிது.’
(குறள் எண் 16)

வானத்திலிருந்து மழைத்துளி விழாதுபோனால் ஒரு பச்சைப் புல்லைக் கூட உலகில் காண இயலாது.

`நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு’
(குறள் எண் 20)

யாராயிருந்தாலும் நீர் இல்லாமல் வாழ இயலாது. அந்த நீரோ வானத்திலிருந்து பெய்தால் அன்றிக் கிட்டாது.

`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.‘ (குறள் எண் 25)

ஐம்புலன்களையும் அடக்கியவனின் ஆற்றல் எத்தகையது என்பதற்கு வானுலகில் வாழும் தேவர்களின் அரசனான இந்திரனே சாட்சி. (ஐம்புலனை அடக்கிய கெளதமனின் சாபத்தால், அவ்விதம் அடக்காத இந்திரன் துன்பப்பட்டான் அல்லவா?)

`வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’
(குறள் எண் 50)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறிப்படி வாழ்கிறவன் வானுலகத்தில் உள்ள தெய்வங்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படுவான்.

`செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு.’
(குறள் எண் 86)

வந்த விருந்தினரை உபசரித்து இனி வரும் விருந்தினரை உபசரிப்பதற்காகக் காத்திருப்பவன் வானுலகத்தில் உள்ள தேவர்களால் வரவேற்கப்படும் விருந்தினன் ஆவான்.

`செய்யாமல் செய்த உதவிக்கு
வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.’
(குறள் எண் 101)

ஒருவருக்கு நாம் எந்த உதவியும் செய்யாதிருக்க அவர் நமக்கு உதவி செய்வாரானால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் போதாது.

`வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தானறி குற்றப் படின்.’ (குறள் எண் 272)

வானளவு உயர்ந்த புகழ் இருப்பினும் தன்மீது தன் நெஞ்சே குற்றம் சொல்லு
மானால் பின் என்ன பயன்?

`யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.’ (குறள் எண் 346)

உடலைப் பற்றிய நான் என்ற செருக்கையும் பொருளைப் பற்றிய என்னுடையது என்ற செருக்கையும் எவனொருவன் மனத்திலிருந்து நீக்குகிறானோ அவன் வானகத்தில் வாழும் தேவர்களுக்கும் மேலான இடத்தை அடைவான்.

`ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.’
(குறள் எண் 353)

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர்களுக்கு அவர்கள் வாழும் பூமியை விட வான உலகம் மிகவும் அருகில் இருப்பதாகும்.

`வானோக்கி வாழும் உலகெலாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.’
(குறள் எண் 542)

உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் வானத்திலிருந்து பெய்யும் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல் குடிமக்கள் எல்லாம் மன்னவனுடைய செங்கோலை நோக்கியே வாழ்கின்றனர்.

`முறைகோடி மன்னவன் செய்யில் உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்.’
(குறள் எண் 559)

ஆட்சியாளர்கள் நீதிநெறி தவறி அரசாண்டால், அந்த நாட்டில் வானம் பருவ மழையைப் பொழியாது.

`குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.’
(குறள் எண் 957)

நல்ல குடியில் பிறந்தவரிடத்தில் ஏதேனும் குறை இருந்தால் அது வானத்து நிலவில் தோன்றும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

 `வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
 வீழ்வார் அளிக்கும் அளி’.
(குறள் எண் 1192)

கணவன் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, மனைவி இன்றி வாழ முடியாத கணவன் அளிக்கும் அன்பானது, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரத்தில் மழையைத் தந்தது போலாகும்.யோக சாஸ்திரத்தில் விசுத்தி என்ற சக்கரத்தில் வானத்தின் இயக்கம் மையம் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பஞ்ச பூதங்களால் ஆனதே நம் உடம்பு. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவை உடலில் இருப்பதை நாம் அறிவோம். ஆகாயமும் உடலில் உள்ளது என்றும் அந்த ஒன்றுமில்லாத இடமே விசுத்தி சக்கரம் என்றும், தொண்டைப் பகுதியை ஒட்டி அது அமைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆகாயத்திற்கு எல்லை இல்லை. எல்லை இருக்குமெனில் அதற்கு அப்பால் உள்ளது என்ன என்ற கேள்விக்கு விடையில்லை. நட்சத்திரங்களும் கோள்களும் ஆகாயத்தில் நிலைபெற்றுள்ளன. வானில் உள்ள ஒன்பது கோள்கள் மனித வாழ்க்கையை பாதிப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இன்றைய அறிவியல் நோக்கின்படி இரவில் மிக மங்கலாகத் தெரியும் நட்சத்திரம் பூமியிலிருந்து அதிகத் தொலைவில் உள்ளது. அந்த நட்சத்திரத்திற்கு ஒருநாள் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் போக முடிந்தால் அங்கிருந்தும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை நாம் காணக்கூடும். அதில் ஒரு நட்சத்திரம் மிகத் தொலைவில் இருப்பதால் மிக மங்கலாகத் தெரியும். அதற்கும் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

 அப்படிப் போய்க்கொண்டே இருந்தாலும் பிரபஞ்சத்தின் எல்லை எது என்பதை நாம் கண்டுவிட முடியுமா? அப்படிக் கண்டாலும் அந்த எல்லைக்கப்பால் என்ன இருக்கும் என்பதைக் காண முடியுமா? நம் சராசரி மனித மூளையால் அறிய இயலாத விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். அந்த பிரமிப்பில் நாம் அடக்கம் கொள்கிறோம். அறிவின் வளர்ச்சி, நம் அறியாமை எவ்வளவு என்பதையே நமக்கு அறிவுறுத்துகிறது. அறிவியலால் விடை காண இயலாத இதுபோன்ற வினாக்களுக்கு  ஆன்மிகமே விடையளிக்கிறது. எல்லாம் இறைவன் படைப்பு என வகுத்துக் கொள்ளும்போது நம் மனம் ஒரு விடை கண்ட நிறைவில் அமைதியடைகிறது.

பிறவியிலேயே பார்வை அற்றவருக்கு நிறங்களைப் பற்றி எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியாதோ, அப்படி நம்மால் புரிந்துகொள்ள இயலாத விஷயங்கள் பிரபஞ்சத்தில் எத்தனையோ உள்ளன. ஞான திருஷ்டி எனப்படும் விசேஷப் பார்வை உள்ள பழங்கால முனிவர்கள் இவற்றை ஆராய்ந்து விடை கண்டிருக்கிறார்கள். எல்லையற்ற பிரபஞ்ச சக்தியை நாம் பயன்படுத்தக்கூடிய வகையில், மந்திரங்களைக் கண்டறிந்து அருளியிருக்கிறார்கள். அந்த மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் பிரபஞ்ச சக்தியிடம் நாம் உதவி பெறலாம். நாம் வாழ்வின் துயரங்களைப் போக்கிக் கொண்டு வாழ்க்கையை வெல்லலாம்.

இறைச்சக்தி வானத்தில் கொட்டிக் கிடக்கிறது என்றும், உயர்ந்த யோக வாழ்க்கை மூலம் அதை மனித உடலில் இறக்கிக் கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தினார் மகான் அரவிந்தர். ஓயாத தவத்தின் மூலம் வானிலிருந்து இறைச்சக்தியை மண்ணுக்குக் கொண்டுவர அவர் பல்லாண்டுகளாக முயன்று வந்தார். மாநிறத்தில் இருந்த அவர் உடல், இந்த முயற்சி காரணமாக தங்க நிறத்தில் ஒளிரத் தொடங்கியது.

அரவிந்தரின் நண்பரான அம்புபாய் புரானி என்பவர், அரவிந்தர் தவமியற்றிய புதுச்சேரியை விட்டு மூன்றாண்டுகள் தன் பணி நிமித்தம் கொல்கத்தா சென்றார். பின்னர் திரும்பி வந்து அரவிந்தரைப் பார்த்த அவர், அரவிந்தரின் மாநிற மேனி இப்போது பொன்னிறத்தில் பொலிவதெப்படி என வியந்தார். வானில் உள்ள இறைச்சக்தியை மண்ணுக்குக் கொண்டுவரவே தாம் முயல்வதாகவும் இறைச்சக்தி தன் உடலில் இறங்கத்தக்க வகையில் உடலைத் தவத்தால் புடம் போடுவதாகவும் இறைச்சக்தி இறங்குவதற்குரிய புற அறிகுறியே இந்தப் பொன்னிறமென்றும் அதைப் பெரிதாய்ப் பொருட்
படுத்த வேண்டாம் என்றும் ஸ்ரீஅரவிந்தர் கூறினார்.
 
அரவிந்தரைப் பற்றி அரவிந்தர் வாழ்ந்த காலத்திலேயே நூல் எழுதியவர் பிரபல எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன்.   அரவிந்தரின் உடலில் வலது பாதத்தில் உள்ள ஒரே ஒரு நரம்பைத் தவிர மற்ற பகுதியெல்லாம் தங்க நிறமாக மாறிவிட்டதாகவும், வலக்காலில் உள்ள அந்த நரம்பும் தங்க நிறமாக மாறும்போது அரவிந்தர் உற்சவ மூர்த்திபோல் ஜொலிப்பார் என்றும் அந்நூலில் எழுதியுள்ளார். வானம் தெய்வீக சக்திகளின் உறைவிடமாகக் கருதப்படு
கிறது. ஸ்ரீஅரவிந்தர் ஸித்தி அடைந்தபோது நூற்றுப் பதினோரு மணி நேரம் அவர் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.அரவிந்தருடன் தியானம் பழகியவர்களில் முக்கியமானவர் மகாகவி பாரதியார். அவர் தம் கவிதையொன்றில் `வானகம் இங்கு தென்பட வேண்டும்‘ எனக் கனவு காண்கிறார்.

`மனதில் உறுதி வேண்டும்!
  வாக்கினிலே இனிமை வேண்டும்!
நினைவு நல்லது வேண்டும்!
  நெருங்கின பொருள் கைப்பட
வேண்டும்!
கனவு மெய்ப்பட வேண்டும்!
  கைவசமாவது விரைவில் வேண்டும்!
தனமும் இன்பமும் வேண்டும்!
  தரணியிலே பெருமை வேண்டும்!
கண்திறந்திட வேண்டும்!
  காரியத்தில் உறுதி வேண்டும்!
பெண் விடுதலை வேண்டும்!
  பெரிய கடவுள் காக்க வேண்டும்!
மண் பயனுற வேண்டும்!
  வானக மிங்கு தென்பட வேண்டும்!
உண்மை நின்றிட வேண்டும்!
  ஓம் ஓம் ஓம்!’

 பாரதியாரின் வானகம் பற்றிய ஆசை இன்னும் பல பாடல்களில் வெளிப்படுகிறது.
 
`கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
  கவர்ந்திட மாட்டாவோ - அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
  வசப்பட லாகாதோ?’
 இன்னொரு பாடலில் வெட்ட வெளியே தான் தான் என்கிறார்.

`வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்!
 மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்!
கானிழல் வளரும் மரமெலாம் நான்!
 காற்றும் புனலும் கடலுமே நான்!
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்!
 வெட்ட வெளியின் விரிவெலாம் நான்!
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்!
 வாரியில் உள்ள உயிரெலாம் நான்!’

  வானம் உள்ளிட்ட அனைத்திலும் தன்னைக் காணும் மகாகவியின் எல்லை கடந்த தத்துவப் பார்வை பிரமிக்க வைக்கிறது. மண்ணில் வானகம் தென்பட வேண்டும் என்பதே மகான்களின் ஓயாத கனவாக இருந்திருக்கிறது.பறவையினங்கள் வானில் பறக்கின்றன. மனிதர்கள் வானில் பறக்க இயலாதவர்கள். அவர்கள் ஆகாய விமானம் போன்ற ஊர்திகள் மூலமே வான்வெளியைக் கடக்கிறார்கள். ஆனால் சுதந்திர காலகட்டத்தில் வாழ்ந்த சக்கரையம்மா என்ற பெண் சித்தர் வானில் பறக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். திரு.வி.க., தாம் எழுதிய `உள்ளொளி’ என்ற நூலில் இந்தப் பெண் சித்தர் வானில் பறந்ததைத் தாம் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்: `சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர், காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப்போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் தங்கியிருந்த ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதியின் மாடியில் அவர் பறந்துவந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?’

வானில் பறந்த இந்தப் பெண் சித்தரின் வரலாறு தனிப் புனிதம் நிறைந்தது. இவருக்கு சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளின் சமாதி மற்றும் கலாக்ஷேத்ரா நிறுவனமும் இருக்கும் பகுதியில் ஒரு சமாதிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு அவரது விக்கிரகம் ஆராதனை செய்யப்படுகிறது. கோயிலுக்குள் கல் விக்கிரகமாகவும் தனி மண்டபத்தில் மெழுகுச் சிலையாகவும் சக்கரையம்மா அடியவர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாரதியாரின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிசெய்து அவரைப் புதுச்சேரிக்கு அனுப்பிவைத்த மருத்துவர் நஞ்சுண்டராவ், சக்கரையம்மாவைப் பராமரித்து அவரது அடியவராய் வாழ்ந்தவர். சக்கரையம்மன் கோயிலுக்கு உள்ளேயே அவரது பிரதான சீடர் நஞ்சுண்டராவுக்கும் சமாதிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

மகான் வள்ளலாரின் மறைவு ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக இன்றளவும் பேசப்படுகிறது. ஓர் அறைக்குள் வைத்துத் தம்மைப் பூட்டிக் கொண்ட வள்ளலார், பஞ்ச பூதங்களால் ஆகிய தம் உடலை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கே பிரித்துக் கொடுத்துக் கரைந்து மறைந்துவிட்டார் என்கிறார்கள். அண்மைக் காலத்தில் வாழ்ந்த உண்மை ஞானியான வள்ளலார் தமிழ் பக்தி இலக்கியத்திற்கும், ஜாதி மத பேதமற்ற உயர்நிலை ஆன்மிகத்திற்கும் ஆற்றிய சேவை அளவிட இயலாதது. தம்மை நம்பும் அடியவர்களின் மனத்தில் அவர் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

`வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!’
- என்று பாடினார் மகாகவி பாரதி. வான் புகழ் கொண்ட வள்ளுவர், வானத்தைப்
பற்றிப் பாடியும் பெரும்புகழ் பெற்றுவிட்டார் என்பதில் சந்தேகமில்லை அல்லவா?

(குறள் உரைக்கும்)