பூரண சுகத்தை விரும்புகிறவன் தர்மத்தின்படி நடக்க வேண்டும்!



மகாபாரதம் 88

விதுரர் தொடர்ந்து திருதராஷ்டினனுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்கினார்:‘‘எவன் ஒருவன் தனக்கு சமமானவர்களோடு விவாகம், நட்பு, வியாபாரம் போன்ற விஷயங்களைப் பேசுகிறானோ அவனுக்கு பிரச்னைகள் ஏற்படுவதில்லை. எவன் சிறிதளவே போஜனம் செய்கிறானோ, எவன் அதிகம் வேலை செய்து விட்டு சிறிதளவே தூங்குகிறானோ, எவன் நண்பனாக இல்லாதபோதும் கேட்டவனுக்கு செல்வம் தருகிறானோ அவனை எந்த அனர்த்தமும் அண்டுவதில்லை. மாறாக எதிர்பாராத இடங்களிலிருந்து ஆதரவுகள் அவனுக்கு வந்து சேரும்.

‘‘திருதராஷ்டிரரே, பாண்டுவின் புதல்வர்கள் ஐந்து பேரும் ஐந்து இந்திரர்களைப் போன்ற சக்தியுடையவர்கள். அவர்களை சிறுவயதிலிருந்து வளர்த்து நல்ல கல்வி கொடுத்தீர்கள். அவர்களும் உங்களுக்கு கட்டுப்பட்டு உங்கள் ஆணையை மீறாது இருக்கிறார்கள். அவர்களுக்குண்டான ராஜ்ய பாகத்தை அளித்து மற்ற புதல்வர்களோடு சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவியுங்கள். இவ்விதம் செய்தால் மக்களுடைய விமர்சனத்திற்கு நீங்கள் ஆட்படமாட்டீர்கள். மாறாக இருந்தால் வெகு வேகமாக மக்கள் உங்களுடைய யோக்கியதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பிப்பார்கள்.’’

‘‘விதுரா, யுதிஷ்டர் என்ன நினைக்கிறார் என்பதை எனக்கு கூறு. இந்த விஷயத்தில் அவருடைய எண்ணம் என்ன என்பதை எனக்குத் தெரியப்படுத்து. மற்ற நீண்ட போதனைகள் எனக்குத் தேவையில்லை,’’ கொஞ்சம் கடுகடுப்பாகவே திருதராஷ்டிரன் பேசினான்.‘‘மக்கள் தான் விரும்பிய பதில்களை எதிர்ப்பார்த்து அது கிடைக்காது போனால் பேசுபவரை நிந்திக்கத் துவங்கி விடுகிறார்கள். ஒருவருக்கு என்ன சொல்லை சொல்ல வேண்டுமோ, அந்த சொல்லைத்தான் அறிவாளி தேர்ந்தெடுக்கிறான். அது இனிமையானதோ, கடுமையானதோ அதைப் பற்றி கவலைப்படாது உனக்கு உபயோகமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் பேசுகிறேன். ஒரு மன்னனை குதூகலப்படுத்த நான் இங்கு வரவில்லை.

‘‘அசட்டு உபாயங்களைப் பயன்படுத்தி கபடமான காரியங்கள் வெற்றி அடைந்தால் அது நிச்சயம் கவலையைக் கொண்டு வந்து சேர்க்கும். சரியான காரியங்கள் அமைதியான முறையில் நடந்தால் அவை வெற்றியடையாவிட்டாலும் விமர்சிக்கப்படாது. ஒரு செயல் செய்யும்பொழுது அந்த செயலின் பிரயோஜனத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இதனால் என்ன லாபம் என்று யோசிக்க வேண்டும். நன்கு ஆலோசிக்க வேண்டும். என்ன விளைவு என்று தெரியாமல் ஒருபொழுதும் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கக்கூடாது.

‘‘எந்த அரசன் லாபம், நஷ்டம், கஜானா, தேசம், தண்டனை ஆகியவற்றின் அளவை அறியமாட்டானோ, அவன் ராஜ்யத்தில் அதிக நேரம் நிலைபெற முடியாது. கஜானாவின் இருப்பே தெரியாதவனும், கடுமையான தண்டனை வழங்குபவனும், தேசத்தின் நீள அகலம் தெரியாதவனும், செய்கின்ற காரியத்தில் லாபமும், நஷ்டமும் புரியாதவனும் எப்படி மன்னனாக இருக்க முடியும்? செல்வம் அதிகாரம் ஆகியவை கிடைத்து விட்டது என்பதற்காக மனம்போன போக்கில் நடந்து விடக்கூடாது. வீண் பிடிவாதம் செல்வத்தை, முதுமையை, அழகு உருவத்தை அழித்து விடுகிறது.‘

‘ஒழுக்கம் என்ன என்று சொன்னேன் அல்லவா, இதை உண்ணுகின்ற விஷயத்திலிருந்தே துவங்க வேண்டும். உண்ண முடிந்தவற்றை, உண்டபின் ஜீரணமாவதை, ஜீரணமானவுடன் தகுந்த சக்தி அளிப்பதை மட்டுமே உண்ண வேண்டும்.ருசியாக இருக்கிறது என்று வெறும் ஆவலுக்குட்பட்டு உணவை உண்ணக் கூடாது. உணவிலேயே இவ்வளவு கவனம் இருக்க வேண்டுமென்றால் மற்ற விஷயங்களை, செயல்களை செய்யும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்!‘பூவை கசக்காமல் தேனீ தேனை உண்பது போல மக்களை இம்சை படுத்தாமல் ஒரு அரசாங்கம் வரியை வசூலிக்க வேண்டும். தோட்டக்காரன் தோட்டத்திலுள்ள பூக்களை பறிக்கிறான், செடிகளை பிடுங்கிப் போடுவதில்லை. வரி கொடுக்கின்ற மக்களை இம்சித்தால் நாளை எவர் வரி தருவார். பிரியமாக பார்க்கின்ற மன்னனை அவர் மெளனமாக இருந்தாலும் ஜனங்கள் விருப்பத்தோடு ஏற்கிறார்கள்,’’ என்றார் விதுரர்.

‘‘விதுரா,’’ தாழ்ந்த குரலில் ரகசியம்போல திருதராஷ்டிரன் தன் சகோதரனை அழைத்தான். ‘‘வெகுநாளாய் மனதில் இருந்த கேள்வி, இப்போது கேட்கிறேன். வேதங்களில் மனித வயது நூறு என்று சொல்லப்பட்டிருப்பினும் அவ்விதம் அவர்கள் வாழ்வதில்லையே ஏன்?’’மன்னனின் குரலில் அறிய வேண்டும் என்ற அக்கறையைக் கண்டு விதுரன் நெகிழ்ந்தான். ‘‘மன்னா, ஐந்து கூரிய வாள்கள் மனிதனின் ஆயுசை வெட்டுகின்றன. மிகுந்த கர்வம், அதிகம் பேசுதல், தியாகமின்மை, தன் வயிறு வளர்க்கும் கவலை, சினேக துரோகம் என்ற ஐந்து கூரிய வாள்கள் சரீரம் உடையவரின் ஆயுசை வெட்டுகின்றன. குருவின் மனைவியோடு சேருபவன், மது அருந்துபவன், சலனமடைந்தவனை இம்சிப்பவன் இவர்கள் பிரம்மஹத்தி தோஷம் அடைவதற்குச் சமானமானவர்கள். இவர்களுடைய நட்பு ஏற்படுமானால் அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

பிராயச்சித்தம் என்பது மறுபடி இம்மாதிரி சங்கம் நேரக்கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பது. ஏற்பட்டதற்கு வருந்துவது. பெரியவர்களின் ஆணையை ஏற்பவன், நீதி அறிந்தவன், வள்ளல், பூஜை செய்து சமர்ப்பித்த உணவை உண்பவன், இம்சை செய்யாதவன், தவறான செயல்களிலிருந்து விலகியிருப்பவன், நன்றியுள்ளவன், சத்தியம் சொல்பவன், மென்மையான இயல்புடைய பண்டிதன் ஆகியோர் சொர்க்கத்திற்கு செல்கிறார்கள். ‘‘எப்பொழுதும் அன்பாக பேசுபவர் கிடைக்கலாம். ஆனால் பிரியமே இல்லாமல் அன்பாக பேசுகிறானா என்று ஆராய வேண்டும். நடிப்பவரிடமிருந்து உடனே விலகி விடவேண்டும். சூதாட்டம் தவறு என்று ஆரம்பத்திலேயே கூறினேன். யாருமே கேட்கவில்லை. வியாதிஸ்தனுக்கு மருந்தும், பத்தியமும் நல்லது என்று தோன்றாது. பாண்டவர்கள் என்ற சிங்கங்களை விட்டு கௌரவர்கள் என்ற நரிகளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள்.

இதற்காக ஒருகாலம் நீங்கள் வருத்தப்பட நேரிடும். எஜமானனுடைய நன்மைக்காக பாடுபடும் பக்தியுள்ள பணியாளனை எஜமான் கோபிப்பதில்லை. கோபிக்கக் கூடாது. அந்தப் பணியாளன் எஜமானனை ஆபத்துக் காலத்திலும் விடுவதில்லை. ஒரு அரசனின் ராஜ்யமும், செல்வமும் பிடுங்கப்பட்டால், அவன் சுக போகங்கள் மறுக்கப்பட்டு அவனுடைய நண்பர்களும், மந்திரிகளும் அவனுக்கு எதிராக பேசுகின்றனர். அனுபவித்து வந்த ராஜ்யத்தையும், செல்வத்தையும் இழப்பது என்பது மிகப்பெரிய கொடுமை. பெற்றவளையும் நம்ப முடியாதத் தன்மை அப்போது உண்டாகும்.‘‘எந்த வேலையாள் அதிகம் தெரியும் என்று சொல்கிறானோ, எஜமானனை விட கெட்டிக்காரன் என்று கருதிக் கொள்கிறானோ, தன்னுடைய அறிவு மிகக்கூர்மையானது என்று கர்வம் கொள்கிறானோ அவனை உடனே விலக்கி விட வேண்டும். உலகில் மிகப் பெரிய கோள்மூட்டி அவன்தான்.

வாழ்வில் அக்கறை உள்ள மனிதன் ஒருபொழுதும் அகாலத்தில் ஒருவன் வீட்டிற்கு செல்லக் கூடாது. இரவில் மறைந்து நிற்கக் கூடாது. எஜமானன் விரும்பும் பெண்ணை அடைய முயற்சி செய்யக் கூடாது. பணியாளன் முகத்திற்கு எதிரே நான் உன்னை நம்பவில்லை என்று சொல்லக் கூடாது. ஒரு பாசாங்கோடு அவனை ஆதரித்து வெளியேற்றிவிட வேண்டும். ஏனெனில் இவனும் பிறரிடம் போய் எஜமானனைப் பற்றி கோள் சொல்பவன்.

‘‘வாரி வழங்குகின்ற மன்னன், விபச்சாரம் செய்யும் பெண், அரசாங்க சிப்பந்தி, புதல்வன், சகோதரன், சிறிய குழந்தையுடைய விதவை, படைவீரன், அதிகாரம் பிடுங்கப்பட்டவன் ஆகியவனோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு மனிதன் தினந்தோறும் நீராட வேண்டும். பலம், ரூபம், இனிமையான குரல், பிரகாசமான வண்ணம், மென்மை, நறுமணம், புனிதம், அழகு, சுகுமாரத் தன்மை, அழகிய பெண்கள் என்று பத்து லாபங்கள் கிடைக்கின்றன. அதேபோல் ஒருவன் தினந்தோறும் சிறிதளவே உண்ண வேண்டும். ஆரோக்கியம், ஆயுள், பலம், சுகம், சத்தான உற்பத்தி, நல்ல தூக்கம் என்று உள்ளவனுக்கு சிறிய உணவு காரணமாகின்றன.

‘‘கடமையைச் செய்யாதவன், அதிகம் உண்பவன், சகலரிடமும் பகை கொள்பவன், மாயாவி, குரூரமானவன், தேச கால அறிவற்றவன், நல்லவன் போல் வேடம் தரிப்பவன் ஆகியவனை ஒருபொழுதும் வீட்டில் தங்க விடக்கூடாது. கவலையளிக்கும் தொழிலை செய்பவர்கள், அதிக குற்றம் செய்பவர்கள், எப்பொழுதும் பொய் பேசுபவர்கள், நிலையற்ற பக்தியுடையவர்கள், அன்பற்றவர்கள், தன்னை கெட்டிக்காரனாக கருதுபவர்கள் ஆகியோருக்கு உதவி செய்யக் கூடாது. புதல்வர்களை தோற்றுவித்து அவர்களை கடன் பாரத்திலிருந்து விடுவித்து, ஏதேனும் ஒரு வாழ்க்கைக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். கன்னிகைகளை தகுந்த இடத்தில் கம்பீரமாக திருமணம் செய்விக்க வேண்டும். பிறகு காட்டிற்குப் போய் முனிவர்கள் போல வாழ வேண்டும். எது பிராணிகள் அனைத்திற்கும் நன்மை செய்வதோ, எது தனக்கு சுகம் அளிப்பதோ அதை ஈஸ்வர அர்ப்பணமாக செய்ய வேண்டும்.

‘‘புரியவில்லையா, உன் உணவு வெறுமே வாங்கியதாக இருக்கக்கூடாது. அது தயார் செய்யப்பட்டு, கடவுளுக்கு நிவேதனம் செய்யப்பட்டு, அது இப்பொழுது வலிமைமிக்கது என்ற எண்ணத்தோடு, உண்ண வேண்டும். மனிதனுடைய சித்திகள் அனைத்தும் உணவை ஈஸ்வர அர்ப்பணமாக செய்வதிலிருந்து துவங்கும். இந்திரனைப் போன்ற பலம் பொருந்திய மன்னா, வானத்தில் கோணலாக தோன்றும் வால் நட்சத்திரம் பூமியில் பல தீங்குகளை விளைவிப்பது போல பீஷ்மரும், துரோணரும் கோபத்தால் பல தீங்குகள் செய்வார்கள். பாண்டவர்கள் புலிகளைப் போன்றவர்கள். கௌரவர்களோ காடுகளைப் போன்றவர்கள். காடுகளன்றி புலிகள் வாழாது. புலிகள் இல்லையெனில் காட்டின் மீது பயம் இருக்காது. புலிகளையும், காட்டையும் பிரித்தே வைக்கின்ற சூழ்ச்சி என்ன? யோசியுங்கள்.

‘‘எவன் செல்வத்தின் பூரண சுகத்தை விரும்புகின்றானோ அவன் தர்மத்தின்படி நடக்க வேண்டும். அமுதத்திலிருந்து சத்து விலகாதது போல தர்மத்திலிருந்து நல்லது விலகுவதே இல்லை. யாருடைய அறிவு பாவத்திலிருந்து விலகி நன்மையை நாடுகிறதோ அவனுக்கு தர்மம் புலப்படும். இன்னும் சூட்சமமாகச் சொல்லப்போனால் எவன் கோபத்திலும், மகிழ்ச்சியிலும் தன்னுடைய வேகத்தை மட்டுப்படுத்தி வைக்கிறானோ அவனுக்கு எல்லாமும் வசப்படும். அவன் எந்த ஆபத்திலும் மயக்கமடைவதில்லை. அவனிடம் ராஜ்ய லக்ஷ்மி அடைக்கலம் புகுகிறாள். மனிதனிடம் ஐந்து வகை பலம் உள்ளது. பாஹுபலம் என்பது தாழ்வான பலம். நல்ல மந்திரி கிடைப்பது இரண்டாவது பலம். செல்வம் இருப்பது மூன்றாவது பலம். தந்தை மற்றும் பாட்டன் இயல்பான பலம், அபிஜாதம் என்பது நான்காவது பலமாகும். பாகுபலம் என்கிற படைபலத்திலிருந்து இந்த நான்கு பலங்களையும் தாண்டி ஐந்தாவதாக வாழ்வில் வெற்றி பெற புத்தி பலம் தேவைப்படுகிறது.

‘‘யாருக்கும் அபகாரம் செய்யாத வாழ்க்கை நல்லது. பெண், அரசன், படித்த பாடம், மனித சாமர்த்தியம், பகைவன், சுகபோகம், தன் ஆயுள் மீது முழுமையான நம்பிக்கை உடையவன் எல்லாம் அறிவுள்ளவன் அல்ல. அறிவுள்ளவனுக்கு வைத்தியம் ஏதுமில்லை. மந்திரமில்லை. மங்கள காரியம் இல்லை. அவன் இவையெல்லாம் தாண்டி நிற்கிறான். ஒரு மனிதன் பாம்பு, அக்னி, சினேகம், தன் குலத்தில் தோன்றிய மனிதன் ஆகியோரை அவமதிக்கக்கூடாது. அக்னி ஒரு மரக்கட்டைக்குள் மறைந்திருக்கிறது. தூண்டப்படுமானால் அது ஒரு காட்டையே அழித்து விடும். பாண்டவர்கள் மரக்கடையில் மறைந்த தீயைப் போல இருக்கிறார்கள். நீங்கள் ஒரு கொடியைப் போன்றவர். பாண்டவர்கள் பெரிய சால மரத்திற்கு ஒப்பானவர்கள். அந்த மரத்தை சாராது கொடி வளராது.

தர்ம, அர்த்த, கர்ம காரியங்களை, செய்வதற்கு முன்பு சொல்லக்கூடாது. செய்து விடவேண்டும். நாளைக்கு உணவு தானம் செய்கிறேன் என்று இன்று சொல்லக் கூடாது. செய்து விடவேண்டும். வீட்டு மனை வாங்கப் போகிறேன் என்று சொல்லக் கூடாது. செய்து விடவேண்டும். இந்த பூஜை இன்ன தேதியில் செய்யப் போகிறேன் என்று பறையறிவிக்கக் கூடாது. அமைதியாக ஆரம்பித்து விடவேண்டும். மன்னன் ரகசிய ஆலோசனையை மலை உச்சி அல்லது அரண்மனையின் மேல் மாடம், காட்டில் புல் இல்லாத இடம் ஆகிய இடங்களில் தான் செய்ய வேண்டும்.‘‘எவன் நண்பன் இல்லையோ, நண்பனாக இருந்தாலும் எவன் பண்டிதன் இல்லையோ, நண்பனும் பண்டிதனாக இருந்தாலும் எவன் மன்னனுடைய பேச்சை கேட்க மாட்டானோ அவனை ரகசிய ஆலோசனையிலிருந்து விலக்கி விடவேண்டும்.

ரகசியத்தை ரகசியமாக வைக்கின்ற மன்னனுக்கு வெற்றி கிடைக்கிறது. வேதங்களைப் படிக்காமல் ஒரு அந்தணனுக்கு சிரார்த்த காரியங்கள் செய்வதற்கு அதிகாரம் இல்லை. அதேபோல ஒரு மன்னன் தியானம், ஆசனம், சமாதானம் போன்ற குணங்களை அறியாமல் ரகசிய ஆலோசனை செய்ய தகுதியற்றவன். எந்த மன்னன் அவசியமான காரியங்களை நேரிடையாக கவனிக்கிறானோ, யார் பொக்கிஷத்தின் கணக்கு பற்றி அறிவு கொண்டிருக்கிறானோ அவனை வெற்றி பெற முடியாது. ஒரு அரசன் தன்னுடைய பணியாளர்களுக்கு திருப்தியான அளவுக்கு செல்வம் அளிக்க வேண்டும். எல்லாவற்றையும் தானே சுருட்டிக் கொள்ளக் கூடாது. அந்தணனை அந்தணன் அறிகிறான். மனைவியை கணவன் அறிகிறான். மந்திரியை மன்னன் அறிகிறான். ஆனால் மன்னனை இன்னொரு மன்னன்தான் அறிய முடியும்.

‘‘மன்னனுடைய அசைவுகள் குறித்து, யோசிக்கும் முறை குறித்து இன்னொரு மன்னனுக்குத்தான் தெரிகிறது. வதத்திற்கு வந்த, வதத்திற்குரிய எதிரியை ஒருபொழுதும் விடக்கூடாது. எதிரி பலம் மிகுந்திருந்தால் அவனோடு பணிவாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் சமயம் பார்த்து கொன்று விடவேண்டும். பகைவனை குறித்த பயம் ஒரு அரசனை தூங்க விடாது. ஒரு மன்னன் தன் கோபத்தை முதியோன், பகைவன், நோயாளி ஆகியோரிடம் காண்பிக்கக் கூடாது. முட்டாள்களால் ஏற்படுத்தப்படும் அறிவற்ற கலகத்தை ஒரு மன்னன் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. யாருடைய மகிழ்ச்சியால் பயனில்லையோ, யாருடைய கோபம் வீணானதோ அவர்களை விலக்கிவிட வேண்டும். பெண் அலியான கணவனை விரும்பாதது போல நகர்த்திவிட வேண்டும். அறிவால் செல்வம் பெருகுகிறது. தரித்திரத்திற்கு காரணம் முட்டாள்தனம்.

முட்டாள் மனிதன் வித்தை, சீலம், வயது, அறிவு, செல்வம் மற்றும் குலத்தில் மதிக்கத் தகுந்த பெரியவர்களை அவமதிக்கிறான். அவனால் அவன் சமூகத்திற்கு கெடுதல் ஏற்படுகிறது. ‘‘தைரியம், மன அடக்கம், புலனடக்கம், தூய்மை, இரக்கம், மென்மையான வாக்கு ஆகிய விஷயங்கள் லக்ஷ்மிகரத்தை அதிகப்படுத்துபவை. யார் மீது குற்றம் சுமத்துவதால் யோக க்ஷேமத்திற்கு இடையூறு நேருமோ அவர்களை தெய்வத்திற்கு சமமானவராக நினைக்க வேண்டும். பிறரை நிந்திப்பவர்கள், பொதுமக்களுக்கு துயரம் தருபவர்கள், கலகம் செய்வதில் ஆவல் உள்ளவர்கள், எவரோடு இருப்பது ஆபத்தானதோ அம்மாதிரி மனிதர்களிடமிருந்து செல்வம் பெறக்கூடாது, தரவும் கூடாது. தீமை தீமையைத்தான் விளைவிக்கும். காமுகன், கலகம் செய்பவன், போக்கிரி, வெட்கமற்றவன், ஊரறிந்த பாபியோடு சினேகம் கொள்ளக் கூடாது. அவனால் ஏதும் லாபம் இருப்பினும் அதைத் தியாகம் செய்து விடவேண்டும்.

நீச்ச, கொடூர புலன்களை வெல்லாத மனிதரிடமிருந்து அறிவுள்ளவர்கள் விலகியே நிற்கிறார்கள்.‘‘ஒருவன் தன் குடும்பத்தினரிடமும், ஏழையிடமும், தீனர்களிடமும், நோயாளிகளிடமும் அன்போடும் அருளோடும் இருக்க வேண்டும். அவனுடைய குடும்பமும், பசுக்களும் விருத்தியடைகின்றன. அவன் மங்களகரமான விஷயங்களை அடைகிறான். மேற்சொன்ன மனிதனுக்கு உதவும்போது அவர்களிடமிருந்து பெருகும் நன்றிப் பெருக்கு எந்தத் தடையும் இல்லாத ஆசிர்வாதமாக அன்பு செய்தவனை சூழ்ந்து கொள்கிறது. தன் குடும்ப ஜனங்களுக்கு மரியாதை செய்பவன் விருத்தியடைகிறான். அந்த குடும்ப அங்கத்தினர்கள் குணமற்றவர்களாக இருந்தாலும் அவர்களை காக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.

‘‘மன்னா, நான் பேசியவற்றை மனதில் வைத்து பாண்டவர்கள் மீது கருணை செய்யுங்கள். அவர்கள் வாழ்க்கை நடத்த சில கிராமங்களை கொடுங்கள். நீங்கள் இந்த குடும்பத்தில் பெரியவர். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும். ஒரு இனத்தின் மக்களே துன்பத்தில் உதவிக்கு வருகிறார்கள். அவர்களே துன்பத்தில் மூழ்கடிக்கவும் செய்கிறார்கள். அவர்களில் நன்னடத்தை உள்ளவர்கள் நன்மை தருகிறார்கள். தீயவர்கள் ஒரு மன்னனை தூக்கம் இல்லாமல் செய்கிறார்கள். பாண்டவர்கள் நல்லவர்கள். அவர்களிடமிருந்து நன்மையே அடைவீர்கள். விஷமுள்ள அம்பை கையில் எடுத்த வேடனுக்கு அருகே போகும் மான் எப்படி அவனால் துன்பமுறுகிறதோ, ஒரு இன மக்களின் செல்வந்தனாக இருப்பவன் மூலம் அவன் இனம் துயரம் அடைய வாய்ப்பிருக்கிறது.
 
இனமக்களின் குற்றங்களுக்கு தலையாட்டுகிறவன் அவர்களின் பாபங்களில் பங்கேற்கிறான். எதைச் செய்வதால் முடிவில் வருத்தப்பட நேருமோ அதை செய்யாதிருப்பது நல்லது. இதற்கு ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது. இந்த அறிவு செயல்பட அமைதி தேவைப்படுகிறது. இந்த அமைதி ஆசையற்ற குணத்தின் மூலம் ஏற்படும். ஆசையுள்ளவன், அதீத ஆசையுள்ளவன், யோக்கியதைக்கு அதிகமான ஆசையுள்ளவன் அதற்கேற்ற துன்பத்தை அடைகிறான். ‘‘துரியோதனனால் ஒரு சபையில் குற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த குலத்திற்கு முதியவர். உங்களால் அந்தக் குற்றம் கழுவப்பட வேண்டும். உங்கள் குலத்திற்கு ஏற்பட்ட களங்கம் நீக்கப்பட வேண்டும். அப்பொழுது நீங்கள் அறிவுடையவர்களால் மதிக்கப்படுவீர்கள். எவன் ஆழ்ந்து யோசித்து தன் யோசனையை காரிய ரூபமாக மாற்றுகிறானோ அவன் பெரும் புகழ் பெறுகிறான். வெறுமே யோசித்துக் கொண்டிருப்பவனும், அதைக் காரியமாக்க மனம் இல்லாதவனும் அவமானத்தை அடைகிறான்.

இது நல்லது பயக்கும் என்று தீர்மானித்து விட்டால் நாலு பேர் ஆலோசனை புரிந்து விட்டால் அந்த யோசனை செயலாக்கப்பட வேண்டும். தட்டிலேயே இருக்கும் உணவு பசியை போக்காது. முன்பு செய்த பாவங்களை மறுபடி செய்தவனும், அதைப் பற்றி சிறிதும் யோசிக்காதவனும் நரகத்தில் வீழ்த்தப்படுகிறான். போதை வஸ்துக்களை பயன்படுத்துபவன், நல்ல உறக்கம் இல்லாதவன், அறிய வேண்டிய விஷயங்களை அறியாதவன், துஷ்ட மந்திரிகளை நம்புவன், திறமையில்லாத வேலையாளிடம் நம்பிக்கை வைத்தவன், தன்னுடைய கண், முகத்தில் மாறுதல் ஏற்படுவதை அறியாதவன் ஆகியோரை அழிவுக்கு அழைத்துக் கொண்டு போகும். கடலில் விழுந்த பொருள் அழிந்து விடுகிறது. காது கொடுத்து கேட்காதவனிடம் கூறப்பட்ட சாஸ்திர ஞானம் வீணாகப் போகிறது. வினயம்
அபகீர்த்தியை அளிக்கிறது.

‘‘பராக்கிரமம் அனர்த்தத்தை அழிக்கிறது. பொறுமை கோபத்தை அழிக்கிறது. நன்னடத்தை தீய லட்சணத்தை அழிக்கிறது. எவன் பண்டிதனின் சேவைகளில் இருக்கிறானோ, எவன் தார்மீகனோ, எவன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறானோ, நண்பனிடம் எவன் இனிமையாகப் பேசுகிறானோ அவனை அருகே வைத்து ஆதரிக்க வேண்டும். இரண்டு நண்பர்களின் மனதோடு மனம் சேர்ந்தாலும், மறைக்க வேண்டிய ரகசியத்தை மறைக்க வேண்டும். ஆனால் அறிவோடு அறிவு சேரலாம். இத்தகைய நட்பு அழிவதில்லை.

(தொடரும்)