பார்வை ஒன்றே போதுமே இசையமைப்பாளர் பரணி



டைட்டில்ஸ் டாக் 45

இசைத் துறையில் சாதிக்க விரும்பும் அனைவருக்குமே ராஜா சார் பார்வை நம் மீது விழாதா என்ற ஒரு தவிப்பு இருக்கும். எனக்கும் அப்படியொரு தவிப்பு இளம் பருவத்தில் இருந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் எனக்கு சொந்த ஊர். நினைவு தெரியாத நாட்களிலேயே  சினிமா பாடல்கள் மீது எனக்கு வெறித்தனமான ஈடுபாடு உண்டு. எங்கள் வீட்டில் அப்போது ஒரு ரேடியோ பெட்டி இருந்தது. அந்த ரேடியோவில் விவிதபாரதியின் நிகழ்ச்சிகள், இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பேன்.

சில சமயம் எஸ்.பி.பி., கே.ஜே.யேசுதாஸ், சுசீலா, ஜானகி போன்ற பாடகர்கள் பாடும்போது பரவசத்தின் உச்சிக்கே சென்றுவிடுவேன். அப்படி ஒருமுறை ஓவராக உணர்ச்சிவயப்பட்டு ரேடியோ பெட்டிக்குள் தான் என்னுடைய அபிமான பாடகர்கள் ஒளிந்து கொண்டு பாடுகிறார்கள் என்று நினைத்து ரேடியோ பெட்டியை உடைத்துவிட்டேன். அப்புறம் எங்கப்பா என்னை வெளுத்துவாங்கியது வேறு விஷயம். அந்த அறியாத பருவத்திலேயே இசை என்னோடு கலந்திருந்தது.

பள்ளி நாட்களில் மெட்டுக்கட்டி நிறையப் பாடல்களை பாடுவேன். அப்போதெல்லாம் என் நண்பர்கள் என்னை ஏதாவது ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். என்னுடைய ஆசிரியர் ஒருவர் ‘பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா’ என்ற பாடலை பாடச் சொல்லி கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுவார். அவருக்குள் என்ன சோகம் என்று தெரியாது. நான் பாடும் போது அவர் அழுவது எனக்கு நெகிழ்ச்சியாகவும் என் குரல் மீது நம்பிக்கையாகவும் இருக்கும்.

சிறு வயதில் கவிதைகளும் எனக்கு அத்துப்படி. பத்தாம் வகுப்பு படிக்கும்போது நிறைய பசங்களுக்கு லவ் லெட்டர் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுத்தால் எனக்கு பசங்க கமிஷன் கொடுப்பாங்க. ஒரு முறை நான் எழுதிய கடிதம் தலைமை ஆசிரியரிடம் போய்ச் சேர்ந்துவிட்டது. ஆனால் தலைமை ஆசிரியர் என்னைத் தண்டிக்காமல் என் கவிதையைப் பாராட்டி இந்த மாதிரியெல்லாம் எழுதிக் கொடுக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதுதான் நான் இசையமைப்பாளராக வருவதற்கு பெரிய திருப்புமுனை கொடுத்தது.

அந்தத் தாக்கத்தோடு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்தபிறகுதான் நான் பாடும் இசை ஒன்றுமே இல்லை என்று தெரிந்தது. ஏன்னா, சென்னை வந்தபிறகுதான் ஒரு பாடலாசிரியருக்கோ அல்லது பாடகருக்கோ இசையைப் பற்றிய நோட்ஸ் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. என்னைப் பொறுத்தவரை பாடல் எழுதுவேன். அதற்கு ஏற்ற மாதிரி டியூன் போடுவேன். ஆனால் இங்கு வந்த பிறகுதான் ஒரு இசையமைப்பாளருக்கு ராகம் உட்பட எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் மியூசிக் டைரக்டருக்கான தகுதி என்றும் தெரிந்துகொண்டேன்.

அப்போது இளையராஜா சார் குரூப்ல உள்ள சுந்தர்ராஜன் என்பவர் எனக்கு உதவி செய்தார். அவரிடம் அடிப்படை இசையை முழுமையாகக் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனக்கு இசையைப் பற்றிய சந்தேகங்களை தீர்த்துவைத்தார். அதன்பிறகு பத்து வருடங்கள் என்னுடைய ஜாகை இளையராஜா சாரின்  இசைக் கூடமாக இருந்த ஏவி.எம்.ஆர்.ஆர் தியேட்டரிலும், பிரசாத் டிலக்ஸிலும்தான் இருந்தது. தினமும் ராஜா சார் பார்வை நம் மீது படுமா என்று தவியாய் தவித்த காலமுண்டு.

எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்யம் ராஜா சார் இசை அமைக்கும்போது அவருடைய நேரடி  பார்வையில் இருந்தேன். சில சமயம் நான் எழுதி வைத்த பாடல் தொகுப்பை காண்பித்து வாய்ப்பு கேட்பேன்.ஒருமுறை ‘பெரிய மருது’ படத்துக்கு ராஜா சார் இசையில் வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

பிறகு சில காரணங்களால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது. அந்த சமயத்தில் என்னுடைய கவனம் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதுதான். நடுவுலதான் பாடல் எழுத வாய்ப்பு தேடினேன். ராஜா சார் பார்வை என் மீது படுவதற்கு குமரேசன் என்பவரும் ஒரு காரணமாக இருந்தார்.

அந்த லிங்க் மூலம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்பு கிடைத்தது. அப்போது எஸ்.ஏ.சி. சார் விஜய் நடித்த ‘நாளைய தீர்ப்பு’ படத்தை துவக்கி இருந்தார். அந்தப் படத்துக்காக மூன்று பாடல்களை மெட்டமைத்து பாடிக் காட்டினேன். ஆனால் ஏற்கனவே இசையமைப்பாளர் கமிட்டாகியிருந்ததால் எனக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார்.

‘மாப்ளே நான் சொல்லப்போறேன்’ என்ற பாடலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. பாடல் எழுதியதால் எஸ்.ஏ.சி சாரிடம் நெருங்கிப் பழக முடிந்தது. திடீர்னு ஒருநாள் ஒரு ஆல்பத்துக்கு இசையமைத்துக் கொடுக்கச் சொன்னார். அந்த ஆல்பத்துக்காக இசையமைத்த பாடல்தான் ‘நான் தம் அடிக்கும் ஸ்டைலைப் பார்த்து’ என்ற பாடல். விஜய் பாடினார். ஆல்பத்துக்காக பாடிய அந்தப் பாடல் என் முதல் படமான ‘பெரியண்ணா’ வில் இடம் பெற்றது. என் வாழ்நாளில் மறக்கமுடியாத படம் ‘பெரியண்ணா’. ஏன்னா, யாருடைய பார்வை என் மீது படாதா என்று ஏவி.எம். ஸ்டூடியோ வாசலில் நின்றுகொண்டிருந்தேனோ அதே ஏவி.எம்.மில் நான் இசையமைத்த ‘பெரியண்ணா’ படத்தின் ஒலிப்பதிவு நடந்தது.

அதன்பிறகு ‘பார்வை ஒன்றே போதுமே’ படம் பண்ணினேன். அந்தப் படத்துக்குப் பிறகுதான் எல்லாருடைய பார்வையும் என் மீது விழ ஆரம்பித்தது. ‘திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு’ பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சினிமா உலகத்தினர் பார்வையும், வெளி உலகப் பார்வையும் என் மீது விழ ஆரம்பித்தது. சேலத்திலிருந்து ஆனந்தன் என்ற ரசிகர் தினமும் போன் பண்ணி ‘திருடிய இதயத்தை’ பாடலை சிலாகித்துப் பேசும் போது பெருமிதமாக இருக்கும்.

‘சார்லி சாப்ளின்’ படத்துக்காக இசையமைத்த ‘முதலாம் சந்திப்பில், நான் அறிமுகம் ஆனேனே’ என்ற பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாடலுக்கு வெளி நாட்டிலிருக்கும் ரசிகர்களின் பார்வையும் என் மீது விழ்ந்தது. மலேஷியாவிலிருந்து ஒரு ரசிகை போன் பண்ணி சாலநாட்டை ராகம் என்ற இதே ராகத்தில் ராஜா சார் ‘பனி விழும் மலர் வனம்’ பாடலைப்  பண்ணியிருப்பார் என்று குறிப்பிட்டு பாராட்டினார்.

‘பார்வை ஒன்றே போதும்’ படத்துக்காக ‘தும்தக்கு தும்தக்கு தும்தக்கு’ என்ற வார்த்தைகளை வைத்து ஒரு பாடலை உருவாக்கியிருந்தேன். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு பாரதிராஜா சார் ‘என்னய்யா ஒரே வார்த்தையை வைத்து விளையாடி இருக்க’’ என்று மனம் திறந்து பாராட்டினார். இது நான் எதிர்பாராதது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான அவர் பார்வை என் மீது வீழ்ந்தது எனக்கு கிடைத்த மாபெரும் பாக்யம்.

எல்லோருடைய பார்வையிலும் இருந்த நான் நடுவுல கொஞ்சம் பக்கத்த தொலைச்சிட்டேன். இப்போது மீண்டும் என் வாழ்க்கையில் ஒரு பிரளயத்தை  உண்டாக்குவதற்காக ‘ஒண்டிக்கட்ட’ என்ற படத்துக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மக்கள் பார்வை என் மீது விழும் என்ற நம்பிகை இருக்கிறது.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)