பாக்யராஜின் மலரும் நினைவுகள்!



உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இந்தப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

விழாவில் படத்தின்  தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது, ‘‘இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்‌ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு  ஒரு சதவிகிதம் தான் உள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்றார்கள்.

நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக நம்பினேன். அப்படி ஒரு நம்பிக்கை. பயப்படவே இல்லை. என் மகன் பிழைத்து விட்டான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். சொன்னால் யாரும் நம்பவில்லை. என் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பலரும் அறிய வேண்டுமல்லவா?  அதற்காகவே  படமாக எடுத்து குருவாயூரப்பனின் மகிமையை உலகிற்குக் காட்ட விரும்பினேன். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றே இந்தப்படத்தை எடுத்து இருக்கிறேன்” என்றார்.

விழாவில்  இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது, ‘‘இந்தப் படத்தின் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் போது தினேஷ்பாபு  இயக்குநர் என்பதை விட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார். உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன்   அருள் பற்றிப் பேசும் படமாக ‘கிரிஷ்ணம்’ படமும் இருக்கும் என நம்புகிறேன்.

என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் பார்த்த அனுபவம் உண்டு. எங்கள் ஊரில் பைத்தியம் போலப் பார்க்கப் பட்ட சாயம்மா என்ற பாட்டி  ஒரு நாள் குறிசொல்லும் பெண்ணாக மாறிக் குறி சொல்ல ஆரம்பித்தார். பலருக்கும் சரியாக இருந்தது. நாங்கள் குடும்பத்துடன்  அந்த ஊரை விட்டு வேறு ஊர் போனோம்.

மீண்டும் பல நாள் கழித்து அவரைப் பார்த்த போது என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது  பற்றியெல்லாம் கூறினார். எங்களுக்கு ஆச்சரியம். என்னைப் பார்த்து நீ இன்னுமா இந்த ஊரை விட்டுப் போகவில்லை? இங்கே இருக்காதே வெளியூர் போ என்றார். எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்போது  சினிமா கனவில் இருந்தேன்.

பிறகு  நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்ட போது  என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார். அவரோ எனக்குச் சினிமாவே சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும் என்றார். நான் சினிமா தான் என்று  பிடிவாதமாக இருந்தேன். என் அம்மாவிடம் சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட், டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பு என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

எங்களுக்கு ஒரு ஒர்க்க்ஷாப் இருந்தது. அதை மனதில் வைத்து இது அண்ணனின் ஏற்பாடாக இருக்குமோ  என்று பிறகு நான் நினைத்தேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உட்பட ‘கிரிஷ்ணம்’ குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நம் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கும் வரவேற்பு இருக்கிறது. இவர்களையும் வரவேற்போம்’’ என்றார்.

- எஸ்