நாம், நாமாகவே விளங்குவோம்!



வணக்கம் நலந்தானே!  

நமக்கு ஏதோ பிரச்னை, அதிலிருந்து மீள முடியாதோ என்ற பயம். யாரிடமாவது சொல்லி யோசனையோ, தீர்வோ பெற முயற்சிக்கிறோம். நம் பிரச்னையைக் கேட்பவர்கள், ‘உன்னைவிட மோசமான நிலையிலிருப்பவரைக் கொஞ்சம் யோசித்துப் பார், உன் பிரச்னை உனக்குப் பெரியதாகவே தெரியாது,’ என்று அறிவுரை சொல்கிறார்கள். அவ்வாறு நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போது ‘நம்மைவிட மோசமான நிலையில் ஒருவர் வாழ முடியுமானால் நாம் ஏன் இந்தப் பிரச்னையோடேயே வாழ முடியாது!’ என்ற சுய அனுதாபம் நமக்குத் தோன்றிவிடலாம், அதனால் தீர்வு காண நாம் முயற்சிக்காமலேயே போய்விடலாம்.

வேறு சிலர், ‘உன்னைவிடவும் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தவர்கள் எல்லாம் அவற்றையெல்லாம் மீறி பெரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார். அவர்களைப் போலவே நீயும் உன் பிரச்னையிலிருந்து விடுபடலாம்,’ என்றும் அறிவுரை சொல்வார்கள். இத்தகைய வெற்றியாளர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்ளும்போது  அவரைப்போல நம்மால் முடியுமா என்ற அயர்ச்சி நமக்கு ஏற்படலாம். சிலசமயம் அவர்மேல் பொறாமைகூடத் தோன்றலாம், அதனாலேயே அவரைப் பின்பற்றத் தயக்கமும் ஏற்படலாம்.
 
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்னை, அதற்கான சூழல், காரண காரியங்கள், அந்த பிரச்னையிலிருந்து விடுபட முடியாத இயலாமை, அறிவுத் திறன் இன்மை, எதிர்பார்க்கும் உதவியோ, ஒத்துழைப்போ கிடைக்காமல் போவது, அதனாலேயே பிரச்னையிலிருந்து மீள முடியாமலும் போவது என்பது முதல்வகை.பிரச்னையை சவாலாகக் கருதும்போது அதிலிருந்து விடுபட தோன்றும் புது உத்திகள், அதற்கேற்ப வந்தமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள், உதவிகள், ஒத்துழைப்புகள் இவற்றால் மீண்டுவிடுவது இரண்டாவது வகை.

ஒருவரைப் பின்பற்றி இன்னொருவரால் வாழ முடியாது என்பதுதான், யாரைப் பார்த்தும் அவரைப் போலவே நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தம். இதுதான், இப்படித்தான் என்ற எல்லைக்குள்ளேயே ஒவ்வொருவரும் வாழ நேர்கிறபோது, அவரவருக்கென்றே தனிப்பட்ட சிந்தனைத் திறன், செயல்திறன் எல்லாம் அமைகின்றன. இதற்கேற்பத்தான் சூழ்நிலைகளும், சுற்றியிருப்பவர்களும் நமக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைகிறார்கள்.

நாம் நாம்தான். யாருடனும் ஒப்பிட்டுக்கொண்டு நம் வாழ்க்கையை யாரைப் போலவும் திசை திருப்பிக்கொள்ள முடியாது. ரோல் மாடல் என்று ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் என்றால், அவர் வெறும் மாடல்தான் என்பதும், அவரைப் பின்பற்றுபவர்கள் எல்லாம் அவராகவே ஆகிவிட முடியாது என்பதும்தானே உண்மை! ஏன் தெரியுமா?கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப் பரீட்சைக்கான கேள்வித் தாள்களை தனித்தனியே அமைத்துத் தருகிறார். ஒருவரைப்போல அடுத்தவருக்குக் கேள்விகள் அமையாது. அதனால் யாரும் யாரையும் பார்த்து காப்பி அடித்து பதில் எழுத முடியாது. அதனால் ஒப்பிட்டு மன வருத்தம் கொள்வதோ, பிரமித்துப் பொறாமை கொள்வதோ செய்யாமல், இறைவனைத் துதித்தோமானால், அவரவருக்கு உரிய பதில்களை அவர் எந்த வகையிலாவது அளித்து நம்மை நாமாக விளங்க வைப்பார்.

- பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்
)