தயாரிப்பாளரை தேடும் இயக்குநரின் கதை!



முதன் முறையாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரிப்பாளராக களமிறங்கி இசையமைக்கும் படம் சென்னை 2 சிங்கப்பூர். ரிலீஸ் பரபரப்பில் இருந்த ஜிப்ரானிடம் பேசினோம்.‘‘நான்கு முறை எடுத்த படம் இது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சோதனைகள் வந்தது. ஆனால் அது நல்ல படமாக இருந்தது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் வெங்கட் பிரபு, ‘அட்டக்கத்தி’ தினேஷ், ஆர்யா தம்பி சத்யா போன்ற பிரபலங்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளால் படத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. அவர்கள் படத்திலிருந்து போன பிறகு மற்ற நடிகர்களும் வெளியே போய்விட்டார்கள். இப்போது பல முயற்சிகளுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்கிறோம்.

பாண்டியராஜன் சார் நடித்த ‘கதாநாயகன்’ மாதிரியான காமெடிபடம் இது. சென்னையில் வசிக்கும் இளைஞன் ஒருவர் இயக்குநராக ஆசைப்படுகிறார். ஆனால் படம் ஆரம்பிக்கும்போதே தயாரிப்பாளருடன் மோதல் ஏற்படுகிறது. சென்னையில் தயாரிப்பாளர் கிடைக்காத சூழ்நிலையில் தயாரிப்பாளரைத் தேடி சாலை வழியாக சிங்கப்பூர் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் சவால்களை முழுக்க முழுக்க காமெடியில் சொல்லியிருக்கிறோம்.

ஹீரோ, ஹீரோயினாக கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன் பண்ணியிருக்கிறார்கள். இன்னொரு ஹீரோவாக ராஜேஷ் பண்ணியிருக்கிறார். லீட் கேரக்டர்ல சிவகேஷ் பண்ணியிருக்கிறார். என்னுடைய நண்பர் அப்பாஸ் அக்பர் டைரக்‌ஷன் பண்ணியிருக்கிறார். அப்பாஸ் உள்பட இந்த டீமில் இருக்கும் பெரும்பாலான டெக்‌னீஷியன்ஸ் என்னுடைய பல ஆண்டுநண்பர்கள்.

நான் இதுவரை ஜாலியான ஸ்கிப்ரிட்டுக்கு இசையமைத்ததில்லை. ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற சீரியஸ்  மற்றும் ஆக்‌ஷன் படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறேன். ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தை முதன் முதலாகத் திரையிட்டபோது எனக்கே அதில் திருப்தி யில்லாமல் மறுபடியும் இரண்டு மாத அவகாசத்தில் ரீ-ரிக்கார்டிங் பண்ணிக் கொடுத்தேன்.

இந்தப் படத்தில் பொருளாதார ரீதியாக நிறைய சவால்களைச் சந்தித்தோம். சிங்கப்பூரில் டே அண்ட் நைட் ஷூட் நடத்தினோம். அந்த மாதிரி சமயங்களில் ஆர்ட்டிஸ்ட்கள் கொடுத்த ஒத்துழைப்பு என்னை திக்கு முக்காட வைத்தது. கிடைத்த இடத்தில் தங்கினார்கள். சைனீஸ் உணவை சாப்பிட்டார்கள். ஒட்டுமொத்த டீம் ஒர்க்கிற்கு நல்ல அவுட் - புட் கிடைத்துள்ளது.

ஆடியன்ஸ் பல்ஸைத் தெரிந்து கொள்வதற்காக முதலில் நாற்பது பேருக்கு ஸ்கிரீன் பண்ணினோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதன் பிறகு இருநூறு பேருக்கு திரையிட்டோம். அந்த ஷோவின் மூலம் பிரபல நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்தது.

மலேஷியாவில் ‘கபாலி’ படத்தை ரிலீஸ் செய்த டத்தோ மாலிக் ரிலீஸ் செய்கிறார். என் மனைவி உட்பட என்னைச் சுற்றியுள்ள அனைவரும் தயவுசெய்து இந்த முறையாவது படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க என்று கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுக்காகவே இந்த முறை அதிக ரிஸ்க் எடுத்து ரிலீஸ் பண்ணுகிறோம்” என்கிறார் ஜிப்ரான்.

- சுரேஷ்ராஜா