டைட்டில்ஸ் டாக்-99



துப்பாக்கி முனை ஒளிப்பதிவாளர் ராசாமதி

எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்று சொல்வார்கள். அதே போல்தான் பழிக்குப் பழி வாங்கும் குணமும். ‘துப்பாக்கி முனை’ யில் ஏராளமான என்கவுண்டர்  பண்ணிய நாயகன் முதன் முறையாக நடுநிலை வகித்து ஒரு நிரபராதியைக் காப்பாற்றியிருப்பார்.
ஆனால் -இன்று உலகத்தின் எல்லா மூலைகளிலும் துப்பாக்கி சத்தம் கேட்கிறது. எத்தனை பேர் நியாயப்படி காப்பாற்றப் படுகிறார்கள், சட்டப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பது கேள்விக் குறி.

இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். அண்ணன் தம்பிகளுக்கு மத்தியில் கால் கிரவுண்ட் நிலத்தைப் பிரிப்பதில் பிரச்சனை என்றால் நாடுகள் மத்தியில் கடல், பூமி என்று அதில் உள்ள கனிமங்களைச் சூறையாடுவதில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் துப்பாக்கிச் சத்தம் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

‘துப்பாக்கி முனை’ படம், சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறைக் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டியது.ஒருகாலத்தில் பெண்களை நாம் கெளரவமாக பார்த்தோம். ஆண், பெண் என்று இருபாலர் பள்ளியில் படித்தாலும் பெண்களைப் போற்றினோம். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. பெண்களைத் தேடி வந்து ஆசிட் ஊற்றுகிறார்கள். இவ்வளவு வன்மத்துக்கும் காரணம், குழந்தை வளர்க்கும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.

குழந்தைகள் மீதுள்ள அதீத பாசத்தால் படிக்கும் பிள்ளைகளுக்குக் கூட ஆண்ட்ராய்டு போன் முதல் சகல வசதிகளும் கிடைத்துவிடுகின்றன.டிவி., இணையம் மூலம் இளம் தலைமுறை சீக்கிரத்தில் கெட்டுப்போவதற்கு  பெற்றோர் களே பாதை  ஏற்படுத்திக்  கொடுத்து விடுகிற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

குழந்தைப் பருவத்திலேயே அவர்களை நல்வழியில் வளர்க்கும்போது அந்த பழக்கங்கள் அவர்களுக்கு வருங்காலங்களில் பிரயோசனமாக இருக்கும்.
மற்ற துறைகளைவிட சினிமாவில் எப்போதும்  போட்டி அதிகம் இருக்கும். அந்த வகையில் நான் பணியாற்றும் படங்கள் எனக்கு திருப்தி அளித்துள்ளன.

நல்ல கதை அம்சத்தோடு சமூகக் கருத்துள்ள படங்கள் பண்ணும் போது ஆத்ம திருப்தி கிடைக்கிறது.பிலிம் இன்ஸ்டிடியூட் முடித்து வாய்ப்பு தேடிய போது கிடைத்த முதல் படம் ‘சக்கரக்கட்டி’. அந்தப் படம்தான் என்னை ‘துப்பாக்கி முனை’ வரை கொண்டு வந்திருக்கிறது.

அப்படத்தை கலைப்புலி எஸ். தாணூ சார் தயாரித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. கலாபிரபு இயக்கியிருந்தார். கலா நினைத்திருந்தால் முன்னணி கேமராமேனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.கலாபிரபுவும் நானும் கேமராமேன், இயக்குநர் போல் இல்லாமல் நண்பர்களாகவே பழகுவோம். கலாவிடம் பெரிய தயாரிப்பாளர் மகன் என்ற பந்தா இருக்காது. இது உண்மையான வார்த்தை. எல்லா சந்தர்ப்பங்களிலும் தாணு சார் என்னை தன் மகன் போல் வழி நடத்தியுள்ளார்.

என்னைப் பெற்றெடுத்த அப்பா அறிவுமதி. தாணு சார் எனக்கு காட்ஃபாதர். பல இடங்களில் எனக்காக பரிந்துரை செய்துள்ளார். என்னுடைய வளர்ச்சியில் அவருக்கு பெரிய பங்கு உண்டு.என்னுடைய இரண்டாவது படம் ‘சித்து ப்ளஸ் டூ’. இயக்குநர் கே.பாக்யராஜ் சாரிடம் சாந்தனுதான் என்னை அழைத்துச் சென்றார். பாக்யராஜ் சார் ‘சக்கரகட்டி’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்துட்டு ‘உங்கப்பா என் அசிஸ்டெண்ட்டா இருந்தார். இப்போ நீங்க’ என்று என் என் மீது அன்பு வைத்து வாய்ப்பு கொடுத்தார். இன்று என்னுடைய ஒளிப்பதிவு பேசப்படுகிறது என்றால் அதில் பாக்யராஜ் சாருக்கு பங்கு உண்டு. ஏன்னாம் சினிமாவுக்கான ஆளுமைகளை அவரிடம் கற்க முடிந்தது.

சமீபத்தில் வெளிவந்த ‘துப்பாக்கிமுனை’ மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. ‘துப்பாக்கி முனை’ இயக்குநர் தினேஷ் செல்வராஜ் சார் பற்றி சொல்வதாக இருந்தால், ஆரம்பத்திலிருந்தே அண்ணன் தம்பி மாதிரி பழக ஆரம்பித்தார். அந்தப் படம் சொன்ன சமூகக் கருத்துதான்  நான் படம் பண்ணுவதற்கு உந்துதலாக இருந்தது. படமும் வெற்றியடைந்தது. இயக்குநர் மணிரத்னம் ‘‘‘கடல்’ படத்தில் நான் காண்பித்த ராமேஸ்வரத்தின் புவி பரப்பை நீங்கள் நன்றாகக் காண்பித்தீர்கள்’’ என்று மனம் திறந்து பாராட்டினார்.

இன்று இளம் தலைமுறையிடம் ஜல்லிக் கட்டு போன்ற மண்ணின் உரிமைகளுக்காக போராடும் குணம் உள்ளது. ஆனால் இன்னொரு சாரார் பாலியல் வன்முறை நிகழ்வுகள் மூலம் இளம் குற்றவாளிகளாக மாறியிருப்பது வேதனையளிக்கக் கூடிய விஷயம். இங்கு இரண்டு வித வளர்ப்பு முறையைப் பார்க்க முடிகிறது.  இரண்டாம் வகை வளர்ப்பு முறையை சரிசெய்தால் துப்பாக்கிச் சத்தம் இல்லாத நாட்டை பார்க்க முடியும்.

இன்றைய சமுதாயச் சீரழிவுக்கு இணையத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அதிலிருந்து நல்லவைகளை எடுக்கும்போது பிரச்சனை இல்லை. இளம் பிஞ்சுகளின் மனதைக் கெடுக்கும் இணைய வழிகளை மத்திய அரசு தடை செய்தால் பெருமளவுக்கு குற்றச்செயல்களைத் தடுக்கலாம்.
சில ஆளுமைகள் உணவு விஷயத்தில் அவர்கள் கொள்கைகளைத் திணிக்கிறார்கள். நலத் திட்ட பணிகளைப் பொறுத்தவரை மக்கள் வீதிக்கு வந்து போராடாதளவுக்கு மக்கள் கருத்தை அறிந்து துவங்கலாம்.

இன்று பழிக்கு பழி தீர்க்கும் குணம் அதிகரித்துவிட்டது. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும்  ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று சொல்வார்கள். அது போன்ற கருத்துடைய ‘துப்பாக்கிமுனை’ படம் பண்ணியது எனக்கு மன
நிறைவைக் கொடுத்துள்ளது.

என்னிடம் அப்பா எப்போதும் அவருடைய கருத்துக்களை திணித்தது இல்லை. ஆனால் அப்பாவின் கருத்துக்கள் தொலைநோக்குப் பார்வையோடும் சமூக முன்னேற்றத்துக்காகவும் இருக்கும்.அந்த வகையில் அப்பா என்னிடம் எப்போதும் சொல்லும் வார்த்தை.... ‘மனதுக்குப் பிடித்தவைகளைச் செய்’ என்பதே. இப்போது அவருடைய சமூக மாற்றத்துக்கான போராட்ட குணங்கள் எனக்குள் ஆக்கிரமித்துள்ளது. அது எனக்கு பலமாக உள்ளது.

அப்பாவுக்கு சினிமாவில் நற்பெயர் இருப்பதற்குக் காரணம் அவருடைய அணுகுமுறை. அவர் பணத்துக்கு ஆசைப்பட்டது இல்லை. அப்பாவிட மிருந்து கலை மூலம் என்ன சொல்ல முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் இயக்குநரின் கேமராமேனாக சமூகத்துக்கான நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங்களில் பணிபுரியவே விரும்புகிறேன்.

வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாக அமையாது. அகிம்சையே இறுதியில் வெல்லும் என்பதை மனதில் வைத்தால் துப்பாக்கிச் சத்தம் இல்லாத பூமியைப் பார்க்கலாம். எல்லோருடைய விருப்பமுமே அதுதான். அந்த வகையில் தேவை ஒன்றுதான். பிறருக்குத் தீங்கு இழைக்காத மனம். அப்படி எல்லோரிடமும் இன்முகம் காட்டி அனைவரின் மனதை யும்வெல்வோம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)