காதல் வந்துவிட்டது! மகிமா பகிரங்கம்



‘மகாமுனி’ ஹிட் அடித்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறார் மகிமா நம்பியார். படத்தின் புரொமோஷன் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தவரைத் தடுத்து நிறுத்தி பேசினோம்.“மகிமாவிற்கு சினிமா ஆர்வம் எப்படி வந்தது?”“எனக்கே தெரியவில்லை.

எங்கள் வீட்டில் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு எப்படியோ சிறுவயது முதலே நடிப்பின் மீது  ஆசை வந்துவிட்டது. நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்.”

“முதன்முதலாக கேமரா முன்பு நின்ற அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?”

“எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று நடித்துப் பார்ப்பேன். திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன்.

ஆனால் சினிமாவில் நடிகையாக எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஒருமுறை கேரளாவிற்கு லொக்கேஷன் பார்க்க வந்த இயக்குநர் சாமி சார் கண்ணில் நான் படவும், ‘சிந்துசமவெளி’ படத்தில் சிஸ்டர் கேரக்டரில் நடிக்க அழைத்தார். என் பள்ளிப்படிப்பு காரணமாக அந்தப்படத்தில் என்னால் நடிக்க இயலவில்லை.

ஆனால் -அப்போது அவர்கள் மூலமாக என் ஃபோட்டோ ‘சாட்டை’ இயக்குநர் கண்களில் பட அதன்பிறகு வந்த வாய்ப்புதான் ‘சாட்டை’ படம். ‘சாட்டை’ படத்தில் நடிக்கும்போது எனக்கு ஷூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். குறிப்பாக தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் எனக்கு தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள்.

நான் அப்போது எப்படியாவது இந்தப்படம் முடிவதற்குள் தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை உடன் நடிக்கும் மாணவிகள் துணையோடு சிறப்பாக நிறைவேறியது. தமிழில் முதல் பட அனுபவமே எனக்கு தமிழை நன்றாகக் கற்றுக் கொடுத்துவிட்டது.  தமிழைக் கற்கும்போது இருந்த காதலைவிட கற்றபிறகு அந்த மொழி மீது அதிக காதல் வந்துவிட்டது.”

“நீங்கள் ‘மகாமுனி’ படத்தில் பேசிய வசனங்கள் எவ்வளவு பவர் ஃபுல்லானவை தெரியுமா?”

“தெரியும். எனக்கு டப்பிங் பேசும்போதே ரொம்ப பயமாக இருந்தது. இயக்குநர் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்ஃபிடன்டாக பேசச் சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக ஒர்க் அவுட் ஆகியது.”
“ஆர்யாவுடன் முதல் படம் இது. அனுபவம் எப்படி?”

“ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரைப் பார்க்கவே முடியாது. அவர் மிகமிக ஃப்ரெண்ட்லியாக பழகக்கூடியவர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் ‘அப்படி நடிங்க, இப்படி நடிங்க’ என்று எதுவும் சொல்லமாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார். உதாரணத்திற்கு அவர் எதிரில் நிற்கையில் எனக்கு மட்டும்  கேமரா வைத்து சஜஷன் ஷாட் எடுக்கும்போது அவர் சும்மா நின்றால் போதும். ஆனாலும் அவர் நமது ரியாக்‌ஷன் பெஸ்ட்டாக வரவேண்டும் என்பதற்காக அவரும் நடித்துக் கொண்டிருப்பார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரவேண்டும் என்பதற்காக மெனக்கெடும் நடிகர்களை நான் பார்த்ததில்லை.”

“இயக்குநர் சாந்தகுமார்?”

“என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக ‘மகாமுனி’ அமைந்துவிட்டது என்றால் அதற்கு காரணம் இயக்குநர் சாந்தகுமார். எனக்கு படத்தின் கதை என்னவென்று தெரியாது. என்னுடைய கேரக்டர் பற்றி இரண்டு லைன் மட்டுமே சொன்னார். அதில் ஏராளமான விவரங்கள் இருந்தது. அப்போதே படத்தை மிஸ் பண்ணக்கூடாது என்று அந்த இரண்டு வரிகள் புரியவைத்தது.

அதுமட்டுமல்ல, ‘மெளனகுரு’ பட இயக்குநர் சாந்தகுமார் நடிக்க அழைக்கிறார் என்றதும் வேறு கேள்வியே கேட்கத் தோன்றாதல்லவா? அப்படித்தான் நான் எதுவுமே கேட்கவில்லை. அவருடைய ‘மெளனகுரு’ படம் இன்றளவிலும் பேசப்படுகிறது. சென்சிபிலிட்டியாக படம் எடுப்பவர்.
படப்பிடிப்புத் தளத்தில் அவர் எல்லோரிடமும் கூலாக வேலை வாங்குவார். படப்பிடிப்புக்கு முன்பே எல்லா விவரத்தையும் கொடுத்துவிடுவார். படப்பிடிப்பில் அவர் டென்ஷன் ஆகி சத்தம்போட்டதை நான் பார்த்ததில்லை. சுத்த தங்கம் என்று சொல்லலாம்.  

அந்தமாதிரி குணம். அவருக்கு சுத்திப் போடணும். பெயருக்கு ஏற்ற மாதிரி சாந்தமாக இருப்பார். ஒருவரையும் கடிந்துகொள்ளமாட்டார்.  
அதுபோல நடிக்கும்போதும் சக நடிகர், நடிகைகளை உளவியல் ரீதியாக தயார்படுத்துவார். ஸ்பாட்டில் அவர் நடித்தெல்லாம் காட்டமாட்டார்.

அந்தக் கேரக்டரின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருவது போல விவரிப்பார். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்திற்குள் நாம் ட்ராவல் ஆகிடுவோம்.  என்னை ஸ்கிரீனில் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது. அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்.”
“அது எப்படீங்க.. டக்குன்னு பூரா சரக்கையும் காலி பண்ணீங்க?”

“எனக்கு அந்தக் காட்சியில் நடிக்க எந்தவித தயக்கமும் இருந்ததில்லை. பெண்களுக்கு இதுபோன்ற கேரக்டர்கள் அரிதாகத்தான் கிடைக்கும். பெரியவரை அடிக்கும் காட்சியையும் சேர்த்துச் சொல்கிறேன். இதுமாதிரி கேரக்டர் இந்திய சினிமாக்களில் கிடைப்பது அரிது. என்னைப் பொறுத்தவரை அந்தக் கேரக்டருக்கு சீற்றம் தேவைப்பட்டது. தீபா கேரக்டருக்கு தீப்பொறி பறக்க வேண்டிய அவசியம் இருந்தது.”
“இந்தப் படத்திற்காக உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?”

“எங்கள் இயக்குநர் சாந்த குமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், ‘நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல’ என்று சொன்னார். எனக்கு லைஃப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது.”

“அடுத்து?”

“சினிமாவில் இந்த ‘நெக்ஸ்ட்?’ என்கிற கேள்வியை எதிர்கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது. ‘ஐங்கரன்’ படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அந்தப் படத்தில் மீண்டும் நர்ஸ் கேரக்டர் பண்றேன். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘என்னமோ நடக்குது' படங்களுக்குப் பிறகு நான் நடிக்கும் மூன்றாவது நர்ஸ் கேரக்டர் இது. ஆனால் என்னுடைய கேரக்டரில் குறும்பு கொப்பளிக்கும். வழக்கமாக ரசிகர்கள் ஒரு நாயகியிடம் எதையெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அந்த விஷயங்கள் அனைத்தும் இருக்கும்.

விக்ரம்பிரவுடன் ‘அசுரகுரு’ படத்திலும் நடித்துள்ளேன். என்னுடைய கேரக்டர் பெயர் தியா. தனியார் துப்பறிவாளராக நடிக்கிறேன். ரொம்ப மாடர்ன் கேரக்டர். என்னை ஸ்டைலீஷ் லுக்கில் பார்க்கலாம். அந்தப் படத்துக்காக பைக் ஓட்டியிருக்கிறேன். சிகரெட் பிடித்திருக்கிறேன். இன்னும் சில சாகசங்களைப் பண்ணியிருக்கிறேன். புகை பிடிக்கும் காட்சியில் எப்படி சிகரெட் பிடிக்கணும் என்று சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியாது.  

படக்குழுவில் உள்ள எல்லாரும் பாடம் எடுத்தார்கள். அதன் மூலம் ஒரே சிகரெட்டில் டேக் ஓக்கே ஆகிவிட்டது. விக்ரம்பிரபுவைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் பக்கா தொழில்முறை நடிகர். நான் எப்படின்னா, என் வேலை மட்டும் நடந்தால் போதும், டயலாக்கை சொதப்பாமல் பேசினால் போதும் என்று நினைப்பேன். அவர் அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்தவர் என்பதால் எல்லா வேலைகளிலும் கவனம் செலுத்துவார். இது மற்ற நடிகர்களிடம் பார்க்க முடியாத விஷயம்.”

“உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?”

“எல்லா நடிகர்களும் பிடித்த நடிகர்கள்தான். ரஜினிகாந்த் சாரை கூடுதலாகப் பிடிக்கும். நடிகைகளில் நயன்தாராவை ரொம்பப்பிடிக்கும்.”
“இந்தமாதிரி படங்கள் அல்லது இந்தமாதிரி கேரக்டர்கள்தான் நடிக்கணும் என்ற வரையறை எதுவும் வைத்துள்ளீர்களா?”“அப்படி எந்த வரையறையும் வைத்துக்கொள்ளவில்லை.

நான் நடிக்கணும் என்று மிகவும் ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். நடிக்கணும் என்ற ஆசையோடு வந்தேனே ஒழிய இந்தமாதிரிதான் நடிக்கணும் என்று வரவில்லை. அதனால் எனக்கு நடித்தால் மட்டும் போதும். ஐ லவ் ஆக்டிங்.”

“கேரளாவிலிருந்து வரும் நடிகைகளில் பலர் பாடகியாக மாறியுள்ளார்கள். உங்களுக்கு பின்னணி பாடவேண்டும் என்ற ஆசை இருக்கா?”
“நார்மலா எப்போதும் எதாவது ஒரு பாடலை ஹம் பண்ணிக் கொண்டிருப்பேன். ‘ஐங்கரன்’ படத்தில் நான் விளையாட்டாகப் பாடியதைக் கேட்ட ஜி.வி.பிரகாஷ் ‘குரல் நல்லா இருக்குது’ என்றதோடு  ‘‘ஐங்கரன்’ படத்தில் பெண் பாடகிக்கான சிச்சுவேஷன் இருந்திருந்தால் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்திருப்பேன்’ என்றார்.

எனக்கு பாடகியாக வேண்டும் என்று ஆசை இல்லை. வாய்ப்பு கொடுத்தால் முயற்சி பண்ணுவேன்.”“மகிமாவுக்கு பிடித்த மூன்று விஷயங்கள்?”“சினிமா, பிரியாணி, அம்மா.”

- சுரேஷ்ராஜா