தயாரிப்பு நிர்வாகம்னா என்னன்னு தெரியுமா?



“சார், என்னைப் பத்தி ஈஸியா அறிமுகப்படுத்திக்கணும்னா, ‘இருட்டு அறையில்  முரட்டு குத்து’ எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் என்னுடைய மகன். அந்தப் படத்துக்கு நான்தான் தயாரிப்பு நிர்வாகி. நானும் மகனும் ஒரே துறையில் இருப்பது மகிழ்ச்சியே’’ என்கிறார் நடிகரும் தயாரிப்பு நிர்வாகியுமான ஜெயக்குமார்.

இவர் ‘என்னைவிட்டுப் போகாதே’ படம் தொடங்கி ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘மிஸ்டர் லோக்கல்’, ‘மகாமுனி’ உட்பட ஏராளமான படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணிபுரிந்தவர். தற்போது பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’, தினேஷ் நடிக்கும் ‘பல்லு படாம பாத்துக்க’ உட்பட ஏராளமான படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஒரு மாலை வேளையில் ரிலாக்ஸ் மனநிலையில் இருந்த ஜெயக்குமாரிடம் பேசினோம்.
“சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?”

“எனக்கு சொந்த ஊர் சென்னை. அப்பா போலீஸ் ஆபீஸர். எல்லா அப்பாவும் தன்னைப் போல் மகனும் அதே துறையில் சாதிக்கணும் என்று நினைப்பதுண்டு. அப்பா மாதிரி எனக்கும் போலீஸ் ஆபீசராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் அப்பா, ‘போலீஸ் வேலை என்னுடன் போகட்டும். நீ வேறு எதாவது பண்ணு’ என்றார். அப்பா அப்படிச் சொன்னதில் எனக்கு வருத்தம்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் அண்ணா சாலையில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தேன். நாலைந்து ஆட்டோ வைத்திருந்தேன். இதுதான் என் ஆரம்ப கால பிசினஸ். ஒரு விபத்து மாதிரிதான் சினிமாவுக்கு வந்தேன். திரைத்துறைக்கு நானும் வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அது 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி. என்னுடைய வீடு  சாலிக்கிராமத்தில் உள்ளது.

அன்று எங்கள் வீட்டில் வாடகைக்கு தயாரிப்பாளர் ஒருவர் வந்தார். அவர்தான் முதன் முதலாக எனக்கு சினிமா மீது நாட்டம் வர தூபம் போட்டவர். அதன் பிறகு இயக்குநர் டி.கே.போஸ் சாரின் அறிமுகம் கிடைத்தது. யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காத நிலையில் அவருடைய படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்தார்.

அவர்தான் என்னுடைய குரு. என்னை பட்டை தீட்டியதில் இயக்குநர் கே.ரங்கராஜ் சாருக்கும் பங்கு உண்டு. இந்த ஜாம்பவான்கள்தான் எனக்கு தயாரிப்பு நிர்வாகத்துக்கான மேலாண்மையைக் கற்றுக்கொடுத்தார்கள். இப்போது சினிமா என்னை நல்ல இடத்தில் உட்கார வைத்துள்ளது.”
“சினிமாவுக்கு வருபவர்கள் நடிக்கும் கனவிலோ அல்லது  டைரக்‌ஷன் பண்ணும் ஆசையிலோதான் வருவார்கள்.  உங்களுக்கு எப்படி தயாரிப்பு நிர்வாகி வேலை மீது ஆர்வம் வந்தது?”

“எனக்கு ஃபோட்டோகிராஃபி பிடிக்கும். அதன் அடிப்படையில் ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து என்னுடைய கவனம் டைரக்‌ஷன் பக்கம் திரும்பியது. அங்கும் அலைக்கழிக்கப்பட்டேனே தவிர கதவுகள் திறக்கப்படவில்லை. அடுத்து நடிக்க கொடுப்பினை இருக்கிறதா என்று முயற்சி பண்ணினேன்.

அதுவும் அமையவில்லை. ஏன்னா, இன்று இருப்பதுபோல் சினிமா அன்று எளிது இல்லை. அப்போது தடைகள் அதிகமாக இருக்கும். நம்முடைய வளர்ச்சி யைத் தடுக்க பலர் முட்டுக்கட்டையாக இருப்பார்கள். அதையும் மீறி சில படங்களில் தலையை மட்டும் காண்பித்துள்ளேன். கடைசியாக அமைந்த துறைதான் புரொடக்‌ஷன்.”

“நீங்கள் முதன் முதலாக நிர்வாகியாக வேலை பார்த்த படம்?”

“முதல் படம் ‘வளைகாப்பு’. அதன்பிறகு ராமராஜன் நடித்த ‘என்னைவிட்டுப் போகாதே’, ‘பொங்கி வரும் காவேரி’ உட்பட ஏராளமான ராமராஜன் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்துள்ளேன். நான் வேலை செய்த அனைத்துப் படங்களும் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளது. அதே
மாதிரி பாடல்களும் பெரியளவில் ஹிட்டாகும். ‘ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்...’ பாடல் மிகப் பெரிய ஹிட். ராஜ்கிரண் படங்களிலும் வேலை பார்த்துள்ளேன்.”

“உங்கள் மகனுடன் இணைந்து வேலை செய்வோம் என்று எதிர்பார்த்தீர்களா?”

“நிச்சயமாக இல்லை. இவருடன் வேலை செய்ய வேண்டும், அவருடன் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கமாட்டேன். எந்தப் படத்தில் வேலை செய்தாலும் நான் வேலை செய்யும் படங்கள் ஓடணும் என்று நினைப்பேன். என்னுடைய மகன் அவருடைய சொந்த முயற்சியில் இயக்குநராக வந்துள்ளார். மகனை சிபாரிசு செய்யாததற்குக் காரணம் இந்தக் காலத்துப் பசங்க மாத்தி யோசிக்கிறவர்கள்.

நான் ஒரு இடத்துக்கு சிபாரிசு செய்தபிறகு அந்த இடத்தைவிட்டு ஜம்ப் ஆனால் எனக்கு சங்கடமாக மாறும். அதனால் சிபாரிசு பண்ணுவதைத் தவிர்த்துவிட்டேன். என் மகன் சினிமாவுக்கு வரப்போகிறேன் என்று சொன்னபோது ஒரே ஒரு கண்டிஷன் போட்டேன். எனக்கு ஒரு டிகிரி வாங்கிக் கொடுத்துவிட்டு நீ சினிமாவுக்குப் போ என்றேன். அவரும் என்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்துள்ளார்.”

“உங்கள் மகனுடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?”

“வீட்டில்தான் எங்களிடையே அப்பா-மகன் உறவு இருக்கும். மற்றபடி படப்பிடிப்புத் தளத்தில் அப்பா-மகன் என்ற உறவு இருக்காது. அந்த இடத்தில் சந்தோஷ் ஒரு இயக்குநராகவும் நான் ஒரு நிர்வாகியாகவும்தான் இருப்பேன். ஸ்பாட்டில் இருந்தாலும் கேமரா பக்கம் போகமாட்டேன். வெளியிலிருந்தே படப்பிடிப்புக்கு என்ன மாதிரி வசதிகள் வேண்டும் என்பதை மேற்பார்வையிட்டு தெரிந்துகொள்வேன். சிலசமயம் வித்-அவுட் ப்ரேக் போனால் ஏன் அப்படி என்று கேட்டு தெரிந்துகொள்வேன். அவருக்கு என்று தனிச் சலுகை எதுவும் கொடுக்கமாட்டேன்.”

“நீங்கள் வேலை செய்த படங்களில் சவால் நிறைந்த படமாக எந்தப் படத்தை சொல்வீர்கள்?”

“பெரும்பாலும் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு இருக்கும் சவாலான விஷயம் எது என்றால் லொக்கேஷனுக்காக பர்மிஷன் வாங்குவது கடினமாக இருக்கும். பிரபுதேவா நடித்த ‘தேள்’ படத்துக்காக தொடர்ச்சியாக 15 நாட்கள் கோயம்பேடு லொக்கேஷன் தேவைப்பட்டது. அந்த இடத்துக்கான அனுமதி கிடைப்பது பெரிய போராட்டமாக இருந்தது. நாளை படப்பிடிப்பு என்றால் முதல்நாள் இரவு 9 மணிவரை அனுமதி கிடைக்கவில்லை. நண்பர்கள் சிலரின் உதவியால் அது நடந்தது. மற்றபடி சவால் மாதிரி தெரியும் விஷயங்களை எளிதாகப் பண்ணுவதுதான் என்னுடைய ஸ்டைல்.  என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்று சொல்லமாட்டேன்.”

“ஒரு தயாரிப்பு நிர்வாகியின் வேலைகள் என்னென்ன?”

“புதிய கம்பெனியாக இருந்தால் டிஸ்கஷனுக்கு ரூம் போடுவது, ஆபீஸ் பார்த்துக் கொடுப்பது, ஆர்ட்டிஸ்ட், டெக்‌னீஷியன்கள் ஃபிக்ஸ் பண்ணுவது, ரிலீஸ் வேலைகள் என்று ஏராளமான வேலைகள் இருக்கும். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஏ டு இசட் வேலைகள் எங்களுடையது. கிட்டத்தட்ட 24 க்கும் மேற்பட்ட துறைகளை டீல் பண்ணணும்.

தயாரிப்பாளரின் நலனை கருத்தில் கொண்டு சம்பளம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் தயாரிப்பாளருக்கு அவமானம் வராதபடிக்கு பார்த்துக் கொள்ளவேண்டும். ஏன்னா, அவர்கள் எந்த மாதிரி சூழ்நிலைகளில் பணத்தைத் திரட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி கணவனின் வருமானத்தை அறிந்து மனைவி செலவு செய்ய வேண்டுமோ அதுமாதிரியான மனநிலையில் தயாரிப்பு நிர்வாகி செயல்பட வேண்டும். ஏன்னா, தயாரிப்பாளர் என்று ஒருவர் இல்லை என்றால் சினிமா இல்லை.”

“ஒரு படத்தின் பட்ஜெட் உயர்வுக்கு தயாரிப்பு நிர்வாகியும் காரணம் என்று சொல்கிறார்களே?”

“இது சங்கடமான கேள்வி. தயாரிப்பாளருக்கு வீண் செலவு வைக்கும் வேலைகளை நான் ஃபில்டர் பண்ணிவிடுவேன். ஒரு தயாரிப்பாளரை நிதிநெருக் கடியில் இருந்து காப்பாற்றும் பொறுப்பு தயாரிப்பு நிர்வாகிக்கு உண்டு. அதே சமயம் தயாரிப்பாளர் மூன்று பேரை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். இயக்குநர், கேமராமேன், தயாரிப்பு நிர்வாகி... இந்த மூவரின் தேர்வு சரியாக இருந்தால் அந்தப் படம் தப்பு பண்ணாது. சினிமா என்பது பொன் முட்டை போடும் வாத்து மாதிரி. அதை மிஸ்யூஸ் பண்ணினால் அழிவு நிச்சயம். சரியாக யூஸ் பண்ணினால் சினிமா அட்சய பாத்திரம்.”

“இப்போது சினிமா தயாரிப்பு பணி எப்படி இருக்கிறது?”

“இன்று சினிமா துறை கடின மான சூழ்நிலையில் இருக்கிறது. ஏராளமான படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. முதல் நாளே இணையத்தில் படம் வெளியாவதால் வசூல் குறைந்துவிடுகிறது. கோடியில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் பல போராட்டங்களைச் சந்தித்துதான் படத்தை தியேட்டருக்குக் கொண்டுவருகிறார்கள். அப்படியும் சில நல்ல படங்கள் ஓடாமல் போகிறது. சில சமயம் ஒண்ணுமே இல்லாத படங்கள் ஓடுது. இதை நேரம் என்று சொல்வதைவிட வேறு ஒன்றுமில்லை.

சில நிறுவனங்கள் சரியான திட்டமிடலுடன் படம் எடுக்கிறார்கள். ஒரு படைப்புக்கு என்ன தேவையோ அதைச் செய்கிறார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா போன்றவர்கள் சினிமாவில் இருப்பது வரப்பிரசாதம். அவர் போன்ற தயாரிப்பாளர்கள் ஒரு இயக்குநருக்கு கிடைத்தால் வெற்றி நிச்சயம்.”

“உங்கள் மகன் இயக்கத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் உண்டா?”

“அப்படி ஒரு எண்ணம் இதுவரை தோன்றவில்லை. எனக்கு பின்னாடி தயாரிப்பு நிர்வாகியாக  வந்தவர்களில் நிறையப் பேர் படம் தயாரித்துள்ளார்கள். வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால் படத் தயாரிப்பில் எனக்கு ஆர்வமில்லை.”

“வேறு என்ன பணி செய்கிறீர்கள்?”

“சின்னத்திரையில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு வருகிறது. சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘ரன்’ தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். ஏராளமான குறும்படங்களில் நடித்து வருகிறேன். மகனுடைய இயக்கத்தில் நடிக்க இதுவரை வாய்ப்பு அமையவில்லை.”

- சுரேஷ்ராஜா